வீழ்த்த முடியாத பெரியார்! வீழப் போகும் சீமான்!

ஓயாமல் சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. நாளும், பொழுதும் மக்கள் பிரச்சினைகளை ஊன்றி கவனித்தும், அரசின் சட்ட திட்டங்களை பொது நலன் சார்ந்து விமர்சித்தும் அறம் இணைய இதழில் எழுதி வருகின்ற நான் என் கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை. ஆனால், தமிழக அரசியல் சூழலில் சில அதிரடி மாற்றங்களுக்கான காலம் கனிகிறது;

காரணம், எந்த பெரியாரை முன் நிறுத்தி திராவிட அரசியல் இயக்கங்கள் சுமார் 60 ஆண்டுகள் இங்கு  ஆட்சி அதிகாரத்தை செய்து வந்தனரோ.., அந்த பெரியார் இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கும் வண்ணம் ஒருவர் பேசுவதை ஒன்றும் செய்ய இயலாமல் கையறு நிலையில் திராவிட அரசியல் இயக்கங்கள் இருக்கும் யதார்த்தம் ஒரு அசாதாரண நிலையாகும்.

திராவிட இயக்க தொண்டர்களோ, மக்களோ இதற்கு மிகப் பெரிய வினையை ஆற்றாமல் இதனை வேடிக்கை பார்த்து வருகின்றனரே.. இதை எப்படி புரிந்து கொள்வது..?

ஒரு முகம் தெரியாத அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக கொந்தளித்த அளவுக்கு கூட ஒரு சகாப்ததையே இங்கு நிகழ்த்திய பெரியாருக்கு ஆதரவாக ஒரு பேரலை எழவில்லையே…என்றால், அதற்கு காரணம், திராவிட அரசியல் கட்சி தலைவர்கள் தாங்கள் பேசிய கொள்கைக்கு முற்றிலும் எதிரானாவர்களாக – போலியானாவர்களாக – நடந்து கொண்டிருக்கும் அவலத்தை மக்கள் பார்த்து சலிப்பின் எல்லைக்கே சென்றுள்ள யதார்த்தம் தான்…!

பெரியார் அளவுக்கு பெண்ணுரிமையை பேசிய இன்னொருவர் இந்த மண்ணில் உண்டா? பெரியார் பெண்களின் பாலியல் சுதந்திரத்தை முழுமையாக – நிபந்தனைகள் இன்றி ஆதரித்தார் என்பது தான் 100 சதவிகித உண்மை!

”ஒரு பூனையிடம் இருந்து தனக்கு சுதந்திரம் கிடைக்குமென்று எலி எப்படி நம்ப முடியாதோ, அது போல ஆணிடமிருந்து தனக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று ஒரு பெண் நம்ப முடியாது. ஆகவே உன் சுதந்திரம் என்பது பிறரால் உனக்கு தரப்படுவது அன்று. அது உன்னால், நீயே எடுத்துக் கொள்ள வேண்டியதாகும்” என்ற பெரியார் எப்படி ‘உனக்கு இச்சை வேண்டும் என்றால், தாயையோ, சகோதரியையோ புணரலாம்” என்று ஒரு பெண்ணுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆணுக்கு ஆதரவாக பேசுவார்..?

நான் பெரியார் எழுதியவை அனைத்தையும் படித்தவன் அல்ல, என்றாலும், அவரை ஆழமாக உள் வாங்கி நெகிழ்ந்தவன் என்ற வகையில், அறுதியிட்டு நான் உறுதிபடக் கூற முடியும், பெரியார் இவ்விதம் பேசி இருக்க வாய்ப்பே இல்லை.

‘பெரியார் நடத்திய திராவிடர் கழக மாநாடுகளில் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்’ என்ற வரலாறு தெரிந்தவர்கள் இந்த அவதூறை ஒரு போதும் நம்ப மாட்டார்கள்!

பெரியாருக்கு இருக்கும் மிகப் பெரிய சிறப்பு என்ன தெரியுமா…? ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்க்கத் தயங்கிய பார்ப்பனியத்தை துணிந்து எதிர்த்தது தான்! பெரியாரின் இந்த சிறப்புக்கு ஈடு இணை சொல்ல இந்தியாவில் வேறெவருமே இல்லை. இந்த விஷயத்தில் அம்பேத்கரைக் கூட பெரியாருக்கு இணை சொல்ல முடியாது. அதனால் தான் அம்பேத்கரைக் கூட உள்வாங்கி செரிக்க தயாரான பார்ப்பனியம், பெரியாரை விழுங்க முடியாமல் விபீஷணர்களை தூண்டி விடுகிறது. அவர் இமேஜை சிதைக்க பார்க்கிறது.

சந்தேகமில்லாமல் சீமான் பாஜகவின் உருவாக்கம் என்பதற்கு அந்தக் கட்சியின் தலைவர்கள் பேசி இருப்பதே சாட்சியாகும்.

இதோ பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேசுவதை கவனியுங்கள்; சீமான் எங்கள் வழியில் வந்திருக்கிறார். காரணம், நாங்கள் இத்தனை காலமாக எங்களின் கருத்தியலாக எதனைச் சொல்லிக் கொண்டிருந்தோமோ அதனையே சீமான் இன்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். எனவே, இதனை எங்கள் கருத்தியலுக்கான பலமாகவும், ஆதரவாகவும் பார்க்கிறேன். இது பாஜகவின் கருத்தியலுக்கான வெற்றியாக பார்க்கிறேன். உதாரணத்திற்கு, இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் வளர்த்த தமிழ் அல்ல; பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என அவ்வப்போது நான் கூட்டத்தில் சொல்வதுண்டு’’

இதே போல அண்ணாமலை, “சீமான் சொல்வதைப் போன்று பெரியார் பேசவில்லை என்று சிலர் மறுக்கின்றனர். ஆனால், அவர் அப்படித்தான் பேசினார். அதற்கான ஆதாரங்களை நான் கொடுக்கிறேன். பெரியார் எங்கே அப்படியொரு கருத்தை, எந்த புத்தகத்தில் கூறியுள்ளார். என்ற ஆதாரத்தை நான் வழங்குகிறேன். என்கிறார்.

இன்று சீமானை ஆதரிக்கும் பார்ப்பனிய பாஜக தான், நாளை சீமானை அழிக்க இருக்கிறது…! நான் சொல்வது சத்திய வார்த்தை!

தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய் – அரணாய் – திகழ்ந்த பெரியாரை தகர்த்துவிட்ட பிறகு, தனக்கே இங்கு பாதுகாப்பில்லை என்பதை சீமான் உணருவதற்கு வெகுகாலம் ஆகாது.

நான் திராவிட  இயக்க ஆதரவாளன் அல்ல, அதே சமயம் திராவிட கருத்தியலில் உடன்பாடு உள்ளவன். அதே போல தமிழ் தேசியத்திலும் பெருமதிப்பு கொண்டவன்.

தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லும் போது, நாம்   நம்மை தமிழன் என்று தான் அடையாளப்படுத்திக் கொள்கிறோமோ அன்றி, திராவிடன் என்று சொல்வதில்லை. தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என்போமே தவிர, திராவிட நாட்டில் இருந்து வருகிறோம் எனச் சொல்வதில்லை. தமிழ் மொழியும், தமிழ் மண்ணும், தமிழ் பண்பாடுமே நம் அடையாளமாகும்.

இந்தியாவில் பாஜகவின் எழுச்சிக்கு பிறகு பார்ப்பனியத்தின் எழுச்சி வீரியமாக இருக்கிறது.

கல்வியில் பார்ப்பனியச் சிந்தனைகளை வீரியமாக விதைத்து வருகிறார்கள். கார்பரேட்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை சிதைத்து, உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்த விழைகிறார்கள்! இயற்கை வளத்தை அழிக்கும் விவசாயக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார்கள். மதவாத பிற்போக்கு கருத்தியலுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் எதிர்ப்பதாக சொல்லிக் கொண்ட திமுக, தான் செய்து கொண்டிருக்கும் பகாசூர ஊழல்களில் தண்டிக்கப்படாமல் இருக்க பாஜகவிற்கு மறைமுக ஆதரவளித்து வருவதே யதார்த்தமாக உள்ளது.

ஆக, திராவிட கருத்தியலுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் திமுக மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. திமுகவின் வீழ்ச்சி பெரியாரின் வீழ்ச்சியாகிவிடாது. திமுக, அதிமுகவே இல்லை என்றாலும், பெரியார் நின்று நிலைப்பார்! ஏனென்றால், உண்மை எப்போதும் நின்று நிலைக்கும்.

சீமான் தமிழ் தேசிய கருத்தியலுக்கு எந்த அளவுக்கு வளம் சேர்த்தாரோ.., அதைவிட அதிகமாக தற்போது பார்ப்பன ஆதரவு நிலைபாடு எடுத்து தமிழ் தேசியத்தின் பேரழிவுக்கும் காரணமாகிறார் என்ற வருத்ததை நான் இங்கு நான் பதிவு செய்கிறேன்.

திராவிட இயக்க அரசியல்வாதிகளின் போலிதனங்களை, பொய்மைகளை, துரோகங்களை தட்டிக் கேட்டு அவர்களை நேர்வழிப்படுத்தும் ஆளுமைகளோ, அரசியல் தோழமைகளோ இல்லாத வெற்றிடத்தில், சீமான் சிலம்பம் சுற்றி பார்ப்பனியத்திற்கு தொண்டு செய்து கொண்டிருக்கிறார்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time