ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது இடைத் தேர்தல் அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தோல்வியா? இந்தியாவை ஆளும் கட்சியாக இருந்தும், தன் வேட்பாளரைக் கூட களம் இறக்க முடியாத பாஜகவின் தோல்வியா?
”சென்ற முறை இதே தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் ஆளும் திமுக செய்த அராஜகங்கள், அத்துமீறல்களால் ஏற்பட்ட கசப்புணர்வே இந்த முடிவுக்கு காரணம்” என அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தச் சூழலில் நாம் தமிழர் கட்சிக்கும், திமுகவிற்குமான நேரடி மோதலாக இந்த இடைத் தேர்தல் அமைந்துள்ளது!
ஒரு தேர்தலை நடத்துவது என்பது இந்திய அளவிலான சுயாட்சி அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையமாகும். தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்ற அடிப்படையில் தான், இந்திய அரசியல் சாசனத்திலேயே தன்னாட்சி அதிகாரமிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அங்குள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், காவல்துறை ஆகிய அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடுகிறது. ஆனால், சென்ற இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தன் கடமையை செய்யத் தவறி அனைத்து அராஜக, அத்துமீறல்களையும் வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தது.
குறிப்பாக, சென்ற இடைத்தேர்தல் ஆளும் திமுகவால் பற்பல புதுப் புது உத்திகளோடு, சில பார்முலாக்களை கையாண்டு நடத்தப்பட்டது.
நேரடிப் பணப்பட்டுவாடாக்களும், பரிசுப் பொருட்களும் வீடுகளுக்கு சேர்க்கப்பட்ட வண்ணம் இருந்தன.
தொகுதியில் வேலை இல்லாதவர்களையும், கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தவர்களையும் திமுக ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து பேரணிக்கு, பிரச்சாரத்திற்கு கட்சிக்கொடி பிடிக்க, கோஷம் போட, பிட் நோட்டீஸ் கொடுக்க என பெரிய அளவில் பகிரங்கமாக செயல்படுத்தியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் அனைத்துப் பகுதிகளும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சிப் பொறுப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்தந்தப் பகுதி வாக்காளர்கள் வேறு எந்தக் கட்சிக் கூட்டத்திற்கும் போக அனுமதிக்காத வகையில் கட்டுப்படுத்தப்பட்டனர்.
” ஒன்று, எங்கள் பிரச்சாரத்திற்கு வாங்க, அல்லது வீட்டிலேயே இருந்தால் கூட பணம் தருகிறோம்” என சொல்லப்பட்டதோடு, ”மற்ற கட்சிக் கூட்டத்திற்கோ, கூலி வேலைக்கோ சென்றால் என்ன வருமானம் கிடைக்குமோ, அதை வாங்கிக் கொள்ளுங்கள்” என நிர்பந்திக்கப்பட்டது தேர்தல் வரலாற்றில் புதிய உத்தியாக நிகழ்ந்தது.
தேர்தலில் போட்டியிடக் கூடிய ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்காளர்களை சந்திப்பதற்கான உரிமையும், கடமையும் உண்டு; அதே போல வேட்பாளரை மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பு வாக்காளர்களுக்கு மறுக்கபடலாகாது. ஆனால், திமுகவினரோ மக்களை விலங்குகளை பட்டியில் அடைப்பது போல அடைத்து வைத்து அவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் திரைப் படங்களை திரையிட்டு, விருந்துணவுகளை தருவித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.
நியாயப்படி வாக்காளர்களைக் கட்டாயப்படுத்துவது, லஞ்சம் தருவது, சுதந்திரமாக முடிவெடுக்கவிடாமல் தடுப்பது ஆகியவை அனைத்தும் தேர்தல் விதிமுறைகளின்படி கிரிமினல் குற்றங்கள் ஆகும்.
இத்தனை அராஜகங்களை கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் ‘இவற்றுக்கெல்லாம் தான் பொறுப்பே இல்லை’ என்ற பாவணையில் தேர்தல் ஆணையம் செய்ல் பட்டது பெரும் புதிராக அனைத்து தரப்பிலும் உணரப்பட்டது.
அதே சமயம் தேர்தல் ஆணைய அதிகாரிகளோ எது எதைத் தடுக்க வேண்டுமோ அதைத் தடுக்காமல் விட்டு விட்டு, கவைக்கு உதவாத சில கட்டுப்பாடுகளை வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் நிர்பந்தித்து கடுமையான சோதனைகளுக்கு அவர்களை ஆட்படுத்தி கதற வைத்தார்கள். அதாவது, தேர்தலை கறாராக நடத்துவது போல பாசாங்கு செய்து ஜனநாயகத்தை கட்டிக் காப்பதற்கே தாங்கள் செயல்பட்டது போல காட்டிக் கொண்டார்கள்.
இது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மையை சுக்கு நூறாக்கிய நிகழ்வாகும். தற்போது, இத்தனை எதிர்கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று சொல்வதானது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மை ஆட்டம் கண்டுள்ளதையே பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
உண்மையில் இந்த தேர்தல் புறக்கணிப்பானது தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விழுந்த பலமான சம்மட்டி அடியாகும். தேர்தல் ஆணையர்களை நியமித்த மத்திய பாஜக அரசும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
எத்தனையோ விஷயங்களில் மாநில உரிமைகளை பறித்து மாநில அரசுகளை ஆட்டி வைத்த பாஜக அரசு, திமுகவை இத்தனை அராஜங்களை செய்யவிட்டு வேடிக்கை பார்த்ததையும், தேர்தல் ஆணையம் பலவீனப்பட்டு அதன் நம்பகத் தன்மையை இழந்ததை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையும் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.
பஞ்சாபிலும், டெல்லியிலும் நடைபெறும் தேர்தல்களில் ஆம் ஆத்மி சுதந்திரமாக இயங்கவிடாமல் பல தடைகளைச் செய்யும் தேர்தல் ஆணையமும்,பாஜகவும் தமிழகத்தில் மட்டும் திமுகவின் அராஜகங்களுக்கு பம்மியது ஏன்? என்பது விடை தெரிய வேண்டிய கேள்வியாகும்.
சென்ற இடைத் தேர்தல் பார்முலா வெற்றியடைய தேர்தல் ஆணையம் அனுமதித்ததானது தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் கடுகளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை என்ற அழுத்தமான பாடத்தை அரசியல் கட்சிகளுக்கு தந்துள்ளதின் விளைவே இந்த தேர்தல் புறக்கணிப்பாகும்.

ஒரு மாநில ஆளுங்கட்சி ஜனநாயகத்தைக் கர்ண கொடூரமாக துடிதுடிக்க கடித்துக் குதறியதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்றால், தேர்தல் ஆணையம் என்பது எதற்கு? அதற்கு தன்னாட்சி அதிகாரம் எதற்கு? அத்தனை அதிகாரிகள், அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் என்பதெல்லாம் எதற்கு?
ஒரே ஒரு தொகுதி சம்பந்தப்பட்ட ஒரு சாதாரண இடைத் தேர்தலை ஆளும் கட்சியின் அத்துமீறல்கள், அராஜங்கள் இன்றி ஜனநாயக வழியிலான ஆரோக்கியமான போட்டியாக நடத்த முடியாதது இந்திய தேர்தல் ஆணையத்தின் படுதோல்வியை காட்டுகிறது என்பது மட்டுமல்ல, தன்னுடைய கட்சி வேட்பாளரையே அங்கு களத்தில் இறக்க முடியாமைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
Also read
ஏனென்றால், தீவிரவாத அச்சுறுத்தல் மிக்க – எந்த நேரம் எங்கு வேண்டுமானலும் குண்டு வெடிக்கலாம் என்ற – காஷ்மீரில் கூட ராணுவத்தை நிறுத்தி முறையாக தேர்தல் நடத்திக் காட்டுகிற பாஜகவும், இந்தியத் தேர்தல் ஆணையமும் இங்கு தமிழகத்தில் மட்டும் திமுகவை பார்த்து பம்முவது ஏன்?
யோசித்துப் பார்த்தால், இது ஒரு வகையில் இந்தியத் தேர்தல் ஆணையமும், மத்திய பாஜக அரசும் சேர்ந்து நடத்தும் நாடகமோ? என்றும் தோன்றுகிறது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மக்கள் ஏமாளிகள் அல்ல நாம் தான் கோமாளிகள்
அதெல்லாஞ் சரி ஞாயமாரே !
ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு காசு கொடுத்து ஆதரவு கேட்கும் திமுகவும், காசு கொடுக்காமல் ஆதரவு கேட்கும் நாம் தமிழர் கட்சியும் மட்டுமே களத்தில் நிற்கின்றனர்.
மக்கள் இருவரில் எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வீர்களா ?
வள வளவென்று கதை கட்டுரை எல்லாம் வேண்டாம். “வடுக ஞியாயம்” என்ன என்று ஒரு வரியில் சொல்லுங்கள் !
வேத நாயகம்.
மக்களை சிந்திக்க வைக்க கூடிய கேள்விகளை பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் அழுத்தமாக எழுப்பியுள்ளார், வேறு எவரும் இந்த கோணத்தில் சிந்திக்கவில்லை ?
இது தாண்டா இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்று நடத்திக் காட்டிய டிஎன் சேஷன் இப்போது கண்முன் வருகிறார் தீவிரவாதிகள் கொட்டத்தை அடக்கி காஷ்மீரில் நியாயமான தேர்தல் நடத்திய மத்திய பாஜக ஆட்சி சூராதிசூரர்கள் இன்று கைதட்டி நிற்பதில்
ஏதோ சூட்சுமம் உள்ளது
தற்போதுள்ள தேர்தல் முறை நீடிக்கும் வரை தேர்தலில் நடக்கும் முறைகேடுகளை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது. தன்னாட்சி பெற்ற அமைப்பு என்று கூறுவது பெயரளவில் தான். அது ஆட்சியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறது. இதனை தடுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களையும் அதற்கு நேராக சின்னங்களையும் அச்சடித்து அனைத்து வாக்கு சாவடிகளிலும் ,வாக்காளர்களை கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும். கட்சிகள் பெறும் மொத்த வாக்குகளை தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து வரும் ஈவு வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் விதமாக விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை கொண்டு வர மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகும் இதனைச் செய்தால் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள முடியும் .அரசியல் கட்சிகள் அதன் வேட்பாளர்கள் மூலம் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை தடுக்கப்படும்.
உண்மைதான் எல்லாம் நாடகம் கருப்புக்குள் காவி (செம்பட்டை)