கிரிமினல்களின் கேடயமாகத் திகழும் அரசியல் கட்சிகள்!

-சாவித்திரி கண்ணன்

ஒவ்வொரு கட்சியிலும் கிரிமினல்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். கட்சிகளே, கிரிமினல்களின் பாதுகாப்பு கவசமாகிறது. நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகே, சில  கட்சித் தலைமைகள் குற்றவாளிகளை கட்சியில் இருந்து நீக்குகின்றனர். இன்னும் சில கட்சிகள் அதையும் செய்வதில்லை; ஒரு விரிவான அலசல்;

அரசியல்வாதிகள் எப்போதுமே கடை பிடிக்கும் தந்திரம் என்னவென்றால், தன் குற்றத்தை மறைக்க எதிரணியினர் செய்த குற்றங்களை உரத்தும், ஓங்கியும் பேசுவதாகும். அந்த வகையில் சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகர் சுதாகர், மதுரை பள்ளி மாணவி கற்பழிப்பில் சம்பந்தப்பட்ட பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷா ஆகியோர் விவகாரத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சூடாக அறிக்கை வெளியிட்டு கொந்தளித்துள்ளார்;

‘ஆகா, எதிர்கட்சிக்காரன் சிக்கிட்டானே..,’ என உற்சாகமாக அமைச்சர் கீதாஜீவன், தான் பேசிய நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை மறைத்துப் பேசுகிறார்.

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் குற்றச்சாட்டில் அதிமுக பிரமுகர் சுதாகரன் முக்கிய குற்றவாளி தான்! உண்மையான பாலியல் குற்றவாளி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட சிறுமியின் ஏழை தாய், தந்தையை மிரட்டி துன்புறுத்தினர். சம்பந்தட்ட பெண் இன்ஸ்பெக்ட்ர் ராஜு இரக்கமில்லாமல் நடந்து கொண்ட விதம் கண்டு சென்னை உயர் நீதிமன்றமே கண்டித்தும் ஆட்சியாளர்கள் பிடிவாதமாக குற்றவாளிகளை காப்பாற்றினார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா, நியூஸ் மினிட் மட்டுமின்றி நமது அறம் இதழில் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் இது குறித்து கட்டுரை எழுதி கவனப்படுத்தினார்.

ஆனால், அண்ணாநகர் சிறுமி விவகாரத்தில் அந்த அதிமுக அயோக்கிய சிகாமணியை காப்பாற்ற  பகிரதப்பிரயத்தனம் செய்தது எந்த ஆட்சி? ஹைகோர்ட் கண்டித்த பிறகும், தங்களை திருத்திக் கொள்ள மறுத்து, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது எந்தக் கட்சியின் ஆட்சி? உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமிக்கப்பட்ட வெளிமாநில ஐ.பி.எஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி தான் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைதாகி உள்ளனர்.

இது தங்கள் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைக் குனிவு என்று கூட உணர முடியாத கட்சிப் பிரமுகர்களை என்னென்பது..? சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் திமுகவினரை குற்றம் சாட்டி, யார் அந்த சார்..? என கைத்தட்டிகளை தூக்கி வந்தனர். அதற்கு பதில் சொல்வதாக நினைத்து திமுக எம்.எல்.ஏக்களோ, இவர் தான் அந்த சார் என சுதாகர் படம் கொண்ட கைதட்டியை தூக்கி நின்றனர்.

அண்ணாநகர் சிறுமி விவகாரத்தில் அதிமுக பிரமுகர் சுதாகரனின் கட்டளைக்கு அடிபணிந்தது திமுக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கும் காவல்துறை தானே! அதையும் மீறி அந்த குற்றவாளியை தண்டித்த பெருமை உச்ச நீதிமன்றத்திற்கே சேரும். இந்த லட்சணத்தில் அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் உள்ள அந்த உண்மையான சாரை மறைக்க அண்ணா நகர் சுதாகரை தொடர்புபடுத்துவது எப்படி பொருத்தப்பாடாக இருக்கும்.

சரி, அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.

டிசம்பர் 24 ஆம் தேதி மாணவி புகார் கொடுத்ததையடுத்து ஞானசேகரனை கைது செய்ய போன போது கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சத்திரத்தில் இருந்த ஞானசேகரனை காவல்துறை விசாரணைக்கு அழைத்த போது காவல் துறையோடு முறைத்துக் கொண்டு அதிகாரம் செய்த திமுகவின் உள்ளுர் முக்கிய புள்ளிகள் யார்? யார்?

”அமைச்சர் மா.சு வருகிறார். இந்த நேரத்தில எப்படி நீ எங்க ஆளை, எங்க இடத்துக்கே வந்து எப்படி இழுத்துட்டு  போவ. இதை நாங்க வேடிக்கை பார்க்கணுமா?” என்று கேட்டவர்கள் யார்? யார்? அமைச்சர் வந்து விழா முடிந்த பிறகு ஞானசேகரனை அனுப்பும் போது, ”உடனே விசாரித்து அனுப்பிவிட வேண்டும்” என கட்டளை இட்டது யார்?

அன்று மாலையே ஒரு திமுக வக்கிலை பிடித்து கேசில் தலையிட வைத்தது யார்? குற்றவாளி ஞானசேகரன் அன்றைய தினமே வெளியே வரக் காரணமானவர்கள் யார்? யார்?

இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தங்கள் கட்சிக்கார்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? மாட்டாரா? ஞானசேகரன் திமுகவில் உறுப்பினர் இல்லை என்கிறார் ஸ்டாலின்.  ஞானசேகரனின் பெரியப்பா தனக்கோட்டி தீவிர திமுககாரர், அப்பா தாமோதரனும் திமுகவில் இருந்தவர். குடும்பமே திமுக குடும்பம்.  ஞானசேகரன் தன் சொந்த செலவில் முரசொலியில் கொடுத்த விளம்பரத்தில், ‘கோட்டூர்புரம் மண்டபம் ரோடு பிரதிநிதி’ என்று விளம்பரப்படுத்தி உள்ள நிலையில் அவர் கட்சிக்காரர் இல்லை என ஸ்டாலின் சொல்வது எப்படி சரியாகும்?

மதுரை பள்ளிச் சிறுமி விவகாரத்தில் பாலியல் குற்றம் இழைத்த பாஜக பிரமுகரும், கல்லூரி ஓனருமான எம்.எஸ்.ஷா மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். ஆனால், மிகவும் ஏழ்மை நிலையில் வாட்ச்மேனாக வேலை பார்க்கும் சிறுமியின் தந்தையையே குற்றவாளியாக்கி சிறையில் தள்ளியது இந்த திமுக ஆட்சி தான்!

முஸ்லீமான பாதிக்கப்பட்ட அந்த ஏழை தந்தை விவகாரத்தில் உள்ளுர் ஜமாத் நிர்வாகிகள் இரக்கப்பட்டு வழக்கறிஞர் ரபீக் அவர்களை வைத்து கோர்ட்டில் முறையிட்டுத் தான் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். இது திமுக ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் விவகாரமில்லை.

சம்பந்தப்பட்ட குற்றவாளி செல்வந்தருமே இஸ்லாமியர் என்ற போதிலும், நியாயத்தின் பக்கம் நின்றது ஜமாத் என்பது கவனத்திற்கு உரியதாகும்.

ஆனால், குடும்பத் தலைவரை சிறைக்கு அனுப்பிவிட்டு, கடந்த ஓராண்டாக அந்த பாஜக பிரமுகர் சிறுமியின் அம்மாவையும், சிறுமியையும் தொடர்ந்து தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார். இத்தனை நாட்கள் பாஜக பிரமுகரை காப்பாற்றிய நிலையில், கோர்ட் தலையிட்டதால் கைது செய்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை.

தற்போது  அண்ணா பல்கலைக் கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் கட்சிக்கார்கள் மீதான புகார்களின் வீரியத்தை மடைமாற்றும் நோக்கில் தான் மதுரை பாஜக பிரமுகர் கைதை விளம்பரப்படுத்தி பேசுகின்றனர்.

அண்ணாநகர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பிரமுகர் சுதாகரனை எடப்பாடி பழனிச்சாமி உடனே கட்சியில் இருந்து நீக்கினார்!

ஆனால், போக்சோ சட்டத்தில் கைதான பிறகும், தற்போது வரை பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷா பாஜகவின் பொருளாதாரப் பிரிவு மாநில தலைமை பொறுப்பில் உள்ளார்! அந்த பாஜக பிரமுகரை கட்டித் தழுவிய கைகளை இன்னும் விடுவித்துக் கொள்ள மனமின்றி இருக்கிறார், சவுக்கடி புகழ் அண்ணாமலை! அந்தக் கட்சிக்குள் இருக்கிறவர்களும் இது குறித்த அறச் சீற்றத்தை இது வரை வெளிப்படுத்தவில்லை.  ஆக, அண்ணாமலை மீதான குற்றச்சாட்டு நியாமானதே.

ஆனால், திமுகவினர் நியமானவர்களாகிவிட முடியாது. குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் பேணி பாதுகாப்பதற்கான சமூக நலத் துறை அமைச்சரான கீதா ஜீவன் அந்த விவகாரத்தில் முற்றிலும் தோல்வி அடைந்த நிலையில், சும்மா சவுண்டுவிட்டு தன் இருப்பை காட்டி உள்ளார், அவ்வளவே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time