உத்திரபிரதேசம், பிரயாக்ராஜ் என்ற இடத்தில் பல கோடி மக்கள் திரளும் மகா கும்பமேளா நடந்து கொண்டுள்ளது. இந்து மத நம்பிக்கை சார்ந்து 45 நாட்கள் நடக்கும் இந்த உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்வின் பல்வேறு பரிமாணங்கள் வியப்பளிக்கக் கூடியவை; சுவாரஷ்யமானவை, பன்மைத்துவம் கொண்டவை;
மகா கும்பமேளா இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் உலக அளவிலான மிக முக்கிய திருவிழாவாக கருதப்படுகிறது.. இது பலதரப்பட்ட கலாச்சாரப் பின்னணி மற்றும் நம்பிக்கையில் உள்ளவர்களை ஒன்றிணைக்கிறது, ஒன்று சேருதல், மோட்சத்தை விழைதல், புனித நீராடல் மூலம் பாவங்களை தொலைத்தல், சாமியார்களின் ஆசிர்வாத்தால் புண்ணியத்தை பெறுதல் ஆகிவற்றை கொண்டுள்ளது. நிகழ்வின் நடத்தப்படும் பல்வேறு மதச் சடங்குகள், பல்வேறு இசை மற்றும் கலை வெளிப்பாடுகள் ஆகியவை நாட்டின் ஆழமான வேரூன்றிய மரபுகளை நினைவூட்டுகின்றன என்றால், மிகையில்லை.
கும்பமேளா என்ற கொண்டாட்டத்தின் பின்னுள்ள கருப் பொருள் என்பது அசுரர்களை தேவர்கள் வென்ற நிகழ்வின் நினைவூட்டல் என்கிறார்கள்! அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் என்று சேர்ந்து பாற்கடலை கடைந்த போது கிடைத்தது, அமிர்தம். அது அசுரர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்த கலசத்தை எடுத்துச் சென்றாரராம்…! அப்போது அமிர்தத்தின் சில துளிகள் பூமியில் சிந்திய இடங்களே ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, காசி ஆகிய நான்கு இடங்களாம். ஆகவே, இவற்றை புனித நகரங்களாக்கி, இந்த விழாவை எடுக்கிறார்களாம். தேவர்கள், அசுரர்கள் இருதரப்பின் உழைப்பில் கிடைத்த அமிர்தத்தை ஏன் இரு தரப்பிற்கும் பொதுவில் பங்கிடாமல் மகாவிஷ்ணு எடுத்துக் கொண்டார் என்பது கேட்கப்படாத கேள்வியாக உள்ளது.
கும்பமேளா என்பது பழங்காலத்திலிருந்தே நடக்கின்றது. மூன்றாண்டு இடைவெளிவிட்டு நான்கு இடங்களில் அடுத்தடுத்து நடக்கின்றது. இது ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைன், நாசிக் ஆகிய இடங்களில் மூன்று வருட இடைவெளியுடன் 12 வருட சுழற்சியில் கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு 12 ஆண்டு சுழற்சியின் முடிவைக் குறிக்கிறது என்பது மட்டுமல்ல, 144 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ‘மகா கும்பமேளா’ எனப்படுகிறது. நவகிரகங்களில் சில குறிப்பிட்ட சுப கிரகங்கள், நட்சத்திரங்கள் ஒரே நாளில் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாளாக குறித்து இந்த மகா கும்பமேளா நடத்தப்படுகிறதாம்.
அந்த வகையில் கும்பமேளா என்பது வானியல், ஜோதிடம், ஆன்மீகம், சடங்குகள், மரபுகள் மற்றும் சமூக-கலாச்சார பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள், அகோரிகள், மடாதிபதிகள், சாமியார்கள், மகான்கள், யோகிகள், சாமானிய மக்கள் கோடிக்கணக்கில் சங்கமிக்கும் இடமாகும். குறிப்பாக இந்த மடாதிபதிகளான சாமியார்கள் பலவித பல்லக்குகளிலும், ரதங்களிலும் தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு அணிவகுப்பை நடத்துவது பிரச்சித்தமாகும்.
இப்படிப்பட்டவர்களை ஒரே இடத்தில் பார்ப்பதற்கும், ஆசிர்வாதம் பெறுவதற்கும் மக்கள் பேரார்வம் காட்டுகின்றனர்.. சில ஆன்மீகவாதிகள் நதிக்கரையில், பிரார்த்தனை, தியானம் மற்றும் சடங்குகளில் ஈடுபடுகிறார்கள். மற்றவர்கள் அன்னதானம், நெய் பலகாரங்கள் மற்றும் பிற பிரசாதங்களை பக்தர்களுக்கு தருவதன் வழியாக இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.
இன்னும் வசதி வாய்ந்த , பாரம்பரிய குடும்ப பின்னணியை உள்ளவர்கள் இந்த மேளாவில் ரதங்களிலோ, மாடு மீதேறியோ, குதிரை மீதேறியோ, யானை மீதேறியோ வருகை தருவதும் மரபாக உள்ளது. பப்படி வருகை தரும் போது பளபளக்கும் வாளை ஏந்தியபடி அவர்கள் கெத்தாக செல்வது வாடிக்கையாக உள்ளது.
45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் சுமார் 4 கோடியே 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று கணிக்கப்படுகிறது.
இது போன்ற நிகழ்வை வணிகர்கள் சும்மா விடுவார்களா? இந்த பகுதியில் உள்ள கலை பொருட்கள், பக்தி சார்ந்த உத்திராட்ச மாலை, ஊதுபத்தி, கற்பூரம், தேங்கா, பழங்கள், ஆன்மீகப் புத்தகங்கள், ஆயுர்வேத மருங்துகள், எண்ணெய், நெய், வஸ்திரங்கள், பிரசாதங்கள், விளக்குகள், கடவுளர் சிலைகள், புனித நீர் குடங்கள் ஆகியவற்றின் விற்பனை மையங்கள், ஹோட்டல்கள், உணவுவிடுதிகள், டிரான்ஸ்போர்ட் ஆகியவற்றை நடத்தும் வணிகர்களின் காட்டில் மழை தான்!
பல நாட்களின் சேமிப்பை பக்தர்கள் கொண்டு வர வாய்ப்புள்ளது. ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் பயணத்தின் போது ரூ.10,000 முதல் 25,000 வரை செலவிட்டாலே கும்பமேளாவில் ரூ.4 லட்சம் கோடி முதல் 10 லட்சம் கோடி வரை பணம் புழக்கத்திற்கு வருகிறது.
உத்தரபிரதேச யோகி ஆதித்தியநாத் அரசு இந்த மகா கும்பமேளாவில் பக்தர்கள், சாமியார்கள் வசதிகளுக்காக சுமார் ரூ. 7,500 கோடி செலவிட்டுள்ளது. அரசின் ஹெலிகாப்டர் சேவைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.3.5 கோடி வருவாய் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதோடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களும், பிராண்டுகளும் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த ஸ்டால்களை அமைத்துள்ளதோடு விளம்பர பேனர்களை ஆங்கங்கே வைத்துள்ளன. சில பிராண்டுகள் மாதிரிகளை இலவசமாக வழங்கி தங்கள் பொருட்களை மார்க்கெட்டிங் செய்கின்றனர்.
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், மகா கும்பம் 2025 ஆன்மிகக் கூட்டங்களுக்கு மட்டுமின்றி உலகளாவிய சுற்றுலாவுக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக மாற்ற உள்ளது என்பது மட்டுமல்ல, பாஜக அரசு தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நிகழ்வாகவும் இதனைக் கருதுகிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்படும் பல்வேறு பாரம்பரிய கலைகளை அந்தந்த கலைஞர்கள் முக்கிய சாலைகளில் நிகழ்த்துவது கண் கொள்ளா காட்சியாகும். வேடிக்கை பார்ப்பதற்கு, சாமியார்களின் சாகசங்களால் வியந்து மிரள்வதற்கு, வணிகர்களின் சாதுர்யத்திற்கு இரையாகாமல் தப்பிப்பதற்கு, பலதரப்பட்ட மனிதர்களை ஒரே இடத்தில் காண்பதற்கு, மாபெரும் மக்கள் கூடலின் சக்தியை உணர்ந்து சங்கமிப்பதற்கு பல காரணங்களால் மக்கள் இங்கு ஈர்க்கபடுகிறார்கள்!
இந்திய சுற்றுலா அமைச்சகம், உத்தரபிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (UPSTDC), IRCTC மற்றும் ITDC போன்ற முக்கிய சுற்றுலாப் பங்குதாரர்களுடன் இணைந்து பல்வேறு வகையான சுற்றுலாப் பேக்கேஜ்கள் மற்றும் சொகுசு தங்குமிட விருப்பங்களை வழங்கியுள்ளதாம்! சொகுசு விடுதிகள் மட்டுமின்றி, சொகுசு கூடாரங்களையும் வழங்குகிறதாம். இந்த பேக்கேஜ்கள் டிஜிட்டல் சிற்றேட்டில் கிடைக்கும்படியும் ஏற்பாடு செய்துள்ளனர்.
மகா கும்ப மேளாவில் கலந்துகொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுலபமான பயணத்தை உறுதி செய்வதற்காக, இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களிலிருந்து பிரயாக்ராஜுக்கு விமான இணைப்பை அலையன்ஸ் ஏர் நிறுவனத்துடன் சுற்றுலா அமைச்சகம் கூட்டு சேர்ந்து செய்துள்ளது.
Also read
இவ்வளவு அதிகம் பேர் கூடுமிடங்களில் தண்ணீர் வசதிகள், கழிவறை வசதிகள், சுகாதாரத்தை பேணுதல், நெரிசல் ஏற்பட்டு உயிர் பலி நிகழாமல் கண்காணித்தல், திருட்டு, வழிப்பறி நிகழாமல் சட்டம், ஒழுங்கை பராமரித்தல் ஆகியவை அரசின் முன் உள்ள சாவால்களாகும். இவை சரியாக அமையாவிட்டால், இது போன்ற கும்பமேளாக்கள் எவ்வளவு புனிதமாக கட்டமைக்கப்பட்டாலும் நோய்களை பரப்பும் கேந்திரங்களாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். அதே சமயம் ஆன்மீகம், பக்தி என்ற போர்வையில் சில தவறான போலிச் சாமியார்களும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து வருவதற்கான வாய்ப்புகளும் நிறையவே உள்ளதால், மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம், கற்பு, நிம்மதி ஆகியவற்றை இழந்த சோக நிகழ்வாகிவிடக் கூடிய அபாயமும் உள்ளது.
நமக்கு பக்தி, ஆன்மீகம் போன்றவை மீது நம்பிக்கை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், பல கோடி மக்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பும், இந்த பலதரப்பட்ட மனிதர்களின் வெவ்வேறு பரிமாணங்களை உணரவும், கலை, ஆன்மீகம், கலாச்சாரத்தின் போன்றவற்றின் பன்மைத்துவத்தை காணவும் இது ஒரு அரிய தருணமே!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மொத்தத்தில் உலகில், இந்திய தேசத்தில் எவ்வளவு முட்டாள்கள் புழங்குகிறார்கள் என்பதன் அடையாளம் தானே?