ராகுல் தேச விரோதியாம்! சொல்வது தேச துரோகிகள்! பேயிடம் இருந்து விடுபட்டு பிசாசுகளிடம் சிக்கிய கதையாய் இந்தியா பிரிட்டிஷாரிடம் பெற்ற சுதந்திரத்தை இன்று மதவாத பிளவு சக்திகளிடம் பறிகொடுத்துள்ளது. இதனால் தான், ”இன்றைக்கு ஒரு உள் நாட்டுப் போர் தேவைப்படுகிறது” என்றார், ராகுல் காந்தி! விரிவாக பார்ப்போம்;
”1947 ல் இந்தியா பெற்றது சுதந்திரமல்ல, அயோத்தி கோயில் திறந்த போது தான் நாம் சுதந்திரம் பெற்றோம்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார் ராகுல்காந்தி.
”1947ல் இந்தியா ஒருபோதும் சுதந்திரம் அடையவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.. ராமர் கோயில் கட்டப்பட்ட போதுதான் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அவர் சொல்கிறார். அரசியலமைப்புச் சட்டம் நமது சுதந்திரத்தின் சின்னம் இல்லை என்று சொல்லி, அரசியலமைப்பைத் தாக்கி மோகன் பகவத் பேசியுள்ளார். இவரை கைது செய்ய வேண்டும்’’ என்றார் ராகுல்!
“அரசின் கொள்கைகள் குறித்து ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆனால், ‘நாட்டுக்கே எதிராக போராடுகிறோம்’ என கூறுவது தேச விரோதம். காங்கிரஸ் கட்சியின் தலைமை தனக்கென ஒரு தனி தேச விரோத அடையாளத்தை உருவாக்கியுள்ளது. ராகுல் காந்தி தனது தேச விரோத கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்”என்கிறார் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்.
”இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மூவர்ணக் கொடியை வணங்குவதில்லை. அவர்களுக்கு இந்தியா குறித்து முற்றிலும் ஒரு மாறுபட்ட பார்வை இருக்கிறது. இந்தியா ஒரு நிழல் உலக, சீக்ரெட் சமூகத்தால் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்றவர்களின் குரலை நசுக்க நினைக்கிறார்கள்… காங்கிரஸைத் தவிர அவர்களைத் தடுக்க இந்த நாட்டில் வேறு எந்தக் கட்சியும் இல்லை. எங்களின் சித்தாந்தம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வேறுபட்டது.
இந்தியாவில் நடைபெறும் முக்கியப் போராட்டம் இதுதான். இங்கே ஒன்றோடு ஒன்று மோதும் இரண்டு பார்வைகள் உள்ளன. ஒன்று நமது பார்வை. அது அரசியலமைப்பின் பார்வை. மற்றொன்று ஆர்எஸ்எஸ்ஸின் பார்வை. இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒரு பார்வை கூறுகிறது…” என காட்டமாக பேசியுள்ளார் ராகுல்காந்தி.
விடுதலை போராட்டத்தையும், அதில் இன்னுயிர் நீத்தவர்களையும், சொத்து, சுகங்களை இழந்தவர்களையும் , சிறைக்கு சென்றவர்களையும், செக்கிழுத்தவர்களையும், தந்தை, மகன், சகோதரன் என பல்வேறு சொந்தங்களை நாட்டு விடுதலைக்காக காவு கொடுத்தவர்களையும், அத்தகைய எழுச்சி மிகு போரையும் இழிவு படுத்தும், நிராகரிக்கும் துணிவு ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு எப்படி வந்தது? என கேள்வி கேட்டுள்ளார் ராகுல் காந்தி.
உலகின் எந்த மூலையிலும், எந்த நாட்டிலும் தமது நாட்டின் விடுதலை போராட்டத்தை, சுதந்திரத்தை கொச்சைப் படுத்தும் கூட்டத்தை , இழிவுபடுத்தும் பிரச்சாரத்தை காண முடியாது. அத்தகைய இழிநிலையை, ஆர் எஸ் எஸ் இயக்கம் தொடர்ந்து கடை பிடித்து வருகிறது.
“நாம் எதிர்த்து போராடுவது பாரதீய ஜனதா கட்சியை மட்டுமல்ல, ஆர் எஸ் எஸ் என்ற நச்சு சக்தியை மட்டுமல்ல, இந்திய திருநாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் களவாடி அவற்றை இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு எதிராக நிறுத்தி உள்ள அரசு எந்திரத்தையும் எதிர்த்து களத்தில் நிற்கிறோம்” என்றார்.
மோடியின் ஜால்ராக்களும், கைகூலிகளும் 2014ல் மோடி பிரதமராக ஆன பின்னரே இந்தியா விடுதலை பெற்றதாக இதுவரை “கதையளந்து “ கொண்டு திரிந்தனர். ஒன்றிய அரசின் சித்தரிப்பும் இந்த வக்கிரபுத்தியை வாந்தியெடுத்தது. ஆனால், அவர்களுக்கு போட்டியாக இன்று மோகன் பகவத் இந்திய சுதந்திரம் அடைந்தது 2024-ல் தான் என திருவாய் மலர்ந்துள்ளார்.
இவர்களெல்லாம் இந்திய விடுதலைப்போராட்டத்தையோ, அது எழுப்பிய ஒற்றுமை உணர்வையோ, விடுதலை தாகத்தையோ உணர்ந்தவர்களாக இல்லை என்பதை விட, அத்தகைய உணர்வினை எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர்கள் என்பதை நாம் மறக்கலாகாது. அந்த விடுதலை போராட்டத்தில் உதித்த நன்முத்தாக நமது “அரசமைப்பு சட்டம் “ (Constitution) உருவெடுத்ததை இந்த குள்ளநரிக் கூட்டம் ஏற்றுக் கொண்டதில்லை. நமது மூவர்ணக் கொடியையும் இந்த கும்பல் ஒத்துக் கொண்டதில்லை.
இவர்கள் சுதந்திரம் என கொண்டாடுவதெல்லாம் மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி ஒரு பிரிவினரை தாழ்த்தி ஒரு பிரிவினர் மட்டும் ஆளுமை செலுத்துவதை, அதனடிப்படையில் ஒரு வழிபாட்டு தலத்தை இடித்து, பிறிதொரு ஆலயத்தை வன்முறை மூலம் நிறுவியதையே சுதந்திரம் என கொண்டாடுகின்றனர்.
இத்தகைய பிளவுவாதிகள் இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, அரசு நிருவாக அமைப்புகளையும், உயர்கல்வி பீடங்களான பல்கலைகழகங்களையும் ஆக்கிரமித்து அரசமைப்பு சட்ட குறிக்கோள்களை சிதைக்கின்றனர்.
இதை எதிர்கொண்டே காங்கிரஸ் கட்சி செயலாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அரசு விசாரணை அமைப்புகளான ஐ.டி., சி பி ஐ ., இ டி.,போன்றவற்றை நடுநிலை தவறி பழிவாங்கும், அச்சுறுத்தும் வேட்டை நாய்களாக மோடி அரசு பயன்படுத்துவதை யும்,
ஊடகங்கள் கேள்வி கேட்பதை விடுத்து அரசின் ஊதுகுழல்களாக மாற்றியதையும் நாட்டு மக்கள் அறிந்துள்ளனர்.
அதோடு ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் தனது கடமையிலிருந்து நழுவி ஆளுங்கட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற அனைத்து ‘தில்லுமுல்லுக்களையும்’ அரங்கேற்றுகிறது என குற்றம் சாட்டி உள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் இருந்த வாக்காளர் பட்டியலில் கடந்த ஆறு மாதங்களுக்குள் மகாராஷ்டிரத்தில் மட்டும் ஒரு கோடி வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது.
”புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பட்டியலை பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் வற்புறுத்திய பிறகும் தேர்தல் ஆணையம் வெளியிட மறுப்பது ஏன் ?’ என வினவியுள்ளார்.
”இவ்வாறு நேர்மையை உறுதி செய்யாத, வெளிப்படை தன்மையற்ற தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் முறையையே கேள்விக்குள்ளாக்குகிறது’’ என்று கூறியுள்ளார்.
ADR போன்ற தொண்டு நிறுவனங்களும், எண்ணற்ற சமூக ஆர்வலர்களும், முன்னாள் அரசு உயரதிகாரிகளும், முன்னாள் தேர்தல் ஆணையர்களும் இதுவரை ஆணையத்தின் மீது கூறி வந்த புகார்களை இன்று காங்கிரஸ் கட்சி கையிலெடுத்து மக்களின் முன் வைத்துள்ளது.
மற்ற சுய அதிகாரமிக்க அமைப்புக்களான சி ஏ ஜி, சி வி சி, தேசீய மனித உரிமை ஆணையம், செபி , போன்றே தேர்தல் ஆணையமும் இன்று ஆளுபவர்களின் கைப்பாவையாக மாறியுள்ள சூழலை ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளதை மெயின்ஸட்ரீம் ஊடகங்கள் முன்னிலை படுத்தவில்லை. ஆனால் இந்த உண்மையை காங்கிரஸ் அமைப்பும், அதன் தொண்டர்கள் மற்றும் தலைவர்களும் மக்களிடத்தில் எடுத்துச்செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது!
பாஜ க கட்சியோ வழக்கம் போல, இப்பிரச்சினையை மடை மாற்றம் செய்ய முயற்சிக்கிறது. இந்திய அரசை எதிர்ப்பது என்பது இந்திய இறையாண்மையை கேள்வி கேட்பதற்கு ஒப்பாகும் என ‘பூச்சாண்டி ‘ காட்டுகின்றது. பாஜக தலைவர் ஜே பி நட்டாவும், அதன் செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்தும் , ராகுல் காந்திக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்றும் அவர் ‘அர்பன் நக்சல்களின் ‘ பிடியில் சிக்கியுள்ளார் என்றும் அறிக்கை விடுகின்றனர்.
ஆனால், ஆர் எஸ் எஸ் தலைவர் பகவத்தின் ‘ இந்தியா 1947ல் சுதந்திரம் அடையவில்லை என்ற கூற்றிற்கு கண்டனமோ, மறுப்போ இதுவரை தெரிவிக்கவில்லை! ஆக, மோகன் பாகவத்தின் பேச்சை மோடி வேத வாக்காக ஏற்கிறாரா?
கலாச்சார அமைப்பு, தேசபக்தி மிகுந்த அமைப்பு (cultural organisation, Nationalist Organisation) என்ற போர்வையில் ஆர் எஸ் எஸ் கட்டவிழ்த்து விடும் மத வெறுப்பு பிரச்சாரங்களும், முன்னெடுப்புகளும்,பயிற்சி வகுப்புகளும் இன்று இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளை உள்நாட்டு மக்களும், வெளிநாட்டினரும் புரியத் தொடங்கி உள்ளனர்.
மோடி அரசு செய்யும் அனைத்து ஊழல்களையும், தேர்தல் பத்திரம் போன்ற முறைகேடுகளையும், போராடும் விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்களை அடக்கி ஒடுக்கும் மோடி அரசின் செயல்பாட்டை, சட்டங்களை வளைத்து அதானி போன்ற களவாணி முதலாளிகளை ஊக்குவிக்கும் மோடி அரசின் அனைத்து செயல்களையும் ஆதரிப்பதோடு, பயனும் பெறும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் நச்சுத்தன்மையை துணிச்சலாக எதிர் கொள்ளும் தலைவராக ராகுல் காந்தி உருவெடுத்துள்ளது பாஜக வினரை கலக்கியுள்ளது.
Also read
ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் என காந்தி -அம்பேத்கர் – மற்றும் இந்திய அரசமைப்பு சட்டத்தை உயர்த்தி பிடித்து மக்களிடையே விழிப்புணர்வை தூண்ட காங்கிரஸ் கட்சி முயல்கிறது.
கடந்த காலத்தில் செய்ய மறந்த சமூக நீதி முன்னெடுப்பும், பிரதிநிதித்துவ ஆட்சிமுறை விழிப்புணர்வுமே இந்திய மக்களை ஒன்றிணைக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி தலைமை புரிந்து கொண்டுள்ளதை இம் முயற்சி காட்டுகிறது.
ஏனைய அரசியல் கட்சிகளும், ஜனநாயக ஆர்வலர்களும் படித்த மக்களும் இம்முயற்சியில் முழுமையாக இறங்காவிடில், நேர்மையான தேர்தல், அமைதியான ஆட்சி மாற்றம், மக்களுக்கான ஆட்சிமுறை, ஏழை எளியோருக்கான முன்னேற்றம் என்பனவெல்லாம் பகல் கனவாய் வெறும் பேச்சாய் மாறிவிடும் அபாயம் உள்ளது.
கட்டுரையளர்; ச.அருணாசலம்
முற்போக்கு இயக்கங்கள் கூட்டாக இணைந்து பணியாற்றவேண்டும்.
தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் லோக்சபா மற்றும் விதானசபா தேர்தல்களுக்கு இடையில் கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வாக்காளர்கள் திடீரென தோன்றியிருப்பது சிக்கலாக உள்ளது என கூறியுள்ளார். 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மகாராஷ்டிரா மாநில மொத்த வாக்காளர்கள் 9,30,61,760 என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 2014-ல் 8,07,98,823 வாக்காளர்கள் என்றும் , 2019-ல் புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு பின்னர், 8,86,76,946 என தெரிவிக்கப்பட்டது. 2024-ல் 43 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். 2024 சட்ட மன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,70,25,119 வாக்காளர்கள். இதில் நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் இடையில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 43 லட்சம். மேற்படி வாக்காளர்களில் பெரும் பகுதி முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சேர்க்கப்பட்டது. ஆனால் திருவாளர் ராகுல் காந்தி ஒரு கோடி புதிய வாக்காளர்கள் திடீரென தோன்றியிருப்பதாக கூறுவது தவறான தகவல் என்பது மட்டுமில்லை, எதிர்கட்சித் தலைவருக்கு தகுதியற்றவராகவே பார்க்கப்படுகிறது.
முஸ்லிம் சார்பு கட்சிகள், தலித் கட்சிகள் காங்கிரசில் ஐக்கியமாகி விடவேண்டும் ஆர்எஸ்எஸ் போன்ற பிறமதசார்பு அமைப்புகளையும் மதவழி கட்சிகளையும் நடுநிலை செக்குலர் முற்போக்கு மீடியாக்கள் தோலுறித்துக் காட்டவேண்டும்