போக்கத்த நிலையில் போக்குவரத்துத் துறை!

-சாவித்திரி கண்ணன்

பொன் முட்டையிட வேண்டிய போக்குவரத்துத் துறை 56,000 கோடி கடனில்! ஓட்டுநருக்கு 12 மணி நேர வேலை, விடுமுறை, சம்பள உயர்வு, ஓய்வூதியப் பயன்கள்.. எல்லாம் கட்..என ஊழியர்களை வறுத்தெடுத்தது போதாதென்று, காலாவதி பேருந்துகள், காலி பணியிடங்கள், தனியார்மயம் ..என ராங் ரூட்டில் போக்குவரத்து துறை;

போக்குவரத்து துறை சார்ந்த தொழிற்சங்கங்களான ஏஐடியுசியும் ,சிஐடியுவும் வரும் ஜனவரி -21 மற்றும் 22 தேதிகளில் தமிழக அரசை எதிர்த்து பெரிய போராட்டங்களை அறிவித்துள்ளன. பல கட்ட பேச்சு வார்த்தைகள், பல கட்ட போராட்டங்கள்..என எத்தனை தான் செய்தாலும், திமுக அரசு திசை மாறாமல் தன் பயணத்தை தனியார் மயத்தை நோக்கியே செலுத்தி கொண்டுள்ளது.

தனியார்மய முயற்சிக்கு முன்னோட்டம்;

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மக்கள் தேவைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 10 சதவிகித பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது 2015 வரை செயல்படுத்தப்பட்டது. அப்போது 22, 533 பேருந்துகள் புழக்கத்தில் இருந்தன. அந்தக் கணக்குப்படி பார்த்தால் இன்று பேருந்துகள் எண்ணிக்கை இருமடங்கேனும் அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால், ஆண்டுதோறும் படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது ஓடிக் கொண்டிருக்கும்  பேருந்துகளோ, 18,000 தான்! 3,600 பேருந்துகள் இயங்கிய சென்னையில் தற்போது 2,700 பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன.

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற விசேச நாட்களில் கூடுதல் மக்கள் போக்குவரத்தை நாடுவார்கள். அந்தச் சமயங்களில் அரசு பணிமனைகளில் ஸ்பேர் வண்டிகளாக நிறுத்தப்பட்டு இருக்கும் சுமார் 2,000 பேருந்துகளை தாயர்படுத்திப் பயன்படுத்துவதே வழக்கம். ஆனால், தற்போது தனியாரிடம் பேருந்துகள் கீ.மீ கணக்கிற்கு ரூ 51.25 என பணம் செலுத்தி வாங்கி இயக்குவதன் மூலமாக லாபம் பார்க்க வேண்டிய பண்டிகை நேரங்களில் நஷ்டம் அடைகிறது, நமது போக்குவரத்து துறை! அந்த பேருந்துகளை தனியார் டிரைவர்கள் இயக்குவதன் மூலமாக பொதுத் துறை ஊழியர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படுகிறது.

சரிவை நோக்கிய பயணத்தில் போக்குவரத்து துறை;

அரசுப் பேருந்துகளில் அன்றாடம் 2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர்.  ஆக, மிக லாபகரமாக இயங்க வேண்டிய நிறுவனம் நேர்மையற்ற, முறைகேடான நிர்வாகத்தின் காரணமாக நஷ்டத்தில் இயங்குகிறது! நஷ்டங்களைத் தவிர்க்க, தனியார் மயமே தீர்வு என்பது பாஜக பாலிசி! அதையே இன்றைய மு.க.ஸ்டாலினின் திமுக அரசாங்கமும் செயற்படுத்துகிறது!

2022 -ல் மே மாதம் தமிழக சட்டசபையில் அரசு போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் கொள்கை முடிவை ஸ்டாலின் அரசு அறிவித்தது. இது மத்திய பாஜக அரசின் பொதுத் துறை அனைத்தையும் தனியார்மயமாக்கும் கொள்கையை இங்கும் அமலாக்கும் அறிவிப்பாகும்.  மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் அபராதத் தொகைகளை பத்து மடங்கு அதிகப்படுத்தியதைத் தமிழக திமுக அரசு அப்படியே ஏற்றுக் கொண்டு, தமிழகத்தில் அமல்படுத்தி வருவதன் தொடர்ச்சியாக தற்போது புதிய பேருந்துகள் வாங்குவதைக் குறைத்துக் கொண்டு தனியார் பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து தனியார் டிரைவர்களைக் கொண்டு இயக்கும் நடைமுறை அமலாகி வருகிறது.

1989,90 களில் திமுக ஆட்சியின் போது ரூபாய் 186 கோடி நஷ்டத்திற்கு ஆளாகி இருந்தது போக்குவரத்து துறை! அடுத்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தனது ஐந்தாண்டு காலத்தில் போக்குவரத்து துறையின் நஷ்டத்தை 530 கோடியாக உயர்த்தினார்! மீண்டும் 1996ல் திமுக ஆட்சிக்கு வந்த போது, அந்த நஷ்டத்தை 2,035 கோடி அளவுக்கு அதிகப்படுத்தி விட்டது! கடைசியாக 10 ஆண்டுகள் ஆட்சி செய்த  அதிமுக ஆட்சி பதவி விலகிய போது, நஷ்டம் 33,000த்து சொச்சம் கோடியாக இருந்தது. அதை தற்போது மூன்றரை ஆண்டுகளில் 56,000 கோடிகளாக்கிய சாதனை திமுக ஆட்சி உடையதாகும்;

ஒவ்வொரு தனியார் நிறுவனமும் ஆண்டுக்காண்டு லாபக் கணக்கை அதிகப்படுத்தியே வருகின்ற இயல்பான நிலையில், பொதுத் துறை நிறுவனங்களால் லாபகரமாக செயல்பட முடியவில்லை என்பதால், தனியார்மயமாவதில் என்ன தவறு? என்ற எண்ணம் மக்களுக்கு வலுப்படும். ஆகவே, இன்றைய தினம் படிப்படியாக நஷடத்தை உயர்த்திக் கொண்டே செல்வது, நிரந்தரமான பணிகளை ஒழித்துக் கட்டி ஒப்பந்தப் பணி முறையை கடைபிடிப்பது, தனியார் பேருந்துகளை பயன்படுத்தி லாபத்தை விட்டுக் கொடுப்பது..என நகர்ந்து இறுதியில் போக்குவரத்து துறையை மீள முடியா நஷடத்திற்கு தள்ளி, ஊழியர்களை வேலையே வேண்டாம் போ என ஓட வைத்து இழுத்து மூடலாம் என திமுக அரசு கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகிறது.

ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது…?

# மக்கள் நலத் திட்டங்கள் என்ற போர்வையில் ஓட்டு பொறுக்கி அரசியலுக்காக இலவசப் பயணங்களை படிப்படியாக அதிகப்படுத்தி வருவதானது ஒரு கட்டத்தில் பெரும் நஷ்டத்திற்கு வித்திட்டுவிடுகிறது. இது முதலுக்கே மோசமாகி, போக்குவரத்து துறையை முடமாக்கி வருகிறது. இது ஊழியர்களின் கண்ணியமான சம்பளத்தில் கை வைத்து அவர்களை கண்ணீர் கடலில் தள்ளுகிறது.

# பேருந்துகள் வாங்குவதில் ஊழல், ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதில் ஊழல், பழுதுபார்ப்பு பணியில் ஊழல், வேலைக்கு ஆள் எடுப்பதில் லஞ்சம், எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்தக் கட்சியின் ஊழியர்கள் பலர் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவதோடு அதிகாரம் செய்யும் அவல நிலை…போன்ற நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்காத வரை நஷ்டம் தான்.

# பொதுத் துறை நிறுவனங்கள் மக்கள் நலன்களுக்கானது. அதில் செலவழிக்கும் பணம் மக்களுடையது. இதில் ஆட்சியாளர்கள் நேர்மையுடன், லஞ்சம் ஊழல்களுக்கு இடம் தராமல் செயல்பட வேண்டும். அரசியல் நோக்கங்களால் பொதுத் துறையை பலவீனப்படுத்தக் கூடாது. ஒரு நிறுவனம் லாபகரமாக செயல்பட்டால் தான் நிடீத்து செயல்பட முடியும். அதே போல அதில் பணி புரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் பணியாற்றும் சூழலை கட்டமைப்பது தான் நிர்வாகத் திறமையாகும். அவர்களை குறைந்த ஊதியத்திற்கு கசக்கி பிழிவதும், அதிக நேரம் வேலை வாங்குவதும், விடுமுறை தராமல் அச்சுறுத்துவதும், ஓய்வூதிய பயன்களை இல்லாமல் ஆக்குவதும், மீண்டும், மீண்டும் கடன் வாங்கி அதிக நஷ்டங்கள் குறித்த குற்றவுணர்வின்றி பொதுத் துறையை நாசப்படுத்துவதும் ஏற்புடையதல்ல.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time