தமிழக அரசு விருதுகள் தமாஷா? தான்தோன்றித்தனமா?

-அஜிதகேச கம்பளன்

ஏதோ சுண்டல் தருவது போலத் தருவதா? ஒரு அரசாங்கம் தரும் விருதுகளுக்கு நல்ல மரியாதை ஏற்பட வேண்டும் என்றால், விருதுக்கானவர்களை கவனமாக -தகுதிக்கு உரியவர்களாகப் பார்த்து -தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், விருதுக்கான பரிசுத் தொகை இவ்வளவு ஏற்ற இறக்கங்களுடன் இருப்பது சமூக நீதிக்கு அழகா?

ஆனால், கடந்த அதிமுக அரசும் சரி, தற்போதைய அரசும் சரி விருதுக்கானவர்களை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு அதிர்ச்சியையும், அருவெறுப்பையும் ஏற்படுத்துகிறார்கள்!

தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழின் முன்னோடி பெரியார்களின் பெயர்களில் விருதுகள் வழங்குகிறார்கள்!

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புலவர் மு.படிக்கராமு-வுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல்.கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது கே.வி.தங்கபாலுவுக்கும்,மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் பொன்.செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும் தமிழக முதல்வர் வழங்கி சிறப்பித்தார். இவ்விருது பெறும் விருதாளர்கள் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்புச் செய்யப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது து.ரவிக்குமாருக்கும் வழங்கி முதல்வர் சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் விருது 2024-ல் தோற்றுவிக்கப்பட்டு, முதன்முறையாக இவ்விருதை முத்து வாவாசிக்கு முதல்வர் வழங்கி சிறப்பித்தார். அவருக்கு விருதுத் தொகையாக ரூ.10 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் முதல்வர் சிறப்பித்தார்.

திருவள்ளுவர், திரு.வி.க, கி.ஆ.பெ, அண்ணா, பாரதியார், பாரதிதாசன்.. போன்றவர்களின் பெயரில் தரப்படும் விருதுகளுக்கு ரூ 2 லட்சம் தான்!

ஆனால் பெரியார், அம்பேத்கர் பெயரிலான விருதுகளுக்கோ ரூ 5 லட்சம்.

ஆனால், கலைஞர் பெயரிலான விருதுக்கு மட்டும் 10 லட்சம்!

ஆக, திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரை விட கலைஞர் ரொம்ப உசத்தியானவரா? கலைஞருக்கும் கீழ் வைக்கத்தக்கவர்களா மேற்படியான பெரியோர்கள்..!

பரிசுத் தொகை ஏன் ஒரே மாதிரியாக இல்லை. ஏன் இவ்வளவு ஏற்றத் தாழ்வு…? இதற்கு அரசு தரப்பில் என்ன விளக்கம் இருக்கிறது..?

கள்ளச் சாராயம் குடித்து செத்தவர்கள் ஏதோ மிகப் பெரிய தியாகிகளை போல அவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சத்தை அள்ளி வழங்கிய முதல்வர் ஸ்டாலினிடம் இது பற்றி எல்லாம் விளக்கம் கேட்க முடியுமா? எனத் தெரியவில்லை. அரசு கஜானாவில் இருப்பது மக்கள் வரிப்பணம். தன் அப்பாவின் பெயரில் அவர் ஒரு கோடி ரூபாய் கூட விருது தரட்டும். அது அவரது சொந்தப் பணமாகவோ அல்லது கட்சியின் பணமாகவோ இருந்தால் யார் கேட்கப் போகிறார்கள். கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்துச் செல்வதல்ல, அரசு விருதுகள்!

அடுத்ததாக இப்படி விருது பெறுவோர்களில் சிலர் தகுதியானவர்களாகவும் இன்னும் சில பேர் கொடுக்கப்பட்ட விருதுக்கு முற்றிலும் பொருத்தமற்றவர்களாகவும் உள்ளனர்.

தகுதியானவர்களுக்கு கொடுத்ததைக் குறித்து நமக்கு மகிழ்ச்சி தான். வாழ்த்துக்கள். விமர்சனம் இல்லை.

ஆனால், தகுதியற்ற ஒருசிலரையேனும் சொல்லாமல்  இருக்க முடியவில்லை. ஏனென்றால், எந்தப் பெயரில் விருதைத் தருகிறீர்களோ.., அந்தப் பெரியார்களை நீங்கள் தவறான நபர்களுக்கு கொடுப்பதன் மூலம் இழிவுபடுத்தி விடுகிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

காமராஜர் என்ற தூய தலைவர், அப்பழுக்கற்ற தலைவர், கர்மவீரர், ஏழைகளின் ஏந்தல்..அப்படிப்பட்டவரின் பெயரில் வழங்கப்படும் விருதுக்கு தங்கபாலு எப்படி பொருத்தமாவார்..? கொஞ்சம் கூட நியாயமில்லையே. சென்ற வருடம் சரியான தேர்வு செய்ய முடிந்தவர்களுக்கு இந்த ஆண்டு என்ன தடுமாற்றம்.

அதே போல தமிழ்த் தென்றல் திருவிக விருதுக்கு ஆங்கில மருத்துவர் ரவீந்திர நாத் எப்படி பொருத்தமாவார்? இவர் கூட்டணிக் கட்சியின் மருத்துவர் சங்கத் தலைவர், அரசுக்கு ஆதரவாக செயல்படுபவர் அவ்வளவே. அவரை மகிழ்ச்சிபடுத்த அட்சியாளர்களுக்கு எவ்வளவோ வழிமுறைகள் இருக்க, திருவிக விருதை வீணடிப்பானேன்?

இதைப் பற்றி யார்  என்ன கேட்பது? ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் நான் வைத்தது தான் சட்டம் என்ற நினைப்பு முதல்வருக்கு இருக்கா? அல்லது அதிகாரிகள் இஷ்டத்திற்கு இப்படி முடிவெடுக்கிறார்களா? தெரியவில்லை

அம்பேத்கர் குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் தமிழில் ஒரு டஜனுக்கும் அதிகமாக இருக்கிறார்கள். அப்படி இருக்க பெரியாரை இழிவுபடுத்தி ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவாக எழுதியும், பேசியும் வந்த ரவிக்குமாருக்கு எப்படி தருவீர்கள்…?

அஜிதகேச கம்பளன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time