பத்தாண்டுகள் பாஜகவின் கொள்கைபரப்பு செயலாளராக மோடியின் புகழ்பாடி வந்தவர் எஸ்.வி.சேகர். மனுதர்ம, சனாதனக் கருத்தியலுக்கு வலுசேர்க்கும் அவரது பேச்சுக்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட எஸ்.வி.சேகரை திமுகவிற்கு 2026 தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் அழைப்பதின் பின்னணி என்ன..?
எஸ்.வி.சேகர், மு.க.ஸ்டாலின் இவங்க இரண்டு பேரில் யார் சந்தர்ப்பவாத அரசியலில் சாமார்த்தியசாலின்னு பட்டிமன்றமே வைக்கலாம்…!
”2026 தேர்தலுக்கு எஸ்.வி.சேகரைப் பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறு ஒன்றும் தேவையில்லை…”
”எஸ்.வி.சேகர் எங்கிருந்தாலும், எந்த கட்சியில் இருந்தாலும், இப்போது எந்த கட்சி என்று தெரியாது.. நம்ம கட்சி”
“கலைஞர் மீதும், என் மீதும் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர் எஸ்.வி.சேகர். பாசம் என்றால், அரசியல் பாசம் அல்ல, அது கலை பாசம். இன்னும் சொல்லப்போனால், எஸ்.வி.சேகர் எங்கள் குடும்பத்தை சார்ந்தவர் தான். குடும்பம் என்றால் கலை குடும்பம்.”
தற்போது வரை பாஜகவில் இருக்கும் ஒரு பார்ப்பன சித்தாந்தி எஸ்.வி.சேகர். மூச்சுக்கு முன்னூறு முறை மோடியை புகழ்ந்து வருகிறார். ”மோடியின் புகழ்பாட பாஜக ஆட்சியை விதந்தோத மாசம் நான்கைந்து பிரச்சார வாய்ப்பு. அதற்கு தலா இரண்டு லட்சம் சன்மானம்” இது தான் எஸ்.வி.சேகர் கேட்டது. ஆனால், எஸ்.வி.சேகரின் திறமையை, முக்கியத்துவத்தை முற்றிலுமாக புறக்கணித்து விட்டத்தில் தற்போது அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அண்ணாமலையை எஸ்.வி.சேகர் விமர்சிப்பது ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி என்பதற்கு இந்த புகழுரையே சாட்சி;
”கட்சிகள் மாறும் போது, கொடிகளின் நிறம் மாறலாம். ஆனால் மனிதருடைய நிறங்கள் மாறக் கூடாது. அதற்கு நம் எஸ்.வி.சேகரை எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஏனென்றால், எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும், எதையும் துணிச்சலாக சொல்லக் கூடியவர். அந்த ஆற்றல் அவருக்கு உண்டு. இப்போது கூட யாரை பற்றியெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.’’
இப்படி புகழ்ந்த ஸ்டாலின் மயிலாப்பூரில் அவர் தந்தை வாழ்ந்த தெருவிற்கு அவருடைய தந்தையாரின் பெயரை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை நான் நிறைவேற்றி இருக்கிறேன். நான் ஏற்கனவே வைத்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்…என எஸ்.வி.சேகரிடம் யாசகம் கேட்டுள்ளார். அதாவது 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு கேட்டு இருக்கிறார் போலும்.
சமீபத்தில் தான் எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஊடகத் துறை பெண் பத்திரிகையாளரை இழிவுபடுத்திய விவகாரத்தில் சிறை தண்டனை வழங்கியது. நியாயப்படி தற்போது சிறையில் இருக்க வேண்டிய கைதி அவர்! ஆனால், அவரை தமிழ்நாட்டின் திராவிட மாடல் முதல்வர் ஆகா, ஓகோவென்று புகழ்ந்து, அவர் கோரிக்கையையும் நிறைவேற்றி, அவரிடம் யாசகம் கேட்கிறார்.
திமுகவின் உடன்பிறப்புகளோ இணையத்தில் எஸ்.வி.சேகரை கழுவிக் கழுவி ஊற்றுகின்றனர். அவரது பார்ப்பன பற்றையும், பார்ப்பன குசும்பையும் கிண்டல் செய்கின்றனர். அவரை சிறையில் தள்ளத் துடிக்கின்றனர். ஆனால், அந்த தொண்டர்களின் தலைமையான ஸ்டாலினோ, எஸ்.வி.சேகரை வானாளவப் புகழ்ந்து தள்ளியதோடு, கட்சி பிரச்சாரத்திற்கு வரக் கேட்டு கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த முரணை, விநோதத்தை எப்படி புரிந்து கொள்வது..?
பெரியார் கருத்துக்களை நாடகத்தில் பேசியதற்காகவே கல்லடியும், சொல்லடியும்பட்ட நடிகவேல் எம்.ஆர்.ராதாவுக்கு இணையாக ஏற்கனவே கலைஞர் கருணாநிதி எஸ்.வி.சேகரை பொருத்தமற்ற ஒப்பீடு செய்திருக்கிறார். கேப்சூல் மருந்து போல நல்ல கருத்துக்களை நாடகத்தில் சொல்வதில் எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு எஸ்.வி.சேகர் என்பது அன்றைய கருணாநிதியின் கண்டுபிடிப்பு. தற்போது 2026 தேர்தல் வெற்றிக்கு திமுகவை எஸ்.வி.சேகரே கரைசேர்க்க முடியும் என்பது ஸ்டாலின் கண்டுபிடிப்பு.
இந்தச் சூழலில் எஸ்.வி.சேகரே பேசிய கருத்தை நினைவு படுத்துகிறேன். ”பாஜகவில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதால் விலகிவிட்டேன். பிராமணர்கள் மட்டுமல்ல, யாருமே தமிழக பாஜவை நம்புவது வீண்! பிராமணர்களுக்கு நன்மை செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுகவிற்கு பிரச்சாரம் செய்வேன்” என்று கூறி இருந்தார். ஆக, தான் விரும்பியதை எஸ்.வி.சேகர் ஸ்டாலின் வாயாலேயே கோரிக்கையாக வரவழைத்து விட்டார்!
பத்தாண்டுகளாக பாஜகவில் இருப்பவர் எஸ்.வி.சேகர். மோடியோடு மேடையில் பங்கெடுத்தவர் எஸ்.வி.சேகர். அப்போது அவர் பேசும் போது, நான் பாஜக கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கிறேன். திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தில் பல பேர் லாபி செய்தபோதும் என்னை அழைத்து அந்தப் பதவியைக் கொடுத்தவர் பிரதமர் மோடி. அவரின் நன்மதிப்பை பெற்ற செல்லப்பிள்ளையான நான் கட்சி மாறமாட்டேன்.
என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. முறைப்படியான அழைப்பு இல்லாமல், நானே வண்டியை எடுத்துக்கொண்டு சுற்றிவர முடியாது. இவ்வளவு தான் சொல்ல முடியும்.என்று பகிரங்கமாகச் சொல்லியும் அவருக்கு பாஜகவில் முக்கியத்துவம் தரவில்லை அண்ணாமலை.
இதனால் பாஜகவில் பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று அடிக்கடி சொல்லி வந்த எஸ்.வி.சேகர் கட்சியின் மேலிடத்தில் இருந்து வருகிற நிதி வேட்பாளர்களுக்கோ, பிரச்சாரகர்களுக்கோ தரப்படுவதில்லை என்றும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஆக, எஸ்.வி.சேகரின் ஆதங்கங்கள் என்ன என்பதை அவரே பகிரங்கப்படுத்திய நிலையில் தான் ஸ்டாலின் அவரை அழைத்து கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார். பார்ப்பன பாஜகவில் உள்ள ஒரு சூத்திர மாநிலத் தலைவரால் புறக்கணிக்கப்பட்ட அக்மார்க் பிராமண கலைஞரை திமுக அள்ளி அரவணைத்துள்ளது. இவரது கிச்சுகிச்சு மூட்டும் சிரிப்புத் தோரணங்களை, அரசியல் நையாண்டிகளை எம்.ஆர்.ராதாவின் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு இணையாக கருதியதோடு விட்டுவிட்டார் அப்பா கருணாநிதி.
Also read
மகன் ஸ்டாலினோ, ஒருபடி மேலாகச் சென்று பாஜகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த – உண்மையிலேயே மனுதர்ம கொள்கை பற்றுள்ள – ஒரு நபரை திமுகவிற்கு பயன்படுத்துகிறார். இவ்விதம் முடிகிறதென்றால், ஸ்டாலின் சொல்வது போல, எஸ்.வி.சேகர் நிறம் மாறாதவரே, திமுக தான் நிறம் மாறிக் கொண்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.
திராவிட இயக்கமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திமுகவின் தலைமை, அதன் அடித்தளக் கொள்கைகளில் இருந்து எந்த அளவுக்கு அன்னியப்பட்டுக் கொண்டுள்ளது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சியாகும்.
‘யாரை யார் வெற்றி கொண்டுள்ளார்’ என்பதை இதை வாசிப்பவர்களே புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இதைவிட அவமானம் ‘திராவிட மாடல் அரசு'(?)க்கு வேறு இருக்க முடியுமா?
இது போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியலை திமுகவில் உள்ள கொள்கையாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், அனுதாபிகளும் எப்படி சகித்துக் கொள்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது…!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
பாம்பை வீட்டில் விட்டு தீம்பைத் தேடிக் கொள்ளும் திமுக!
சனாதனத்தை எதிர்ப்பார்கள். ஒரிஜினல் சனாதனவாதியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் இரண்டும் வேறு வேறு போல .இதுதானோ திராவிட மாடல்…..