மதுரை மக்கள் மனஉறுதி குலையாதவர்கள்! அரசியல் தெளிவு மிகப் பெற்றவர்கள். போராடுவதில் சளைக்காதவர்கள், உயிருக்கும் அஞ்சாதவர்கள்…! உண்மையாகவே டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யப்படுவது வரை ஓயமாட்டார்கள்.. என்பதை மத்திய ஆட்சியினர் உணர்ந்து கொள்ள இதுவே சாட்சியாகும்;
பாஜக தலைவர்கள் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க அரிட்டாபட்டி பகுதியில் போராடும் மக்கள் பிரதிநிதிகள் சிலரை பாஜக தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, “தொடக்கத்தில் இருந்தே இதற்கு தீர்வு வழங்கவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. டங்ஸ்டன் விவகாரத்தில் புதன்கிழமை (இன்று) மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகும்.” என்றார்.
அது தற்போது வரை நடக்கவில்லை!
இந்தியாவின் பல பகுதிகளில் இயற்கையை அழிக்கும் கொடிய நாசகார திட்டங்கள் பலவற்றை பெரு முதலாளிகளின் நன்மைக்காக செய்து வருகிறது மத்திய அரசு. அங்கே எழும் போராட்டங்களை காவல்துறை, ராணுவம் மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் ஆகியவற்றால் நசுக்கியும் விடுகிறது. ஆனால், தமிழ் நாட்டில் பாஜக அல்லாத மாநில கட்சியின் அரசானது முதலில் டங்ஸ்டன் திட்டத்தை ஏற்றுக் கொண்டாலும், மக்களின் வீரியமான எதிர்ப்பையடுத்து பின் வாங்கிவிட்டது.
அதோடு தன்னை மக்களிடம் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என எல்லா கட்சிகளும் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றிவிட்டன.
ஆனால், இந்த தீர்மானத்தோடு திருப்தி அடைவது என்பதை மதுரை மக்கள் தெளிவாக உணர்ந்து, ”மத்திய அரசு அதிகாரபூர்வமாக டங்ஸ்டன் திட்டம் ரத்து என அரசாணை வெளியிட வேண்டும்” எனத் தினசரி நாளும், பொழுதுமாக பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகிறார்கள்!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஜனவரி- 8 ஆம் தேதி பேரணியில் ஈடுபட்டனர். முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பிலும், பல்வேறு மக்கள் இயக்கங்களின் கூட்டிலும் நடத்தப்பட்ட அந்த மாபெரும் பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் பங்கெடுத்தனர். மேலூர், அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள், வணிகர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணி சுமார் ஏழு மணி நேரம் 18 கீ.மீ தொலைவுக்கு நடத்திய பேரணி மதுரை மக்களின் ஒற்றுமைக்கும், உறுதிக்கும் சான்றானது. காவல்துறை அன்றும், இன்றுமாக தொடர்ந்து பல நெருக்கடிகள் தந்தவண்ணம் உள்ளது. 5,000 பேர் மீது வழக்கு பதிந்துள்ளது.
‘தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும்’ என பகிரத பிரயத்தனம் செய்து வரும் தமிழக பாஜக தலைமை முதலில், ”டங்ஸ்டன் திட்டம் அவசியமானது, தவிர்க்க முடியாது” என முதலில் கூறி வந்தது. ஆனால், பிறகு மக்கள் கோபவேசத்தைக் கண்டு அஞ்சி, நடுங்கி பின் வாங்கிவிட்டது. அதே சமயம், ‘டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்வோம்’ என அறிவிக்கவில்லை.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், திருமாவளவன், கனிமொழி ஆகியோர் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து இந்த திட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தனர். அப்போது அது குறித்து மத்திய அமைச்சர் எந்த உத்திரவாதமான பதிலும் தரவில்லை.
இந்த ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் போராட்டக்களத்திற்கு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தாது. அதற்கு நான் உறுதி தருகிறேன்” என்றார். ஆனால், ‘திட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் அண்ணாமலையிடம் இல்லை’ என்பதை போராட்டக்குழு நன்கு அறிந்திருந்தது. அதனால், அப்போதே ஒரு அறிக்கை தந்தது;
அ.வல்லாளபட்டி மக்களின் உறுதியான கருத்தை டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு முழுமையாக ஏற்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியதற்காக 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதையும், டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் 700-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து போராடி வந்ததை ஆண்டுக்கணக்கில் கண்டுகொள்ளாமல் இருந்த பாஜகவின் அரசியலும், வேதாந்தா நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகளும் எளிதாகக் கடந்துவிடக் கூடிய ஒன்றல்ல என்பதை தமிழ்நாடு மக்களும், டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் அறிந்தே வைத்துள்ளோம்.
எனவே, அண்ணாமலை வெறுமனே வாய்வார்த்தையில் மக்கள் போராட்டத்தை திசை திருப்பாமல், மத்தியில் ஆட்சியில் உள்ள தனது கட்சி பிரதமரான நரேந்திர மோடியை வலியுறுத்தி சட்ட அங்கீகாரம் தரும் எழுத்துபூர்வமான டங்ஸ்டன் திட்ட ரத்து அறிவிப்பு தரவேண்டும்” எனக் கூறப்பட்டது.
தற்போது அண்ணாமலை, எல்.முருகன் தரப்போடு சென்றவர்களிடமும் எந்த உத்திரவாதமும் தரவில்லை. ஆனால், ஏதோ டங்ஸ்டன் திட்டமே ரத்தாகிவிட்டது போல பாவனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ‘டங்ஸ்டன் திட்ட ஏல ரத்தும், மத்திய பாஜக அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பும்’ என்ற தலைப்பில் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதன் சாராம்சம்;
“மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கடந்த நவம்பர் 7-ம் நாள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிமத்தை எடுப்பதற்கான அனுமதியை, தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாதுகாப்பு தளம் அமையப்பெற்ற அரிட்டாபட்டி-மீனாட்சிபுரம் பகுதியை உள்ளடக்கி 5000 ஏக்கர் நிலத்தில் அனுமதி வழங்கியது.
இதை அறிந்து மேலூர் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். பொதுமக்களின் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட மாநில திமுக அரசு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஒப்புதல் உடன் ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது. மத்திய பாஜக அரசும் பல்லுயிர் தளம் அமைந்துள்ள சுமார் 500 ஏக்கரை தவிர்த்து திட்டத்தை மறு ஆய்வு செய்வதாக கூறி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பில் இருந்த சூழ்ச்சியை மக்கள் உணர்ந்து கொண்டனர். இந்த திட்டத்தை முழுமையாக கைவிடாமல் மறு ஆய்வு அல்லது மறு வரையறை என்பது ஏமாற்று வேலை அதை தாங்கள் ஏற்க இயலாது என்று உறுதிபடக் கூறினர். கடந்த ஜனவரி 7-ம் தேதி முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் விடுத்த அழைப்பின் பேரில், மேலூர் நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை தமுக்கம் தலைமை தபால் அஞ்சலகம் வரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு ஒரு கட்டுக்கோப்பான வரலாற்று சிறப்புமிக்க நடைப்பயண போராட்டத்தை நடத்தி காட்டினர்.
அதன் பிறகு டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் உள்ளிட்ட பல்வேறு வடிவ போராட்டங்களை மேலூர் பகுதி மக்கள் கடைப்பிடித்து தங்கள் எதிர்ப்புக்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தனர். மத்திய பாஜக அரசினை நோக்கி டங்ஸ்டன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் போராட்டம் மேலும் மேலும் தீவிரமடைந்த சூழலில் அ. வல்லாளப்பட்டியில் மக்களை சந்தித்த பாஜக மாநில தலைவரான அண்ணாமலை, ”விரைவில் போராடும் மக்களை நேரில் அழைத்து மத்திய அரசு திட்டம் தொடர்பான நல்ல முடிவை அறிவிக்க இருக்கிறது” என்று கூறி சென்றார்.
இதை அடுத்து தற்போது தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக 8 பேர் அடங்கிய ஒரு குழுவை பாஜக-வினர் அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்தப் பகுதி மக்களிடம் சந்தித்து பேசிய பொழுது, இந்த டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதைத் தவிர வேறு எந்த சமரசத்தையும் தாங்கள் ஏற்க மாட்டோம் எனவும், திட்ட ரத்து செய்யப்படுவதை எழுத்துப்பூர்வமாக அரசாணை வடிவில் எங்களுக்கு அளித்தால் மட்டுமே, கடந்த 2 மாத காலமாக அன்றாட வேலைகளை துறந்து, உணவு உறக்கமின்றி போராடிய லட்சக்கணக்கான மக்களின் போராட்டத்துக்கான உண்மையான வெற்றியாக இருக்கும்.
இந்த உணர்வுளை புரிந்து மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து வெறுமனே வாயால் தரும் வாக்குறுதிகளை நம்புவதற்கு தாங்கள் தயாராக இல்லை. எனவே மத்திய அரசு இந்த டங்ஸ்டன் சுரங்கம் என்னும் நாசகார திட்டத்தை முழுமையாக ரத்து செய்து அதற்கான அரசாணையை வெளியிடுவதோடு, அதை அரசிதழிலும் வெளியிடுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதை மட்டுமே ஏற்போம் மற்ற வாய்மொழி வாக்குறுதிகளை நம்பமாட்டோம் என்று கூறினார். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மக்களின் இந்த உணர்வுகளுடம் முழுமையாக உடன்பாடு கொள்கிறது.
மேலும், இந்தத் திட்டத்தை ஏற்கெனவே ஏலம் விடப்பட்ட 5,000 ஏக்கர் தவிர்த்து டங்ஸ்டன் ஆய்வுகள் நடந்துள்ள மேலவளவு, கச்சிராயன்பட்டி, கம்பூர், கருங்காலக்குடி ,வஞ்சிநகரம் உள்ளடங்கிய மற்ற பகுதிகளில் நடைமுறைப்படுத்திட முயற்சி செய்கிறதோ என்ற அச்சமும் டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்புக்கு உள்ளது.
Also read
எனவே, இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதை தவிர்த்து வேறு எந்த வடிவிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு ஈடுபடுமானால் மக்கள் போராட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் இணைந்து அனைத்து விதமான போராட்டங்களிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செய்யும்” என்பதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
ஆக, இதன் மூலம் தெரிய வருவது என்னவெனில்,“டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதைத் தவிர வேறு எந்த சமரசத்தையும் ஏற்க மாட்டோம். வெறுமனே வாயால் தரும் வாக்குறுதிகளை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை. திட்டம் ரத்து செய்யப்படுவதை எழுத்துபூர்வமாக அரசாணை வடிவில் எங்களுக்கு அளிக்க வேண்டும்” என்பது தான் ஒரே தீர்வாகும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மாநிலத்தில் ஆளும் கட்சி திமுக, 40 எம்பிக்கள் உள்ள இண்டி கூட்டணி பரந்தூர், டங்ஸ்டன் திட்டங்களை தடுக்கமுடியும். மத்திய அரசு இஷ்டத்துக்கு எந்த திட்டமும் ஒரு மாநிலத்தில் செயல்படுத்த முடியவே முடியாது.