அறிவிக்கப்படாத எமர்ஜென்சியால் அல்லாடிய விஜய்!

-பவா சமத்துவன்

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பரந்தூரை தனிமைப்படுத்திவிட்டது. கூட்டணிக் கட்சிகள், எதிர்கட்சிகள், மக்கள் இயக்கங்கள் யாருமே பரந்தூருக்கு சுலபத்தில் செல்ல முடியாது. இது போன்ற நிலையில் பரந்தூருக்கு விஜய் செல்வதற்கு எளிதில் அனுமதிப்பார்களா என்ன? விஜய் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று; என்ன நடந்தது பார்ப்போம்;

ஏகனாபுரம் இருப்பது  தமிழகத்தில் தான் என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் யாரும் அவ்வளவு சுலபமாக இந்த ஊரை நெருங்கி விட முடியாத நிலையே உள்ளது. உண்மையிலேயே பாஜக ஆளும் மா நிலங்களில் கூட இவ்வளவு கடும் நெருக்கடிகள் மக்களுக்கு தரப்பட்டிருக்குமா? தெரியவில்லை.

தமிழகம் இதுவரை எத்தனையோ கட்சித் தலைவர்களின் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்களை சந்தித்து இருக்கிறது, வருகிறது.

ஆனால், தவெக தலைவர் நடிகர் விஜயின் வருகைக்காக தமிழக காவல்துறை அளித்த நெருக்கடிகள் இதற்கு முன் நாம் கேள்விப்படாதவை.

விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன் இரண்டு ஆண்டுகால முயற்சிக்கு பிறகு போராட்டக் களத்திற்கு வருவதற்கு முன்னதாகவே பாதி வழியிலேயே கைது செய்யப்பட்டு போராட்ட இடத்திற்கு அப்பால் 50  கிலோமீட்டருக்கு அப்பால் கொண்டு சென்று சிறை வைக்கிறார்கள்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செழியன் ஒருமுறை வருகை தர முயற்சித்த போது,ஏதோ ஒரு தீவிரவாதியை  பிடிப்பது போல ஏகனாபுரத்திற்கு 50 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள பூவிருந்தவல்லியிலேயே  தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.

எஸ் டி பி ஐ கட்சியின் தலைவர் முபாரக்  ஏகனாபுரம் வருவதற்கு முன்பாகவே கண்ணன் தாங்கள் பகுதியில் காவல்துறையால் சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டார்.

பொதுமக்களை – போராடும் விவசாயிகளை தடுப்பதில் சந்திப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ..? என எஸ் டி பி ஐ கட்சியின் தொண்டர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அது மோதலாகவும் முடிந்தது.

போராட்டத்தின் துவக்க காலத்திலேயே இப்பகுதிக்கு வருகை தந்து, இந்த திட்டத்துக்கு எதிராக பேசிய சீமானும் பல தடைகளை உடைத்து தான் இந்த பகுதிக்கு வருகை தர முடிந்தது.

திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவனும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகனும் திட்டப் பகுதிகளை முழுமையாக சுற்றி பார்க்க முடியாமல் – போராடும் 13  கிராம மக்களையும் சந்திக்க முடியாமலேயே – திரும்பினர் .

திட்டத்தை எதிர்க்கும்  “போராட்டம்  -ஆர்ப்பாட்டம்” போன்ற ஜனநாயக வழிமுறைகள் எதற்கும்  காவல்துறை அனுமதி தராத நிலையில், சேலம் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் அவர்கள், திட்டத்திற்கு எதிரான பரப்புரைக்காகவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இத் தொகுதியில் சுயேட்சையாக நின்றார்.

அவரை காவல்துறை தினமும் கண்காணித்தது. பழனியப்பன் ஏகனாபுரத்தில் உள்ள இக் கட்டுரையாளரின் இல்லத்தில் தங்க அனுமதித்ததற்காக, என்னுடைய வயதான தாய் தந்தையரை காவல்துறை பலமுறை அச்சுறுத்தியது.

இப்படிப்பட்ட சூழலில் தாவெக தலைவர் நடிகர் விஜயின் பரந்தூர் வருகையை இந்த அரசு எப்படி எடுத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

இப்படி தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை பறித்து, நிர்கதியாக்கி சொந்த மண்ணின் மக்களை அகதிகளாக்கி அதானிக்காக 5,746 ஏக்கர் நிலங்களை அபகரித்து தரும் மத்திய , மா நில ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டு வரும் மக்கள் 910 நாட்களாக நடத்திடும் அகிம்சை போராட்டத்தை யாரும் பொருட்படுத்தவில்லையே..? மனிதாபிமானம் தொலைந்ததோ என்ற  நிலையில் விஜய்க்கு போராடும் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஜனவரி 19 -20 தேதிகளில் எங்கள் தலைவர் ஏகனாபுரம் பகுதிக்கு வருகை தர உள்ளார் அதற்கு அனுமதி தாருங்கள் என, தாவெக  கட்சியினுடையமாநிலபொறுப்பாளர்கள் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளிடம் அனுமதி கோரி கடிதம் கொடுத்தனர். அதற்கு பின்பு தவெக சார்பில்  சென்னையில் தமிழக காவல்துறை இயக்குனரிடமும் மனு அளித்தனர் .

கடைசி இரண்டு நாளுக்கு முன் அனுமதி அளித்த காஞ்சிபுரம் காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

ஜனவரி 20 ஆம் தேதி அன்று பகல் 12:30 முதல் 1-30 மணி வரை போராட்ட குழுவினரை விஜய் சந்திக்கலாம் என்பது இதில் முக்கியமானது.

ஆனாலும், அவர் எங்கு எந்த இடத்தில் போராட்டக்காரர்களை சந்திக்க வேண்டும் என்பது 19 -ஆம் தேதி இரவு வரை இழுபறியாகவே இருந்தது.

அதற்கு பின்பு ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் பரந்தூரூக்கு அருகில், திருமதி சசிகலா அவர்களுக்கு சொந்தமானது என பலராலும் நம்பப்படும், நாலாபுறமும்  மதில் சுவர் இருக்கும் ஒரு மிகப்பெரிய தென்னந்தோப்புக்குள் இருக்கும் திருமண மண்டபத்தில் விஜய் நிகழ்ச்சி இறுதியாகப்பட்டது . கூடவே, கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

தவெக கட்சியினர் யாரும் வரக்கூடாது.வெளியூர் வெளி மாவட்ட பொதுமக்கள் யாருக்கும் அனுமதியில்லை. கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்.

போராடும் கிராமங்களின் பொதுமக்கள் யாரும் சந்திக்க கூடாது. போராட்டக்காரர்கள் மட்டுமே சந்திக்க வேண்டும். சந்திப்பது என்றால் போராட்டக்காரர்கள் யாரும் நிகழ்விடத்தில்  எதையும் பேசுவதற்கு அனுமதியில்லை.

நடிகர் விஜய் ஒரு மணி நேரத்தில் அதாவது பிற்பகல்  12 -30 முதல் 1-30 மணிக்குள் பேசிவிட்டு கிளம்பி விட வேண்டும் என காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டது.

இவையெல்லாம் பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் கூட செய்திராத கெடுபிடிகளாகும். உண்மையில் இங்கு தமிழகத்தில் ஒரு அறிவிக்கப்பாத நெருக்கடி நிலை அமல்படுத்தப் படுவதையே காவல் துறை கெடுபிடிகள் காட்டுகின்றன.

மேலும் -ஏகனாபுரத்தில் நடிகர் விஜயின் கால் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே காவல் துறையால் ஒரு “விசேட வழித்தடம்” கண்டு பிடிக்கப்பட்டது.

பரந்தூர் செல்வதற்கான வழி என்பது சுங்குவார்சத்திரத்திலிருந்து சோகண்டி, காந்தூர், மதுரமங்கலம், கண்ணன் தாங்கல், ஏகனாபுரம், பரந்தூர்  ஆகும். ஏகனாபுரத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் எல்லையில் உள்ள பொன்னேரி கரை வழியாக நடிகர் விஜய் அழைத்து வரப்பட்டார் .

திருமண மண்டபத்தை நெருங்க, நெருங்க ஆறு சோதனைச் சாவடிகள் அடுக்கடுக்காக இருந்தன. ஒரு சோதனைச் சாவடியில் தப்பினாலும், இன்னொரு சோதனை சாவடி தாண்டி தொண்டர்கள் யாரும் போக முடியாதவாறு காவல் துறை கட்டுப்பாடுகள் இருந்தன.

 

தவெக கட்சியின் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் அவர்களும் கூட போராடித் தான்  உள்ளே செல்ல முடிந்தது.

கட்சியின் செய்தி தொடர்பாளர் இலயோலா மணியின் நிலையும் இது தான். மாநில   பொறுப்பாளர்களுக்கே இந்த நிலை என்றால் தொண்டர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதை நீங்களே நினைத்து பாருங்கள்.

போராடும் மக்களின் குரல்கள் எதையும் கேட்காமல் அவர்களின் வலியை வேதனையை உணர முடியாமல், தான் பேச வந்ததையும் முழுதாக பேச முடியாமல் பத்தே நிமிடத்தில் இடத்தை விட்டு காலி செய்தார் நடிகர் விஜய்.

உண்மையில் பறிபோகவிருக்கும் அந்தப் பகுதியின் மக்களின் வாழ்விடங்கள் விவசாய நிலங்கள், நீர் நிலைகள், பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள்.. அனைத்தையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு, மக்களோடு ஒரு கலந்துரையாடல் நடத்தவே விஜய் விரும்பினார்.

“நாங்க என்ன கல்யாணமா நடத்த போறோம்.. திருமண மண்டபத்தில் இடம் கொடுக்குறாங்க. சொல்லவே அசிங்கமா இருக்கு இங்கு ஒரு ஜனநாயக ஆட்சியா நடக்குது ? எங்க தலைவர் ..அவங்க பாசிசம்ன்னா  நீங்க பாயாசமா கேட்டது சரி தான்.

பாயாசம் போன்ற இனிப்பில் இவர்கள் பாசிசத்தைதான் தமிழகத்தில் அமல்படுத்தி வருகிறார்கள். அதற்கான விளைவை இவர்கள் அனுபவிக்கவே போகிறார்கள் ..!” என  நம்மிடம் கொந்தளித்தார் கட்சியின் செய்தி தொடர்பாளர் இலயோலா மணி.

செய்தி தொடர்பாளர் லயோலா மணி

“எத்தனை கெடுபிடிகள் இருந்தாலும் எத்தனை நிர்ப்பந்தங்கள் இருந்தாலும் எங்கள் மக்களின் வாழ்வுக்காக,இந்தப் போராட்டத்தை நாங்கள் வெற்றியுடன் நடத்திய தீர்வோம். அதற்கு மரணம் தான் எங்களுக்கு பரிசாக வருமானால் அதையும் ஏற்கத் தயாராகவும் இருக்கிறோம்.

“..இனியும் காவல் துறையின் எந்த நெருக்கடிக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்..போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கும்..!” எனக் கூறுகிறார் புதிய விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவின் செயலாளர் ஏகனாபுரம் சுப்ரமணியன்.

ஏகனாபுரம் சுப்பிரமணியன்

“வாய்மையே வெல்லும்” என்பது தான் தமிழக அரசின் இலச்சினை.ஆனால்- தங்கள் ஆட்சி தொடர “பொய்மையே போதும்” என திமுக நினைப்பதாக தோன்றுகிறது. பாஜக ஆட்சியை எதிர்ப்பதாகவும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அமல்படுத்தமட்டோம் என்றும் வாக்குறுதி தந்து ஏமாற்றியுள்ளார் ஸ்டாலின். திருப்போரூர் பகுதியில்  பயனற்ற வகையில் உள்ள பெரும் நிலப்பரப்பு உள்ள நிலையில் மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்கலாமே! சென்னையில் இருந்து வெறும் 22 கீ.மீ தான் திருப்போரூர்.

தமிழக முதல்வருக்கு நாம் கூற விரும்புவது இது ஒன்று தான்.

” அரசியல் பிழைத்தோர்க்கு  அறம் கூற்றாகும்..!”

என்று சிலப்பதிகாரம்  கூறுவது தான் இயற்கையின் நியதியாகும்.

(கூற்று என்பதற்கு எமன் என்ற பொருளாகும்)

கட்டுரையாளர்; பவா சமத்துவன்

மூத்த பத்திரிகையாளர்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time