வேங்கைவயல் தமிழ்நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு அந்நிய நாடாகிவிட்டதா? அந்த ஊர் ஏன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது? எதற்கு இத்தனை காவல்துறையினர் குவிப்பு? அந்த மக்களை சந்திப்பதற்கு ஏன் தடை?.அந்த மக்கள் மற்றவர்களோடு பேச முட்டுக்கட்டை ஏன்..? உண்மையை மறைக்க இன்னும் எத்தனை அதிகார ஆட்டம் ஆடுவீர்கள்..?
பாதிக்கப்பட்ட மக்கள் யார் மீது புகார் தந்தார்களோ, அந்த மனிதரை நெருங்கவும் இந்த அரசுக்கு துணிவில்லை. தங்களின் பாதிப்பை வெளி உலகிற்கு எடுத்துச் சொன்ன தங்கள் வீட்டுப் பிள்ளைகளையே குற்றவாளியாக்கி இருக்கும் அரசின் அநீதிக்கு எதிராக அந்த மக்கள் கொந்தளித்துள்ளனர். உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஒரு போலீஸ் ஸ்டேட்டாக உள்ளது என்ற பலதரப்பட்ட மக்களின் குற்றச்சாட்டுகள் தற்போது வேங்கை வயல் விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணமாகியுள்ளது. பட்டவர்த்தனமாகத் தெரிய வந்துவிட்ட ஒரு உண்மையை மறைக்க என்னென்ன லீலைகள்!
இரண்டாண்டுகளாகத் தான் எத்தனை மெனக்கிடல்கள்!
# ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேரைக் கொண்ட விசாரணைக் குழு
# இரண்டாண்டுகள் சிபி.சிஐடி போலீசார் விசாரணை
# 10 குழுக்கள் கொண்ட பெரிய போலீஸ் படை
# 196 பேரின் செல்பேசி பறிமுதல் செய்து ஆய்வு.
# மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தடயவியல் துறை, நீதித் துறை போன்ற பலதுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
# நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் தனி நபர் விசாரணை கமிஷன். இடைக்கால அறிக்கை தாக்கல்.
# 737 நாட்களாக தொடர் விசாரணை.
# 300-க்கும் மேற்பட்ட நேரடி சாட்சியங்கள்!
# 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை!
# ஐந்து பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை!
375 குடும்பங்களே கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் நடந்த ஒரு குற்றத்தை கண்டுபிடிக்க இவ்வளவு பகிரத பிரயத்தனங்கள் நடந்துள்ளன. அங்குள்ள மக்களின் எண்ணிக்கையை விட, இந்த குற்ற சம்பவத்தை ஆராய ஈடுபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.
இத்தனைக்கு பிறகும் உண்மையை கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம், உண்மையை நெருங்கவே அரசு அமைப்புகளுக்கு விருப்பமில்லை.
நடந்த சம்பவத்தின் சுருக்கம்;
டிசம்பர் 20, 2022 அன்று பட்டியலின மக்கள் வசிக்கும் வேங்கை வயலில் குடிதண்ணீர் நாற்றத்துடன் வருகிறது. அதைக் குடித்த வயதானவர்களும், குழந்தைகளும்,பெண்களும் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து சேர்கின்றனர். அரசு மருத்தவமனையில் இடம் போதாமை காரணமாக, தனியார் மருத்துவமனையிலும் சேர்கிறார்கள். அப்போது ஒரு மருத்துவர், ” சரியில்லாத குடி தண்ணீர் தான் இந்த பிரச்சினைக்கு காரணம். எந்தக் குடிநீரைக் குடிக்கிறீர்களோ, அதை செக் பண்ணிப்பாருங்க” எனச் சொல்கிறார்!
அதன் பிறகே, டிசம்பர் 26 ஆம் தேதி வாக்கில் சில இளம் வாலிபர்கள் டேங்க் மீது ஏறிச் சென்று பார்க்கிறார்கள்! அப்படிப் பார்த்து வெளியுலத்திற்கு அதில் மலம் மிதக்கிறது எனச் சொல்லிய மூவர் தான் இன்று கைதாகி உள்ளனர். டிசம்பர் 20 தொடங்கி 26 வரையும் இவர்களுமே அந்தக் குடிநீரை குடிக்க முடியாமல் குடித்து அவதிப்பட்டவர்கள் தாம். இந்த குற்றம்சாட்டப்பட்ட மூவரின் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மனைவி,குழந்தை என சுமார் 20 பேர் துர்நாற்றக் குடி நீரால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களே.

இந்த இளைஞர்கள் தான் மலத்தை கலந்து இருக்கிறார்கள் என்றால், பாதிக்கப்பட்ட அவர்களின் உற்றார், உறவினரும், ஊரும் அவர்களை சும்மா விடுவார்களா…? அடித்து துவைத்து இருக்க மாட்டார்களா? காவல்துறைக்கு புகார் தந்திருக்கமாட்டார்களா…? யாரையோ பழி தீர்க்க தங்களையும், தங்களை சார்ந்த மக்களையும் இவ்வளவு கொடுரமாக இவர்கள் ஏன் தண்டிக்கப் போகிறார்கள்..?
ஆக, காவல்துறை எழுதிய திரைக்கதை ரொம்ப பலவீனமாக உள்ளது. இது மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்ட முரளிராஜா என்பவரின் தந்தை ஜீவானந்தத்திற்கும் ஊர் பஞ்சாயத்து தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாவிற்கும் பகையாம்! அதற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறார்கள் போலீசார். ‘குடிநீர் தொட்டியை கழுவி சுத்தப்படுத்தி தர முத்தையா மறுக்கிறார்’ என பஞ்சாயத்தில் விவாதம் வந்த போது, முத்தையாவிடம் நியாயம் கேட்டவர் சதாசிவம் என்ற பெரியவர் தாம். அவரே பி.பிசிக்கு பேட்டியும் தந்துள்ளார். அங்கே ஜீவானந்தமும் இருந்தார்.ஆனால், அவர் எனக்கு ஆதரவாகக் கூட முத்தையாவிடம் நியாயம் கேட்கவில்லை. அமைதியாக இருந்தார். ”ஏன் நீயும் கேட்கலாமே..” என நான் அவரிடம் கேட்ட போதும், அப்பிராணியான அவர் வாய் திறக்கவில்லை. ஆகவே, முரளிராஜாவிற்கு முன்பகை இல்லை என்கிறார். ஆக, இதுவும் தவறான திரைக்கதை. சொதப்பிவிட்டது.
சம்பந்தப்பட்ட இந்த இளைஞர்கள் மூவரையும் இரண்டு ஆண்டுகளாக காவல் துறையினர் மிரட்டியும், ஆசை காட்டியும் இந்த குற்றச் செயலுக்கு பொறுப்பேற்க வைக்க பகிரத முயற்சிகளை தொடர்ந்து செய்தனர். இதனால், ‘நம் பாதிப்பை வெளியே சொன்னதே நமக்கு பிரச்சினையாகிவிட்டதே’ என அந்த குடும்பத்தினரும், ஊராரும் வருத்தப்பட்டனர்.
இதற்கிடையே பலதரப்பட்ட பத்திரிகையாளர்கள், உண்மை அறியும் குழுவினர், நெஞ்சு பொறுக்காத தனிப்பட்ட சமூக ஆர்வலர்கள்.. என்று பலரும் பல்வேறு நுட்பமான தகவல்களை வெளிக் கொண்டு வந்துள்ளனர்! நாளும், பொழுதும் பல்வேறு இயக்கங்கள் உண்மை குற்றவாளியை கண்டு பிடிக்க களம் இறங்கி பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். தங்களையே குற்றவாளியாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு ஆண்டுக்கு முன்பே சுற்று வட்டாரத்தின் 20 கிராமங்களின் தலித் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றினர்.
பலதரப்பட்ட கள ஆய்வில் தெரிய வந்தது இது தான்;
அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் முத்தையா தலித் குடியிருப்புகளுக்கு தண்ணீர் தருவதை விரும்பாதவர். தலித் குடியிருப்பு பகுதிக்கு சரியான வகையில் 25 ஆண்டுகளாக தண்ணீர் வழங்கி வந்த தன் சாதிக்கார ஆபரேட்டரை தலித்துகளுடன் நட்பாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தலித்களுக்கு எதிராக செயல்பட விரும்பும் தன் விருப்பத்திற்கு ஆதரவாக இல்லாததால் தான் அந்த ஆபரேட்டரை வேலையில் இருந்து நீக்கினார். இதை அந்த ஆபரேட்டரே காணொளியில் கூறியுள்ளார். தலித் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில் முத்தையா தடையாக இருந்தார். இவரது இந்த அணுகுமுறையால் தலித் மக்கள் அவருக்கு ஓட்டு போடுவதில்லை. எனவே, தனக்கு ஓட்டுபோட மறுக்கும் தலித் மக்களிடம் பகைமை பாராட்டி வந்துள்ளார்.
இந்த கிராமத்தில் சுமார் 25 குடும்பமே உள்ளது. இவர்கள் மற்ற ஜாதியினரை காட்டிலும் படித்து முன்னேறியவர்களாக இருப்பதும் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரியே ஆதிதிராவிட சமூக இளைஞர் தான் என்பதையும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இத்தகையை மன நிலையில் தான் அவர் தலித் மக்கள் குடியிருப்புக்கான தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கும் ஈனச் செயலுக்கு காரணமாகிறார். ஆனால், காவல் துறை அவரை சந்தேகிக்கவும் இல்லை, முறையாக விசாரிக்கவும் இல்லை. அவருக்கு பலமான பாதுகாப்பு தான் தந்து கொண்டுள்ளனர். முத்தையாவும் ஒளிந்து கொண்டு சந்திக்க வந்தவர் நிருபர்கள் மற்றும் உண்மை அறியும் குழுவினர் ஆகியோரை சந்திக்க மறுத்து வருகிறார்.
நியாயமாக பார்த்தால், சம்பந்தப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரும், ஒரு ஏட்டையாவும் களத்தில் இறங்கி ஒருசில நாளில் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காணக் கூடிய நிகழ்வு தான் இது! ஆனால், இதில் அரம்பத்தில் இருந்தே விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவும், மாவட்ட எஸ்.பியும் அந்த கிராமத்திற்கு செய்தி சேனல்களின் கேமராமேன்கள் சகிதமாக நேரடியாக ‘விசிட்’ செய்து மக்களிடம் பகிரங்க விசாரணை நடத்தியதில் தான் பிரச்சினை வேறு தன்மைக்கு மாறியது. அந்த கிராமத்தில் தீண்டாமை உச்ச நிலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் மக்களை வெளிப்படையாக லைவ் டெலிகாஸ்டில் பேசத் தூண்டியதன் விளைவாய் அவர்கள் தவிர்க்க இயலாமல் தங்கள் ஊரில் உள்ள கோவிலுக்குள் தாங்கள் நுழைய முடியாதையும், தேனீர் கடையில் இரட்டை குவளை முறை உள்ளதையும் வெளிப்படுத்தவும் கலெக்டரும், எஸ்.பியும் தங்கள் கெத்தை காட்டுவதற்காக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்கின்றனர்.
ஒரு சமூகத்தை சேர்ந்த இருவர் கைதானதும், அதிரடி கோவில் நுழைவும் அந்த சமூகத்தை தமிழகம் தழுவிய வகையில் ஒட்டு மொத்தமாக எதிர் நிலையில் திரட்டிவிட்டது! அவர்களின் கோபத்தை எதிர் கொள்ளும் மனத் துணிவு தமிழ்நாட்டின் ஆட்சித் தலைமைக்கு இல்லை. அந்த சமூகத்தின் அமைச்சர் மெய்யநாதன் சாதிப் பாசத்தில் அதிகாரவர்க்கத்தை நேர்மையாக செயல்படவிடாமல் தடுக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 30க்கு மேற்பட்ட கிராமங்களில் சாதியப் பாகுபாடுகள் நிலவுகிறது. 49 கோவில்களில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 14 கிராமங்களில் இரட்டை குவளை முறை இன்றும் உள்ளது. இங்கு சாதி ஆதிக்க சக்திகளின் கை ஓங்கியுள்ளதோடு, அதில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்சின் பின்னணியும் உள்ளது. இந்த நிலையில் எப்படித் துணிவாக கையளுவது எனத் தெரியாமல் தமிழக அரசு தலித் மக்களை பலிகிடாவாக்கத் துணிந்து விட்டது.
பாஜகவுடனான சாதி அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஆளும் திமுக அரசு தலித் மக்களை பலி கடாவாகி, வெற்றிக் கனியை பறிக்க துடிக்கிறதோ என்னவோ..?
பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளியாக சித்தரிக்க காவல்துறை எடுக்கும் முயற்சியை ஆரம்பம் முதலே கண்டும் காணாமல் இருக்கின்றது, திமுக அரசு! பாஜகவின் ஐ.டிவிங் ஆரம்பம் முதலே மலம் கலந்திருப்பதை அம்பலப்படுத்திய இளைஞர்களையே குற்றவாளியாக சித்தரித்து பல பதிவுகள் செய்து போட்டு வந்தது. அந்த அநீதியையே இன்றைக்கு திராவிட மாடல் அரசும் செய்துள்ளது.
Also read
இன்றைக்கு அதிகாரவர்க்கம் இஞ்சி தின்ற குரங்காக இருப்பு கொள்ள முடியாமல் தவிக்கிறது. உண்மையை வெளிப்படுத்தி இருந்தால் ஊர் மக்கள் மெச்சி இருப்பார்களே..! ‘தவறான செய்தியை பரப்ப வேண்டாம்’ என்று தவறான உண்மையை மறைத்த அரசாங்கம் பதறுகிறது. ‘எங்கே தான் சொன்ன பொய் அம்பலப்பட்டுவிடுமோ…’ என்ற பதற்றமே அதிகார வர்க்கத்தை ஆட்டுவிக்கிறது.
எளிய மக்கள் தான்! ஆனால், எப்படி பொய்யை ஏற்பார்கள்..? பாதிக்கப்பட்ட மக்கள் செல்வாக்கில்லாதவர்கள் என்பதால் உங்கள் பழி பாவத்தை அவர்கள் தலையில் சுமக்க வைப்பதா…?
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்புவிப்பது என்பது தீர்வு தருமா தெரியவில்லை! ஆனால், உண்மை குற்றவாளியை தப்புவிப்பது என்பதற்காக திமுக அரசு ஆடிய ஆட்டத்திற்கு தண்டனை என்ன? இன்றைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம் தான்! அதில் வாதடவிருக்கும் நம் தோழர் ப.பா.மோகன் தான்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி எந்த மாதிரியான ஆட்சி?
நகைச்சுவை, சண்டை, சோகம், விறுவிறுப்பு ஆகியவற்றின் மொத்த கலவை தான் ஒரு திரைப்படம். திரைக்கவி வசனம் எழுதி, மேடையில் பேசி ஒரு கட்சியை 50 ஆண்டுகாலம் கட்டுக்குள் வைத்திருந்த ஒருவரின் மகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் சோகம் மட்டும் தான் தலித் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
காவல்துறை விசாரணையின் உள் செல்ல வேண்டாம். இரண்டு ஆண்டுகள் கழித்து புகார் செய்தவர்களே குற்றம் சாட்டப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளனர் அதை தவறு என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. பாஜக முருகன் சமூக அநீதி என்கிறார். கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் செயலாளர் பாலகிருஷ்ணன் சிபிஐ விசாரணை கேட்கிறார். தலித் மக்களுக்கு நான் தான் அத்தாரிட்டி என்று முன்னே நிற்கும் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவனோ”சிபிஐ மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதே நேரம் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இழந்ததால் சிபிஐ விசாரணை கோருகிறோம். ஓடுகிற மான் கூட்டத்தில் தடுக்கி விழுந்த மான் அழுவது போல் உள்ளது அவரது அறிக்கை. திருப்பி அடி என்று சொல்லி கட்சியை வளர்த்த திருமாவின் தீரம் எங்கே? பாலகிருஷ்ணனுக்கு பதவி முடிந்த பின்னர் மனதில் ஈரம், அது தீரமாக மாறி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் டுக்கோ அது கூட இல்லை. நாங்கள் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்று அக்கட்சியின் செயலர் முத்தரசன் கூறியுள்ளார்.
கூட்டணி கட்சியினரே காவல்துறையை எதிர்த்து குரல் எழுப்பியது என்பது ஆட்சி நடத்துபவர்களை எதிர்த்து தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்,காரணம் காவல்துறை முதல்வர் வசம் இருப்பதுதான். தற்போதைய விசாரணை முடிவு நேர்மையானது ஆதாரப்பூர்வமானது என்று முதல்வர் நம்பினால் சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைத்துவிட வேண்டியதுதானே. எதற்கு தயக்கம். ஏற்கனவே ஒரு சில வழக்குகளில் குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக அரசு ஆதரவு கரம் நீட்டி உள்ள நிலையில் குறைந்தபட்சம் இந்த வழக்கையாவது சிபிஐ வசம் ஒப்படைத்து விட்டு தன்னை (தங்களை) குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டியது தானே? உண்மையான குற்றவாளியை காப்பாற்றத் துடிப்பது ஏன்? இது சாதாரண விஷயம் இல்லை. மீண்டும் முதல்வராக ஆசைப்படும் தற்போதைய முதல்வர் செய்வாரா? நம்பிக்கையுடன் காத்திருக்கிறது வேங்கை வயல்!!