ஊரையடித்து உலையில் போடு! ஊதியம் குறைத்து தெருவில் தள்ளு..! எடப்பாடி அரசின் எகத்தாளம்..!

ஜீவா கணேஷ்

சமூக கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் திகழ்பவர்கள் பொறியாளர்கள். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் ஊழல் செய்வதற்கு வசதியாகவே திட்டங்களைத் அறிவிக்கின்றது இந்த அரசு! அதுவும் பொறியியல் பணிகளில்  நிதி ஒதுக்கீடு வழங்காமல் கூட அவசர கதியில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால் அந்தத் திட்டங்களை நிறைவேற்றும் பொறியாளர்களுக்கு ஏற்கனவே இருக்கிற ஊதியத்தைக் குறைத்து கட்டப் பஞ்சாயத்து செய்கிறது. அனைத்து மட்டத்திலும் சம்பள உயர்வுக்கான போராட்டங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ‘’இருக்கிற சம்பளத்தை பறிக்காதே,திருப்பி கொடு’’ என்று போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்களாக தமிழக அரசின் பொறியாளர்கள் உள்ளனர். இதன் மூலம் கடும் மன உளைச்சலுக்கு அரசுதுறை பொறியாளர்களை தள்ளியுள்ளது தமிழக அரசு

பொறியாளர்களோ 10,000 , பறிக்கப்பட்டதோ ரூ15,000.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை  போன்ற இருபதிற்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பொறியாளர்களுக்குத் தற்போது பெற்று வரும் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும்  15000 ரூபாய் வரை குறைத்துள்ளது தமிழக  அரசு. இந்தப் பொறியாளர்கள்தான் அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் சுமார் 50,000 கோடி அளவிற்கு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள்.

2013 ல் குறைக்கப்பட்ட ஊதியம்!

மருத்துவர்களுக்கு இணையான தொடக்கநிலை ஊதியத்தை பொறியாளர்களுக்கு  2010ல் திமுக ஆட்சி வழங்கியது. பொறியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டவுடன் வேறு சில அரசு ஊழியர்கள் தங்களுக்கும் பொறியாளர்களுக்கும் இடையே ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசிடம் முறையிட்டனர்.  முறையிட்டவர்களுக்கு கூடுதலான ஊதியம் வழங்கியும்  உதவிப் பொறியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 300 ரூபாய்  குறைத்தும்  முரண்பாட்டினைக் களைய முயற்சி எடுத்தது திமுக அரசு. ஊதியக் குறைப்பை  எதிர்த்து பொறியாளர்கள் நீதிமன்றம் சென்றதும் ஊதியத்தைக் குறைத்தது குறித்து ஏதேனும் கோரிக்கை இருந்தால் சொல்வதற்கு திமுக அரசு குறைதீர் குழுவை நியமித்தது. அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அந்த குறைதீர் குழுவையே தங்களுக்குச்  சாதகமாகப்  பயன்படுத்திக்கொண்டு 2013ல் உதவிப் பொறியாளர்களுக்கு 15000 ரூபாய்  இழப்பு ஏற்படும் வகையில்  ஊதிய விகிதத்தை வழங்கியது.

இரக்கமற்ற  எடப்பாடி பழனிச்சாமி

பொறியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்; நீதிமன்றம் சென்றார்கள்; எதற்கும் அதிமுக அரசு சளைக்கவில்லை. உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அறிவுரை வழங்கியது. நீதிபதி முருகேசன் குழுவிற்கு அதிமுக ஆட்சி 2 IAS  அதிகாரிகளை உறுப்பினர்களாகச் சேர்த்து அந்த அதிகாரிகள் மூலமாக குறைதீர்க்கும் குழுவிற்குப் பொருத்தமில்லாத தகவல்களை வழங்கி, பொறியாளர்களுக்குக்  குறைந்த ஊதியத்தை வழங்குவதில் குறியாக இருந்தார்கள்.

நீதிபதி முருகேசன் குழு அறிக்கையைக் கொடுத்ததும், 2013ல் குறைத்து வழங்கப்பட்ட  ஊதியத்தையே இப்போதும்  வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. குழுவின் அறிக்கையைப்  பொதுத் தளத்தில் வெளியிடாமலும், குழு அளித்த  பரிந்துரைகள் தொடர்பாக பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள்  கருத்து அறியாமலும்   நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறைக்குப் பொறுப்பேற்று இருக்கின்ற,  பொறியாளர்களின் முக்கியத்துவத்தைக் கொஞ்சமும் உணராத முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  நிலபிரபுத்துவ பண்ணை ஆதிக்க மனோபாவத்துடன் ஊதியக் குறைப்பு  ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

கூலித் தொழிலாளர்களிடம் இரக்கமற்ற முதலாளி எப்படி நடந்து கொள்வாரோ அதைப் போலவே ‘சம்பளத்தைக் குறைத்தது குறைத்ததுதான்; விரும்பினால் வேலையைப் பாருங்கள்; இல்லாவிட்டால் வெளியேறுங்கள்’ என்று சொல்லாத குறையாக அரசு, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் குறைத்த ஊதியத்தையேதான்  பெற்று ஆக வேண்டும் என்று பொறியாளர்களை வற்புறுத்துகிறது. இது வெளிச்சந்தையில் பொறியாளர்களை நியமித்துக்கொள்ளும் நிறுவனங்களுக்கு தவறான வழிகாட்டலும் ஆகும். ஏனென்றால் அரசு வழங்குகிற சம்பளம் தனியார்   நிறுவனங்களுக்கு ஒரு குறியீடு. இது குறைகிறது என்றால் அது பல மடங்கு குறையும் என்பது நாம் பார்த்து வருகிற ஒன்று. பொறியியல்  கல்லூரிகளில் பயின்று வெளி வருகின்ற இளம் பொறியாளர்களுக்கு இது ஒரு பெரும் பின்னடைவே.

டிப்ளமோவுக்கும்,  டிகிரிக்கும் வித்தியாசம் தெரியாத எடப்பாடி அரசு  !

மத்திய அரசில் டிப்ளமோ கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்து பின்னர் உதவிப் பொறியாளர்களாகப்   பதவி உயர்வு பெற்றவர்கள் ஒரு வகை!  B.E பட்டப்படிப்பு தகுதியுடன்  தமிழ் நாடு தேர்வாணையம் மூலமாக தமிழக அரசில் நேரடியாக உதவிப் பொறியாளர் பணி  நியமனம் பெற்றவர்கள் மற்றொரு வகையாகும். ஆனால்,இரு தரப்பையும் ஒன்றாக ஒப்பிட்டு தமிழக அரசு ஊதியக் குறைப்பு செய்திருக்கிறது. இது வேதனை அளிக்கிறது. எங்கள் கோரிக்கைகளுக்கு அடிப்படையாக வைக்கப்பட்ட காரணங்களைப் பரிசீலனைக்கு கூட உட்படுத்தாமல் நிராகரித்திருப்பது வருத்தமாகவுள்ளது’’என்கிறார்கள, பாதிக்கப்பட்ட பொறியாளர்கள்.

வழக்குக்காக பழி வாங்குவது, இழுக்கு!

’’ஊதியத்தைக்  குறைக்கக் கூடாது என்பதற்காக தான் நீதிமன்றம் சென்றோம்.அதற்காக  பழிவாங்குவதா? இது தன் ஊழியர்களின் குறையறிந்து தாயன்புடன் அரவணைக்க வேண்டிய அரசுக்கு இழுக்கில்லையா?’’ என்று பொறியாளர்கள் அனைவரும் புலம்புகின்றனர். வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் ஆய்வாளர், வனச்சரகர் என்று சில பதவிகளுக்கு சிறப்பு ஊதியமாக  2,600 ரூபாய்  வழங்கி, ஆணையிட்டிருக்கிற அரசு, உதவிப் பொறியாளர்களுக்கு ஊதியத்தைக்  குறைத்தது ஏனென்று விளக்க வேண்டியதில்லை; வருகின்ற தேர்தலை மனதில் வைத்து அந்தப் பதவிகளில் இருப்பவர்களின்  உதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இது நடந்திருக்கிறது என்று வரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

மருத்துவம் போன்றே  பொறியியலும் தொழில்நுட்பம் சார்ந்த பட்டப்படிப்பு தான்!

மருத்துவப் பட்டப் படிப்பு போன்றே  பொறியியல் பட்டப் படிப்பும் தொழில்நுட்பம் சார்ந்த பட்டப்படிப்புதான்   என்பது   அதிமுக ஆட்சிக்கும், ஆட்சிக்குத் தலைமை தாங்கும் எடப்பாடி பழனிசாமிக்கும்   தெரியவில்லை என்பது ஒரு விந்தையே. அரசு ஊழியர்,  ஆசிரியர் நலன்களைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் நலன்களைப் புறக்கணிப்பதும், அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய உரிமைகளைப் பறிப்பதும் இந்த ஆட்சியில் வழக்கமாக நடக்கிற ஒன்றுதான். ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியமானப் பொறுப்பு வகிக்கின்ற பொறியாளர்களின் நலன்களைப் புறக்கணிப்பது மாநில வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது  என்பதை எடப்பாடி பழனிசாமி உணரவில்லை.

பொறியாளர்கள் செயல்படுத்தும் திட்டங்களினால் தங்களுக்குப்  பயன் கிடைக்க வேண்டும்; ஆனால்  பொறியாளர்களின் நலனைப் பற்றிக் கவலையில்லை!

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்று சொல்லிக்கொண்டே ஊதியத்தைக் குறைக்கின்ற ஒரு தந்திரத்தை அதிமுக அரசு  எப்போதும் கையாளுகிறது. இந்த ஊதியக் குறைப்புப் பொறியாளர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் அவர்களுக்கு மனச்சோர்வை அளிக்கும் என்பதையும் முதலமைச்சர் நினைத்துப்  பார்க்காதது தமிழ் நாட்டின் வளர்ச்சியில் அவர் அக்கறை கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.     நல்ல சம்பளம் இல்லை என்றால் சிறந்த கல்லூரிகளில் படித்த திறமையான பொறியாளர்கள் அரசுத் துறைக்கு வரமாட்டார்கள் என்பதைப் பழனிசாமி  புரிந்து கொள்ளவில்லை என்றாலும் 10 ஆண்டு காலம் நிதித்துறை செயலாளராகப் பொறுப்பு வகித்து தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகம், தற்போது நிதித் துறை செயலாளராக இருக்கும் கிருஷ்ணன் ஆகியோர்  புரிந்து கொண்டு அதற்கேற்ப பொறியாளர்கள் சம்பள விஷயத்தில் செயல்பட்டிருக்க  வேண்டும்.

சம்பளத்தைக் குறைப்பது,  அதுவும் சமநிலையில் பணியாற்றுகிற மற்ற ஊழியர்களை விடவும் குறைவான சம்பளத்தை வழங்குவது என்பது திறமையான பொறியாளர்களை அரசுப்  பதவிகளுக்கு வருவதிலிருந்து தடுத்துவிடும்.இது அரசுத்துறைக்கே பேரிழப்பாகிவிடும்’’ என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி   புரிந்து கொண்டு பொறியாளர்களின் ஊதியக் குறிப்பு  முடிவினை கைவிட வேண்டும்..

இது குறித்து கொங்கு நாடு ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொறியாளர்கள் ஒரு தேசத்தை வடிவமைக்கின்ற சிற்பிகள். தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அனைத்து கட்டமைப்புகளுமே பொறியாளர்களால் உருவானது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், அணைகள், குடிநீர் வசதிகள், மின்சாரம், கழிவுநீர் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே நம் அரசு துறை பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது. சுனாமி, புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் பொறியாளர்களுடைய மீட்புப்பணிகள் மறக்க முடியாதவை. இரவு பகல் பார்க்காமல் மக்களுடைய நலனுக்காக அரசின் திட்டங்களை நிறைவேற்றுபவர்கள் பொறியாளர்கள். இப்படிப்பட்ட பொறியாளர்களின் ஊதியகுறைப்பை ஏற்கவே முடியாது. இது அரசுதுறை ஊழியர்கள் குறித்த முதல்வரின் அக்கரையின்மையைக் காட்டுகிறது’’ என அவர் கண்டித்துள்ளார்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time