பிப்ரவரி 5-ல் நடக்க உள்ள தில்லி சட்டசபை தேர்தலில் நேர்மையான வகையில் வாக்குகள் பெற்று வெல்ல முடியாது என்பதால், பாஜக பலதரப்பட்ட குறுக்கு வழிகளை தேர்தல் ஆணையத்தின் துணையுடன் அரங்கேற்றி வருகிறது. வரலாறு காணாத மோசடிகளை மீறி, ஆம் ஆத்மியோ , காங்கிரசோ வெற்றி பெறுமா?
அரசியல் கட்சிகளின்பரப்புரைகள் உச்ச கட்டத்தில் உள்ளன.பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி பல சோதனைகளின் ஊடே ஆட்சியை தக்க வைக்க தலைகீழாக நின்று போராடி வருகிறது.
தில்லி தேர்தல் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் வெளிப்படை தன்மை இன்றி , தேர்தலை நடத்துவது யாருக்காக? என்ற அடிப்படை கேள்வி எழுகிறது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர்களை இணைப்பதும் , இருக்கும் வாக்காளர்கள் பலரை நீக்குவதும் ஏன் ரகசியமாக செய்யப்படுகிறது? வாக்காளர் பட்டியலை தயாரிப்பதில் தேர்தல் ஆணையம் ஏன் ‘முறை தவறி ‘நடக்கிறது? தேர்தல் ஆணையத்தை நிருவகிக்கும் தேர்தல் ஆணையர்கள் தம்மை நியமித்தவர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்! இந்திய மக்களுக்கு விசுவாசமாக இருப்பது அவசியமில்லை என கருதுகிறார்கள்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் , “ஊழல் குற்றச்சாட்டுகளினால் “ சிறை பிடிக்கப்பட்டதும் பிறகு பிணையில் வந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்ததும் , அதன்பிறகு சரண்டைந்து ரெகுலர் பிணையில் வெளிவந்தாலும் அவர் தனது முதலமைச்சர் பதவியை துறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முதலமைச்சர் பதவியை துறந்து அவ்விடத்தில் அத்திசி மார்லெனாவை அமர்த்தி இந்த தேர்தலை சந்திக்கிறார், கெஜ்ரிவால்.
மறுபுறம் 1998க்குப்பின்னர் தில்லியில் ஆட்சி அதிகாரத்தை ருசிக்காத பாரதீய ஜனதா கட்சி முரட்டு தலைவர்களான மோடி அமீத் ஷா வின் கண்காணிப்பில் தில்லியில் ஆட்சியை கைப்பற்ற பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.
மோடி பிரதமராக ஆன பின்னர் 2015 தேர்தலில் போட்டியிட்ட பாஜக, வெறும் மூன்றே மூன்று இடங்களை பெற்று படு தோல்வி அடைந்தது.
பா ஜ க சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரண் பேடி படு தோல்வி அடைந்தார். பிரதமராக பொறுப்பேற்று
ஒளி மயமாக திகழ்ந்த மோடியின் முகத்தில் தில்லி கருப்பு மசியை பூசியது தில்லி தேர்தல். இந்த அவமானத்தை மோடி இன்னும் மறக்கவில்லை!
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கிகளான பட்டியலின மக்களும், இஸ்லாமியர்களும் பெருமளவு ஆம்ஆத்மி கட்சிக்கு மாறிய சூழல் ஏற்பட்டது.
70 வாக்குறுதிகளை கொடுத்து ஆம் ஆத்மி கட்சி 2015 தேர்தலில் வென்றாலும் கல்வி , சுகாதாரம், மின் வினியோகம் , சாலைகள் ஆகிய அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி கவனம் செலுத்த ஆரம்பித்தது.
மின் கட்டணத்தை பாதியாக குறைப்போம் என்ற வாக்குறுதியையும், குடி தண்ணீர் சீராக வினியோகம் செய்யப்படும் என்ற வாக்குறுதியையும் ஆம் ஆத்மி கட்சி பெருமளவு நிறைவேற்றியது.
2020 தேர்தலில் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலை எப்படியும் முடக்கி முறியடித்துவிட வேண்டும் என மோடி – ஷா கும்பல் அனைத்து ஆயுதங்களையும் இப்பொழுது எடுக்க ஆரம்பித்தது.
கெஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பாளன் என்ற கட்டமைப்பை உடைத்தல்,
தில்லியின் முதலமைச்சருக்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்தல்,
துணை நிலை ஆளுனர் மூலம் கெஜ்ரிவால் அரசுக்கு முட்டுக்கட்டைகள் போடுதல்,
மாநில உயரதிகாரிகளை மிரட்டியும், வளைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிக்கு குடைச்சல் கொடுப்பது
ஐ.டி., சி.பி.ஐ., இ.டி. மூலமாக வழக்குகள் தொடுக்கப்பட்டு கைது செயதல் என பல்வேறு வழிகளை மோடி அரசு கையாண்டது. அதன் விளைவாக இன்று முதலமைச்சர் பதவியை துறந்து விட்டு தேர்தலை சந்திக்கிறார் கெஜ்ரிவால்.
இத்தகைய தருணத்தில் தில்லியில் ஆம்ஆத்மி கட்சி , பா ஜ கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ( பாஜக + நித்திஷ் கட்சி+ பஸ்வான கட்சி) யும் , காங்கிரஸ் தனியாகவும் மும்முனை போட்டிகள் நடைபெறுகின்றது.
சத்யேந்திர ஜெயினில் தொடங்கி , மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் , அரவிந்த கெஜ்ரிவால் என முக்கிய தலைவர்களை கைது செய்து ஊழல் குற்றச்சாட்டுக்களில் வழக்கு தொடுத்து ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை பா ஜ க முற்றுகை இட்டுள்ளது.
இயல்பாகவோ அல்லது வாக்குகளுக்காகவோ சிறு பான்மையினரை புறந்தள்ளிவிட்டு, சமூக நீதி அரசியலை புறக்கணித்து விட்டு வளர்ச்சி , ஊழல் ஒழிப்பு என அரசியல் செய்து வந்த கெஜ்ரிவால் இன்று ‘ மதுபான ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பதவியை விட்டு விலக நேர்ந்துள்ளது அவரை ஊனப்படுத்தியுள்ளதா என்பதை தில்லி தேர்தல் முடிவுகள் எடுத்துக் கூறும்.
சிறு பான்மையின மக்களும் , தாழ்த்தப்பட்ட மக்களும் இன்று ஆம் ஆத்மி கட்சியை விட காங்கிரஸ் கட்சிக்கு தங்களது வாக்குகளை அளிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது. இவ்விரண்டு பிரிவினரும் காங்கிரசை விட்டு விலகியதாலேயே ஆம் ஆத்மி கட்சி கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற முடிந்தது. ஆம் ஆத்மி கட்சி ஒரு போதும் பா ஜ க வின் வாக்குகளை பிரிக்கவில்லை என்பதை கடந்த தேர்தல்கள் நிரூபிக்கின்றன.
பா ஜ க வின் வாக்குகள் 33 விழுக்காட்டிற்கு குறையாமல் சீராக இருப்பதும், நாடாளுமன்ற தேர்தல்களில் அவை 53 விழுக்காட்டை தாண்டுவதும் தொடர்ந்து நாம் காண்கிறோம்.
நாடாளுமன்றத்திற்கு ஒருவிதமாகவும் , சட்டமன்ற தேர்தலில் வேறுவிதமாகவும் வாக்களிக்கும் மக்கள் இப்பொழுதும் அதே பாணியை கடைப்பிடிப்பார்களா என்பது இன்னும் புதிராகவே உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் இந்துத்துவ வழிமுறைகளில் பயணித்து இஸ்லாமியர்களிடம் இருந்து விலகி சென்றுள்ளார். பல விவகாரங்களில் அவர்களின் பாதிப்புகளை கண்டும் காணாமல் வாய் மூடி இருந்தார். முன்பு அனைவருக்குமாக இருந்த கெஜ்ரிவால், தற்போது இந்துக்களுக்கானவர் என்ற அடையாளத்தை உருவாக்கி உள்ளார். இது அவரை வெற்றி பெற வைக்குமா? தோல்வியைத் தருமா? என்பதற்கு இந்த தேர்தல் விடை சொல்லும்.
இம்முறை தில்லி சட்டசபை தேர்தலில் பாஜக, பல இலவசங்களை தருவோம் என வாக்குறுதிகள் அளித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியும், பா ஜ கவும் போட்டி போட்டுக் கொண்டு இலவச திட்டங்களை “இன்ஸ்டால்மெண்ட்” தேர்தல் அறிக்கைகளில் கூறி வருகின்றனர். இதில் காங்கிரசும் விதிவிலக்கில்லை.
இன்று 27/01/2025 அரவிந்த கெஜ்ரிவால் 15 அம்ச வாக்குறுதிகளை “ கெஜ்ரிவால் கி காரண்டி” என அறிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான வேலை உத்திரவாதம்
மகளிருக்கான மாதம் 2,100 அளிக்கும் மகிளா சம்மான் யோஜனா திட்டம்,
முதியோருக்கான சஞ்சீவானி யோஜனா என்ற இலவச மருத்துவ சிகிச்சை திட்டம்,
குடி தண்ணீருக்கான வரியை பாதியாக குறைத்தல்,
அனைவருக்குமான குடி தண்ணீர் வினியோகம்,
பட்டியலின இளைஞர்களுக்கு நிதி உதவி போன்ற வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் வேலை உத்திரவாதம் , வேலையற்ற இளைஞர்களுக்கு பண உதவி மகளிருக்கு உதவித்தொகை, பட்டியலின இளைஞர்களுக்கு உதவி என பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட 20 தொகுதிகளில் தங்களது கவனத்தை செலுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எப்படியும் இரட்டை இலக்கில் தொகுதிகளை வென்று ‘கிங் மேக்கராக’ காங்கிரஸ் வரும் என அக்கட்சியின் மாநில தலைவர்கள் கூறுகின்றனர்.
பாஜகட்சி , மதுபான ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து கெஜ்ரிவாலின் ஷீஷ் மகால் என்ற முதல்வர் இல்லத்திற்கான
படாடோப செலவை ஊதி பெரிதாக்கி பேசி வருகிறது. மோடி கட்டிய பிரமாண்ட பிரதமர் இல்லத்தை மறந்து விட்டு பா ஜ க பிரச்சாரம் எடுபடுமா? தெரியவில்லை.
ஹரியானா தேர்தலிலும், அதற்கு முன்பு நடந்த பஞ்சாப் நாடாளுமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தோல்விகளையே சந்தித்தால் தில்லியிலும் அக் கட்சிக்கு இறங்கு முகம் தான் என கூறுவோரும் உள்ளனர்.
எதையும் அறுதியிட்டு கூற முடியாத நிலவரம் இருப்பினும் , அரசியல் கட்சிகளை விட தேர்தல் ஆணையம் எவ்வாறு இயங்கப் போகிறது என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய அம்சமாக உள்ளது.
மக்களின் முடிவை நேர்மையாக வெளிக்கொணர தேர்தல் ஆணையம் ஒரு கருவியாக சாதனமாக விளங்க வேண்டும் மாறாக ஆளுவோரின் ஆசைக்கிணங்க அதை தேர்தல் ஆணையம் வெட்டியும், ஒட்டியும் திரித்தால் முடிவுகள் மக்கள் அளித்ததாக இருக்காது.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள கோளாறுகள் , தேர்தல் அதிகாரிகளின் குளறுபடிகள் ஆகியவை ஒருபுறமிருக்க, தேர்தல் நடைமுறையே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடே வெளிப்படைதன்மை யற்று , நேர்மையற்று இருப்பது இன்றைய நிதர்சனமாக உள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்ப்பதும், குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்களை சம்பந்தமில்லாமல் ரகசியமாக நீக்குவதும் , இன்று தொடர்கதையாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து , ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்ததும் , பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான உண்மையான வாக்காளர்களை நீக்கியும் தேர்தல் ஆணையம் செய்த தில்லுமுல்லு வேலைகளை நாம் அறிவோம்.
இப்பொழுது தில்லியிலும் புதிதாக அக்டோபர் மாதத்திற்கு பிறகு 1.67 லட்சம் புதிய வாக்குகளை ரகசியமாக தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது!
பல்வேறு பா ஜ க தலைவர்களின் முகவரிகளில் புதிய வாக்காளர்களை சேர்த்துள்ளதை , ஒரு அறை குடித்தன வீடுகளில் 30 வாக்காளர்களை சேர்த்துள்ளதை ஆதாரங்களுடன் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சஞ்சய் சிங் கூறியதற்கு எந்தவித பதிலையும் தேர்தல் ஆணையம் கூறவில்லை.
Also read
மொத்தம் 1.5 கோடி வாக்காளர்களை கொண்ட தில்லியில், 70 தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது சில நூறு அல்லது ஆயிரம் வாக்குகளே இருக்கின்ற நிலையில் ஆயிரக்கணக்கான வாக்குகளை நீக்கியும் ஆயிரக்கணக்கான புதிய வாக்குகளை ரகசியமாக – எந்தவித முறையான நடைமுறையின்றி இணைப்பதும் தேர்தல் நடைமுறையை கேலிப் பொருளாக மாற்றி உள்ளது.
எனவே, இதை தேர்தல் ஆணையம் முறையாக விசாரித்து அறிவிக்க வற்புறுத்தி இந்திய அரசின் முன்னாள் செயலர் இ ஏ எஸ் சர்மா கடிதமும் அனுப்பி உள்ளார். ஆனால் அதற்கு பதில் தேர்தல் ஆணையத்திடமிருந்து இதுவரை வரவில்லை!
அத்தகைய நேர்மையற்ற தேர்தல் ஆணையம் , நடத்துகின்ற தேர்தலின்
வெளிப்பாடு மக்களின் உண்மையான தேர்வை வெளிப்படுத்துமா அல்லது ஹரியானா மகாராஷ்டிரம் போல தில்லி தேர்தல் முடிவுகளும் “ புதிய நியாயங்களை” கூறுமா என்பது அனைவரின் ஐயமாக உள்ளது.
ச. அருணாசலம்
Leave a Reply