ராய்டர் நிறுவன தகவல்படி 40 பேர் சாவு. நூற்றுக்கணக்கானோர் படுகாயம். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமாம். காணாமல் போனவர்கள் எண்ணிக்கை தெரியவில்லையாம். ஒரே நேரத்தில் எட்டு கோடி பேர்களை குவியவிட்டால் எப்படி சமாளிக்க முடியும்..? எப்படி நடந்தது? எங்கே பிழை ஏற்பட்டது?
உலகின் மிகப் பெரிய ஆன்மீக பெருவிழாவான மகா கும்பமேளா சுமார் 40 கீமீ பரப்பளவில் நடைபெறுகிறது. அதிலும், அந்த திருவேணி சங்கமம் எனப்படும் கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குளித்து விட வேண்டும் என்பதே அனைவரின் முயற்சியாக இருக்கிறது. அந்த இடமோ, விவிஐபிக்களால் நிரம்பி வழிந்தது. அரசின் கவனம் முழுக்க விவிஐபிக்களின் பாதுகாப்பில் இருந்தது….!
அரசாங்கமே குறிப்பிடும் தகவல்களின்படி ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை 2 மணி தொடங்கி காலை எட்டு மணிக்குள் 2 கோடியே 80 லட்சம் மக்கள் புனித நீராடினார்களாம்…! இது சாத்தியமா? அதிர்ச்சியளிக்கிறது…!
1954 -ல் நடந்த கும்பமேளாவில் சுமார் 500 பேர் இறந்தனர். 200 பேர் காணாமல் போயினர். 2000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2013 மகா கும்பமேளாவிற்கு செல்லும் போது 36 பக்தர்கள் அலகாபாத் இரயில் நிலைய நெரிசலில் உயிர் இழந்தனர்.
தற்போதைய மகா கும்பமேளாவின் தை அமாவாசை நாளன்று 8 கோடி முதல் 10 கோடி பக்தர்கள் வருகை தருவர் என அரசே எதிர்பார்த்ததாம்! இதனால் உ.பியின் பிரயாக் மாவட்டத்தின் 9 ரயில்வே ஸ்டேசன்களுக்கு இந்திய ரயில்வே மொத்தம் 360 ரயில்களை இயக்கியுள்ளது. வரும் பக்தர்களுக்கான உணவு தயாரிக்க சுமார் 3,000 சமையல் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடவே 11 மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 50,000 காவல்ர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2,500 சி.சி.டி.வி கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
வந்த பக்தர்கள் தங்குவதற்கென்று ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளனவாம். அவை, ஒவ்வொன்றுக்குமே பிரத்தியேக கழிவறைகளும் தரப்பட்டுள்ளனவாம். இவற்றுக்கு 15,000 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம். ஏற்கனவே உள்ள 201 சாலைகளை அகலபடுத்தியதோடு, தற்காலிக தேவைக்காக 400 சாலைகளும், அவற்றில் 69 ஆயிரம் மின் விளக்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவாம்.
இந்த கூட்ட நெரிசலுக்கான முக்கிய காரணம், குறிப்பிட்ட தை அமாவாசையன்று இரவு 7.35 தொடங்கி அடுத்த நாள் அதிகாலை வரை 6.05க்குள் குளிப்பவர்களின் பாவங்கள் தொலைந்து சொர்க்கத்திற்கு போவார்கள் என்ற நம்பிக்கை தான்.
இத்தகு நம்பிக்கையில் இந்தியாவின் பிரபல மடாதிபதிகள் நூற்றுக்கணக்கானோர் தங்கள் படை பரிவாரங்களுடன் அங்கு சென்றுள்ளனர். இவை தவிர, பண்டைய அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்போதைய மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் அவர்களின் குடும்பங்கள்…என பெரும் பட்டாளங்களும் சென்றூள்ள நிலையில் அவர்களின் குளியலுக்கான பாதுகாப்பையும் தர வேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
சாதரண ஜனங்கள் தங்களுக்கு எங்கு குளிக்க அனுமதி எனத் தெரிந்து கொள்வதற்கே பல மணி நேர அலைச்சலை சந்திக்க நேர்ந்துள்ளது. பல இடங்களில் காவல்துறை அவர்களை அனுமதி மறுத்து, வெவ்வேறு பாதையில் பயணிக்க கட்டளை இட்டுள்ளது. அவ்வாறு சென்ற இடத்திலும் அனுமதி மறுப்பு நடந்துள்ளது. ஆக, ஒரு கட்டத்தில் பொது மக்கள் பொறுமை இழந்து பாதுகாப்பு கேரிடார்களை உடைத்து நொறுக்கி, முன்னேறி உள்ளனர். உள்ளே நுழைபவர்கள், வெளியேறுபவர்கள் இருவருக்கும் ஒரே பாதை தான் தரப்பட்டுள்ள நிலையில் தான் முட்டல், மோதல் தடுமாறி வீழ்த்தல், வீழ்ந்தவர்களின் மீதே மற்றவர்கள் விழல், அவர்களை மிதித்து மற்றவர்கள் தப்பித்து செல்லல்…ஆகியன நடந்தேறி உள்ளன.

ஒரு அமெரிக்க பயணி சமூக வலைதளத்தில் தான் 19 மணி நேரமாக கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஜன. 13ம் தேதி பௌஷ பௌர்ணமி, ஜன. 14ம் தேதி மகர சங்கராந்தி ..என இரு முக்கிய குளியல் நாட்களிலும் இதே போன்ற நெரிசல் என்றாலும் விபத்து நிகழ்வில்லை.
ஆனால், ஜனவரி 28 இரவு தொடங்கி ஜன. 29ம் தேதி (இன்று) மௌனி அமாவாசை அதிகாலை வரையிலான குளியல் தான் வரம்பு மீறி நடந்துவிட்டது. சாவி எண்ணிக்கை தற்போது வரை நாற்பது. இது மேலும் அதிகரிக்கலாம். காணாமல் போனாவ்ர்கள் எண்ணிக்கை இனிமே தான் தெரிய வரும்,. இன்னும் மூன்று முக்கிய குளியல் நாட்கள் வரவுள்ளன. அவை,
பிப். 9 ஆம் தேதி வசந்த பஞ்சமி, பிப். 12ம் தேதி மாசி பெளர்ணமி, பிப். 26ம் தேதி மகா சிவராத்திரி ஆகியவையே. இவற்றில் இதே தவறுகள் ம் ஈண்டும் அரங்கேறாமல் அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply