கோவில் நுழைவு மறுப்பு, தேனீர் கடைகளில் தனி கிளாஷ், தாழ்த்தப்பட்டவருக்கு தனி மயானம், குலத் தொழில் செய்வதற்கு நிர்பந்தம், பஞ்சாயத்துக்களில் சேர் தரமறுப்பது..என தாழ்த்தப்பட்டவர்களை தாழ்த்தி வைக்கும் தீண்டாமைக்கு எதிராக களம் கண்டுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாமுவேல்ராஜ் நேர் காணல்;
தீண்டாமை ஒழிப்பைப் பிரதான இலக்காக வைத்து செயல்பட்டு வரும் அமைப்புகளில் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” குறிப்பிடத்தக்கதாகும். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு முதல் இதன் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் கே. சாமுவேல்ராஜ். இதன் பொதுச் செயலாளராக 17 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் என்பதிலிருந்தே இவர் எத்தகைய களப்போராளியாக இருப்பார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அவரை நம்முடைய “அறம்” இணைய இதழுக்காக நேர்காணல் செய்ய சென்றிருந்தோம்.
சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அவருடனான பேட்டி விவரம் வருமாறு :
மனித குல வரலாற்றில் தீண்டாமை எப்போது தோன்றியது?
பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி, மனித குலம் வேட்டையாடி வாழ்ந்த காலகட்டத்திலேயே பலம் வாய்ந்தவர்கள் பலவீனமானவர்களைத் தாக்கி அவர்களிடமிருந்தவற்றை பறித்து வந்திருக்கிறார்கள்.
சிந்துவெளி நாகரிக மக்கள் கூட இரு பிரிவாக வாழ்ந்ததை அறிய முடிகிறது. இந்தியாவில் ஆரியர் வருகைக்கு பிறகு தான் பிறப்பின் அடிப்படையில் நான்கு பிரிவுகள் உருவாகி, இன்ன சாதி இந்த தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற ஏற்றத் தாழ்வுகள் உருவாகின.
ஊருக்கு வெளியே ஒடுக்கப்பட்ட மக்களை ஒதுக்கி வைத்த நிலைமை எப்போது ஏற்பட்டது?
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன யாத்திரிகர் யுவான்சுவான் தன் குறிப்புகளில் இதை பதிவு செய்துள்ளார். அவர் கிட்டத்தட்ட இந்தியா முழுக்க பயணித்தவர். நாடு முழுவதும் ஊருக்கு வெளியே நலிவுற்ற மக்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்..
இந்தியா விவசாய பூமி. நிறைய கூலிஆட்கள் தேவை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் வகையில், விவசாய கூலிகளாக இந்த மக்களை வைத்துள்ளனர். இவர்கள் சொந்தமாக நிலம் வைத்துக் கொள்ள முடியாது, கல்வி கற்கக் கூடாது, இடுப்புக்கு கீழே மட்டுமே ஆடை அணிய இயலும். இப்படிப்பட்ட நிலைமைகளை ஏற்படுத்தி தீண்டத்தகாதவர்களாக நில உடமை கிராம அமைப்பின் கொத்தடிமைகளாக இவர்களை ஒடுக்கி வைத்திருந்திருக்கிறார்கள்.
நாகரீகம் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும் தீண்டமை கொடுமைகள் உள்ளதா…?

கிராமங்களில் வசிக்கும் சலவை தொழிலாளர்கள், முடித்திருத்தம் செய்வோர் குடும்பங்களில் படித்தவர்கள் கூட அதே வேலை செய்யவே நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இல்லாவிட்டால், அவர்களது வீட்டை அடித்து நொறுக்குவதும், வீட்டுக்கு தீ வைக்கப்படுவதுமான நிலைமைகளை பார்க்க முடிகிறது. இந்தக் குடும்பங்களை சேர்ந்த ஒரு சிலர் வெளியூரில் சென்று படித்து வேலை வாய்ப்பு பெற்றாலும் ஊருக்குள் நிலம் வாங்க முடியாது.
படித்து முடித்து சவுதிக்கு வேலைக்குச் சென்றிருந்த ஒரு தலித் இளைஞர் அண்மையில் சொந்த ஊரான ராமநாதபுரம் வந்தார். உள்ளூர் கோயில் திருவிழாவுக்கு அவரை மேளம் அடிக்கச் சொன்னார்கள். மாட்டேன் என்று அவர் சொன்னதும் அவருடைய மண்டையை உடைத்து விட்டார்கள்.
உசிலம்பட்டி தாலுகாவில் நடைபெற்ற ஒரு கோயில் திருவிழாவில் நடனமாடிய செயலுக்காக பட்டியலினத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆதிகேசவனை அடித்து ஆறு வயது சிறுவனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
இப்படி சாதீயமும், தீண்டாமையும் பரவலாக கோலோச்சி நிற்கிறது.
கிராமங்களில் சாதி ஆதிக்கம் எவ்வாறு உள்ளது…?
இப் பிரச்சினையின் மையப்புள்ளி நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள ஆண்டை – அடிமை முறை தான். கிராமங்களில் இப்போதும் சாதி அடிப்படையில் தானே தெருக்களே உள்ளன. அக்கிரகாரத் தெரு, செட்டியார் தெரு, முதலியார் தெரு, வன்னியர் தெரு, பறையர் தெரு என்று அந்தந்த சாதிகளுக்கான தெருக்களில் தான் அவர்கள் பெருமளவு இருக்கிறார்கள்! பொதுக் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்படும் இடங்கள் அனேகம் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களில் பொங்கலையொட்டி “கோழி கொடுத்தல் என்ற பழக்கம் காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. விவசாயக் கூலி தொழிலாளியாக உள்ள ஒரு தலித் தன் முதலாளிக்கு கோழியை கொடுத்து தன் விசுவாசத்தை உறுதி செய்கிற பழக்கம் அது.
இதனால் தான் தான் டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் கிராமக் கட்டமைப்புகளை அடித்து நொறுக்க வேண்டும் என்றார்.
பெரிய அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிக்காக இப் பிரச்சினைக்குள் செல்ல விரும்புவதில்லை. அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த கட்டமைப்பை பாதுகாக்கிறார்கள். 50 வீடுகளே உள்ள கிராமங்களுக்கு சாதிக்கு ஒரு மயானம் என்று ஆறு ஏழு மயானங்கள் உள்ளன. அத்தனை எரிமேடைகளுக்கும் அரசே செலவு செய்கிறது. ஒரு தகன மேடை போதும் என்று உத்தரவு போட்டு செயல்படுத்த அரசால் முடியும். அப்படிச் செய்ய எந்த அரசும் முன் வருவதில்லை
தமிழ்நாட்டில் என்னென்ன வழிமுறைகளில் தீண்டாமை நிலவுகிறது?

நாங்கள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 82 வகையான தீண்டாமை செயல்களைக் கண்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
# கோவில்களில் வழிபாடு மறுப்பு,
# தேனீர் கடைகளில் இரட்டைக் குவளைகள்,
# இறந்தவர்களை அடக்கம் செய்யும் மயானங்களில்!
# படித்திருந்தாலும் கூட மிரட்டி குலத் தொழிலை செய்ய வைப்பது
# பள்ளிக் கூடங்களில் சற்று தனித்து அமர வைப்பது.
# பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுப்பு.
# தாழ்த்தப்பட்டவர்கள் பகுதியை பிரித்து காட்ட தீண்டாமைச் சுவர் அமைத்தல்1
# சாதி ஆணவப் படுகொலைகள்!
# கிராம பஞ்சாயத்துக்களில் பட்டியல் இனத் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்ற முடியாமை… போன்ற பல வடிவங்களில் நிலவுகிறது.
400 க்கு மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தபோது, இன்னும் அதிர்ச்சி எங்களுக்கு காத்திருந்தது. முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே சாதி வாரியாக பிரிந்து செயல்படுவதை கண்டறிந்தோம். அவர்கள் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் சாதீய நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சத்துணவு பள்ளிகளில் பட்டியலினக் குழந்தைகளை தனி வரிசையில் அமர வைத்திருந்த கொடுமையையும் அறிய நேரிட்டது.
மாணவர்களின் நன்மை, சமூக நல்லிணக்கம் கருதி நாங்கள் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் பொதுவெளியில் வெளியிடாமல் அரசு மற்றும் அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் சந்துரு ஆணையத்திடம் வழங்கினோம். தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்ந்த பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை கோரினோம்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடிகூட ஏற்ற முடியாமல் இருக்கும் ஊராட்சிகள் குறித்து அரசு கவனத்தில் கொண்டு சென்ற போது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
போராட்டக் களத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள் அச்சுறுத்தல்கள் என்னென்ன?
பல உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி காணாமல் போனாள்.
பட்டியலினத்தைச் சேர்ந்த இச்சிறுமியின் உடல் ஒரு வாரம் கழித்து அங்கு உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை செய்து கொன்று வீசியிருந்தனர். நலிவுற்ற அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறினோம். காவல் நிலையத்துக்கு சென்று குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை கோரினோம் . காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை, கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை சட்டப்பிரிவு வழக்காக மாற்றப்பட்டது. 4 பேர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் போலீசாரின் செயல்பாடு எங்களுக்கு நிறைவை தராததால் சிபிசிஐடி விசாரணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டோம். அங்கு எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும் இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி அரியலூர் மகிளா நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் இரண்டு வருடம் கழிந்தது. கீழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரும் தங்களுக்கு ஆதரவாக வாதாட ஆளுக்கு ஒரு பிரபல வழக்கறிஞரை நியமித்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அரசு நியமித்த வழக்கறிஞர் மட்டும் ஆஜரானார். அங்கு வக்கீல்கள் வாத பிரதிவாதம் சமமான நிலையில் இல்லை என்பதை உணர்ந்தோம். இது வன்கொடுமை சட்ட வழக்கு என்பதால் கூடுதலாக ஒரு வழக்கறிஞர் நியமித்துக் கொள்ள எங்களுக்கு அதிகாரம் இருந்தது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் அபிராமன் வாதாட முன் வந்தார். 4 பேர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் கூட்டு சதிக்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120பி -ஐ போலீசார் சேர்க்கவில்லை. இதைச் சுட்டிக்காட்டிய பிறகு மகிளா நீதிமன்றம் இந்த பிரிவை சேர்க்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து நான்கு பேரும் உயர் நீதிமன்றத்திற்கு போய் தடை வாங்கி விட்டனர். தடையை விலக்கி விசாரணை நடைபெற மேலும் இரண்டு ஆண்டுகள் ஆனது.
வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி ஆறு மாதத்தில் ஒரு வழக்கில் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த வழக்கில் ஆண்டுகள் பல கடந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் குற்றவாளியான மணிகண்டனுக்கு ஆயுள்தண்டனை கிடைத்தது, மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இப்படி பல சம்பவங்களில் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் நடத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் பலருக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.
தமிழக கோவில்களில் இன்னும் தீண்டாமை கொடுமைகள் உள்ளனவா?
உத்தமபுரத்தில் உள்ள முத்தாளம்மன் கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைய முடியாத நிலைமை இருந்ததை அறிந்து, அங்கு ஆலய நுழைவுப் போராட்டம் அறிவித்தோம். அந்த ஊருக்குச் செல்லும் ஏழு நுழைவாயில்களும் மூடப்பட்டன. 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டது. நாங்கள் ஒரு காட்டுப்பாதை வழியாக ஊருக்குள் செல்ல திட்டமிட்டோம். கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. எங்கள் முடிவில் உறுதியாக இருந்தோம். மகேந்திரன்( முன்னாள் பெரம்பூர் எம்எல்ஏ), செல்லக்கண்ணு உள்ளிட்ட தோழர்கள்
இரவு 11மணி அளவில் புறப்பட்டுப் போனோம். பொன்னுத்தாய், முத்துராணி முதலான தோழர்கள் புல் கட்டை தலையில் சுமந்தபடி, போராட்டக் களத்திற்கு வந்து சேர்ந்தனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்தனர்.
போலீசாரின் தடுப்பை மீறி இலக்கை அடைந்தோம். போராட்டம் வெற்றி பெற்றது.
இது போல, 25க்கு மேற்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்தை அறிவித்து அனைத்திலுமே வெற்றி பெற்றுள்ளோம். விருதுநகர், பழைய செந்நெல்குளம், காளியம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தை நாங்கள் அறிவித்த போது, அந்த மாவட்ட எஸ்பியாக ரவி இருந்தார். அவரே போராட்டக் களத்துக்கு நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தி,தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
பெரியாருக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆலய நுழைவு போராட்டத்தில் அதிக அளவில் ஈடுபட்டது தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகும். இதுவரை 20க்கும் மேற்பட்ட தீண்டாமை சுவர்களை அப்புறப்படுத்தி இருக்கிறோம்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வெற்றிகரமான அத்தனை செயல்பாடுகளுக்கும் தோழர்களின் ஒருமித்த உழைப்பு மற்றும் கட்சியின் ஆதரவு தான் காரணம் ஆகும். இந்த அமைப்புக்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நிர்வாகிகள் உள்ளனர்.
சாதியக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செய்தவற்றை கூறுங்கள்?
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய தலித் ஊர்கள் சாதிய கலவரத்தில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தீக்கிரையாக்கப்பட்டது.
அப்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அந்த மாவட்ட செயலாளராக மாத்தையன் இருந்தார்.
அங்கு ஒரு வீடு கூட மிஞ்சவில்லை. கல் வீடுகள் கூட வெடித்து நின்றன. உயிர்ச் சேதம் இல்லையே தவிர வீட்டில் இருந்த அத்தனை பொருள்களும் சாம்பல் ஆகிவிட்டன.நாங்கள் ஒரு மாதம் அங்கு முகாமிட்டு வீட்டுக்கு ஒரு படிவம் போட்டு ஒவ்வொரு குடும்பமும் இழந்த பொருட்கள் குறித்து விரிவாக கேட்டறிந்தோம்.
பாதிக்கப்பட்ட 452 குடும்பங்களின் இழப்பீடு பதினோரு கோடி ரூபாயாக இருந்தது. அனைத்து விவரங்களுடன் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் சட்டமன்ற எம்எல்ஏ டில்லி பாபு உள்ளிட்ட தோழர்கள் உடன் வந்திருந்தனர். எங்களுடன் பேசிய கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் 3 கோடி தான் இழப்பு என்று சொல்லி உள்ளார்கள், நீங்கள் மிகைப் படுத்தி கூறுகிறீர்களே,” என்று சொல்லி எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.
நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினோம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் என்கிற வகையில், மனுதாரராக என் பெயரில் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எங்கள் தரப்பு வழக்கறிஞராக கிறிஸ்டோபர் ஆஜரானார்.
முதல் கட்டமாக 8.5 கோடி ரூபாய் கொடுக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் நிவாரணமாக இது அமைந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இது பற்றிய முழு விவரங்களை சட்டமன்றத்தில் அறிவித்தார்.
வேங்கை வயல் விவகாரத்தில் தலித் இளைஞர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.இது பற்றி உங்கள் கருத்து என்ன?
சிபிசிஐடி போலீசாரின் அறிக்கை ஏமாற்றத்தைத் தருகிறது.
கடந்த ஓராண்டாகவே உள்ளூர் போலீசாரும் சிபிசிஐடி போலீசாரும் இவர்கள் மீது தான் குற்றம் சாட்டி வந்தனர். போலீஸ் குறித்து அந்த காலத்தில் இருந்து ஒரு கருத்து உலா வருவது உண்டு.”விபத்து நடந்தா அங்கு நிற்காதே! போலீஸ் உன்னை தான் கேட்கும்” என்று.!
வேங்கை வயல் விவகாரத்தில் போலீஸ் அப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது.
வீட்டுக் குழாயில் வரும் தண்ணீரில் துர் நாற்றம் வீசினால், மேல்நிலை தொட்டியில் எலி ஏதாவது செத்துக் கிடக்கிறதா என்று நாம் பார்ப்பது வழக்கம்.
ஐந்தாறு நாட்களாக துர் நாற்றத்துடன் அசுத்தமான குடிநீர் காரணமாக அவர்களது குடும்பத்தினர் பலருக்கு தொற்று நோய் ஏற்பட்டதால், இந்த இளைஞர்கள் ஊரார் பார்க்க மேல் நிலைத் தொட்டியில் ஏறி, அங்கு மலம் மிதப்பதை செல்போனில் படம் எடுத்து தெரிவித்துள்ளார்கள்.
அதைத் தவிர, அந்த இளைஞர்கள் குற்றத்தில் ஈடுபட்டதற்கான எவ்வித சான்றும் இல்லை. நீதி கேட்டு புகார் கொடுத்த பட்டியல் சமூகமே குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட்டுள்ளது வேதனை தருகிறது.
எனவே தான், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்.
இந்த சமூக கட்டமைப்பில் விளிம்பு நிலை மக்களுக்கு நீதி கிடைப்பது எளிது அல்ல. பல்வேறு பிரச்சினைகளில் அனுபவரீதியாக நாங்கள் கண்ட உண்மை இது. பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வருபவர் பட்டியலினத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருந்தால் கூட, அவரையும் இந்த சமூக கட்டமைப்பு தன் இஷ்டத்துக்கு தான் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தத் துறையில் ஆய்வு, போராட்டம் என்று நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளீர்கள். இங்கு சமூக நீதி காக்கப்பட, மனித நேயம் நிலவ நீங்கள் முன்வைப்பது என்ன?
நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சிறிய அளவு நிலம் அவர்களை நிமிர்ந்து வாழ வைக்கும். இந்த நோக்குடன் தான் பஞ்சமி நில மீட்பு மற்றும் உச்சவரம்பு சட்டம் ஆகியவை நம் நாட்டில் கொண்டுவரப்பட்டது.மேற்கு வங்கத்தில் மட்டும் தான் 13 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயக் கூலிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் இச்சட்டம் தீவிரமாக அமலாக்கப்படவில்லை.
இப்போது திமுக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு திட்டம் மிக ஆபத்தானது. பெரு நிறுவனங்களுக்கு மட்டும் உதவக்கூடியது. சிறு விவசாயிகளுக்கு பேராபத்தை கொடுக்கக் கூடியது. இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
மக்களைப் பொருத்தவரை சாதி வேறுபாடுகளை கடந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். இதை நாங்கள் 2017ஆம் ஆண்டில், சேலத்தில் இருந்து சென்னைக்கு 14 நாட்கள் மேற்கொண்ட பயணத்தின் போது நேரில் பார்த்தோம்.
Also read
ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மேற்கொண்ட இப்பயணத்தை “சாதீயம் தகர்ப்போம், மனிதம் காப்போம்”என்ற பெயரில் நடத்தினோம்.
வழி நெடிகிலும் கடைகள் வைத்திருந்தவர்கள் அன்புடன் உபசரித்தார்கள். எங்களுக்கு குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் தந்து பணம் வாங்க மறுத்தார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தைச் சாராதவர்கள். “நல்ல நோக்கத்திற்காக நீங்கள் செயல்படுகிறீர்கள்” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.
பொதுமக்களின் மனநிலை இது தான். மாநிலத்தையும் நாட்டையும் ஆள்கிற அரசுகளும், அரசியல் கட்சிகளும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.தீண்டாமை இந்த மண்ணில் இருந்து ஒழிக்கப்படவும் ஏற்றத் தாழ்வு இல்லாத சம நிலை சமூகம் இங்கு ஏற்படவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,”
நேர்காணல் : ம.வி.ராசதுரை
தீண்டாமை!
“தீண்டாமை சுவர்தாண்டி பாலியல் தீண்டல்
கயவர்கட்கு தீண்டாமை இல்லையா”