மத்திய பட்ஜெட்டில் மறைந்திருக்கும் உண்மைகள்!

-சாவித்திரி கண்ணன்

மாய் மாலங்கள் நிறைந்த மத்திய பட்ஜெட் மலைக்க வைக்கிறது. நாட்டின் பொருளாதாரம், மக்கள் நலன் குறித்த புரிதலோ, கூட்டாட்சி தத்துவம் குறித்த அறிதலோ இவர்களுக்கு இல்லை. இந்த பட்ஜெட்டால் மக்கள் வாழ்க்கை தரம் உயருமா? தாழுமா? யாரை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது..?

வறுமை ஒழிப்பு, நல்ல பள்ளிக் கல்வி, தரமான எளிதாக அணுகக்கூடிய சுகாதாரம், திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகள், பொருளாதார செயல்பாடுகள், நமது நாட்டை உலகின் உணவுக் களஞ்சியமாக மாற்றுவதற்கான வழிகள் ஆகியவற்றை அடைய 10 துறைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கான நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், சென்னை, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள்,  இரட்டை வழி ரயில் பாதை திட்டம், ரயில் பாதைகளை மின் மயமாக்கல் , இயற்கை பேரிடர் கால நிவாரணம், தமிழக  ஆறுகள் இணைப்பு..போன்ற எவையும் இந்த பட்ஜெட்டில் பொருட்படுத்தப்படவில்லை.  பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியது மட்டுமே தமிழர்களுக்கு போதுமானது என நிர்மலா சீதாராமன் நினைக்கிறாரோ என்னவோ..?

அதே சமயம் இந்த ஆண்டு பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது என்பதால் அதற்கேற்ப அங்கு புதிய விமான நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம், புதிய  தொழிற்சாலைகள், சிறப்பு வேளாண் திட்டங்கள் என்று மத்திய பட்ஜெட்டில் பீகாருக்காக பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவிக்கும் மன நிலை மத்திய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, பட்ஜெட் என்பதே தேர்தல் ஆதாய கணக்குகளை கொண்டு தான் தீட்டப்படுகிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. இதில்  எந்த குற்றவுணர்வும் இவர்களுக்கு இல்லை என்பது தான் கவலையளிக்கிறது.

புற்று நோய் உள்ளிட்ட உயிர்க் காக்கும் மருந்துகளுக்கு இது நாள் வரை வரி விதித்ததே பெரும் தவறாகும். தற்போது அதற்கு வரிவிலக்கு தந்துள்ளது நல்ல விஷயமே!   37க்கும் அதிகமான மருந்துகளின் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருந்துகளின் விலை குறையும். அதேபோல் புற்றுநோய் மற்றும் பிற பிரதான நோய்களுக்கான 36 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதால் அதன் விலையும் குறையும்.

கிராமங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அறிவிப்பை எந்த நோக்கத்திற்காக அறிவித்துள்ளார்கள். தபால், தந்தி அனுப்புவது எல்லாம் வழக்கொழிந்து வரும் நிலையில்  ஏன் தபால் நிலையங்கள் தொடங்குகிறார்கள்! இதை பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் ஆட்சிக்கு வந்த போது செய்யவில்லையே! காரணம், ஒவ்வொரு பார்சலுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பை கொண்டு வந்த மத்திய ஆட்சியாளர்கள் கிராமங்கள் வரைக்கும் தங்கள் சுரண்டலை விரிவுபடுத்தவே இதனை செய்துள்ளனர்.

பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தினாலே அனைவருக்கும் இலவச மருத்துவம் சாத்தியமாகிவிடும். சாலை வியாபாரிகளுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் காப்பீடு அட்டை வழங்குதல் அவசியமில்லாமல் போய்விடும். காப்பீடு அட்டை வழங்குவதன் பின்னணியில் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தை கொழுக்க வைக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகள் எதுவுமே இந்த பட்ஜெட்டில் கண்டு கொள்ளப்படவில்லை.  இத்தகு தொழில் முனைவோர்களின் நீண்ட காலமாக கோரிக்கைகள் எதையும் இவர்கள் காதில் கூட வாங்கவில்லை என்பது துரதிர்ஷடமே! நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் இந்நிறுவனங்களின் புத்தாக்கத்திற்கு புதிய திட்டங்கள் இல்லை.

அலட்சியப்படுத்தப்பட்ட சிறு, குறுந்தொழில்கள்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என்பது விதை நெல்லை விற்பதற்கு சமானமாகும். இந்திய அரசுக்கு மிகுந்த லாபம் தரக் கூடிய எல்.ஐ.சி நிறுவனத்தை முழுமையாக தனியார்மயப்படுத்துவது வரை இந்த அரசு ஓயப் போவதில்லை என்பது காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடு உயர்த்தி இருப்பதன் வழியே உணரலாம்.

பொதுவாக உலக நாடுகளில் எல்லாம் அணுவினால் செய்யப்படும் மின்சார உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. காரணம், அதனால் மக்களுக்கு ஏற்படும் கடும் பாதிப்புகள் . சுற்றுச் சூழல் பாதிப்போடு மனித வாழ்வையே நரகமாக்கிவிடும் அணு மின் உற்பத்தி நிலையங்கள் . இவ்வாறான நிலையில் இந்தியாவில் மேலும் ஐந்து அணு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, இதற்கு 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருப்பதற்கு பின்னணியில் அணுமின் நிலையங்களின் பெயரில் இராணுவ ரீதியாக  அணுகுண்டுகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நோக்கமே அன்றி வேறில்லை.

விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும், சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்க முன்வரவில்லை.   நதிநீர் இணைப்பு போன்ற நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்த எந்த எதிர்பார்ப்புக்கும் விடை இல்லை. இரசாயன உரப் பயன்பாட்டை குறைக்கவும், இயற்கை விவசாயத்தை இன்னும் சற்று முன்னெடுக்கவும் துளியும் அக்கறை இல்லை.

12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு என்பது வரவேற்கத் தகுந்த அறிவிப்பு தான்! இதற்கு பின்னணியில் சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார கடும் மந்த நிலையே காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நடுத்தர வர்க்கத்தினர்களிடம் வாங்கும் சக்தி சமீப காலமாகவே மிகவும் குறைந்துவிட்டது என்ற கவலையே இதற்கு காரணம். அதனால் தான் இது வரை 7 லட்சமாக இருந்த வருமான வரி விதிப்பை அதிரடியாக 12 லட்சம் வரை உயர்த்தி உள்ளனர். இதனால் அரசுக்கு 1,10,000 கோடிகள் இழப்பு என்றாலும் சந்தைக்கு அந்தப் பணம் வரும் போது அரசுக்கு ஜி.எஸ்.டி மூலமாகவும், நிறுவன வரி மூலமாகவும் கணிசமாக திரும்ப கிடைத்துவிடும்.

அதே சமயம் இந்த வருமான வரி விலக்கில் பெரும் சிக்கல் என்னவென்றால், 12 லட்சத்திற்கு மேல் 13 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 15 சதவிகித வரியை ஒட்டுமொத்த தொகைக்குமாக கட்ட வேண்டும் என்பதே! இது தவறான அணுகுமுறை. கூடுதலாக உள்ள ஒரு லட்சத்திற்கு மட்டும் இந்த 15 சதவிகித வரி என்பதே சரியாக இருக்கும்.

புதிய வருமான வரிச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இந்த சட்டம் அமலாகும் போது தான் பழைய வரி முறை நீக்கப்படுமா? புதிய அணுகுமுறை கைக்கொள்ளப்படுமா? என்பது தெரிய வரும்.

சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரூ 98,311 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. மக்களின் ஆரோக்கியம் என்பது தற்போது தனியார் மருத்துவ கட்டமைப்பு சார்ந்து தள்ளப்பட்ட வண்ணம் உள்ளது.

தொழிலாளர் நலன் கிஞ்சித்தும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. நிரந்தர வேலை வாய்ப்பை ஒழித்து எப்போதும் வேலை தேடும் தற்காலிக பணி செய்வோருக்கான இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் கிக் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதானது இவர்கள் எளிய உழைக்கும் தொழிலாளர் நலனில் காட்டும் அக்கறையின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அரசியல் பலாபலன்கள், கார்ப்பரேட் நலன்கள் கண்ணோட்டத்தில் மக்களை பணம் கொட்டும் கருவியாக்கி பட்ஜெட் தீட்டியுள்ளனர்;

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time