அதிரடி தரும் ‘அதிகார’ திமுக! அடங்காத நாம் தமிழர்!

-சாவித்திரி கண்ணன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்த  சூழலில் நாம் தமிழர் கட்சிக்கும், திமுகவிற்குமான நேரடி மோதல் உள்ள நிலையில் களச் சூழல் எப்படி உள்ளது..? திமுகவின் அணுகுமுறை, நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்கள், பணப்பட்டுவாடா, தேர்தல் ஆணைய செயல்பாடுகள், மக்களின் எதிர்பார்ப்புகள் ஒரு அலசல்;

”பிரதான கட்சிகள் இல்லாத நிலையில், திமுக தொகுதிக்கு வெளியில் இருந்து அதிக ஆட்களை தருவிக்கவில்லை. அமைச்சர்கள் பட்டாளம் களம் காணவில்லை. பரிசு பொருட்கள் விநியோகம் இது வரை நடக்கவில்லை. பட்டியில் அடைப்பதை போல மக்களை அடைக்கவில்லை. தொகுதியில் பரபரப்பான அளவில் திமுகவின் செயல்பாடுகள் இல்லை” என்பது பொதுவாக ஈரோடு மக்கள் கூற்றாக உள்ளது.

அதே சமயம் தன் பண பலத்திலும், அதிகார பலத்திலும் அழுத்தமான நம்பிக்கை வைத்து, திமுக களம் கண்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும் திமுக என்ற பலமான ஆளும் கட்சிக்கு முன்னால் நாம் தமிழர் கட்சியின் பலம் சிறிது என்றாலும், களத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இல்லாத நிலையிலும், திமுகவின் தேர்தல் அணுகுமுறை மாறவில்லை.

சென்ற முறை இதே தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் ஆளும் திமுக செய்த அராஜகங்கள், அத்துமீறல்களால் ஏற்பட்ட கசப்புணர்வே முக்கிய கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பு என்ற குற்றச்சாட்டிற்கு பிறகும் திமுகவின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக களம் செல்லாமலே விடுத்த அறிக்கையில், ”பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும்.திமுக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு.

2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 – படைப்போம்’ வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உடன் பிறப்புகளின் உழைப்பினால் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

ஈரோட்டில் உள்ள நமது நண்பர் ஒருவரிடம் பேசிய போது, ”சென்ற இடைத் தேர்தலில் மிகப் பெரிய பணப்பட்டுவாடாவை நிகழ்த்தி விட்டு, இந்த முறை திமுக கஞ்சத்தனமாக பணம் தருகிறது. இன்று எங்கள் பகுதிக்கு காலை நாலரை மணிக்கு கதவைத் தட்டி எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ஆயிரம் ரூபாய் தந்து சென்றனர். ”என்னங்க, பணம் ரொம்ப குறைவாக தருகிறீங்க..” என மக்களில் பலர் வாய்விட்டே கேட்டுள்ளனர். உண்மையில் இதில் மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்ததை பார்க்க முடிந்தது. தேர்தலில் பணம் என்பது தங்களுக்கான ‘உரிமைத் தொகையாக’ மக்கள் எண்ணத் தலைப்பட்டுவிட்டனர். அதுவும் குறிப்பாக சென்ற தேர்தலில் ஒரு ஓட்டுக்கு தலா 5,000, ‘ப்ளஸ்’ இத்தியாதிகளை பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தப் பணமும் கிடைக்காவிட்டால், மக்கள் வாக்குச் சாவடி பக்கமே கூட போகும் மன நிலையில் இல்லை. ஆக , இன்னொரு முறை பணப்பட்டுவாடா நடக்க கூடும்” என்றார்.

இந்த இடைத் தேர்தலில் சுயேட்சையாக களம் கண்டுள்ள பிரபல பத்திரிகையாளர் தமிழா, தமிழா பாண்டியனிடம் பேசிய போது, ”பெரியாரை இழிவுபடுத்திய சீமானை எதிர்க்க வேண்டும் என்பதால் மட்டுமே களம் கண்டேன். யதார்த்தத்தில் இங்கு மக்கள் பெரியாரை மறந்து விட்டனர் என்பதை உணர முடிந்தது. பெரியார் மண்ணில் பெரியாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து துண்டறிக்கை தந்த தந்தை பெரியார் திராவிடக் கழகத் தோழர்களை நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் இன்று அடித்து விரட்டியதை கண் கூடாகக் கண்டேன்.

திமுகவை பொறுத்த அளவில் அவர்கள் பணப் பட்டுவாடா ஒன்றை மட்டுமே நம்புகின்றனர். தொகுதியில் உள்ள கணிசமான மக்களை பணம் தந்து வசப்படுத்தி உள்ளனர். இது தவிர, பிரச்சாரத்திற்காக ஆங்காங்கே ஊர்வலம் என்ற பெயரில் தினசரி மாலை 4 முதல் 7 மணி வரை வருவோருக்கு தலா ரூ 300  தரப்படுகிறது. சுமார் 50 இடங்களில்  நடக்கும் இந்த பிரச்சார அணிவகுப்பில் தலா ஆயிரம் பேர் வீதம் தொகுதியில் பல்வேறு இடங்களில் கலந்து கொள்கின்றனர்.

இதை ஒரு தற்காலிக வேலையாகவே பலர் பாவிக்கின்றனர். அன்னை சத்யா காலணியில் உள்ள மக்களில் சுமார் 5,000 அருந்ததி மக்கள் இதை பிரதான வருமானமாக பார்க்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு தலா 2,000, தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிக்கு தலா 1,000 எனத் தருகின்றனர். மிகப் பகிரங்கமாக நடக்கும் பணப்பட்டுவாடாக்களை தேர்தல் அலுவலர்கள் யாரும் பொருட்படுத்துவதே இல்லை. 

இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,27000 . இதில் ஒவ்வொரு வாக்காளருக்கும் குறைந்தது 2,000 ஆவது தர முடிவெடுத்து பணப்பட்டுவாடா நடந்துள்ளது…

எந்த ஒரு வெகுஜன பத்திரிகையோ, காட்சி ஊடகமோ திமுகவின் இந்த அத்து மீறல் குறித்து கவனப்படுத்தவே இல்லை. திருமுருகன் காந்தியின் மே-17 இயக்கம் சார்பில் ஒருவர் நிற்கிறார். அவர்கள் பிரபாகரன் படம் போட்டு பிரச்சாரம் செய்கின்றனர். அவரோ திமுகவிற்கு பிரச்சாரம் செய்கிறார்’’ என்றார்.

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பேச்சாளர் கோவை கார்த்திகாவிடம் பேசிய போது, ”எங்கள் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு தொடர்ந்து நெருக்கடி தருகிறது காவல்துறை. ‘அங்கே போகதே’, ‘இங்கே போகாதே’, ‘இங்கே எதற்கு பேசுகிறாய்..?’ என ஓயாமல் இடைஞ்சல் தருகிறார்கள். தேர்தலில் போட்டியிடக் கூடிய ஒவ்வொரு வேட்பாளருக்கும், வாக்காளர்களை சந்திப்பதற்கான உரிமையும், கடமையும் உண்டு; அதே போல வேட்பாளரை மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பு வாக்காளர்களுக்கு மறுக்கபடலாகாது.

நாங்கள் சட்டப்படி கூட்டம் போட அனுமதி கேட்டால் கடைசி நேரம் வரை அமைதி காத்து கூட்டம் நடப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக இடத்தை மாற்றச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். நாங்கள் திரண்டு மறியல் செய்து போராடி தான் கூட்டம் நடத்த வேண்டி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து தமிழகம் முழுமையும் இருந்து இங்கு தினசரி 500 பேர் வருகின்றனர். ஓரிரு நாட்களோ, ஒரு வாரமோ தங்கி வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கின்றனர். எங்கள் கொள்கையையும், மக்களையும் நம்பி மட்டுமே களத்தில் செயல்படுகிறோம்.

முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி தந்ததாக சொல்கிறார். அப்படியானால் பணப்பட்டுவாடா செய்வது ஏன்? நாங்கள் தமிழர் நலன் சார்ந்து பிரச்சாரம் செய்கிறோம். தமிழகத்தின் சுற்றுச் சூழல் நாசமாவது குறித்தும், இயற்கை வளம் சூறையாடப்படுவது குறித்தும் பேசுகிறோம். ஆனால், திமுகவினர் பிரச்சாரத்தையே முற்றிலும் தவிர்த்து பணப்பட்டுவாடாவில் மட்டுமே குறியாக உள்ளனர். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் நிற்காத காரணத்தால் அந்தக் கட்சி நிர்வாகிகளிடம் நாங்கள் ஆதரவு கேட்கவில்லை. ஆனால், திமுகவோ மாற்றுகட்சி நிர்வாகிகளுக்கும் பணம் தந்து ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இது இடைத் தேர்தல் அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தோல்வியாகத் தான் உள்ளது..’’என்றார்.

திமுக வெற்றி பெறலாம். ஆனால், இது ஜனநாயகத்தின் அப்பட்டமான தோல்வி. இதற்கு தேர்தல் ஆணையத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் நடவடிக்கைகளை முடக்கி, அமைதி காக்கும் மத்திய பாஜக அரசுக்கு  தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time