”பொது இடங்களில் கட்சிக் கொடிகளே கண்ணில் படக் கூடாது” என அதிரடி காட்டுகிறார் நீதிபதி! அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் குறித்து எத்தனை அருவெறுப்பும், அலர்ஜியும் இதில் வெளிப்படுகிறது..! ஜனநாயகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்கும் வண்ணம் தீர்ப்புகள் தருவதா? ஒரு அலசல்;
பல விசித்திரத் தீர்ப்புகள் வரிசையில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் கடந்த ஜனவரி 27ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ”தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கட்சிகள், சாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்கள் 12 வாரங்களில் அகற்றப்பட வேண்டும்” என்று ஆணையிட்டிருக்கிறார். மேலும், ”அகற்றத் தவறுகிறவர்களுக்கு கொடிக் கம்பங்களை அரசாங்கமே அகற்றிவிட்டு, அதற்கான செலவுத் தொகையை அந்தந்தக் கட்சிகள், அமைப்புகளிடம் வசூலிக்க வேண்டும் அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் கொடிக் கம்பங்களை நிறுவ அனுமதிக்கக் கூடாது” என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது.
”கட்சிகளும், அமைப்புகளும் தங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் கொடிக் கம்பங்களை ஊன்றிக் கொள்ளலாம்; தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டம், ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது பொது இடங்களில் கொடிக்கம்பங்களை தற்காலிக அடிப்படையில் நிறுவ வாடகை வசூலித்து அனுமதியளிக்கலாம். கொடிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களைக் கட்சிகளும் அமைப்புகளும் சீரமைக்க வேண்டும்” என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.
“கட்சிகளின் தலைவர்களுடைய பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் கொடியேற்றப்படுகிறது. அந்த விழாக்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. கொடிக் கம்பங்களின் உயரத்தைக் கூட்டுவதில் போட்டி நிலவுகிறது. பொது இடங்களில் கட்சிகளும் அமைப்புகளும் கொடிக்கம்பங்களை நிலையாக நிறுவிக் கொள்ள அனுமதிக்கும் அதிகாரம் காவல்துறைக்கோ, வருவாய்த்துறைக்கோ சட்டத்தில் அளிக்கப்படவில்லை,” என்று தீர்ப்பு நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதே போன்ற ஆணை 2019 ஆம் ஆண்டிலும் நீதிபதிகள் எஸ். மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு, ”தெருக்களிலும் சாலைகளிலும், மாநில தேசிய நெடுஞ் சாலைகளிலும் முறையான அனுமதியின்றி கொடிக் கம்பங்களை நிறுவக்கூடாது” என்று ஆணையிட்டது. ‘உள்ளாட்சி அமைப்புகளும் அரசுத் துறைகளும் அனுமதியற்ற கொடிக்கம்பங்கள் நிறுவப்படுவதைத் தடுக்க வேண்டுமென்றும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்’ ஆணையிட்டது. இப்படிப்பட்ட நீதிமன்ற ஆணைகள் வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றனவா? என்று தெரியவில்லை. சில மாநிலங்களில் இது தொடர்பான நடைமுறை விதிகள் இருக்கக் கூடும்.
பொது இடத்தில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும் தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் தற்காலிகமாகத்தான் ஊன்ற வேண்டும் எனபதை ஏற்பதற்குமில்லை. பொறுப்பற்ற முறையில் நிறுவப்படும் கம்பங்களும், அதற்காகக் கட்டப்படும் மேடைகளும் போக்குவரத்திற்கு இடையூறாகலாம், விபத்துகளுக்குக் காரணமாகலாம். இதெல்லாம் நியாயமான கவலை. அப்படியானால், உரிய புதிய நெறிகளை வகுக்கவும், ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள விதிகளை, பாகுபாடில்லாமல் நேர்மையாகச் செயல்படுத்தவும் தானே வலியுறுத்த வேண்டும்?
மன்னர்கள் காலத்தில் இருந்து நவீன தேசங்கள் கட்டமைக்கப்பட்டது வரை கொடி என்ற அம்சம் தொடர்கிறது.
நவீன தேசியக் கட்டுமானத்துடன் இணைந்ததாகக் தேசக் கொடிகள் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து, நவீன அரசியல் இயக்கங்களின் கோட்பாடுகளையும் இலக்குகளையும் வெளிப்படுத்தும் கொடிகள் ஊன்றப்பட்டன. குறிப்பிட்ட வண்ணங்களும் சின்னங்களும் கொண்டவையாக அந்தக் கொடிகள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை அடையாளப்படுத்தின. கட்சிகளின் உறுப்பினர்களிடையே ஒற்றுமைக்கான குறியீடாகவும். “நாங்கள் இந்தக் கொள்கையை சார்ந்தவர்கள்” என்ற பொதுவெளி அறிவிப்பாகவும் கொடிகள் ஏந்தப்பட்டன. நேரடி அரசியல் அமைப்பாக இல்லாவிட்டாலும் அரசியலில் தாக்கமும் செல்வாக்கும் செலுத்தும் சமூகப் பிரிவுகளுக்கான சாதி மதச் சங்கங்களும் கொடி பிடித்தன.
இந்த வளர்ச்சிப் போக்கில், கொடிகள் குறித்த பெருமித உணர்வு அவற்றை உயர்த்திப் பிடிக்கும் மக்களின் மனங்களில் ஊன்றி வளர்ந்திருக்கும், வளர்க்கப்பட்டிருக்கும் என்று விளக்க வேண்டியதில்லை. அரசியல், பண்பாடு ஆகிய களங்களில் இயங்குகிறவர்கள் மட்டுமல்லாமல், நீதித்துறையில் செயல்படுவோரும் இந்தத் தடங்களைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.
முகச்சுளிப்பு மனநிலை!
சாலைப் பயணங்களில் கடக்கப்படும் ஊர்களின் முனைகளில், மைதான ஓரங்களில் பல கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இருப்பதைக் காணலாம். இனி அவை என்னாகும்? அனுமதி பெற்ற கொடிக்கம்பங்களாக நிற்கலாம் அல்லது சில ஊர்களின் அதிகாரிகள் எதற்கு வம்பு என்று எந்தக் கட்சிக்குமே அனுமதியளிப்பதில்லை என்று முடிவு செய்யலாம்.
ஊர்வலங்களுக்கும், கோரிக்கை முழக்கப் போராட்டங்களுக்கும் இடம் ஒதுக்குவதில் இப்படிப்பட்ட அதிகார வர்க்க அணுகுமுறைகளைப் பார்க்கத்தானே செய்கிறோம்? முறையான அனுமதிக்கே கூடப் போராட்டங்கள் தேவைப்படுகின்றனவே! ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் சுவர் விளம்பரங்களும் ஊரின் அழகைக் கெடுப்பதாகக் கருதி முகம் சுளிக்கும் நடுத்தர வர்க்க மனநிலையும் இப்படிப்பட்ட தடைகளில் வெளிப்படுகிறது. எதற்கு இத்தனை கட்சிகள்?, எதற்கு இத்தனை கொடிகள்? என்ற மேலோட்டமான சலிப்பின் தொடர்ச்சி இது.
ஒரு கொடி ஒரு கட்சியின் அடையாளம்!
பொது இடத்தில் பல கொடிகள் பறப்பதோ, அந்த ஊரின் பன்முகத் தன்மைக்கு அடையாளம்!
பல கட்சிகள் இருப்பது மாறுபட்ட அணுகுமுறைகளின் வெளிப்பாடு!
வெறுப்புக்குரிய ஒரு கட்சியின் கொடி கூட அங்கே இருக்கலாம்!
ஆனால், ஒரு ஜனநாயகப் பக்குவமுள்ள மனம், மக்களிடையே தொடர்ந்து இயங்கி, தவறான கொள்கைகளை விமர்சித்து, மோசமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதன் மூலமாகத்தான் அந்தக் கட்சியைத் தனிமைப்படுத்த விரும்பும். அந்தக் கொடியை அகற்றுவதன் மூலமாக அல்ல.
பொது இடத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள் அடையாள பூர்வமாகவும் நடைமுறை சார்ந்தும் பல நோக்கங்களுக்குப் பயன்படுகின்றன.
கட்சிகளையும், அவற்றின் சின்னங்களையும் குறிப்பிட்ட வட்டாரத்தில் அவர்களது இருத்தலையும் மக்கள் எளிதில் தெரிந்து கொள்கிறார்கள்.
முன்னரே கூறியது போல, ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கும், இயக்கத்தின் செய்தியை மக்களிடையே கொண்டு செல்வதற்கும் கொடி ஒரு கருவியாகிறது.
கொடிகளின் நிறங்களும், சின்னங்களும் இயக்கத்தின் அரசியல் கோட்பாட்டை, நடைமுறைக் கொள்கையை, வரலாற்றுத் தடத்தைத் தெரியப்படுத்துகின்றன. எந்த இடத்தில் கொடி ஊன்றப்பட்டிருக்கிறது என்பது கூட, அந்தக் கட்சி மக்களிடையே கொண்டு செல்ல விரும்புகிற மையமான கருத்தாக்கங்களை வெளிப்படுத்துகிறது.
அரசு அலுவலக வட்டாரத்தில் பறக்கிற பல்வேறு கட்சிகளின் கொடிகள், அதிகார பீடங்களின் அதிரடிகளையும், அலட்சியங்களையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை, குறிப்பாக எளிய மக்களுக்கு, ஏற்படுத்துகிறது.
தொழிற்பேட்டைப் பகுதிகளில் அறைகூவல் விடுக்கிற தொழிற்சங்கக் கொடிகள் நிர்வாகக் கெடுபிடிகளுக்குப் பணிந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கலாம் என்ற உளவியல் உறுதியைத் தொழிலாளர்களிடம் விதைக்கின்றன (நிர்வாகச் சுரண்டல்களுக்கு உடந்தையாகிற சில சங்கங்களின் கொடிகளும் அங்கே இருக்கக் கூடும் – நேர்மையான சங்கங்கள் அதைப் பக்குவமாகக் கையாளுவார்கள்).
ஒற்றைச் சித்தாந்தமோ, ஒரே கலாச்சாரமோ ஆதிக்கம் செலுத்துவது ஒரு மோசமான நோய் நிலை. அதற்கு மாறாக, மாற்றுக் கோட்பாடுகளுக்கும், பல்வகைப் பண்பாடுகளுக்கும் நாட்டில் இடமிருப்பதே நன்னிலை. அந்த நன்னிலையின் ஓர் அறிகுறி தான் வேறு வேறு கொடிகள். இன்று தேர்தல், மதம், மொழி என எதையெடுத்தாலும் “ஒரே” என்ற முன்னொட்டு மூர்க்கமாகத் திணிக்கப்படுகிற, ஆதிக்க அரசியலைக் கட்டமைக்கிற பிரயத்தனங்களுக்கு முட்டுக் கொடுப்பதாகவே இப்படிப்பட்ட, ‘பொது இடத்தில் ஒரு கொடியும் இருக்கக் கூடாது’ என்ற மனநிலை.
முறைப்படுத்தும் முறை இதுவா?
கொடிகளின் உயரத்தை அதிகரிப்பதில் போட்டி நடக்கிறதா? ஆம் நடக்கிறது. நடந்துவிட்டுப் போகட்டுமே? எல்லா இடங்களிலும் அப்படி நடப்பதில்லை. எங்கோ சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக, ஏதோ கொடியின் உயரத்தில் தான் கட்சியின் அல்லது அமைப்பின் கௌரவம் இருக்கிறது என்று நினைத்து அப்படிச் செய்யக்கூடும். “ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்” எவ்வளவு உயரம் இருக்கலாம் என்று அறிவியல் பூர்வமாக வரையறுக்கட்டும். “அதன் உச்சியின் மேல் கொடி பறக்கட்டும். யாரும் எதிர்க்கப் போவதில்லை.
கட்சிகளோ, அமைப்புகளோ தங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் நிலையான கொடிக் கம்பம் நிறுவிக் கொள்ளலாம் என்றொரு சலுகையைத் தந்திருக்கிறது நீதிமன்றம்.
சொந்தமாக நிலம் வாங்க இயலாத சிறிய இயக்கங்கள் தங்களுடைய அலுவலகத்திற்கு உள்ளே மட்டும் கொடியேற்றிக் கொள்ளலாம் போல. அவர்கள் மக்களிடம் பொது இடத்தில் தங்களை நிலையாக அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது போல. நடப்பு அரசியல் நிலைமைகளில் மனம் கசந்து, மாற்றம் நிகழ்த்தும் மெய்யான கனவுகளோடு கட்சி தொடங்குகிற எல்லாரும் கோடிக் கணக்கில் பணம் வைத்திருக்கிற திரைப்பட நட்சத்திரங்களாக இருக்க வேண்டுமா என்ன? இது போதாதென்று, அந்தச் சொந்த இடங்களில் கொடி ஊன்றுவதற்கும் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டுமென ஆணையிடப்பட்டிருக்கிறது. நாட்டு நிர்வாகத்தை முற்றிலும் அதிகார வர்க்க ராச்சியமாக மாற்ற விரும்புகிறவர்களுக்கு வேண்டுமானால் இந்த ஆணை உவப்பாக இருக்கும்.
இந்த ஆணை சாதி, மத அமைப்புகளுக்கும் பொருந்தும். அதற்காக ஆணையை வரவேற்கலாமா? ஒரு வகையில் அவர்களும், நேரடியாகத் தேர்தலில் ஈடுபடாவிட்டாலும், மறைமுக அரசியல் செய்கிறவர்கள் தான். களச் செயல்பாடுகளால் மக்களைத் திரட்டுவது தான் அந்த அரசியலுக்குப் பலியாகாமல் மக்களை வென்றெடுக்கும் நேர்வழி. அந்த அமைப்புகளும் கொடியேற்ற முடியாது என்ற குறுக்கு வழியை சாதி–மதச் சார்பற்ற ஜனநாயக, இடதுசாரி இயக்கங்கள் நாட மாட்டார்கள். மேலும், அந்த அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் காரணம் காட்டி, எல்லா இயக்கங்களுக்குமான உரிமையை மறுப்பதில் போய்த் தான் இது முடியும்.
Also read
உலகமய, தாரளமய, தனியார்மயப் பொருளாதாரம் சமூகத்தில் அரசியலுக்கு எதிரான மனப் போக்கைக் கட்டமைக்க விரும்புகிறது. உண்மையில் அரசியலற்ற சமூக மனநிலையைக் கட்டுவதே சுரண்டல் அரசியலின் ஒரு பகுதி தான். கருத்து வெளிப்பாட்டு உரிமையை ஒடுக்குவது அதன் இன்னொரு பக்கம்.
அரசியல் இயக்கங்கள் தங்களின் கோட்பாடுகளைப் பொதுவில் வெளிப்படுத்தும் ஒரு செயல் முறை கொடிக் கம்பங்கள். இந்திய அரசமைப்பு சாசனத்தின் 19(1) சட்ட உரை உறுதிப்படுத்துகிற வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இடத்தில் இருக்கிற உயர்நீதிமன்றம், அதற்கு முரணாக இருக்கிற தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்து விலக்கிக் கொள்ள வேண்டும். தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். இடதுசாரி கட்சிகளிடமிருந்து எழுந்துள்ள எதிர்ப்புக் குரலை ஜனநாயகத்தில் பங்கேற்கும் அனைத்து இயக்கங்களும் எதிரொலிக்க வேண்டும்.
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
உச்சியின் மேலொரு தீர்ப்பு! – ஏற்கத் தக்கதல்ல!
அ. குமரேசன்
மூத்த பத்திரிகையாளர்
கட்டுரையாளர் அ , குமரேசன் கடந்த ஜனவரி மாதம் 27 – ஆம் தேதி , அதற்கு முன்பு 2019 – ஆம் வருடம் என நீதிபதிகளின் இரண்டு தீர்ப்புகளை சுட்டி காட்டி இருக்கிறார். ஆனால் என்னுடைய பார்வையில் இது போன்ற தீர்ப்புகள் பலவற்றை கடந்து போயிருக்கிறேன்.
தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள முக்கிய காரணம் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்பதுதான். நீதிபதியில் மட்டுமல்ல பொதுவாக புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றவுடன் இது போன்ற உத்தரவுகளை போடுவார்கள். உடனே கொடியை நட்டவர்கள் அப்புறப்படுத்துவார்கள். எப்போதெல்லாம் இந்த பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் நான் கவனித்த ஒன்று என்னவென்றால் , ஆளுங்கட்சி , மற்றும் அவர்களை சார்ந்த அமைப்புகள் , இயக்கங்கள் தங்கள் கொடிகளை அகற்றியதில்லை. ஆட்சியில் மாறும்போது எல்லாம் உத்தரவு வரும் அதில் எதிர்க்கட்சியினர் மட்டும் பாதிக்கப்படுவார்கள் .
கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை நான் வரவேற்கிறேன் அதே நேரத்தில் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே அடியாக கொடியே தேவையில்லை என்ற நிலைக்கு போய்விட முடியாது. அது கட்சி. , இயக்கம் , அமைப்புகள் , சங்கங்கள் ஆகியவற்றின் அடையாளம். கண்டிப்பாக வேண்டும்.