பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலின் மூல காரணம் யாது?

-சாவித்திரி கண்ணன்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.. கணக்கற்ற சம்பவங்கள் கதிகலங்க வைக்கின்றன! தொடரும் இந்தச் சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆற்றல் வெளியில் இருந்து கிடைக்காது. அது நமக்குள் தான் இருக்கிறது..!

# பள்ளிக் கூட நிர்வாகியே பால்மணம் மாறாத எட்டு வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் தருவது!

# ஒரு பள்ளியில் 13 வயது மாணவியை மூன்று ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது.

# 10 வயது சிறுமியை கொடூரமாக சீரழித்த கயவனை காப்பாற்ற பெண் இன்ஸ்பெக்டர் துணை போனது. மாநில அரசே அந்த சிறுமியை சீரழித்தவனை காப்பாற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்றது!

# அண்ணா பல்கலைக் கழகத்தில் அன்னியன் ஒருவன் தொடர்ந்து பல்லாண்டுகள் பாலியல் இம்சைகளை செய்து வந்திருப்பது

# ஓடும் ரயிலில் கர்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டது..

# பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணை ஆட்டோவில் கடத்தி மூவர் பாலியல் துன்புறுத்தல் செய்தது..

என நாளும், பொழுதும் பெண்கள் பாதிக்கப்படும் எண்ணற்ற செய்திகள் நெஞ்சைப் பிழிகின்றன.

கற்பழிப்பில் ஈடுபட்ட ஒவ்வொரு கயவனுமே பெண்ணான தாயின் கருவறையில் உருவானவன் தான்! பத்து மாதங்கள் ஒரு பெண்ணின் அங்கமாக இருந்த பிறகு தான், இந்த பூவுலகில் அவன் சிசுவாக பிறக்கிறான். அந்த தாயின் பராமரிப்பில் அவள் முளைப் பால் குடித்து தான் ஆளாகிறான். எனில், பெண்கள் மீது மரியாதையும், நன்றி உணர்வோடும் வளர வேண்டிய ஆண்கள் வக்கிரமானவர்களாக மாற்றம் காண்பது எவ்வாறு…?

ஒவ்வொரு ஆண் குழந்தையையும் வளர்க்கும் போதே பெண்ணை இயல்பானவளாக பார்க்கும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். பாலியல் இச்சை உணர்வு விகாரமாகி விடாமல் அந்த உணர்வை நெறிப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும். இதில் எத்தனை பெற்றோர் அக்கறை காட்டுகின்றனர்?

மாணவர்களை நெறிப்படுத்தி  வழி நடத்த வேண்டிய ஆசிரியர் சிலரது மனங்களும், கல்வி நிறுவனத்தில் அனைவரையும் தலைமை ஏற்று வழி நடத்தும் பள்ளித் தாளாளர் சிலரது எண்ணங்களும் தறிகெட்டுப் போகுமெனில்…, இந்த சமூகம் உச்சபட்ட சீரழிவுக்கு சென்றுள்ளதன் அடையாளம் தான் இது.

கல்வி நிறுவனங்களை நடத்துவோருக்கும், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பை நிர்பந்தமாக்க வேண்டும். அதில் தவறும் பட்சத்தில், சமரசமின்றி தண்டனையை விரைந்து உறுதிபடுத்த வேண்டும்.

ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் பின்பற்றுவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணுக்கு எதிரே நடமாடும் உதாரண புருஷனாக குடும்பத்திற்குள் தந்தையோ, மூத்த சகோதரனோ, தாய் மாமனோ இருக்கும் போது அங்கு தவறுகள் குறைகின்றன.

அதே போல குடும்பத்திற்கு வெளியே பின்பற்றத் தக்க ஆசிரியரோ, அருகாமையில் வசிக்கும் பெரியவர்களோ, சமூக வெளிச்சம் கொண்ட பிரபலங்களோ.. இருந்தாலும் தவறுககள் தவிர்க்கப்படுகின்றன. ஒரு தனி மனிதனின் உருவாக்கத்தில் சமூகத்தின் பங்களிப்பும் உள்ளது. ஒருவன் வளரும் போதே ‘இது தவறு, கண்டிப்பாக செய்யக் கூடாதது..’ என்ற தன்மையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

பொதுச் சமூகத்தின் மனசாட்சியை வழி நடத்தும் கலைகள், சினிமா, இலக்கியம் போன்றவற்றின் பங்களிப்பும் இந்த சமூகச் சீரழிவின் மீட்புக்கு துணை செய்ய வேண்டும். எதை இந்தச் சமூகம் நாளும், பொழுதும் பார்க்கிறதோ.. அதன் பாதிப்புகள் அளவிடற்கரியதாகும்.

ஒரு சமூகத்தில் அநீதி நடக்கிறதென்றால், அங்கு அதை தடுக்கும் முயற்சியோ, தட்டிக் கேட்கும் துணிச்சலோ நிச்சயம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அப்படி இருக்குமாயின் குற்றங்கள் குறையும். ” ஓடும் ரயிலில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு காமவெறியனோடு போராடி சத்தமிட்ட போது, மற்றவர்கள் அங்கு என்ன செய்தார்கள்?” என்ற கேள்விக்கு விடை இல்லை. இந்த அநீதியை தட்டிக் கேட்காமல் அங்கு இருந்தவர்கள் நடை பிணத்திற்கு சமமானவர்களாகும்.

காவல்துறையை மக்களை காக்கும் துறையாக்குங்கள்

அடுத்ததாக காவல் துறையின் நிலை இங்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. காவல்துறை இந்த நிலைக்கு சீரழிந்ததில் அதை வழி நடத்தும் அரசியல் தலைமைகள் முக்கிய காரணமாகும். என்றைக்கு ஆட்சியாளர்கள், ”காவல்துறை உண்மைக்கும், கடமைக்கும், நேர்மைக்கும் விசுவாசமாக நடந்தால் போதும். அதையே ஆட்சித் தலைமைக்கான விசுவாசமாக நாங்கள் கொண்டாடுவோம்” என்று சொல்ல முடிகிறதோ, அன்றைக்கு காவல்துறை சரியாகிவிடும்.

ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ’காவலர்கள் தங்களுக்கு விசுவாசம் காட்டினால் போதும், காவலர்கள் என்ன செய்தாலும் நாங்கள் காப்பாற்றத் தயாராக இருக்கிறோம்’ என்ற அணுகுமுறையில் இருந்து விலகி,  பொது நன்மைக்கானவர்களாக மாறும் போது, சமூகத்தில் வியக்கதக்க மாறுதல்கள் ஏற்படும்.

இங்கு ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு, மேலதிகாரிகளின் தவறுகளுக்கு பொறுப்பேற்று வேலை செய்யதக்க நிலையில் தான் காவலர்கள் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்! இதைக் கடந்து சிந்திக்கவோ, செயல்படவோ முடியாதவர்களாக அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த ஆட்சி அமைந்தது முதல் நாம் தொடர்ந்து பார்ப்பது என்னவென்றால், ஒவ்வொரு விவகாரத்திலும் குற்றவாளியை பாதுகாக்கும் தீர்மானத்தை ஆட்சியாளர்கள் முன் கூட்டியே எடுத்து விடுகிறார்கள். அதன் பிறகு காவல்துறையின் பங்கு என்பது குற்ற புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டறிய முயலாமல் பாதுகாப்பது ஒன்றே என்றாகிவிடுகிறது. குற்றவாளியை பாதுகாக்க மக்களை அடக்கவும், ஒடுக்கவுமாக காவல்துறையின் செயல்பாடுகள் மாறி விடுகிறது. இது தான் கசப்பான இன்றைய யதார்த்தம்! இதற்கு ஏராளமான சம்பவங்களை பட்டியல் இட முடியும் என்றாலும், ஒரு சிலவற்றை பார்ப்போம்;

இதன் விளைவாக காவல்துறையின் ‘லாக் அப்’ மரணங்கள், ‘என்கெளண்டர்கள்’ ஆகியவற்றை கண்டும் காணாமல் போக வேண்டிய கட்டாயம் ஆட்சித் தலைமைக்கு உருவாகி விடுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியின் மாணவி ஸ்ரீமதி கற்பழித்து கொலை செய்யப்பட்டது சந்தேகமற்ற உண்மை. அந்த உண்மையை பொய்யாக்க அரசு நிர்வாகமும், காவல்துறையும்  எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களே மக்களின் கொந்தளிப்பு.

அந்தக் கொந்தளிப்பை திசைமாற்றும் சூழ்ச்சியாக அந்தப் பள்ளி நிர்வாகமே தன் பள்ளியை சூறையாடி தீ வைக்க சதி செய்கிறது. அந்த சதிக்கு அரசு நிர்வாகம் துணை புரிந்து 916 பேர் மீது வழக்கு பதிகிறது! கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெரும் நிர்வாக செயல்பாடுகளின் விளைவாய் 41,250 பக்க குற்ற அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கையே நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. ஆனால், உண்மையான குற்றவாளியோ, சர்வ சுதந்திரமாக நடமாடுகிறார்.

வேங்கை வயலில் மலம் கலந்த விவகாரத்திலும் மிக எளிமையாக உண்மை குற்றவாளி அடையாளம் காணப்பட்டும், அதை வெளிப்படுத்தும் துணிவின்றி, சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் அப்பாவிகளை தண்டிக்க தன் முழு அதிகார பலத்தையும் செலுத்துகிறது.

அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற உச்ச நீதிமன்றம் சென்று அவமானப்பட்டது அரசு.

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை பாதுகாக்க ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. எனினும், குற்றவாளியோடு நெருங்கிய சம்பந்தமுள்ள யாரையுமே காவல் துறை கைது செய்யவில்லை.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாதது என்பது மட்டுமல்ல, ஆட்சி மீதுள்ள நம்பகத் தன்மையை முற்றிலும் சிதைத்து விடும். இந்த இழப்பை எந்த விலை கொடுத்தும் சரி செய்ய முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

சட்டங்களை கடுமையாக்குவது அல்ல, சட்டங்களை மனசாட்சியுடன், மக்கள் நலன் சார்ந்து  அமல்படுத்துவதே தீர்வாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time