அதானி, அம்பானி ஆதிக்கத்தில் விவசாயம் போனது எப்படி?

-சாவித்திரி கண்ணன்

சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்திய விவசாயத்தில் தொழிற்சாலைகளோ, தொழில் அதிபர்களோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், இன்று தொழிற்சாலைகள் சாராமல் விவசாயமே இல்லை. அதுவும் அதானி, அம்பானி இல்லாமல் இன்றைய விவசாயமே இல்லை. இது போன்ற நிலை எப்படி உருவானது?

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஆயுத நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த அணு ஆயுதங்களை விவசாயத்திற்கான ரசாயன உரமாக மாற்றலாம் என்ற தொழில் நுட்பத்தை காண்கின்றனர். அதற்குப் பிறகு தான் மேற்கத்திய நிறுவனங்கள் கூலிப் படை விஞ்ஞானிகளை களத்தில் இறக்கி அதிக விளைச்சலுக்கு ரசாயன உரத்தை பசுமை புரட்சி என்ற பெயரில் நிர்பந்திக்கின்றனர்.

இதையொட்டி இந்தியாவின் உணவு பற்றாக்குறைக்கு ஒரு அவசரத் தீர்வாக பார்க்கப்பட்ட இந்த ஆபத்தான ரசாயன உரங்கள் பெரு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை நிரந்தரப்படுத்திக் கொள்ள செய்த லாபிகளின் மூலம் நிலையான ஆபத்தாக நின்று நிலைத்துவிட்டது.

1960களில் ரசாயன உரங்கள் பயன்பாடு விவசாயிகளிடையே ஒரு விரும்பத்தகாத நிகழ்வாக வெறுத்து ஒதுக்கப்பட்டது. ஆனால், வங்கிகள் மூலம் வலிந்து கடன் தரப்பட்டு இரசாயன உரங்களை வாங்க நிர்ணயித்தது அரசு. அன்றும், இன்றும் என்றும் பெரு முதலாளிகளுக்கு தொண்டு செய்வதே இந்திய ஆட்சியாளர்களின் இயல்பாக உள்ளது.

பிற்பாடு இந்த இரசாயன உரத் தொழிற்சாலைகள் இந்தியாவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அத்தகைய தொழிற்சாலைகள் உருவான பிறகு இந்திய அரசால் போடப்படும் எல்லா விவசாய பட்ஜெட்களிலும் அவர்கள் கோடிக் கோடியாக பலன் பெற விவசாயிகளின் பெயரால் நிதி ஒதுக்கப்பட்டது.

அபார லாபத்தை அள்ளித் தரும் இந்த உர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அமோகமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி தந்து, இது விவசாயிகளுக்கு மானிய விலையில் இரசாயன உரங்கள் விற்பனை செய்வதற்காக தரப்படுவதாக அரசு வியாக்கியானம் செய்தது. இதன் மூலம் இந்த நிறுவனங்களிடம் பல கோடிகள் தேர்தல் நிதி பெற்றுக் கொண்டன அரசியல் கட்சிகள்!

இதனால் ரசாயன உரப்பயன்பாடு என்ற வலையில் நிரந்தரமாக விழுந்தனர் விவசாயிகள். இதை சாக்கிட்டு அன்னிய நாடுகளில் இருந்து பல லட்சம் டன்கள் ரசாயன உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வரும் சூழல் தோன்றிவிட்டது. நமது விவசாய வருமானத்தின் பெரும்பகுதியை நாம் அன்னிய நாட்டு உர நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொண்டுள்ளோம் என்பது மட்டுமின்றி, அன்னிய நாட்டு உரங்கள் இல்லாமல் இந்திய விவசாயத்தை நினைத்தே பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

இப்படி இத்தகைய பெரு நிறுவனங்கள் கொழுப்பதற்கு ஒதுக்கப்பட்ட பல்லாயிரம் கோடிகளை விவசாயிகளுக்கே நீங்களே உரம் தயாரித்துக் கொள்ளுங்கள் என்று தந்திருந்தால் அந்த நிதியைக் கொண்டு பல லட்சம் மாடுகளை வளர்த்து சாணம் எடுத்து மண்ணை வளப்படுத்தி இருப்பார்கள்! உரத்திற்கு தேவைப்படும் இழை, தழைகளை வளர்த்து அவற்றையும் உரமாக்கி, கால் நடைகளுக்கு உணவுமாக்கி உரங்களை பெருக்கி பயிர்களை செழிக்க செய்திருப்பார்கள் என்ப்பதோடு இந்த பூமியை வளப்படுத்தி இருப்பார்கள்!

ஆனால், இன்றைக்கு ரசாயன உரப் பயன்பாட்டால் இந்திய விளை நிலங்களில் பூமித் தாயின் வயிற்றுக்கு நாம் தொடர்ந்து செய்த அநீதிகளின் விளைவால் மூன்றில் ஒரு பங்கு விளை நிலங்கள் கெட்டிதட்டி போய் மலடாகிவிட்டன. பயன்படுத்த முடியாத பாலை நிலங்களாகிவிட்டன. அதைப் போலவே இந்த ரசாயன உரங்களில் உருவான உணவு பொருட்களை உட்கொண்ட மனிதர்கள் நிரந்தர வியாதிஸ்தர்களாகிவிட்டனர். இதன் விளைவாக மெடிக்கல் இண்டஸ்டிரி இமாலய வளர்ச்சி கண்டு மக்களை மருத்துவத்தை சார்ந்து வாழும் ஒட்டுண்ணிகளாக மாற்றிவிட்டன.

இவை ஒருபுறமிருக்க, இத்தகைய தாக்குதல்களை கடந்து விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை சுரண்டுவதற்காக விவசாயப் பொருட்களை ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்து விற்கும் பெரு வணிகத்தை கையில் எடுக்கும் நிறுவனங்கள் அம்பானி, அதானி ஆகியோரை வாழ வைத்து வளப்படுத்தும் பெரும் பொறுப்பை தற்போதுள்ள அரசாங்கம் தலை மேல் போட்டுக் கொண்டு கடந்த பல்லாண்டுகளாக பட்ஜெட் போட்டு வருகின்றன!

விவசாயிகளிடம் மொத்தமாக அடிமாட்டு விலைக்கு பேசி உணவு பொருட்களை அவர்கள் கொள் முதல் செய்வதற்கு தோதாகவே முக்கிய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட நிர்ணயிக்க மறுக்கின்றன நமது அரசுகள்!

போராடும் விவசாயிகள்

அதே போல அவர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து விளை பொருட்களை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்குகளை உருவாக்கி செயற்கை விலை ஏற்றத்தை ஏற்படுத்தி உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் வலிந்து தரப்படுகின்றன.

இதனால், தற்போதுள்ள இந்திய அரசாங்கத்தை பொறுத்த அளவில் இந்திய விவசாயிகள் என்போர் அதானி, அம்பானியின் சொத்துக்களை விருத்தி செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணத்திலேயே திட்டங்களை தீட்டுகிறார்கள்!

1990களில் அதானி குழுமம் சமையல் எண்ணெய் வணிகத்தில் நுழைந்தது. இன்று நாட்டில் மிக அதிகம் விற்பனையாகும் பார்ச்சூன் சமையல் எண்ணெயை அதானி-வில்மர் நிறுவனம் தயாரிக்கிறது.இதற்காக லட்சக்கணக்கான டன்கள் நிலக்கடலையும், சூரியாகாந்தியையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறது இந்த நிறுவனம்.

ஃபார்ச்சூன் ஆயில் தவிர அதானி குழுமம், விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து கோதுமை மாவு, அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை போன்ற டஜன் கணக்கான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை பண்ணுகிறது.

2005 ஆம் ஆண்டில் அதானி குழுமம், இந்திய உணவுக் கழகமே அதானி குழுமத்துடன் கைகோர்த்து நாட்டில்  மிக பிரம்மாண்ட தானிய சேமிப்பு கிடங்குகளை(silos)அமைத்தது. இவற்றில் தானியங்கள் பல லட்சம் டன்கள் அளவிற்கு சேமிக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் 20 ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ் அதானி குழுமம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிலோஸ்  எனப்படும் சேமிப்பு கிடங்குகளை கட்டியது. இந்தியா முழுவதும் இவ்விதம் உருவான சிலோ யூனிட்களில் இருந்து விநியோக மையங்களுக்கு உணவு தானியங்களை கொண்டு செல்ல வசதியாக தனியார் ரயில் பாதைகளையும் அதானி குழுமமத்திற்காக அரசாங்கம் உருவாக்கி தந்ததோடு, தன் வசமுள்ள தானியங்களையும் அதானியின் கிடங்குகளுக்கு தருவதன் மூலம் அவரது வியாபார விருத்திக்கு துணை நின்றது. அந்த வகையில் இந்திய உணவு கழகம் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் அரசின் உணவு தானியங்களை அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், தனது சிலோக்களில் சேமிக்கிறது.

தற்போதைய நிலையில் இந்தியா முழுமையும் அதானி வேளாண் விளை பொருட்களுக்கான ஏராளமான சேமிப்பு கிடங்குகளை வட மாநிலங்கள் முழுக்க ஏற்படுத்திவிட்டார். இவை ஒவ்வொன்றுமே பிரம்மாண்டமானவையே! இந்திய அரசிடமே இவ்வித சேமிப்பு கிடங்குகள் கிடையாது.

இதே போல அம்பானியின் ரிலையன்ஸ் பிரெஸ் நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் குளிரூட்டப்பட்ட காய்கறி கடைகளும், மளிகை கடைகளும் வந்துவிட்டன. ரிலையன்ஸ்சின் ஜியோமார்ட் மூலம் பல லட்சம் வீடுகளுக்கே இவை நேரடியாக டெலிவரியாகின்றன.

இந்திய அரசு 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுமே இந்திய விவசாயிகளை அதானி மற்றும் அம்பானிகளுக்கு தாரை வார்க்கும் முயற்சி தான்1 ஆகவே தான் அவற்றை எதிர்த்து தலை நகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராட்டம் நடத்தினர். அதனால் அரசு தன்னை மாற்றிக் கொண்டதா என்றால், அது தான் இல்லை. வேளாண் சட்டங்களை உருவாக்கினால் தானே பிரச்சினை என்று அதை உருவாக்காமலே அமல்படுத்தும் வித்தையைத் தான் தற்போது செய்து கொண்டுள்ளது. ஆக, இனி கார்ப்பரேட்கள் மட்டுமே வாழ முடியும். விவசாயிகள் அவர்களுக்கு தாழ் பணிந்து பிழைத்துக் கொள்ளலாம் என்பதே இன்றைய யாதர்த்தமாக மாறி வருகிறது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time