காடுகளை விழுங்கும் கார்பரேட்கள்! காவு தரப்படும் பழங்குடிகள்!

-ச.அருணாசலம்

‘மாவோஸ்டுகள் சுட்டுக் கொலை’ என அடுத்தடுத்து செய்திகள்! வனங்களை வளைத்து போடும் கார்ப்பரேட்களுக்காக தாங்கள் வாழுகின்ற நிலத்தின் உரிமைக்காக போராடும் பழங்குடிகளை குருவியை சுட்டுக் கொல்வதை போல கொன்று விட்டு, ”மவோயிஸ்ட் தீவிரவாதிகளை கொன்றோம்” என எத்தனை ஆண்டுகள் கதை கட்டுவீர்கள்…?  

நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (9/02/2025) சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி வனப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து அங்கிருந்த 31 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றனர் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி. சுந்தர்ராஜ்அறிவித்துள்ளார்.

12 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் மாவோயிஸ்ட் என்பதாக மோதலில் மரணமடைந்தாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு காவலர்களும் இதில் இதில் சுட்டுக் கொள்ளப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

2025 ஜனவரியில் இதே போன்று மற்றொரு என்கவுண்டரில் பிஜப்பூரில் (16/01/2025) 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2025 ஜனவரி 20-ல் கரியபண்ட் என்ற இடத்தில், மாவோயிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான ஜெயராம் என்ற சலபதி உட்பட 14 பேரை காவலர்கள் சுட்டுக்  கொன்றனர்.

இந்த ஆண்டு தொடங்கி 40 நாள்களுக்குள் 60க்கும் மேற்பட்ட பழங்குடிகள் மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக் கொல்லப்ப்பட்ட பழங்குடியினர் சடலங்கள்!

2024-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் கேங்கர் என்ற இடத்தில் நடந்த என்கவுண்டரில் சுமார் 29 மாவோயிஸ்டுகள் என்று அடையாளப்படுத்தி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2024 அக்டோபரில், அபுஜ்மார் என்ற இடத்தில் நடந்த என்கவுண்டர் படுகொலையில் சுமார் 38 பேர் மாவோயிஸ்டுகள் என்ற பெயரால் பலியாயினர்.

2024 நவம்பரில் 5 பேர் மகாராஷ்டிரா எல்லைப் பகுதியான கட்சிரோலி பகுதியில் சுட்டு படுகொலை.

2024 டிசம்பரில் சத்தீஸ்கர் மாநில எல்லையை ஒட்டிய கட்சிரோலி பகுதியில்(மகாராஷ்டிரா) ஆறு மணி நேர “துப்பாக்கி சண்டையில்” 32 பேர் கொல்லப்பட்டனர். 23 பேர் சரணடைந்தனர் .

மாதந் தவறாமல் இத்தகைய “என்கவுண்டர் படுகொலைகள்” சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், தெலிங்கானா, ஒடிசா எல்லைப் பகுதிகளில் , தண்டகாருண்யா என்ற வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மகாராஷ்டிரா,சத்தீஸ்கர்,தெலிங்கானா ஒடிசா என நான்கைந்து மாநிலங்களை ஒட்டிய பகுதியாகும்.

இது தவிர , ஜார்க்கண்ட்,பீகார், மேற்கு வங்கம் என மூன்று மாநில எல்லைப் பகுதிகளிலும் கனிம வளங்களும், ஆதிவாசிகளும் நிறைந்த பகுதியான இங்கும் மாவோயிச செல்வாக்கும் என்கவுண்டர் படு கொலைகளும் நிரம்பவே உள்ளன. இவை அனைத்தும் ஆளுவோரால் சிவந்த தாழ்வாரம் ( Red Corridor) அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு என்கவுண்டருக்கு பிறகும் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த ஆயுதங்கள் என போட்டோக்களையும் , காவலர் அளிக்கும் பட்டியலையும் ஊடகங்கள் கேள்வி எதுவும் கேட்காமல் வெளியிடுகின்றன!

கோண்ட் இன ஆதி வாசிகள் நிறைந்த இந்த வனப்பகுதி, மிக விலை உயர்ந்த அரிதான தாதுப் பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 2005 வரை இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் நாகரீகத்தின் அடையாளங்களையோ, வளர்ச்சியையோ கண்டிராத இந்த மக்கள் நம்பியிருந்தது காடுகளையும், பழமையான விவசாயத்தையும் தான்.

காடுகளை ஆக்கிரமித்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள்

 

கனிம வளங்கள் -பாக்சைட், நிலக்கரி, இரும்பு தாது, மாங்கனீஸ் – போன்ற அரிய வளங்களும், நீர்மின் உற்பத்திக்கு ஏற்ற வளங்களும் கொண்ட பகுதியாக இப்பகுதி இருந்ததால் சுரங்க முதலாளிகளையும், கொழுத்த பண முதலைகளையும் இப்பகுதி கவர்ந்தது. இந்திய அரசோ இத்தகைய தனியார் முதலாளிகளுக்கு உரிமைகளும், சலுகைகளும் வழங்கி வளர்ச்சி என்ற பெயரில் இந்த ஆதிவாசி மக்களை, சந்தால் மற்றும் கோண்ட் இன ஆதிவாசி மக்களின் நில மற்றும் வன உரிமைகளை பறித்து விரட்ட தொடங்கியது.

1991-ல் தொடங்கிய தாராள மயம் தனியார் மயத்தில் ஆதிவாசிகளின் வன உரிமைகள் (Forest rights) நில உரிமைகள் (land rights) பறி போயின.

அரசமைப்பு சட்டம் வழங்கிய ஆதிவாசிகளின் உரிமைகள், வனத்தில் வசிப்போரின் உரிமைகள், நில உரிமைகள் ஆகியவைகள் மறுக்கப்பட்டு, முதலாளிகளுக்கு சுரங்கந் தோண்ட நில உரிமைகளும், வளர்ச்சியின் பெயரால் காடுகளை அழித்து, ஆதிவாசிகளின் வன உரிமைகளை மறுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு சுரங்கங்களை அமைக்க உரிமங்கள் வழங்கப்பட்டன.

போராடும் பழங்குடிகள்!

எவ்வித முன்னேற்றமும் இன்றி காடுகளை நம்பி வாழ்ந்து வந்த ஆதிவாசிகளும், பட்டியலினத்து மக்களும் நில உரிமைகளையும் வன உரிமைகளையும் இழந்து தவிக்கலாயினர். புலம் பெயர வற்புறுத்தப்பட்ட  நிலையில், அவர்களின் நலனுக்காக போராடுபவர்களாக மாவோயிஸ்டுகள் அப்பகுதிக்கு வந்தனர், மக்களை திரட்டினர்.

சுரங்க முதலாளிகளுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஆதிவாசிகளுக்கும் இடையே உள்ள பிணக்குகள் மோதலாக வெடித்தன, வன்முறைகள் இரு பக்கத்திலும் வெடித்தன!

இந்த சமூக பிணக்கை சரி செய்ய அல்லது சுமூகமாக தீர்த்து வைக்க “ஜனநாயக கட்சிகள்” முன் வராததால், அரசோ சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் காவல் துறையையும், உரிமம் பெற்றவர்களான சுரங்க முதலாளிகளையும் களமிறக்கியது.

தங்களது குரலை செவி மடுக்க நக்சலைட்டுகளை தவிர யாரும் முன் வராததால் அங்கு மாவோயிஸ்டுகளின் குரல் உயர்ந்தது, செல்வாக்கு வளர்ந்தது, கூடவே வன்முறையும் பெருகியது!

இந்த தொடர் வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகளா அல்லது ஆதிவாசிகளா?

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆயுத மேந்தியவர்களா? சண்டையிட்டவர்களா? அவர்கள் குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா அல்லது அனுதாபிகளா? போன்ற பல கேள்விகளுக்கு யாராலும் தெளிவாக பதில் கூற முடியாது!

வன்முறைக்கு சென்றவர்களை சுட்டுக் கொல்வது என்றால், காவலர்கள் ‘சல்வா ஜுடும்’ ‘அமைப்பினர் அனைவரையும் என்கவுண்டர் செய்தனரா? அல்லது அவர்களுக்கு ஆயதங்களை வழங்கி பாதுகாப்பும், பாராட்டும் அளித்தனரா ?

சல்வா ஜுடும் அமைப்பினர் வன்முறையாளர்கள் என உச்சநீதி மன்றம் 2011லேயே தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு ஆயுதங்களை அரசு வழங்க கூடாது என கூறியதன் பொருளும் பின்னணியும் என்ன?

ஒருவர் குற்றவாளி என்று தீர்மானிப்பவர்கள் யார்? அவர்களை சுட்டுக் கொல்வதை அனுமதிப்பது யார்?

சத்தீஸ்கர் மாநிலத்தில் Moolvasi Bacho Munch ( ஆதிவாசிகள் நல மன்றம்) என்ற அமைப்பு ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக உள்ளது. ஆனால் இவ்வமைப்பு சார்ந்தவர்கள் கூட்டம் நடத்தினாலோ ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலோ CSPCA என்ற சத்தீஸ்கர் ஸ்பெஷல் ப்ப்ளிக் செக்யூரிட்டி ஆக்ட் என்ற சட்டம் பாய்ந்து விடும்.

அகிம்சை வழியில் போரடும் ஆதிவாசிகள்!

இச்சட்டம் உபா UAPA சட்டத்தின் மறு பிரதியாகும். இதில் யாரையும் காவல் துறை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து சிறையிலடைக்கலாம்.

கேள்வி கேட்பவர்களை, வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என சேர்க்கலாம்!

பொது இடங்களிலோ தனியார் இடங்களிலோ காவலர்கள்- போலீஸ், சி ஆர பி எஃப் , சிறப்பு காவல் படை , கிறீன் ஹவுண்ட்ஸ் எனப்படும் அதிரடி படையினர் – செக்யூரிட்டி முகாம் அமைப்பதை எதிர்க்க மக்களை தூண்டினார்கள் என்ற அடிப்படையிலும் யாரை வேண்டுமானாலும் காவல்துறை கைது செய்யலாம் என்ற நிலை அங்குள்ளது. இத்தகைய நெருக்கடிகளை அன்றாடம் ஆதிவாசிகள் எதிர்கொள்கின்றனர்.

அரசமைப்பு சட்டம் ஐந்தாவது பட்டியலில் (Fifth Schedule) ஆதிவாசிகளுக்கும் , பட்டியலினத்து மக்களுக்கும் வழங்கியுள்ள உரிமைகளை கிராம சபைகளுக்கு கொடுத்துள்ள உரிமைகளை வரையறைக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கியுள்ள சிறப்பு பஞ்சாயத்து உரிமைகளை(Panchayat Extension to Scheduled Areas Act PESA-1996) 2006ல் இயற்றப்பட்ட வனத்தில் வாழுவோரின் அங்கீகார சட்டம் (Forest Dweller Recognition Act 2006) வழங்கும் உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்படுவதை எதிர்த்து குரல் எழுப்புவதை அரசும் , முதலாளிகளும் விரும்புவதில்லை.

ஏனெனில், அவை ‘வளர்ச்சிக்கு” எதிரானவை என்கிறார்கள். கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தகுந்த சன்மானமும் மறுவாழ்வு உதவிகளை உத்திரவாதப்படுத்தும் LAAR Act போன்ற சட்டங்கள் இந்தப்பகுதிகளில் காணாமல் போய்விடுகிறது.

10,000 பழங்குடிகள் மீது தேசத் துரோக வழக்கு- ஜார்கண்டில்!

இதை கேள்வி கேட்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் CSPA மற்றும் UAPA சட்டங்களில் கைது செய்ய முடியுமென்றால், யார் குற்றவாளி, யார் தீவிரவாதி, யார் தீர்மானிப்பது?

2012 முதல் ட்ரோன்களின் மூலம் ஆதிவாசிகளின் மீது குண்டுவீசி தாக்குவது இந்தப் பகுதிகளில் தொடர்கிறது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இத்தகைய சூழலில் பரந்துபட்ட இந்தியாவில் சத்தீஸ்கரில் வனப்பகுதிகளில் துப்பாக்கி சண்டை, தீவிரவாதிகள் – மாவோயிஸ்டுகள்- படுகொலை என்ற செய்தி யாருக்கும் எந்த உறுத்தலையும் தரவில்லை!

மாதந்தோறும் இவ்வாறு நிகழ்வது யாருக்கு பெருமை?

உள்துறை அமைச்சர் அமீத் ஷா , மார்ச் 2026 க்குள் மாவோயிஸ்டுகளை முற்றிலுமாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒழித்துவிடும் என சமீபத்தில் அறிவித்துள்ளார்.

மானுட படுகொலையும், மரங்களை பாதுகாக்கும் போராட்டமும்

நக்சலைட் பிரச்சினை உண்மையில் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரானதா அல்லது அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் நில அபகரிப்புக்கும் எதிரான ஆதிவாசிகளின் குமுறலா?

சமூகம் சார்ந்த மக்களின் பிரச்சினை இல்லையா இது?

கார்ப்பரேட் சக்திகளின் சுரண்டலை எதிர்க்கும் ஆதிவாசிகளின் கொந்தளிப்பை “இடது சாரி தீவிரவாதம் “ (Left Wing Extremism) என  அரசின் காவல் அமைப்புகள் கூறுகின்றன, அதிகாரத்தில் இருக்கும் பாசிச சக்திகள் கொன்றொழிப்பதை தூண்டுகின்றன!

மக்களை மதரீதியாக பிரித்து, சமூக மோதலை தூண்டும் பிற்போக்கு சக்திகள் நாட்டை முன்னேற்றத்திற்கு இட்டுச்  செல்பவர்களா?

மாவோயிஸ்டுகளை முறியடிப்பது என்றால், மாவோயிச சித்தாந்தங்களில் பற்று கொண்டாரை அந்த சிந்தனைப் போக்கிலிருந்து மீட்டெடுப்பதா? அல்லது மாவோயிசம் பேசுபவர்களை கொன்றொழிப்பதா?

இதைபற்றி எந்த கட்சிக்கும், ஊடகத்திற்கும் ஏன் அக்கறையில்லை!

ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time