இந்திய உயர் நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகள் 62 லட்சங்கள்! இதை விரைந்து தீர்க்க தற்போது நிலவும் நீதிபதி பணியின் காலி இடங்களை நிரப்புவதற்கு மாறாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளை அழைத்து மீண்டும் பதவி தருவது என்பது சரியான அணுகுமுறையாகுமா? இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என அலசுகிறார் ஹரிபரந்தாமன்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அமர்வு ஜனவரி- 30, 2025 அன்று அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி சூரிய காந்த் ஆகிய இருவரும் மற்ற நீதிபதிகள். இருவரும் அடுத்தடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக வர இருப்பவர்கள்.
இந்த தீர்ப்பு மொத்தமே ஒன்றரை பக்கம் தான். உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் அடாக் (Adhoc) நீதிபதிகளாக நியமிப்பது சம்பந்தமான தீர்ப்பே இது.
அடாக் நீதிபதிகள், நிரந்தர உயர்நீதிமன்ற நீதிபதிகள் பெறும் சம்பளம் மற்றும் அனைத்து நிதி சம்பந்தமான பயன்களையும் பெறுவர். அதாவது, அடாக் பேராசிரியர்கள்( கௌரவ பேராசிரியர்கள்) மற்றும் அடாக் ஊழியர்கள் போன்று மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளும் சுரண்டலுக்கு உள்ளாவதில்லை. நீதிபதிகளின் இன்றைய ஓய்வு வயது உயர் நீதிமன்றங்களில் 62, உச்ச நீதிமன்றத்திலோ 65.
இந்த தீர்ப்பை வழங்குகையில், இந்திய உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 62 லட்சம் வழக்குகளுக்கு மேல் நிலுவையில் இருப்பதாக இந்த தீர்ப்பு கூறுகிறது. 18,20,000 குற்றவியல் வழக்குகளும் , 44,00,000 சிவில் வழக்குகளும் நிறுவையில் இருக்கிறதாம்.
எனவே, நிலுவை வழக்குகளை கையாள்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகளை அடாக்(Adhoc) நீதிபதிகளாக எந்த நிபந்தனையும் இன்றி, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 224A-வின் கீழ் நியமிக்க இந்த தீர்ப்பு வழி வகுக்கிறது. இது சம்பந்தமான பரிந்துரையை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்ச நீதிமன்ற கொலேஜியத்திற்கு அளிப்பார். பின்னர் இந்த நியமனங்கள் பிரதமர் மற்றும் சட்ட அமைச்சரின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவரின் மூலம் நடைபெறும்.
இந்த தீர்ப்பில், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஏப்ரல்- 20, 2021 ஆம் தேதிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய தலைமை நீதிபதி போப்டே தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அமர்வு அந்த தீர்ப்பை வழங்கி இருந்தது.
20-4-2021 தேடிய தீர்ப்பு மிக விரிவானது. அரசமைப்புச் சட்டம் பிரிவு 224 A-வின் கீழ் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை அடாக் நீதிபதிகளாக நியமிப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தது அந்த தீர்ப்பு.
அந்த தீர்ப்பை வழங்கும் போது மொத்தம் நிலுவையில் உள்ள வழக்குகள் 57,51,312 என்றும், இதில் 54% வழக்குகள் 5 உயர் நீதிமன்றங்களில்— அலகாபாத் ,பஞ்சாப் மற்றும் அரியானா ,சென்னை, மும்பை ,ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களில்— நிலுவையில் இருப்பதாக சுட்டிக் காண்பிக்கிறது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 5,80,000 வழக்குகள் நிலுவையில் இருப்பதை கூறுகிறது.
இந்திய உயர்நீதிமன்றங்களில்,
# 30 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் 91,913,
# 20 முதல் 30 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகள் 1,51,433
# 10 முதல் 20 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகள் 10,06,306
இவ்வாறாக வருஷ வாரியாக நிலுவை விவரங்களை கூறுகிறது.
பொதுவாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் போது ஏற்படும் பணியிடங்களை உடனடியாக நிரப்பாதது, இந்த நிலுவைக்கான ஒரு முக்கியமான காரணம் என்கிறது இந்த தீர்ப்பு. அதாவது, பல உயர் நீதிமன்றங்களில் 40% -க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் 7% -தான் நிரப்பப்படாமல் இருந்தும், அந்த நீதிமன்றத்திலும் மேற்சொன்னபடி லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் கூறுகிறது.
கொலேஜியும் பரிந்துரைத்தாலும், ஒன்றிய அரசுக்கு பிடிக்காத நபர்களாக இருந்தால், அவர்களை ஒன்றிய அரசு உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதே இல்லை. குறிப்பாக சிறுபான்மை பிரிவினரில் இருந்து பரிந்துரைக்கப்படும் நபர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதுவே 40% உயர்நீதிமன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு பிரதான காரணம்.
பல உயர் நீதிமன்றங்களில் குறிப்பாக ஒன்றிய அரசு உடனடியாக நியமனம் செய்யாததை ஒட்டி, மிகப்பெரிய அளவில் காலிப் பணியிடங்கள் இருப்பதால் ,ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி< இந்த அடாக் நியமனங்களை செய்து கொள்ளலாம் என்று பல நிபந்தனைகளை விதித்து இருந்தது ஏப்ரல்- 20, 2021 தேதிய தீர்ப்பு.
நிலுவையை தீர்ப்பதற்காக அடாக் நியமனம் செய்வது சரியில்லை என்பதை சுட்டிக் காண்பிக்கும் இந்த தீர்ப்பு , வேறு வழியில்லாத நிலையில் ஒரு தற்காலிக ஏற்பாடாக சில நிபந்தனைகளுடன் இதை செய்வதாக கூறியது.
இதற்கு முன்னர் மொத்தமே 3 நீதிபதிகள் தான் மிகக் குறைந்த ஆண்டுகளுக்கு அடாக் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1972 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சூரஜ் பான் நியமிக்கப்பட்டதையும்,
1982 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால் நியமிக்கப்பட்டதையும்,
2007 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீ வச்சவா நியமிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டுகிறது.
எனவே, அரசமைப்புச் சட்டப் பிரிவு 224A ஒரு விதி விலக்காகத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கூறுகிறது இந்த தீர்ப்பு.
முந்தைய தீர்ப்பின் முக்கியமான நிபந்தனை, 80% உயர் நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பப்பட்ட உயர்நீதிமன்றங்களில் தான் இந்த அடாக் நியமனங்கள் செய்ய முடியும் என்பது. அதாவது, நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக அடாக் முறையில் நியமனம் செய்வது தடுக்கப்பட வேண்டும் என்ற முறையில் இந்த நிபந்தனையை விதித்தது. ஆனால், இந்த நிபந்தனையை நிறுத்தி வைத்துள்ளது தற்போதைய தீர்ப்பு.
அடாக் முறையில் நடக்கும் நியமனங்களை தொடர்ந்து கண்காணிக்கும் முறையில் அப்போதைக்கு அப்போது உரிய உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் வழங்கும் என்ற நிபந்தனையையும் நிறுத்தி வைத்துள்ளது தற்போதைய தீர்ப்பு.
ஜனவரி- 30 -2025 இல் வழங்கப்பட்ட தற்போதைய தீர்ப்பில், sanctioned strength-இல் 10% நீதிபதிகளை அடாக் நீதிபதிகளாக நியமித்துக் கொள்ளலாம் என்கிறது.
26 -1 -1950 முதல் அமலுக்கு வந்த அரசமைப்புச் சட்டத்தில், அடாக் நீதிபதிகள் நியமனம் பற்றிய பிரிவு 224 என்று இருந்தது. 1956 ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்ட ஏழாவது திருத்தத்தின் மூலம் இந்த பிரிவு நீக்கப்பட்டது.
அதற்கு பதிலாக, வழக்குகள் அதிக அளவில் தாக்கல் செய்யப்படும் போதும் மற்றும் வழக்குகள் மிக அதிக அளவில் நிலுவையில் இருக்கும்போதும் ஏற்படும் நிலைமைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுக்கும் மிகாமல் கூடுதல் நீதிபதிகளை (additional )உயர் நீதிமன்றத்தில் நியமித்துக் கொள்ளலாம் என்று அரசமைப்புச் சட்டத்தில் , நீக்கப்பட்ட பிரிவுக்கு பதிலாக புதிதாக பிரிவு 224 சேர்க்கப்பட்டது.
மேலும், ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பணிக்கு வருகை தர முடியாத நிலை ஏற்பட்டால், அந்த இடத்தை தற்காலிகமாக (acting) நிரப்பிக் கொள்ளவும் இந்த புதிய பிரிவு வழி செய்கிறது.
சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தைச் சேர்ந்த இளம் வழக்குரைஞர்கள், நீதிபதிகள் நியமனத்தில் வாரிசு முறை இருப்பதை சுட்டி காண்பித்தனர். மேலும் , கொலேஜியம் முறை தான் இருந்தாலும், உண்மையில் ஒன்றிய அரசு தான் நியமனங்களை இறுதியில் தீர்மானிக்கிறது.
அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் முதலே, மிக மிக சொற்ப அளவிலேயே பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். ஏனெனில், உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படுவதில்லை. எனவே 80%-க்கும் மேல் உயர்சாதியினரும், குறிப்பாக உயர்சாதியினரில் பார்ப்பனர்களும், பனியா பிரிவினரும் நீதிபதிகளாக நியமிக்கப்படும் அவல நிலையே உள்ளது. இப்படி உயர்சாதிகளால் நியமிக்கப்படும் நீதிபதிகள் உள்ள நிலையில்தான் மேற்சொன்ன நிலுவையும் உள்ளது.
மக்களில் மிகப் பெரும்பான்மையாக உள்ள மேற் சொன்ன பிரிவினர் நியமிக்கப்படுவதில்லை என்ற குறையுடன் சேர்த்து, சிறுபான்மையினரும் அவர்களுக்கு உரிய விகிதத்தில் நியமிக்கப்படுவதில்லை என்ற நிலைமை பாஜக ஆட்சி வந்தது முதல் நடந்து வருகிறது.
கடந்த வாரத்தில் தமிழகத்தைச் சார்ந்த திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்து, அதில் உயர்நீதிமன்றங்களிலும் , உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்று முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதை ஆளும் கட்சியான பாஜக ஏற்காது . மிகப்பெரிய அளவில் சிவில் சமூகம் அழுத்தம் கொடுத்தால் முடியாதது ஒன்றுமில்லை. தமிழ்நாடு கொடுத்த அழுத்தத்தால் தானே அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டு கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது.
இந்த அடாக் நியமனங்கள், நிலுவையை தீர்ப்பதற்கான சரியான வழிமுறை அல்ல. உயர் நீதிமன்றத்தில் இந்த அடாக் நியமனங்கள், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என்பதே நமது கவலை. நிரந்தரமான நியமனங்களை தவிர்த்து அடாக் முறையில் வேண்டியவர்களுக்கு–ஆட்சியில் உள்ளவர்களுக்கும் நீதித்துறையில் உயர் பதவியில் உள்ளவர்களுக்கும் நியமனங்கள் நடந்து விட வாய்ப்புள்ளது!
Also read
எனவே, சரியான தீர்வு என்பது மிகத் தகுதியான நபர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது தான். மேலும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவதும் நிலுவையை எதிர்கொள்ளும் நடவடிக்கை ஆகும்.
கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்
ஓய்வு பெற்ற நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றம்
Leave a Reply