வேலியே பயிரை மேய்ந்த கதையாக முதலமைச்சரே மணிப்பூரில் கலவரத்தை தூண்டிவிட்டு, ஒரு தரப்பை ஆதரித்து, கிறிஸ்த்துவ பழங்குடிகளான குக்கி இன மக்களை கூண்டோடு கருவறுக்க காய் நகர்த்தியது துல்லியமாக அம்பலப்பட்ட நிலையில், பாஜக தலைமை பிரேன் சிங்கை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா…?
அறுநூற்று ஐம்பது நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் சமூகத்தின் இரு பெரும்பிரிவுகளான மெய்தீ மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் இன மோதலும் வன்முறையும் வெடித்து உச்சத்தை தொட்ட பொழுது , பதவியிலிருந்து விலகாத முதல்வர் என். பிரேந்திர சிங் அமீத் ஷாவை சந்தித்த அடுத்த நாளே இம்பால் கவர்னரிடம் தனது ராஜினாமாவை கொடுத்திருக்கிறார்.
மணிப்பூர் நிகழ்வுகளை உற்று நோக்குவோருக்கு இதற்கான காரணங்கள் புரியும். ஒன்று முதல்வர் பிரேந்திர சிங் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு சட்டசபை பிப்ரவரி 10-ல் கூடவிருந்த வேளையில் பிரேந்திர சிங் பதவியை முண்டின நாள் துறந்ததன் மூலம் அந்த அவமானத்தில் இருந்து தப்பினார்.
அடுத்து, மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதலையும் , வன்மத்தையும் தூண்டி வளர்த்து விட்ட பெருமை தனக்கே உண்டு என தம்பட்டமடிக்கும் பிரேந்திர சிங்கின் பேச்சுக்கள் அடங்கிய ஒலி நாடா குறித்து உச்சநீதிமன்றம் இன்னும் மூன்று வாரத்தில் தீர்ப்பு கூற விருக்கையில், பிரேந்திர சிங் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
”மெய்தீ மக்களின் பாதுகாவலன்” என பரப்புரை செய்து, இனமோதலை வளர்த்த பிரேந்திர சிங்கின் பதவி வெறியையும் , குள்ள நரித்தனத்தையும், பதவி மற்றும் அதிகாரத்திற்காக எந்த நிலைக்கும் தாழ்ந்து போக தயங்காதவர் என அவரது கட்சி எம் எல் ஏக்கள் மட்டுமின்றி, மெய்தி மக்களும் புரிந்து கொண்ட இந்த வேளையில் வேறு வழியின்றி ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார் பிரேந்திர சிங் .
இவ்வாறு மூன்று முக்கிய காரணிகளை முன்வைத்து ஊடகங்களும் வல்லுனர்களும் இது குறித்து விவாதங்களை நடத்துகின்றனர்.
ஆனால், மேற்கூறிய இந்த மூன்று காரணிகளினால் பிரேந்திர சிங் ராஜினாமா செய்ய தாமாக முன்வந்தாரா? என்றால், ”இல்லை” என்றே கூற வேண்டும்.
நிலைமைகள் மோசமானவுடன் பா ஜ க தலைமை “ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும்” என்ற ‘சுய நலத்தில்’ பிரேந்திர சிங்கை தில்லிக்கு வரவழைத்து பதவியை துறக்க ஆணையிட்டுள்ளது.
சதுரங்க ஆட்டத்தில் ராஜாவை காப்பாற்ற படைவீரனை பலி கொடுக்கும் ஆட்டக்காரனாக இன்று பாரதீய ஜனதா கட்சி இருக்கிறது. தனது தலைமையின் தலையை காப்பாற்ற – கவுரவத்தை – காப்பாற்ற பிரேந்திர சிங் என்ற படைவீரனை (பான்) பலி கொடுக்க முன்வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பா ஜ கவை சேர்ந்த ஏழு குக்கி எம் எல் ஏக்கள் மட்டுமின்றி, மெய்தீ இன எம்எல் ஏக்களும் ஆதரவு தெரிவித்து பிரேந்திர சிங்கிற்கு எதிராக எழுந்த நிலையில், ராஜினாமா செய்வதன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்று ஓடுவதை தவிர்க்கலாம் என்றெண்ணி பிரேந்திர சிங்கை தில்லிக்கு வரவழைத்தது பாஜக தலைமை.
நடக்கப் போகும் விபரீதத்தை மோப்பம் பிடித்து விட்ட பிரேந்திர சிங், 15 எம்எல்ஏக்கள் புடைசூழ, என் பி பி கட்சியினர் சிலரையும் கூட்டிக் கொண்டு தன் “ பலத்தை” மேலிடத்தில் காட்ட தில்லி விரைந்தார்.
அவரை சந்தித்த அமீத் ஷா ”தலைக்கு மேலே வெள்ளம் போகிறது, நீர் ராஜினாமா செய்வதன் மூலமே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்’’ என கூறி விட்டதாக தெரிகிறது, கவர்னர் அஜய் பல்லாவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டதால், பிரேந்திர சிங் வேறு வழியின்றி இம்பால் திரும்பி கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
கவர்னர் அதை ஏற்றுக் கொண்டு, சட்டசபை கூட்டத்தை தள்ளி வைத்துள்ளார். அதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதங்களும் இப்பொழுது நடைபெற வாய்ப்பில்லை!
மோடியின் செல்லப் பிள்ளையான முன்னாள் ஒன்றிய அரசின் உளதுறை செயலர் அஜய்குமார் பல்லா மணிப்பூரின் கவர்னராக இருப்பதால், காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவி விலக வேண்டிய அவமானத்திலிருந்து பா ஜ க தப்பித்து உள்ளது.
ஆனால், பெரும்பான்மைவாத கொள்கையை நடைமுறை படுத்தும் பாஜ க வில் தான் ஒருவனே மெய்தீ இன மக்களின் பாதுகாவலன் என்ற கட்டமைப்பை எழுப்பும் முயற்சியில் சமுதாயத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காவு கொடுத்து வந்தார்.
இதற்காக மெய்தீ இன தீவிரவாத கும்பல் ஆரம்பாய் தெங்கோல் மற்றும் மியான்மரிலிருந்து தாக்குதல்களை நடத்தியது. இது இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சூழலிலும் இதற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்து குக்கி இன மக்களின்மீது தாக்குதல்களை நடத்தினார். அவர்களின் குடியிருப்புகள் நொறுக்கப்பட்டு, தீக்கிரையாகி சாம்பலானது..!
அரசு ஆயுதக் கிடங்குகளையும் ஆயுதங்களையும் மேற்கூறிய மெய்தீ வன்முறையாளர்கள் சூறையாட வழிவகை செய்தார், இதன் மூலம் இவ் வன்முறையாளர்களை தனது அடியாட்களாகவும் தான் அவர்களது பாதுகாவலராகவும் காட்டிய பிரேந்திர சிங் கை தட்டிக்கேட்கவோ, மாற்றவோ மோடி ஷா வகையறாவுக்கு எண்ணமில்லை.
’பதவியும், அதிகாரமும் தங்களிடம் இருக்குமென்றால், மக்கள் நலனோ, மக்களின் வளர்ச்சியோ, சமூக அமைதியோ அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல’ என்றே இதுவரை பாஜ க தலைமை பிரேந்திர சிங்கை காப்பாற்றி வந்தது. மோடியும் மணிப்பூர் பக்கமே தலை வைத்து படுக்காமல் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளை கழித்து விட்டார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட அவர் மணிப்பூர் பக்கம் பார்வையை திருப்பவில்லை. கதறித் தவித்த தாய்குலங்களின் கதறல்களை செவிக்குள் வாங்கவே இல்லை.
இதனால் பாஜ க இரண்டு மொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியதோடன்றி, மெய்தீ இன மக்களின் நன்மதிப்பையும் இழந்து நிற்கிறது. மணிப்பூரை இரண்டாக பிரிப்பதோ, குக்கி இன மக்களை புறந்தள்ளுவதோ, இரு சமூகத்திற்கும் நல்லதல்ல. சமூக அமைதி இருந்தால் தான், பிரச்சினைகளை தீர்க்கவும் முன்னேற்றம் காணவும் முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.
பாஜ கவின் கூட்டாளிகளாக உள்ள நாகா மக்கள் முன்னணி (NPF) தேசீய மக்கள் கட்சி (Nationalist People’s Party) பிரேந்திர சிங் நீடிப்பது மணிப்பூருக்கு மட்டுமின்றி, தங்களது எதிர்காலத்திற்கும் உதவாது என்ற முடிவெடுத்ததால் பா ஜ க தலைமைக்கு வேறு வழியில்லை!
மணிப்பூர் கலவரத்தை தூண்டியதிலும் அதை வளர்த்ததிலும் பிரேந்திர சிங்கின் பங்கை உறுதிப்படுத்தும் ஆவணமாக பிரேந்திர சிங்கின் பேச்சுக்கள் அடங்கிய ஒலி நாடாவின் உண்மைத் தன்மை ட்ரூத் லேப் என்ற பரிசோதனை நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட ஆணையமும் இந்த ஆதாரத்தை ஏற்றுக் கொண்டாலும், ஒன்றிய வழக்குரைஞர் துகஷார் மேத்தா உச்ச நீதி மன்றத்தில் இந்த பிரேந்திர சிங் டேப்புகளின் உண்மைத் தன்மையை மீண்டும் பரிசோதிக்க – இம்முறை- சி எஃப் எஸ எல் என்ற Central Forensic Science Laboratory பரிசோதனை நிறுவனம் பரிசோதிக்க வேண்டும் என கோரிக்கை பிப்ரவரி 3ல் வைத்தார் . தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவும் மூன்று வாரங்கள் அவகாசம் கொடுத்து வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், CFSL நிறுவனமே பல வேளைகளில் ஆடியோ விசுவல் பொருட்களில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய “ட்ரூத் லேப் “என்ற அமைப்பின் உதவியை நாடியுள்ளது என்பது தான். ட்ரூத் லாப் அமைப்பு இந்த டேப்புக்களில் உள்ள குரல் பிரேந்திர சிங்கின் குரல் தான் என்பது 93% உறுதியாக கணித்துள்ளது. ஆகவே, நிச்சயமாக கடும் தண்டனைக்குரிய குற்றவாளியே பிரேன்சிங்.
உச்சநீதி மன்றம் இறுதியில் இடியை இறக்குமானால், பாரதீய ஜனதா கட்சியின் ‘செல்லப் பிள்ளை’ யான பிரேந்திர சிங் இப்பொழுது காப்பற்றியதை போல் அப்பொழுதும் மோடி – ஷா வகையறாக்களால் காப்பாற்றப்படுவாரா? அல்லது உச்ச நீதிமன்றத்தையே இந்த விவகாரத்தில் குழப்பி முடிவெடுக்கவியலாமல் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ச.அருணாசலம்
அரசியல் சுய நலனுக்காக மாபெரும் இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட, ஆதரவளித்த மணிப்பூர் முன்னாள் முதல்வர் பிரே@ந்திர சி#ங் கும் , அவருக்கு ஆதரவாக இது நாள் வரை செயல்பட்ட ஒன்றிய உள் துறை அமைச்சரவையினரும் தண்டிக்கப்பட வேண்டும்.