தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய பொது வேலை நிறுத்தம்!

பீட்டர் துரைராஜ்

அரசியல் அமைப்புச் சட்ட நாளான இன்று நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப்,ஹரியாணா விவசாயிகள் பெரும் ஊர்வலமாக டெல்லியை நோக்கி சென்ற வகையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த தண்ணீர் பீய்ச்சி அடித்து,பலப்பிரயோகம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் புயல், வெள்ள பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. சென்னை,கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டாம் என  தொழிற்சங்கங்கள்  கேட்டுக் கொண்டு உள்ளன.பொதுவாக நாடு முழுவதும்  வேலைநிறுத்தம், மறியல், கைது நடக்கிறது.

மேற்கு வங்கத்தில் காங்கிரசாரும்,இடது சாரிகளும் இணைந்து ரயில் போக்குவரத்தை பல இடங்களில் நிறுத்தியுள்ளன. கேரளாவில் பல இடங்களில் சந்தையே ஸ்தம்பித்துள்ளன.

வட இந்தியாவில் பரவலாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. போக்குவரத்து மிகக் குறைவாக இயங்கின.

இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “இந்தியாவில் ஐந்து இலட்சம் கிராமங்களில் வங்கிக் கிளைகள் இல்லை. இதனால் சாதாரண மக்களுக்கு வங்கிச் சேவை மறுக்கப்படுகிறது. புதிய வங்கிக் கிளைகளை திறப்பதற்கு பதிலாக ஏற்கனவே இருந்த ஆறாயிரம் வங்கிக் கிளைகளை, வங்கி இணைப்புகளைக் காரணம் காட்டி  அரசு மூடிவிட்டது. லட்சுமி விலாஸ் வங்கி நட்டமானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக,  டிபிஎஸ் என்ற சிங்கப்பூர் வங்கிக்கு அரசு அதனை நன்கொடையாக தருகிறது. பெருமுதலாளிகள் வங்கிகளைத்  தொடங்க உரிமம் தரப் போகிறது. இத்தகைய கொள்கைகளை எதிர்த்து இந்த  வேலைநிறுத்தம் நடைபெறுகிறது” என்று கூறுகிறார் வங்கி ஊழியர் சங்கத் தலைவரான சி.எச்.வெங்கிடாச்சலம்.

கல்பாக்கம் அணுஆற்றல் துறை, திருச்சி பாரத மின்பகு நிறுவனம், ஆவடி டேங்க் பாக்டரி உள்ளிட்ட நிறுவனங்களிலும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களுக்கு  கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற முனைந்தது,300 தொழிலாளர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகள் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காமல் இருப்பதற்கு விலக்களித்தது ஆகியவை தொழிலாளர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன. எனவே இந்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.புதிய சட்டப்படி அரசு நினைத்தால் ஒரு நிறுவனத்திற்கு தொழிலாளர் சட்டம் பொருந்தாது என்று அறிவித்துவிட முடியும். இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்ளுக்கு தொழிற்சங்க உரிமை கிடைக்காது. வெள்ளைக்காரர்கள் இருக்கும்போது கூட இத்தகைய சட்டம் இல்லை.

பாதுகாப்புதுறை,ரயில்வேதுறை ஆகியவற்றில் தனியாரை புகுத்துவது,பிஎஸ்,என்,எல் உள்ளிட்ட அரசு தொலைபேசி நிறுவனங்களை திட்டமிட்டு அழித்து தனியாரை வலுப்படுத்துவது, பொதுத் துறை நிறுவனங்களை தனியார்களிடம் தாரை வார்ப்பது ஆகியவற்றை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் கூட  இந்த புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்க்கிறது. இந்த வேலைநிறுத்தத்தில் அது பங்குபெறவில்லை. ஆனால் பத்து மத்திய தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள  கோரிக்கைகளை அது ஆதரிக்கிறது. இந்த அகில இந்திய வேலை நிறுத்ததை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த அமைப்புகள் அனைத்தும் வலுவானவையாகும். ஐஎன்டியூசி,ஏஐடியூசி,சிஐடியூ,ஏஐசிசிடியூ, டியுசிசி,எஸ்இவிஏ, எல்பிஎப், யுடியுசி, ஹெச்.எம்.எஸ்,ஏஐயுடியுசி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன! (INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC)

“மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கைகளில் ஒன்று. இதன்படி விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டியதில்லை. அரசு கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விடும். இதனால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காது. பருப்பு,எண்ணெய் வித்துகள்,வெங்காயம் போன்ற பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. இதனால் உணவுப்பொருட்களின் மீதான மாநில அரசுகளின் கட்டுப்பாடு நீக்கப்படும். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிப்பு அடைவர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள விவசாய இயக்கங்களும் மறியலில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் தில்லியில் காவல்துறை நெருக்கடியை மீறி போராட்டம் நடந்து வருகிறது” என்கிறார் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த பாலகிருஷ்ணன்.

அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் மூவாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோருகின்றன. தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்களுக்கு தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 95 நடைமுறையில் உள்ளது. இதில் அறுபது சதம் தொழிலாளர்களுக்கு மேலாக மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை விலைவாசிப்புள்ளியோடு இணைத்து அவ்வப்போது உயர்த்த வேண்டும்.

குறுகிய கால ஒப்பந்த முறை சட்டப்பூர்வமாக அமலாகப்படுகிறது. இதனால் பணிப்பாதுகாப்பு, கண்ணியமான வாழ்வு, சமூகப் பாதுகாப்பு போன்றவை மறுக்கப்படுகிறது. சுரண்டலை அரசு சட்டப்பூர்வமாக்குகிறது.

“மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத்திட்டத்தினை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; அதில் வேலைநாட்களை இருநூறு நாட்களாக உயர்த்த வேண்டும்.நாளொன்றுக்கு 256 ரூபாய் கூலியாக கிடைக்கிறது.இதனை உயர்த்த வேண்டும் என்பது எங்களின்   கோரிக்கை. எனவே விவசாயத் தொழிலாளிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு, மறியலிலும் கலந்துகொண்டுள்ளனர் என்று கூறுகிறார் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான நா.பெரியசாமி்.

புதிய மின்சார திருத்தச் சட்டம் மின்சார உற்பத்தி, விநியோகத்தை தனியாருக்கு கொடுக்க வழிவகை செய்கிறது. எனவே இதனை திரும்பப் பெற வேண்டும். வங்கி, காப்பீடு, இரயில்வே, போக்குவரத்து, துறைமுகம், மருத்துவம், கல்வி போன்றவைகளில் இருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டு, தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களே இலாபம் அடைவார்கள். பொதுமக்களின் சொத்துகளை சூறையாடு்ம் திட்டம் இது என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

திமுக இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.அதனால் அவர்களும் கலந்து கொண்டனர். மத்திய அரசு, தொழிற்சங்கங்கள் எழுப்பிய ஏழு கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவில்லை.இந்த வேலைநிறுத்தத்தில் இருபத்தி ஐந்து கோடிக்கும் அதிகமாக தொழிலாளர் கள் பங்குபெற்றுள்ளதாக  தொழிற்சங்க தரப்பில் சொல்லப்படுகிறது.கடந்த முறை நடந்த வேலைநிறுத்தத்தை விட இதன் வீச்சு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time