ஆரோக்கியமும், சமையலறையும்!

-   மரு.வி.விக்ரம்குமார் MD(S)

நோய்கள் ஏற்படாதிருக்கவும், ஏற்பட்டால் அதை குணப்படுத்தவுமான உணவு முறைகளை நாம் பார்க்கப் போகிறோம். இதனால் லட்சங்களில் தீர்வைத் தேடும் மருத்துவத்தை தவிர்க்கலாம். ஒவ்வொரு உணவிலும் ஆரோக்கியத்தை பேணும் அம்சங்களோடு நமது சமையலறை செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என நாம் அலசுவோம்;

அஞ்சறைப் பெட்டி பொருட்கள் என்று சொன்னாலே ஒரு காலத்தில் மருத்துவப் பார்வையோடு பார்த்த சமூகம் நம்முடையது. அவற்றைப் பயன்படுத்தி நுணுக்கமாகத் தயாரிக்கப்படும் உணவுகள், நோய்கள் ஏற்படாமல் தடுப்பது மட்டுமன்றி, பல்வேறு நோய்களை நீக்கும் ஆயுதங்களாகவும் பயன்பட்டன. அஞ்சறைப்  பெட்டியில் அங்கம் வகிக்கும் பொருட்களை நல வித்துகளாகப் பார்த்துப் பழகியவர்கள் நாம்!

ஆனால், காலப் போக்கில் அஞ்சறைப் பெட்டி எனும் அமைப்பையே தொலைத்து விட்டோம். இப்போதிருக்கும் பாதி பேருக்கு அஞ்சறைப் பெட்டிக்குள் இருக்கும் பொருட்களின் அடையாளமே தெரிவதில்லை! அப்படியே தெரிந்தாலும் அவை உணவை மெறுகேற்றுவதற்காகப் பயன்படும் பொருட்கள் என்ற  ரீதியில்  தான் தெளிவு இருக்கிறது! எதற்காக அவற்றை உணவில் சேர்க்கிறோம்… அவற்றின் மூலம் உணவுகளில் உண்டாகும் மாற்றங்கள் என்ன போன்ற சிந்தனை கொஞ்சம் குறைவு தான்!

மீண்டும் அஞ்சறைப் பெட்டியின் அவசியம்… அவற்றின் பயன்பாடு… அஞ்சறைப் பெட்டி பொருட்களின் வரலாறு… மருத்துவ குணம்… உணவை மருந்தாக்கும் அவற்றின் செயல்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் உங்களுக்கு உதவப் போகிறது.

மசாலாப் பொருட்கள்… நறுமண மூட்டிகள்… திரிதோட சமப்பொருட்கள்… இப்படி பல பெயர்கள் அஞ்சறைப் பெட்டி பொருட்களுக்கு! பொது வழக்கில் பல்வேறு பெயர்கள் பழக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் செயல்பாடு இறுதியில் நாம் சாப்பிடும் உணவை நோய் நீக்கும் பொருளாக மாற்றுவது தான்! சமையலில் சேரும் போது மட்டுமன்றி, தனி தனிப் பொருளாகப் பயன்படுத்தும் போதும் பல்வேறு பலன்களை அளிக்கவல்லது.

வரலாறு சொல்லும் உண்மை:

நறுமணப் பொருட்களின் வணிகத்தைக் கையில் எடுப்பதற்காகப் பல போர்கள் நடைப்பெற்றிருக்கின்றன! அவற்றைக் காரணமாகக் கொண்டு பல பேரரசுகள் கவிழ்க்கப்பட்டிருக்கின்றன. புதிய ராஜங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. புது நாடுகளைக் கண்டுப் பிடிக்கவும் மணமூட்டிகள் உதவியிருக்கின்றன. கொலம்பஸ் ஆவலோடு தேடி வந்த நறுமணத் தீவு இந்தியா என்பது துணுக்குச் செய்தி!… இப்படி பல்வேறு ஆச்சர்யங்கள் அஞ்சறைப் பெட்டி பொருட்களுக்குள் ஒளிந்து கிடக்கின்றன…

அஞ்சறைப் பெட்டி பொருட்களை முழுமையாக அறிந்து கொள்வதென்பது மிகவும் சுவாரஸ்யமானது! பெரும் நாவலைப் படிப்பது போன்ற பெரு மகிழ்ச்சியை அளிக்கக் கூடியது! உலக அளவில் பல்வேறு நூல்கள் இந்திய உணவுக்  கலாச்சாரத்தை மையப்படுத்தி, எழுதப்பட்டிருக்கின்றன. அந்த நூல்களில் அஞ்சறைப் பெட்டி சார்ந்த பொருட்களின் குறிப்புகள் எக்கச்சக்கமாக விரவி இருக்கின்றன! அவற்றைப் படிக்க படிக்க நாசிக்குள் அஞ்சறைப் பெட்டியின் மணமேறுவதை நம்மால் உணர முடியும்.

நவீன அஞ்சறைப் பெட்டியைக் கட்டமைக்கலாமா:

இஞ்சி, சீரகம், மிளகு, ஓமம், மஞ்சள், தனியா, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம், ஏலம், கடுகு, இலவங்கப்பட்டை, எள், பெருங்காயம், பூண்டு… இப்படி நம்மோடு புழங்கும் அஞ்சறைப் பெட்டி பொருட்கள் ஐம்பதுக்கும் மேல்! ஐம்பது பொருட்களுக்கும் இடமளிக்கும் விதமாகப் புதுமையான ஒரு பிரமாண்ட அஞ்சறைப் பெட்டியைக் கட்டமைத்து அதை முறை அறிந்து பயன்படுத்த தொடங்கினால் இல்லங்களில் ஆரோக்கியம் உறுதி!

நமது அஞ்சறைப் பெட்டி பொருட்களின் சிறப்பு என்ன தெரியுமா? பல்வேறு நாடுகளின் உணவுக் கலாச்சாரத்தில் இல்லாத மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டிருக்கிறது நமது அஞ்சறைப் பெட்டி! அஞ்சறைப் பெட்டி பொருட்களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நாடுகளில் சர்வ சாதாரணமாக இருக்கும் செரிமானம் சார்ந்த பல நோய்கள் நமது நாட்டில் மிக மிகக் குறைவு! அஞ்சறைப் பெட்டி பொருட்கள் இல்லாமல் நமது உணவுக் கலாச்சாரத்தைக் கட்டமைக்கவே முடியாது!

தனித்துவமான வேதிப்பொருட்கள்:

ஒவ்வொரு அஞ்சறைப் பெட்டி பொருளிலும் தனித்துவமான நலம் கொடுக்கும் வேதிக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. கருஞ்சீரகத்திலிருக்கும் ‘Thymoquinone’ எனும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. கருஞ்சீரகத்தில் இருக்கும் இந்த வேதிப்பொருள் வேறு எந்த அஞ்சறைப் பெட்டி பொருளிலும் கிடையாது. அதாவது தனித்துவமான வேதிப்பொருட்கள் குறிப்பிட்ட அஞ்சறைப் பெட்டி பொருட்களில் மட்டுமே இருப்பது சிறப்பு. மருத்துவ வேதிப் பொருட்கள் மட்டுமல்லாது பொருட்களின் சுவை, தன்மை அடிப்படையிலும் மருத்துவக் குணங்கள் அமைகின்றன.

நோய் நீக்கும் மசாலா பொருட்கள்:

மசாலாப் பொருட்கள் நமது உணவோடு உறவாடுவதால், உணவின் நோய் நீக்கும் தன்மை அதிகரித்து, சாப்பிட்ட பின் எவ்வித தொந்தரவும் ஏற்படாது. பசியை அதிகரிக்க சீரகம்… புற்று நோய்க்கு எதிராகச் செயல்படும் கருஞ்சீரகம், மஞ்சள்… உடலின் தங்கிய நஞ்சை அகற்ற மிளகு… வாயுத் தொல்லையை நீக்க பெருங்காயம், வால்மிளகு… கொழுப்புச் சத்தைக் குறைக்கவும், செரிமானத்தைச் சீராக்கவும் பூண்டு, வெந்தயம்… சத்துக்களை வாரி வழங்க கறிவேப்பிலை… என இவை அனைத்திற்கும் மருத்துவப் பயன்பாடு அதிகம்.

ரசம் ஒரு எடுத்துக்காட்டு:

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் நமது ரசத்தில் எவ்வளவு மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்பதைச் சிந்தித்தால் மகத்துவம் புரியும்! அஞ்சறைப் பெட்டி பொருட்களின் சாரங்கள் ரசம் எனும் மருத்துவ பானத்தில் இறங்கி செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி, செரிமானம் சார்ந்த சிக்கல்களை நீக்கி நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் பெரும் பணியைச் செய்கின்றன! ரசம் என்பது ஓர் எடுத்துக்காட்டு! இப்படி எண்ணிலடங்கா உணவு வகைகள் நமது உணவுக் கலாச்சாரத்தில் உண்டு!

 

அஞ்சறைப் பெட்டி பொருட்களை வைத்து வீட்டிலேயே மசாலா பொருட்களை அரைத்து விருந்தினர்களுக்கு விருந்து படைத்த காலம் இப்போது இல்லை. உணவு வகைக்கு ஏற்ப மனம் மகிழும் வகையில் மணம் கமழ வைத்த தினசரி மசாலா தயாரிப்புகள் எல்லாம் இன்று சரித்திரமாகிப் போய்விட்டன. நறுமணப் பொருட்கள் இருக்க வேண்டிய அஞ்சறைப் பெட்டிக்குள் சிந்தடிக் மாத்திரைகள் தாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆரோக்கியத்தை மீட்டெடுக்க , மீண்டும் நமது பழமையான அஞ்சறைப் பெட்டியைத் தூசிதட்டி நவீனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்!

அஞ்சறைப் பெட்டி பொருட்களைக் கால சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவது எப்படி… நோய் நீக்கத்தில் தனி தனி அஞ்சறைப் பெட்டி பொருட்களின் பங்கு என்ன… பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தில் அவற்றின் பின்னணி என்ன… அவற்றில் உள்ள மருத்துவக் கூறுகள் என்ன… நடைபெற்ற ஆய்வுகள்… இப்படி பல்வேறு தகவல்களைப் நறுமணத்துடன் கொடுக்கப் போகிறது நவீன அஞ்சறைப் பெட்டி! ஒவ்வொரு அஞ்சறைப் பெட்டி பொருளையும் தனிதனியாக நுகரப் போகிறோம்!…

–   மரு.வி.விக்ரம்குமார் MD(S)

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time