பள்ளிக் கல்விக்கான நிதி மறுக்கப்பட உண்மை காரணம் என்ன? இதில் நமது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் என்ன தான் பிரச்சினை? மத்திய அரசு எவற்றையெல்லாம் நிர்பந்திக்கிறது? இதில் மாநில அரசின் நிலைபாடு என்ன? நிதி மட்டுமா பிரச்சினை? இந்தி மட்டுமா சிக்கல்? இல்லை. இதில் சொல்லப்படாத விவகாரங்கள் நிறையவே உள்ளன;
பள்ளிக் கல்வி துறைக்கு இந்த ஆண்டு ஒன்றிய அரசு தர வேண்டிய நிதி ரூ 2,152 கோடியை தரமறுக்கிறது. சென்ற ஆண்டு நிதியிலும் 249 கோடியை தராமல் நிறுத்தி விட்டது. இதைக் கேட்டு தமிழக முதல்வர் பல கடிதங்கள் எழுதியும் பலனில்லை. ”நாங்க சொல்லும் பி.எஸ்.ஸ்ரீ திட்டத்தை நீங்க அமல்படுத்தவில்லை. ஆகவே உங்களுக்கான நிதியை தரமட்டோம்” என்கிறார்கள், ஒன்றிய ஆட்சியாளர்கள்!
இந்த பி.எம்.ஸ்ரீ திட்டம் என்பது என்ன? அதன் ஆபத்துக்கள் என்ன? என்று சுருக்கமாக பார்ப்போம்.
பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளிகளின் நோக்கம்
பி எம் ஸ்ரீ பள்ளிகள் என்பதாக இந்தியா முழுமையும் 14,500 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மிக உயர்ந்த தரத்தில் கல்வி தருவதாகும். அதாவது மிகப் பெரிய தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி பணக்கார குழந்தைகள் பெறுவதை போன்ற உயர்தரக் கல்வியை இந்த பி.எம்.ஸ்ரீ பள்ளிக் குழந்தைகள் மட்டும் பெறுவர். ஒரு வகையில் இது சமத்துவ கல்விக்கு எதிரானது என்றும் சொல்லலாம். இப்படியான பி எம் ஸ்ரீ பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் தேசிய கல்விக் கொள்கை என்பது என்ன?
# மூன்று வயதிலேயே பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
# ஹிந்துத்வா கொள்கையான பஞ்ச கோஷா கோட்பாட்டை 3 – 8 வயது குழந்தைகளுக்கு போதிப்பதே தேசிய கலைத்திட்டமாகும். (NCFFS)
# 6 ஆம் வகுப்பிலேயே தொழிற்கல்வி வழங்க வேண்டுமாம்!
# 10 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு இல்லையாம்.
# 12 ஆம் வகுப்பு தேர்வு கூட வெறும் சான்றிதழ் தானாம்.
# இனிமேல் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வுகளின் மூலம் மட்டுமே எந்த கல்லூரியிலும் மாணவர்கள் கால் வைக்க முடியுமாம்.
# பள்ளியில் ஹிந்தி / சமஸ்கிருதத்தை ஒரு மொழிப் பாடமாக கற்க வேண்டுமாம்.
ஆக, தேசிய கல்விக் கொள்கையானது ஏற்கனவே சிக்கலில் தவித்து வரும் பள்ளி கல்வியை மேலும் படு பாதாளத்திற்கு தள்ளும் என்பதில் ஐயமில்லை. இந்துத்துவக் கொள்கைகளை பள்ளிகளில் இளம் நெஞ்சங்களில் புகுத்துவதானது சமூகத்தில் மூட நம்பிக்கைகளைத் தான் வளர்க்கும்.
இத்தகைய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் கூடாரங்களாக பள்ளிகளை மாற்றும் திட்டமே பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் ஆகும். எனவே, இவையெல்லாம் வேண்டாம் என்பதே நம் நிலைபாடாகும்.
பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளித் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை. உண்மையில் தேசிய கல்வித் திட்டத்தின் எதிர்க்க வேண்டிய பல அம்சங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு. அந்த வகையில் பிரதம மந்திரி ஸ்ரீ பள்ளியை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடவே ஆர்வம் காட்டியது. ஆனால், அதில் மும்மொழி கல்வி எனப்படும் இந்தி கற்பித்தலை மாத்திரமே காரணம் காட்டி, தயங்கி பின்வாங்கியுள்ளது. மற்ற தீய அம்சங்கள் குறித்த தமிழக அரசு எதிர்ப்பு காட்டியதாக தகவல்கள் இல்லை.
ஒன்றிய அரசாங்கத்திற்கும், தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலின் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள கல்வித் துறையில் கடந்த காலத்தில் நடைபெற்ற மிக முக்கியமான மாற்றங்களை நாம் சிறிது திரும்பிப் பார்க்க வேண்டும்.
பிரதம மந்திரி ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசாங்கம் அமல்படுத்தாவிட்டால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முடியாது என ஒன்றிய அரசாங்கம் மறுத்து வருகிறது. இந்த சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் என்றால் என்ன? என்று பார்ப்போம்;
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம்
சமக்ரா சிக்ஷா அபியான் என்றத் திட்டம் 2018-2019 கல்வியாண்டு முதல் ஒன்றிய அரசாங்கத்தால் ஒட்டுமொத்த பள்ளி கல்வியிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களின் நிதிப் பங்களிப்புடன் நடைபெறுகிறது.
பள்ளி கல்வி முழுமைக்கும் நிர்பந்திக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கம் என்பது அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, பள்ளி கட்டமைப்பில் குறைந்தபட்சத் தரம், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வியை உறுதி செய்தல், வளர்ச்சிப் பாதையில் பள்ளிக் கல்வியை அழைத்து செல்லுதல் என்று வார்த்தை ஜாலம் செய்கிறது.
உண்மையில் இத்திட்டம் மேற்படி சொல்லப்பட்ட நோக்கங்களுக்கு எதிரானதாகவே நடைமுறையில் உள்ளது.
மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் / சர்வ சிக்ஷா அபியான்
இது உலக வங்கியின் திட்டமாகும் .District Primary Education Porgramme என்ற பெயரில் 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதற்காக பல நூறு கோடிகள் உலக வங்கியினால் கடனாக வழங்கப்பட்டது. பெரும் ஆரவாரத்துடன் கொண்டுவரப்பட்ட DPEP திட்டம் ‘ஆடல் பாடல் மூலமாகக் கல்வி’, என்பதாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இது வழக்கம் போல ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கே தடையாகிப் போனது.
முறையாக (methodical) ஆசிரியர்கள் கற்றுத்தரத் தேவை இல்லை, தாமாகவே மாணவர்கள் படித்துக் கொள்வர் என்று வினோதமாக விளக்கம் தந்தது. மாணவர்களின் கையில் எண்களையும் எழுத்துகளையும் கொண்ட அட்டைகளை கொடுத்து படிக்கச் சொன்னது. இது அரசு பள்ளிக்கு வரும் ஏழைக் குழந்தைகள் முறையாக கல்வி பெறுவதை தடுத்து விட்டது.
DPEP என்ற இத்திட்டத்திற்கு ஆங்காங்கே கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் அது ‘அனைவருக்கும் கல்வித் திட்டம்’ ( சர்வ சிக்ஷ்யா அபியான் SSA) என்று பெயர் மாற்றப்பட்டு, தொடரப்பட்டது. அதுகாறும் பள்ளி கல்விக்காக அந்தந்த மாநில அரசாங்கங்கள் நிதி ஒதுக்கி வந்த சூழலில், DPEP/SSA திட்டம் கொண்டு வரப்பட்டது முதல், பள்ளி கல்விக்கு ஒன்றிய அரசாங்கம் 60% நிதி ஒதுக்குகிறது என்ற போர்வையில் இத்திட்டங்கள் நாடு முழுவதும் நிர்பந்தப்படுத்தபட்டன. இந்த வலையில் தமிழ்நாடு அரசாங்கமும் விழுந்தது.
இந்த SSA திட்டம் வகுப்பு 1 முதல் 5 வரையிலான மாணவர்களை சிதைத்தது போதாது என மேற்கொண்டு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை நீடிக்கப்பட்டு, அது ராஷ்ட்ரிய மத்தியமிக் ஷிக்ஷா திட்டம் என்பதானது. தற்பொழுது SSA/RMSA ஆகியவை ஆசிரியர் கல்வியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு அது சமக்ரா சிக்ஷா அபியான் என்று அழைக்கப்படுகிறது.
DPEP/SSA – வில் துவங்கி, இன்று பள்ளி கல்வி முழுமைக்கும் விரிவாக்கப்பட்ட சமக்ரா ஷிக்ஷா அபியான் எவ்வளவு பின்னடைவுகளை ஏற்படுத்தி உள்ளது எனப் பார்க்கும் போது பேரதிர்ச்சியே ஏற்படுகிறது.
# கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றிய அரசாங்கம் கல்விக்கு ஒதுக்கும் நிதி 4.7% திலிருந்து 2.9% ஆகக் குறைந்து விட்டது.
# ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் 78.56% லிருந்து 64.44% ஆகக் குறைந்து விட்டது. தனியார் பள்ளிகளிலோ சேர்க்கை எண்ணிக்கை 21.38% லிருந்து 31.96% ஆகக் கூடிவிட்டது (ஆதாரம்: DISE, UDISE, UDISE Plus, 2009-10 லிருந்து – 2021-22 வரை).
# நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுளில் 1 கோடிக்கும் மேல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது (ஆதாரம்: UDISE Plus, 2023-24).
# நாடு முழுவதும் 9.3 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கே செல்லவில்லை. (ஆதாரம்: பிப்ரவரி 2023 லில் ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில்)
# நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை குறைந்ததை காரணம் காட்டி மூடப்பட்டுவிட்டன. (ஆதாரம்: CSD report 2023-2024).
மேற்கண்ட விவரங்கள் DPEP/SSA துவங்கி, சமக்ரா சிக்ஷா அபியின் திட்டத்தின் படு தோல்வியை தெளிவாக்குகிறது.
ஏற்கனவே ஏற்பட்டுள்ள தோல்வியை மேலும் விரைவுபடுத்த பி எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தச் சூழலில் பிரதம மந்திரி ஸ்ரீ (பி எம் ஸ்ரீ) திட்டத்தின் கீழ் மாநில பள்ளிகளை மாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் உள்ள இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதால் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசாங்கத்தின் நிதியை நம்பிய நிலையில் பள்ளி கல்வி துறை தற்போது கையறு நிலையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா என்பது பல தேசிய இனங்களின் ஒன்றியமாகும். இங்கே நாடு முழுவதற்கும் ஒரே கல்வி முறை என்பதே கல்வி தத்துவத்திற்கு விரோதமானதாகும். அமெரிக்கா போன்ற முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் மாநில பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு என்பது நினைத்துப் பார்க்கவே முடியாதாகும்.
தோல்வியடைந்த சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கு சரியான தீர்வைத் தர தேசிய கல்விக் கொள்கை எதையும் முன்னெடுக்கவில்லை. இன்னும் தோல்விக்கான திசைக்கே தற்போதும் வழிகாட்டுகிறது.
வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், போதிய நிதியையும் மட்டும் அளித்துவிட்டு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகார பகிர்வுக்கு அனுமதிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு கல்வி தளத்தில் சிறந்த விளைவுகள் ஏற்படும். எந்த அளவிற்கு கல்வி மையப்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு அது எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, சமக்ரா சிக்ஷா திட்டம் பள்ளிக் கல்வியை சீரழிக்கிறது என்றால், தேசியக் கல்விக் கொள்கை பள்ளிக் கல்வியையே அழித்து குருட்டுத்தனத்தை வளர்க்கும் கொள்கையாக உள்ளது. சமூக முன்னேற்றத்துடன் இணைந்த கல்வியை விரும்பும் எவரும் இந்த இரண்டுத் திட்டங்களையும் எதிர்க்கவே செய்வர். இந்த இரண்டு திட்டங்களுக்காக எவ்வளவு நிதி கொடுத்தாலும் அது கல்வியை வளர்க்க உதவாது.
Also read
ஆனால், அதே வேளையில் மாநிலங்களுக்கு கல்வி நிதி வழங்கும் பொறுப்பை ஒன்றிய அரசாங்கம் கைகழுவ முடியாது. இந்திய அரசியல் சாசனத்தின் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி என்ற உத்திரவாதத்தை உறுதிப்படுத்த ஒன்றிய அரசாங்கம் மாநிலங்களுக்கு போதிய நிதியை வழங்கியே தீர வேண்டும்.
தமிழக அரசாங்கமும் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்காக நிதி கேட்பதை விட்டுவிட்டு, திட்டங்கள் சாராத வகையில் ஒன்றிய அரசாங்கம் கல்விக்காக நிதி தர வேண்டிய அதன் அரசியில் சாசனக் கடமையை வலியுறுத்தி, நிதியை கேட்டுப் பெற வேண்டும்.
இதன் மூலம் பள்ளி கேள்வியை DPEP/SSA விற்கு முன்னிருந்த முறையான கற்பித்தல் – கற்றல் முறையில் பள்ளிக் கல்வியை சீரமைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணியை வழங்குவதை தவிர்த்து, மாணவர்களுடன் இருந்து கற்பிக்கும் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். இவற்றை செவ்வனே செய்யும் பொழுது தான் மீண்டும் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க முடியும்.
கட்டுரையாளர்; கே.யோகராஜன்
மாநில செயலாளர்
அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி
தமிழ்நாடு அரசு அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டிய அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்ற வேண்டிய ஒன்றிய, மாநில அரசுகளின் பொறுப்பை வலியுறுத்தி, தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி நமக்குரிய பங்கினைப் பெற்று பள்ளிக் கல்வித்துறையைச் சீரமைத்து அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.