இந்திய மக்களின் உயிர் அவ்வளவு மலிவானதா.?

-சுப உதயகுமாரன்

இன்னும் எத்தனை அணு உலைகளையும் இந்தியா தாங்குமாம். ஆகவே, ”அணு உலை ஆரம்பிக்க விரும்புவர்கள் யாராயினும், ‘பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால், இழப்பீடு தர வேண்டும்’ என்ற சட்டங்களை கண்டு அஞ்ச வேண்டாம்! அவற்றை நீர்த்து போகச் செய்யத் தானே நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்…”என்கிறார் நிர்மலா சீதாராமன்!

சமீபத்திய பட்ஜெட்டில் பட்ஜெட்டில் நாட்டின் நீண்டகால எரிசக்தி மாற்றத்திற்கான நடவடிக்கையின் ஒரு அம்சமாக அணுசக்தி குறிப்பிட்டு, 2047-ம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை நிறுவ ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிற்கான அணுசக்தி இயக்கத்தை ரூ. 20,000 கோடி மதிப்பீட்டில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் உள்நாட்டு அணுசக்தித் திறனை மேம்படுத்தவும், தனியார் துறையின் பங்களிப்பை மேன்மேலும் ஊக்குவிக்கவும்,  அணுமின் உலைகளை நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அணுமின் சக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்து அதிகரிக்கும் நோக்கில் முந்தைய அணுசக்திச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படுமாம். அதாவது முன்பு மக்கள் பாதுகாப்பிற்காக உருவக்கப்பட்ட அம்சங்களை நீர்த்துப் போகவே, இந்த சட்ட திருத்தங்களாகும். இந்த அறிவிப்பானது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தனியார் அணுசக்தி நிறுவனங்களின் லாப நோக்கத்திற்கானது. அவர்களின் தவறுகளால் ஏற்படும் பெருவிபத்தில் மக்கள் பாதிக்கப்பட்டால் பெரிதாக இழப்பீடு தர வேண்டி இருக்குமோ என்று பயப்பட வேண்டாம், வாருங்கள் என அவர்களை அழைப்பதற்கானது. இதன் மூலம் இந்திய மக்களின் நலனை பலி கொடுக்கும் நோக்கத்தை சற்றும் குற்ற உணர்வு கூட இல்லாமல் வெளிப்படுத்தி உள்ளது பாஜக அரசு.

தற்போதுள்ள CLNDA 2010 சட்டத்தையும் அதன் விதிகளையும் திருத்தம் செய்வதானது  பிரதமர் மோடியின் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் பயணத் திட்டத்தை மையப்படுத்தியது. பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில் கையெழுத்தாகியுள்ள 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மூன்று ஒப்பந்தங்கள் அணுசக்திக்கானவையாகும். CLNDA 2010 சட்டத்தை நீர்த்து போக வைத்து நாட்டு மக்களை அணுக்கதிரியக்க பேராபத்தில் தள்ள பா.ஜ.க. அரசு துணிந்துவிட்டது.

இது குறித்த நமது பழைய அனுபவங்களை சற்று நினைவு கூர்வோம். கடந்த அக்டோபர் 10, 2008 அன்று இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானப் பிறகு, ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவாடா எனுமிடத்திலும், குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டம் மித்திவிர்தி எனுமிடத்திலும் அமெரிக்கக் கம்பெனிகள் அணுஉலைகள் நிறுவ இடங்களை ஒதுக்கினார்கள்.

ஆனால், இந்திய அரசு இழப்பீடுச் சட்டம் ஒன்றை நிறைவேற்றாமல் தாமதித்தது, அமெரிக்க நிறுவனங்கள் கடைதிறக்கத் தடையாக இருந்தது. எனவே, அணுசக்தி இழப்பீடுச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற அமெரிக்கர்கள் ஏவிக் கொண்டேயிருந்தனர்.

அந்த சட்ட வரைவை தயாரித்த மன்மோகன் சிங் அரசு சனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் புறந்தள்ளி, அதனை இந்திய மக்களிடமிருந்தும், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பத்திரிக்கையாளர்களிடமிருந்தும் மறைத்தே வைத்திருந்தது.

அப்போதே சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு “ஒன்றிய அரசின் அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது தெளிவாகப் புரிந்தது. சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால்  அரசு அந்த சட்ட முன்வரைவை திரும்பப் பெற்றுக் கொண்டது. அதுகாறும் தூங்கிக் கொண்டிருந்த இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திடீரென விழித்துக் கொண்டு அரசின் கழுத்தை மேலும் இறுக்கிப் பிடித்தன.

பின்னர் 2010 மே 7-ஆம் தேதி மன்மோகன் சிங் அரசு அவசர கதியாக அணுசக்தி இழப்பீடுச் சட்ட முன் வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஒரு வழியாக அணுசக்தி இழப்பீடுச் சட்டம் செப்டம்பர் 21, 2010 அன்று சட்டமானது. இந்த அணுமின் விபத்து இழப்பீடுச் சட்டம் (The Civil Liability for Nuclear Damage Act, 2010) ஏழு பகுதிகளையும், 49 உறுப்புக்களையும் கொண்டது. இதன் குறிக்கோள் அணுமின் விபத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவது, இழப்பீடு கோரல்களுக்கு இயக்குனரை நியமிப்பது, மற்றும் அணுமின் இழப்பீடு கோரல்களுக்கான இயக்ககம் ஒன்றைத் தோற்றுவிப்பது போன்றவையாகும்.

இந்த சட்டத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுள் ஒன்று தனியார் நிறுவனங்கள் வெறும் லாப நோக்கோடு அணுமின்சாரம் தயாரிப்பில் நுழைய வழி வகுப்பது தான். இந்திய அணுமின் நிலையங்கள்  இந்திய அணுமின் கழகம் (என்.பி.சி.ஐ.எல்)  ஆகியவற்றிலேயே எத்தனையோ பிரச்சினைகள் புரையோடிய நிலையில், தனியாரையும் உள்ளே விடுவது உசிதமானதா? என்பது விவாதத்திற்குரியது.

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் இந்திய அணுமின் கழகமே எந்தத் தகவலையும் மக்களுக்குத் தராமல் தான்தோன்றித்தனமாக இயங்கும் போது, லாபம் ஒன்றையே ஒரே குறிக்கோளாகக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்யும்? எப்படியெல்லாம் இயங்கும்? என்பது வெள்ளிடைமலை. அணுமின் நிலையம் போன்ற மிகுந்த ஆபத்தான தொழிற்சாலைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது பேரிடருக்கு வழி வகுக்கும். இந்தியாவில் தன்னாட்சித் திறனோடு இயங்கும் அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஓன்று இல்லாத நிலையில், இது இன்னும் ஆபத்தாகவே அமையும்.

இந்த சட்டம் அணுமின் விபத்து இழப்பீட்டுக்கு உச்சவரம்பை (300 மில்லியன் SDR)  நிர்ணயிக்கிறது. இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது, கூடாதது. ஒரு தீவிபத்து இழப்பீடு நிர்ணயம் என்றால், எவ்வளவு இழப்பு வரும், எப்படி உச்சவரம்பை நிர்ணயிக்கலாம் என்பவற்றை ஓரளவு முடிவு செய்யலாம். ஆனால், அணுமின் விபத்து எண்ணற்ற வழிகளில், எத்தனையோ தலைமுறைகளை, எப்படியெல்லாமோ பாதிக்கின்ற மோசமான விடயம். இதற்கு எப்படி உச்சவரம்பை நிர்ணயிக்க முடியும்?

பத்து மெகாவாட் அல்லது அதற்கும் அதிகமாக மின் உற்பத்தி செய்யும் அணுமின் நிறுவனத்துக்கு உச்சவரம்பு ரூ.1,500 கோடி என்று இச்சட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரில் கணக்கிட்டால் இது சற்றொப்ப 180 மில்லியன் டாலராக இருக்கும். கடந்த 1986 ஏப்ரல் மாதம் நடந்த செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் காரணமாக அண்டை நாடான பெலரூஸ் 1991 முதல் 2003 வரையிலான 13 ஆண்டு காலக்கட்டத்துக்குள் மட்டுமே 13,000 மில்லியன் டாலர் தொகையைச் செலவு செய்திருக்கிறது. இதிலிருந்து 180 மில்லியன் டாலர் இழப்பீடு ஒரு கேலிக் கூத்து என்பது தெளிவாக விளங்கும்.

அதே போல, எரிகோல்கள் மறு சுழற்சி ஆலையில் விபத்து நடந்தால் இழப்பீடு அதிகபட்சமாக ரூ. 300 கோடியாகவும், பத்து மெகாவாட் மின்சாரத்துக்கும் குறைவாக தயாரிக்கும் ஆய்வு அணுஉலைகளில் விபத்து நிகழ்ந்தால் இழப்பீடு ரூ. 100 கோடியாகவும் இருக்கும் என இந்த சட்டம் வரையறுக்கிறது. இவையனைத்துமே யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்தக் கதை போலத் தான்.

இயக்குபவர் இழப்பீட்டை முக்கியமான நோக்கமாகக் கொள்ளும் இந்த சட்டம், உபகரணங்கள் வழங்குபவரின் (அல்லது அவரின் ஊழியரின்) தரமற்ற அல்லது குறைபாடு கொண்ட உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவது போன்ற செயல்பாடுகளால் விபத்து நேரிட்டால், அவர்களை உள்ளிழுத்துப் பொறுப்பாக்கிட உறுப்பு 17(b)-ன் மூலம் வழிவகை செய்கிறது. இதுதான் இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஆகவே தான் இதை நீர்த்து போக வைக்கும் சட்ட திருத்தம் கொண்டு வருகிறார்கள்.

லாபம் ஒன்றை மட்டுமே கருத்திற் கொள்ளும் ஏகாதிபத்திய மனப்பாங்கு கொண்ட அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கு எந்தவிதமானத் தங்குதடையும் ஏற்புடையதல்ல. பிற நாடுகளில் அனுபவிக்கும் கட்டற்றச் சுதந்திரத்தை இந்தியாவிலும் அனுபவிக்கத் துடிக்கிறார்கள் அவர்கள். இந்தியா–அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவர்களால் ஓர் அணுஉலையைக் கூட இந்தியாவிற்கு விற்க முடியவில்லை.

கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்தபோது, அமெரிக்காவை மகிழ்விப்பதற்காக, விநியோகஸ்தரை உள்ளிழுத்துப் பொறுப்பாக்கும்  உறுப்பு 17(b) பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாமென்றும், விநியோகஸ்தருக்கும், இந்திய அணுமின் கழகத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் உரிய விதிகளை ஏற்படுத்தி அதனைக் கடந்துச் சென்று விடலாமென்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது டிரம்ப்போடு ஒப்பந்தம் போட மோடி திட்டமிடுகிறார்.

இழப்பீடுச் சட்டத்தில் போகிறப் போக்கில் குறிப்பிடப்படும் உள்ளிழுத்துப் பொறுப்பாக்கும் உறுப்பு 17(b) கூட அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லை. மொத்தப் பொறுப்பையும் அணுஉலைகளை இயக்குபவர் கைகளில் ஒப்படைத்துவிட்டு, முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்ளவே அவர்கள் விரும்புகின்றனர்.

இயக்குபவர் மட்டுமே இழப்பீடு வழங்குவதென்றால், இன்றைய நிலையில் இந்தியாவில் இந்திய அணுமின் கழகம் (என்.பி.சி.ஐ.எல்) மட்டுமே அணுமின் நிலையங்களை இயக்குகிறது என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இது மக்கள் வரிப்பணத்தில் இயக்கப்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆக மொத்தத்தில், இந்திய அரசு நம்முடையப் பணத்தையே நமக்கு இழப்பீடாக வழங்கிக் கொண்டிருக்க, வெளிநாட்டுக் கம்பெனிகள் கையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ‘ஜுட்’ விடலாமென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஏற்பாடு.

மேலும், இழப்பீடு வழங்கப்படவேண்டிய காலக்கட்டத்தை சொத்துக்கள் இழப்புக்கு 10 வருடங்கள் என்றும், தனிப்பட்டக் காயங்களுக்கு 20 வருடங்கள் என்றும் இந்த சட்டம் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. அணுமின் நிலைய விபத்து ஆண்டாண்டு காலமாய் அனைவரையும் அவதிக்குள்ளாக்கும் போது, இம்மாதிரியான வருடக் கணக்குகளும், உச்சவரம்புகளும் பத்தாம் பசலித்தனமானவையாகவே அமைகின்றன.

ஏராளமான ஓட்டைகளை உள்ளடக்கியச் சட்டத்தை  மன்மோகன் சிங்  நிறைவேற்றினார் என்றால், நரேந்திர மோடி அரசோ குறைந்தபட்ச பாதுகாப்பு தந்த அந்த சட்டத்தையும்  நீர்த்து போகச் செய்து  தற்போது விநியோகஸ்தர்களுக்குச் சாதமாக மாற்றியமைக்க முயற்சிக்கிறது. இதனை நாம் அனைவரும் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு, நல்வாழ்வுக்கு முன்னுரிமை வழங்க முன்வராத எந்த இந்திய அரசையும், வெளிநாட்டையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது, கூடாது! இந்தியர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா என்ன..? இல்லை, அதன் மதிப்பு மகத்தானது என்பதை உரக்கச் சொல்வோம்!

கட்டுரையாளர்; சுப உதயகுமாரன்

(அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்)

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time