சாம தான பேத தண்டத்தால் ஆட்சிக்கு வந்த பாஜக!

-பி. ராமன்

டெல்லியில் நடந்தது போல இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் தேர்தல் சூழ்ச்சிகள் அரங்கேறுமானால், இனி இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்க முடியாது. இந்திய வரலாற்றில் ஆம் ஆத்மியை வீழ்த்த அமல்படுத்தப்பட்ட அதிகார அத்துமீறல்களை மிஞ்ச வேறொன்று கிடையாது; முழு விபரங்கள்;

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி குறித்து வெளியாகும் விமர்சனங்கள், பழைய ஊழல் எதிர்ப்பு போராளியே மதுபான ஊழல் மற்றும் ‘ஷீஷ் மஹால்’ வசீகரத்திற்கு எவ்வாறு பலியானார் என்பதையே அதிகம் சொல்கின்றன. ஆனால், சிலர் மட்டுமே கட்சியை அவமானப்படுத்தி, அதை பலமிழக்கச் செய்ய மேற்கொள்ளப்பட்ட விரிவான சூழ்ச்சிகள் மற்றும் மறைமுக நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஹரியானா தேர்தல் தொடங்கி, வெற்றிக்காக  மோடியின் பேரணிகள் மற்றும் சாலை நிகழ்ச்சிகளை மட்டுமே நம்பியிருப்பதை பாஜக நிறுத்தி விட்டது. பிரதமர், இப்போது நட்சத்திர பிரச்சாரகர்களில் ஒருவர் மட்டுமே. பழைய பிரச்சாரஉத்தி நுட்பமான  திட்டங்களால் மாற்றப்பட்டுள்ளது.

பாஜகவின் நவீன தேர்தல் வெற்றி வியூகத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்;

# அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களின் குணநலன்களைப் படுகொலை செய்தல்,

# கவர்னர் தலையிடுவதன் மூலம் மாநிலங்களின் நிர்வாகத்தை நெரித்தல், மத்திய நிதியை நிறுத்தி வைத்தல் அல்லது மறுத்தல்,

# வாக்காளர் பட்டியலில் வேண்டப்பட்டவ அளவுக்கு இல்லாத ஆட்களை சேர்த்தல் மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்களை நீக்குதல்கள் மூலம் வாக்காளர் பட்டியலையே மாற்றுதல்1

# அபரிமிதமான இலவசங்கள்! அதிரடி பண விநியோகம்!

இவை யாவும் ஹரியானாவில் கள சோதனைக்கு உட்படுத்தப்பட்டன! பின்னர்< மகாராஷ்டிராவில் பயன்படுத்தப்பட்டன! இப்போது டெல்லியில் ஆட்சியின் இரண்டாவது மிக சக்தி வாய்ந்த நபரால் நேரடியாக அவரது வடக்குத் தொகுதி அலுவலகத்திலிருந்து நேரடியாக மேற்பார்வையிடப்பட்டது.

டெல்லி தேர்தலில், மத்திய அரசின் ஒவ்வொரு பிரிவும் பாஜகவின் வெற்றிக்காக பங்கேற்றது: லெப்டினன்ட் கவர்னர், காவல்துறை, ED மற்றும் CBI, நகராட்சி நிறுவனம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், போன்றவற்றோடு மற்ற அதிகாரிகள், ஊழியர்கள் சில பாத்திரங்களை வகித்தனர்.

ஆம் ஆத்மி ஆட்சியை பலவீனப்படுத்துதல்

2021 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் NCT சட்டத்தில் திருத்தம் செய்து, நியமன அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து மையத்திற்கு மாற்றியது. அடுத்து டெல்லி நகராட்சி நிறுவன சட்டம் வந்தது. ஆம் ஆத்மி கட்சி அனைத்து தரப்பிலிருந்தும் முற்றுகையிடப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால், அவரது நம்பகமான துணைத் தலைவர் மணீஷ் சிசோடியா, மற்றும் சஞ்சய் சிங் எம்பி உள்ளிட்ட அதன் உயர்மட்டத் தலைவர்கள் அமலாக்க நிறுவனங்களால் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்தில், புதிய முதல்வர் அதிஷி கைது செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் 2024 க்கு இடையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் கெஜ்ரிவால் மற்றும் மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட காலமாக இல்லாததால் ஆம் ஆத்மி கட்சிக்கு தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த அமைப்பும் சீர்குலைந்தது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பாஜகவுக்குச் செல்ல மிரட்டல் மற்றும் தூண்டுதல்கள் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வாக்குப் பதிவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, ஏழு தற்போதைய எம்எல்ஏக்கள் உட்பட எட்டு தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கெஜ்ரிவால் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மற்றும் குடிசைவாசிகள் வாக்களிப்பதைத் தடுக்க, காவல்துறை தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து புகார் அளிக்க முதல்வர் அதிஷி மற்றும் கெஜ்ரிவால் முந்தைய நாள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்தனர். அரசு மட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆம் ஆத்மி நிர்வாகத்தை பயனற்றதாக மாற்றினார்.

மே 2022 இல், அவர் அனில் பைஜாலை மாற்றி டெல்லியின் லெப்டினன்ட் கவர்னராக தனது நம்பகத்துக்குரிய வி.கே. சக்சேனாவை நியமித்தார். பைஜால் ஆம் ஆத்மிக்கு குடைச்சல் கொடுத்தார் என்றாலும் அது போதுமானதாக இல்லை போலும். அவரது பதவிக்காலம் கெஜ்ரிவாலுடன் தொடர்ச்சியான மோதலால் குறிக்கப்பட்டது.

அனில் பைஜால், வி.கே.சக்சேனா

ஆனால், சக்சேனா  அமித் ஷாவுடன் சிறந்த புரிதலுடன் காணப்பட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவையும் லெப்டினண்ட் கவர்னர் எதிர்த்தார். இவ்வாறாக நிர்வாகத்தை முடக்கினார். கிடைக்கக் கூடிய ஒவ்வொரு பிரச்சினையிலும் ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு எதிராக துணைநிலை ஆளுநரின் வசைபாடலைப்  ஊதிப் பெருக்குவதை மாநில பாஜக தலைவர்கள் ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

2021 ஆம் ஆண்டு NCT சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தம் டெல்லியில் பாராளுமன்ற ஆட்சி முறையை  சவப்பெட்டியாக்கி அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக இருந்தது. அது ‘டெல்லி அரசாங்கம் என்பது துணை நிலை ஆளுனர்  தான் (எல்-ஜி) என்பதை கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காட்டியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரம் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அதிகார மாற்றம் செய்யப்பட்டது. இது மக்களின் விருப்பத்திற்கு எதிரான கொள்கையை என்பதை உணர மறுத்தது. இது அரசின் கடுமையான நிர்வாக நெருக்கடிக்கும் வழிவகுத்தது. துறை செயலாளர்கள், இளைய அதிகாரிகள் கூட, ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கு பகிரங்கமாக கீழ்ப்படிய மறுத்தனர். இரண்டுங்கெட்டான் விசுவாசத்துடனும், உண்மையான அதிகாரம் எங்கே உள்ளது என்பதை அறிந்தும், பல மூத்த அதிகாரிகள் மத்திய அரசின்  ஆதரவாளர்களாக செயல்பட்டனர்.

பெரும்பாலும் அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல், அவர்கள் அமைச்சரவை ஆவணங்களை துணை நிலை ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பினர். இதனால், டெல்லி ராஜ் பவன் ஒரு போட்டி அதிகார மையமாக மாறியது.  டெல்லி அதிகாரிகள் அமைச்சர்களின் எழுத்துப் பூர்வ உத்தரவுகளை மீறுவதாக கெஜ்ரிவால் பகிரங்கமாகக் கூறினார். இதற்கு பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்.

முதலமைச்சரான அதிஷி அவர்கள் தலைமைச் செயலாளர் தனது எழுத்துப்பூர்வ வழிமுறைகளை நிறைவேற்ற மறுத்ததாக புகார் கூறினார்.

ஆட்சியில் நடக்கும் அடுத்தடுத்த குழப்பங்கள் மோடி-ஷா ஜோடியின் இரட்டை நோக்கத்திற்கு உதவியது. முதலாவதாக, ஆம் ஆத்மி அமைச்சர்களை திறமையற்றவர்களாக சித்தரிக்க இது அவர்களுக்கு உதவியது. இரண்டாவதாக, தேர்தல்களின் போது, ​​வாக்காளர்களை மிரட்டுவதற்கு இதை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்தினர்.

ஹார்வர்ட் பொதுக் கொள்கை பட்டதாரி அக்ஷய் மராத்தே கூறுவது போல்: “டெல்லி வாக்காளர்களின் தலையில் ஒரு துப்பாக்கி ஏந்தப்பட்டது: ‘நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், உங்கள் நகர அரசாங்கம் செயலிழந்து போகும், அது வீழ்ச்சியடையும்’ என பகிரங்கமாக சொன்னது.

கடந்த நவம்பரில் நடந்த மகாராஷ்டிரா தேர்தல்களுக்குப் பிறகு, இந்தப் பத்திகளில் பாஜகவின் தேர்தல் உத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவாதித்தோம். இது இப்போது ஒரு விரிவான வரைபடமாக உருவாகியுள்ளது. மோடி வழிபாட்டிலிருந்து மாநில-குறிப்பிட்ட நுட்பமான நிர்வாகத்திற்கு மாறுவது ஹரியானா தேர்தல்களுடன் தொடங்கியது. இத்தனை ஆண்டுகளாக, மோடியின் ஆடம்பர ரோட் ஷோக்களுடன் கூடிய மெகா பேரணிகள் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக அமைந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற ஒரு டஜன் பேரணிகள் மற்றும் தெரு நிகழ்ச்சிகள் எப்போதும் பாஜக வெற்றியை உறுதி செய்தன.

இதனால், இவை இருவரின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரி’ திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் அமைந்தன. இருப்பினும், அரசாங்கத்தின் மோசமான திட்டங்கள், தோல்வியுற்ற பொருளாதாரம் மற்றும் நிறைவேற்றப்படாத மோடியின் வாக்குறுதிகள் ஆகியவை மோடியின் செல்வாக்கை செல்லரித்தன. இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், இருவரும் நுட்பமான அரசியல் சதிகளுக்கு திரும்பினர்.

புதிய உத்தியானது, வாக்காளர் பட்டியல்களில் பூத்-நிலை கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள்; புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டன; ஏற்கனவே உள்ள பெயர்கள் மொத்தமாக நீக்கப்பட்டன; எதிர்க்கட்சிகள் மக்களவைத் தேர்தலில் அவர்கள் முன்னிலை வகித்த தொகுதிகளில் நீக்கங்கள் நடந்ததாக குற்றம் சாட்டின.

டெல்லியில், 2024 மக்களவைத் தேர்தலுக்கும் 2025 சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையிலான ஏழு மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக 3,99,362 பேர் அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, 2020 சட்டமன்றத் தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,16,648 அதிகரித்துள்ளது. தெளிவாக, தேர்தலுக்கு முந்தைய வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெருமளவு அதிகரிப்பு வேகமாக ஒரு தேசிய வடிவமாக மாறி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஐந்து மாதங்களில் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மகாராஷ்டிராவில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார். 2019 மற்றும் 2024 க்கு இடையிலான ஐந்து ஆண்டு காலத்தில் 32 லட்சம் புதிய வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் வாக்காளர் மக்கள் தொகை 9.7 கோடி என்றும், இது மகாராஷ்டிராவின் மொத்த வயதுவந்தோர் மக்கள்தொகையான 9.54 கோடியை விட அதிகம் என்றும் காந்தி கூறினார். தேர்தல் ஆணையம் விரைவில் முழு உண்மைகளை வெளியிடும் என்று கூறியது, ஆனால் இவை இன்னும் காத்திருக்கின்றன.

சதிகளால் சாத்தியப்பட்ட வெற்றியின் சந்தோஷக் களிப்பு!

இலவசம் என்பது பாஜகவின் மற்றொரு வெற்றி அம்சமாகும். இலவசங்களை வழங்குவதற்காக எதிர்க் கட்சிகளை மோடி அடிக்கடி சாடியுள்ளார். ஜூலை மாதம் உத்தரபிரதேசத்தில் ‘வாக்குகளுக்கான இலவச  ​​கலாச்சாரம்’ நாட்டை ‘இருளுக்கு’ இட்டுச் செல்கிறது என்றும், அக்டோபரில் மத்தியப் பிரதேசத்திலும் இதே போல எச்சரித்தார். கர்நாடகாவில், எதிர்க்கட்சிகள் இலவசங்களால் ‘மாநிலத்தை கடனில் மூழ்கடிப்பதாக’ அவர் கூறினார். ஆனால், முரண்பாட்டைப் பாருங்கள். ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் இப்போது டெல்லியில், பாஜக இலவசங்களை விநியோகிப்பதில் அதி ஆர்வத்தை காட்டியது.

மகாராஷ்டிராவில், ரூ.1 லட்சம் கோடி செலவில் 200 இதுபோன்ற திட்டங்களை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது. டெல்லியில், இது மூன்று தவணைகளாக வந்தது. அதில் இலவச ஸ்கூட்டர்கள், மிதிவண்டிகள், ஒரு மகளின் திருமணத்திற்கு ரூ.51,000, ஏழை விதவைகளின் மகள்களுக்கு ரூ.51,000 சிறப்பு பரிசு, ஊனமுற்றோர், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் ஆகியவை அடங்கும்.

தேர்தல் ஆணையத்தின் சில நடவடிக்கைகள் கேள்விகளை எழுப்பியுள்ளன. படிவம் 17C ஐ பதிவேற்றம் செய்ய மறுத்ததற்கும், ஒவ்வொரு சட்டமன்ற சாவடியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட மறுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. “நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இது நடந்தது,” என்று கெஜ்ரிவால் கூறினார்.

பாஜகவின்  அடிமட்ட நிர்வாகத்தின் மற்றொரு கூறு, ஆளுமைப் படுகொலை ஆகும், அனைத்து மூத்த ஆம் ஆத்மி தலைவர்களும் ED/CBI வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கமக்களின் சந்தேகத்திற்கு பலியாகினர்.  பிரபல ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வலிமையால் ஆம் ஆத்மி மீதான அவ நம்பிக்கை அதிகரித்தது. அவை ஒவ்வொரு நாளும் ஊழல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டன. தனது பிரச்சார உரைகளில் ‘ஷீஷ் மஹால்’, ஜக்குஸி மற்றும் ‘ஆப்-டா’ (பேரழிவு) ஆகியவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் மோடியே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நன்றி; ‘தி வயர்’ இணைய தளம்

கட்டுரையாளர் ; பி. ராமன்

மூத்த பத்திரிகையாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time