திடீரென்று அகத்தியரைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்! அகத்தியர் விழாக்கள், கருத்தரங்குகள், கொண்டாட்டங்கள், வழிபாடுகள் என பல விதங்களில் மத்திய பாஜக அரசாங்கத்தால் அகத்தியர் தற்போது முன்னெடுக்கபடுவதன் பின்னணி என்ன? இதில் அரசியல் நோக்கங்கள் உள்ளனவா?
அகத்தியருக்கான விழா கொண்டாட்டத்தை முதலில் சுதா சேஷ் ய்யன் துணைத் தலைவராக உள்ள செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி வைத்தது. அவர்கள் பற்பல பார்ப்பன எழுத்தாளர்களையும், அவர்களையொத்த சிந்தனை போக்குகள்ளவர்களையும் அழைத்து அகத்த்தியர் தான் இந்த தமிழ்ச் சமூகத்தின் அகம், புறம் இரண்டிற்குமே அடிநாதமானவர் என்று விதந்தோத வைத்தனர்! அவர் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு பல கோடிகள் அள்ளி இறைக்கிறது.
ஆகா, இது போதாதா? தமிழ் எழுத்தாளர்கள் அகத்தியர் குறித்த தங்கள் கற்பனை சிறகை விரிக்க!
இதைத் தொடர்ந்து தமிழின் முன்னணி தமிழ் நாளிதழ்களில் அகத்தியரைக் குறித்த சிறப்பு கட்டுரைகள் வரிசை கட்டின!
இதற்கெல்லாம் சிகரம் வாய்த்தாற் போல மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தி வரும் வட இந்தியாவில் நடத்தும் காசி தமிழ் சங்கமத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருளே அகத்தியர் என்று அறிவித்து தமிழகத்தில் இருந்து சுமார் நான்காயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்களையும், இந்துத்துவ ஆதரவாளர்களையும் அழைத்து அகத்தியர் குறித்த பிரமிப்புகளை உருவாக்கி, நன்கு வேப்பிலை அடித்து அனுப்பி வைத்துள்ளனர்.
பார்ப்பனர்கள் தாங்கள் பரவி வாழும் இடங்களில் எல்லாம் அகத்தியரை அந்தந்த மண்ணின் மரபுக்கேற்ப சிருஷ்டித்து உருவாக்கினர். அங்குள்ள எளிய மக்கள் மீது தங்கள் சனாதன நோக்கத்தை நிறைவேற்ற அகத்தியரை அவர்கள் ஒரு கருவியாக்கிக் கொண்டனர்.
உதாரணத்திற்கு அகத்தியர் ராவணனை வென்றார் என்பது இலங்கையில் அகத்தியருக்கு தரப்பட்ட வடிவம் என்றால், தமிழ்நாட்டில் அகத்தியர் தான் தமிழ் மொழியை உருவாக்கியவர். தமிழ் இலக்கணத்தை உருவாக்கிய தொல்காப்பியருக்கே இவர் தான் ஆசிரியர் போன்ற கட்டுக் கதைகளாகும்.
இப்படி ஆதாரமற்ற 100 சதவிகித அக்மார்க் பொய்களை காலம்காலமாக கடத்தி வருவதன் வாயிலாக அதை பாமர மக்களின் நம்பிக்கையாகவே மாற்றி நிலை நிறுத்திவிடுவதே இவர்கள் வாடிக்கையாகும்.
ஏழு சப்த ரிஷிகளில் அகத்தியரும் ஒருவர் என்பது ஒரு சித்தரிப்பு!
சித்த மருத்துவத்தை வளர்த்தெடுத்த பதினென் சித்தர்களில் ஒருவர் அகத்தியர் என்பது இன்னொரு சித்தரிப்பு!
ரிக் வேதத்தில் இருக்கும் பாடல்களில் சிலவற்றை எழுதியவர் என்பது மற்றொரு சித்தரிப்பு!
நமது பெயர் விடுபட்டுப் போன சித்த மருத்துவ பாடல்களை களவாண்டு சித்தர்கள் பலர் எழுதி வைத்த சித்த மருத்துவக் குறிப்புகளுக்கெல்லாம் அகத்தியரை உரிமையாளராக்கிவிட்டார்கள்.
இப்படி எண்ணற்ற அகத்தியர்களை காலம்தோறும் சிருஷ்டித்து தாங்கள் கட்டமைக்க விரும்பிய ஒரு சமூக மன நிலையை சாத்தியமாக்கியபடியே வந்துள்ளனர் இந்த பார்ப்பனர்கள்!
அகத்தியர் இந்த அகிலத்திலேயே மாபெரும் சக்தி வாய்ந்தவர் என்ற மாயத் தோற்றத்தை நிலை நாட்ட அவர்கள் உருவக்கிய சில கதைகளை பார்ப்போம்;
அந்த ஆதிசிவன் கல்யாணத்தின் போது சிவன் கல்யாணத்தைக் காண தென்னிந்தியர் அனைவரும் வட இந்தியா நோக்கி பயணப்பட்டு விட்டதால், பூமி தென் திசையில் சமன் குறைந்து கீழே பாதாளத்திற்கு சென்று கொண்டிருந்ததாம்! இந்தச் சூழலை சமன் செய்ய அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினாராம், சிவன். இவர் ஒருவர் பல கோடி மக்களுக்கு சமமானவராம்!
தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவர் தொல்காப்பியர். அவர் உருவாக்கிய பாயிரத்தில் அகத்தியர் பெயர் இல்லை. நல்ல வேளையாக இது வரை அப்படி சொருகும் முயற்சியை யாரும் செய்யவில்லை.
பாரதியார் பாடலின் மூலமாக அகத்தியர் என்ற கற்பனை கதாபாத்திரம் பார்ப்பனர் என்பதும், வட இந்தியாவின் அரிய மைந்தன் என்பதும், தெரிய வருவதால், இவர்களின் சனாதனக் கருத்தாக்கத்தை காலந்தோறும் வலிமைப்படுத்த அகத்தியரை கருவியாக்கி உள்ளனர் என நாம் தெளிவு பெறலாம்.
அது சரி, தற்போது சுமார் நாற்பது ஆண்டுகளாக அதிகம் பேசப்படாமல் இருந்த அகத்தியர் பிரச்சாரம் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளதற்கான காரணம், தற்போது தமிழ் மக்கள் இந்துத்துவ பாஜகவை ஏற்க மறுக்கின்ற காரணமே! அகத்தியர் குறித்த மிதமிஞ்சிய மாயைகள்,அவரை தெய்வாம்ச முனிவராக சித்தரித்து சொல்லும் கருத்தாக்கங்கள் பாஜகவின் அரசியல் சித்தாந்தம் இங்கு வேரூன்ற மிகவும் உதவும் என்பதேயாகும்.
இந்த அகத்தியர் தமிழ் மரபில் எப்போது முதல் திணிக்கப்பட்டார். எதற்காக திணிக்கப்பட்டார் என்பதற்கு ஆய்வறிஞர் பொ.வேல்சாமி தரும் விளக்கங்கள் நமக்கு இன்னும் இதில் தெளிவைத் தரும்.
அவர் கூறுவதாவது;
தமிழ்ச் சிந்தனை வரலாற்றில் “அகத்தியர் மரபு“ என்பது கி.பி.8 ஆம் நூற்றாண்டை அடுத்து பொதுக் கருத்தியலில் இடம் பெறுகின்றது. சமய சார்பின்றியும், சநாதன பண்பை விலக்கியும் செயல்பட்டு வளர்ந்து வந்த தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் வருணாசிரமத்தையும், சாதியத்தையும் உள்ளடக்கிய ஒரு புதுவிதமான இலக்கிய மரபை “அகத்தியர் மரபு” என்ற பெயரில் “பிரபந்த இலக்கிய மரபாக” உருமாற்றி தமிழ் இலக்கியத்தின் சமய சார்பற்ற தன்மையை சநாதனமயமாக்குவதில் மூலவராக உருவாக்கப்பட்டவர் அகத்தியர் என்பதை பல சான்றுகளின் வழி நிறுவ முடியும். அகத்தியர் “சாதிநூல்” என்ற நூலையும் எழுதியிருக்கிறார். இவரைப் பின்பற்றி “பிரபந்த இலக்கண”த்தை எழுதிய நூல்களில் எல்லாம் நால்வருணம் சார்ந்தும் ( அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் ) சாதிகளின் அடிப்படையிலும் தமிழ்இலக்கியத்தைப் படைப்பதே முறையானது என்று கூறப்பட்டுள்ளது.
பன்னிரு பாட்டியல், வச்சனந்தி மாலை, நவநீத பாட்டியல், சிதம்பர பாட்டியல், இலக்கண விளக்க பாட்டியல் போன்ற இலக்கண நூல்களும் இந்த இலக்கணத்தைப் பின்பற்றி 8ம் நூற்றாண்டுக்கு அடுத்த எழுதப்பட்ட இலக்கிய நூல்களும் “அகத்தியர் மரபு” என்ற சாதியத்துடன் இணைக்கப்பட்ட இலக்கிய மரபை தெளிவாக வெளிபடுத்துகின்றன.
அகத்தியர் மரபு எத்தகையது என்பதற்கு தமிழின் சிறப்பு எழுத்தான ‘’ழ” கரத்தை சூத்திர எழுத்து என்றும், இந்த எழுத்தை உருவாக்கியவர் “எமதர்மன்” என்ற கூற்றுமே போதுமானதாகும்.
பிற்போக்குத் தன்மைகளை நன்கு புரிந்து கொண்ட “குடியரசு” பத்திரிக்கை 1931 இல் பேராசிரியர் நமச்சிவாய முதலியாரைக் கொண்டு “அகத்தியர் ஆராய்ச்சி’’ என்ற விமர்சன நூலை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது’’ என்கிறார் பொ.வேல்சாமி.
ஆய்வறிஞர் நமச்சிவாயம் தான் எழுதிய அகத்தியர் ஆராய்ச்சி நூலில், ’’தொல்காப்பியத்திலோ, சங்க நூல்களிலோ அகத்தியர் என்ற பெயரே இல்லை. எட்டாம் நூற்றாண்டுகள் முன்பு வரை அகத்தியர் என்ற சொல்லாடலே எங்கும் இல்லவே இல்லை. ஆனால், பிற்காலத்தில் தமிழ், சித்த மருத்துவம், வேதம், புராணங்கள்.. எல்லாவற்றிலும் நீக்கமற நிறைத்துள்ளது உயர்சாதி சமூகம்…”என்கிறார்.
திருவிளையாடல் புராணமோ ஒட்டுமொத்த கடல் நீரையுமே அகத்தியர் விழுங்கி சாதனை படைத்ததாக விளம்புகிறது.
திருநெல்வேலி புராணமோ சுப்பிரமணி சுவாமியிடம் இருந்து தமிழ் நாட்டை பாண்டியருக்கு பெற்றுத் தந்தவர் அகத்தியர் என்கிறது.
ஒரு புராணம் வாதாபி என்ற அரக்கனை அகத்தியர் தின்று செரித்தார் எனக் கூறி, அவரை நரமாமிசம் உண்டவர் என்கிறது.
ராமரும், சீதையும் காட்டுக்கு சென்ற போது ‘நாசிக்’ என்ற இடத்தில் உள்ள அகத்தியர் ஆசிரமத்தில் தங்கியதாக இராமாயண புராணம் கூறுகிறது.
இவை எல்லாவற்றிலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டவை என்பதேயாம்.
மதுரை தமிழ் சங்கம் தொடர்பான கதையாடல்களில் முதல் சங்கம், இடைச் சங்கம் இரண்டிலுமே தொடர்ந்து இருந்தவர் என்று சொல்வதன் மூலம் அகத்தியர் சுமார் 8140 ஆண்டுகள் வாழ்ந்ததாக கற்பிக்கப்படுகிறார்.
‘ச’ என்ற எழுத்தே மொழிக்கு முதலில் வராது என்கிறார் தொல்கப்பியர்! நாடகம் என்பதே தோன்றியிராத காலத்தில் நாடக இலக்கணத்தை உருவாக்கியவர் அகத்தியர் என கதைவிடுகின்றனர். தொல்காப்பியம், பத்து பாட்டு, பதினென் கீழ் கணக்கு போன்றவை உருவான காலங்களில் அகத்தியர் என்ற சொல்லாடலே கிடையாது.
ஆனால், 14 ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு விளக்க உரை எழுதிய நச்சினார்கினியன் என்பவர் அந்த விளக்க உட்ரை வழியாக கூச்ச நாச்சமின்றி அகத்தியரை சொருகுகிறார். தொல்கப்பியத்திற்கு முதன்முதலாக 11 ஆம் நூற்றாண்டில் விளக்க உரை எழுதிய இளம்பூரணர் அகத்தியர் குறித்து எதையும் எழுதவில்லை.
ஆக, இந்த ஆய்வின் வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ‘அகத்தியர் என்ற கற்பிதமே ஒரு சூது!’ தமிழ்ச் சமூகத்தை மூடத் தனத்தில் திளைக்க வைக்க உருவாக்கப்பட்ட சதி திட்டத்தின் தொடர்ச்சியாக அகத்தியர் முன்னெடுக்கபடுகிறார்!
‘அகத்தியர் தெய்வாம்சம் பொருந்திய முனிவர்’ என நம்ப வைக்கப்பட்டு, அவரது வழிபாடும் கூட முன்னெடுக்கபடுகிறது. இந்த வகையில் அகத்தியரை சிலை வடித்து எப்படி போற்றி வணங்குவது என்பதற்கு கூட போற்றி பாடல்கள் உள்ளன!
- தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
- சிவசக்திதிருமண தரிசனம் கண்டவரே போற்றி!
- தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
- விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
- கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
- சித்த வைத்திய சிகரமே போற்றி!
- சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
- இசைஞான ஜோதியே போற்றி!
- உலோப முத்திரையின் பதியே போற்றி!
- காவேரி தந்த கருணையே போற்றி!
- அகத்தியம் தந்த அருளே போற்றி!
- இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
- அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
- அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
- இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
- இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
Also read
நவீன அறிவியல் யுகத்திலும் கூட, ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருக்கிற காரணத்தாலும், அதிகாரத்தையும், பெரும் பண பலத்தையும் கொண்டு எழுத்தாளர்கள் கூட்டத்தை வளைத்து போட்டு பொய்மைகளை கட்டவிழ்த்துவிட்டு, அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை முட்டாள்களாக்கி, அடிமையாக்கி, அறிவியல் மொழியான தமிழை மீண்டும் புராண குப்பைக்கு கொண்டு போக திட்டமிடும் இந்துத்துவ ஆன்மீக அரசியலின் சூத்திரமே அகத்தியர் தான்!
தமிழ்ச் சமூகத்தை இளித்தவாயர்கள், விலை போகக் கூடியவர்கள் என உறுதியாக நம்புபவர்களே இதை செய்யத் துணிந்துள்ளனர். என்ன நடக்கவிருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
நன்றி. இந்துத்துவத்தின் தந்திரத்தை விளக்கும் அருமையான கட்டுரை.
சரியான நேரத்தில் எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை. மிக்க நன்றி
https://ta.wikisource.org/wiki/வரலாற்றுக்கு_முன்_வடக்கும்_தெற்கும்/அகத்தியர்_யார்%3F_எங்கே%3F
இந்தக் கட்டுரை அகத்தியர் பற்றிய பல கட்டுக்கதைகளை அலசுகிறது.
அருமைங்க…காசி தமிழ் சங்கத்திற்கு நானும் விண்ணப்பித்தேன்.ஆனால் அழைக்கவில்லை. எந்தெந்த வகையில் தமிழனை மூடனாக்கமுடியுமோ அதையெல்லாம் செய்கிறார்கள்!
தமிழர்களை ஏமாற்றா என் என்னவெல்லாம் செய்துள்ளனர் என்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. இது பற்றி அரைகுறையாகெ தெ தெரிந்த எனக்கு இக்கட்டுரை நன்கு புரிய வைத்துள்ளது. ஆசிரியருக்கு நன்றி.