நூலகத்துறையை ஊழலகத்துறையாக்கிக் கொண்டிருக்கும் அதிகாரிகள்!

எழில்முத்து

தமிழகத்தில் ஒரு காலத்தில் அறிவு கோயிலாகத் திகழ்ந்த நூலகத்துறை தற்போது சீரழிந்து கொண்டிருக்கின்றது.

மக்களுக்கும்,மாணவர்களுக்கும் அறிவு ஊற்றுக்கண்ணாக இருந்த நூலகத்துறை ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது. மக்களுக்கு வாசிக்கும் பழக்கமும்,அறிவுத் தேடலும் அதிகமாக உள்ள தற்போதைய காலகட்டத்தில் நூலகத்துறையோ முடக்கத்திலும், முறைகேட்டிலும் மூச்சுத் திணறி தவிக்கிறது.

தமிழகத்தில் புத்தக பதிப்பகங்கள்,வெளியீட்டு நிறுவனங்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே நூலகத் துறையின் ஆர்டர்கள் குறைந்தன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நூலகத்துறை கண்டு கொள்ளப்படாமல் போனது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பதிப்பகத்தார். விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் நூலகங்களுக்கு பெறப்படவேயில்லை!

தமிழகத்தில் பொதுநூலகத்துறை செயல்பாடு கருணாநிதி ஆட்சியிலும் சில குறைபாடுகள் இருந்த நிலையிலும் அது பதிப்பாளர் விற்பனையாளர்களின் நற்காலமாகவே அது திகழ்ந்தது. மேலும் படைப்பாளரே தம் படைப்பினை வெளியிட்டு நூலகத்துக்கு நூல்கள் அனுப்பி, அதற்கு தக்க பலனும் கிட்டியது.

ஆரம்பகாலங்களில் நூலகத்துறைக்கு இயக்குநர் – உதவி இயக்குநர் பொறுப்புகளுக்கு நூலகவியல் கற்று தேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டனர். பின்னர்,அந்த விதிமுறைகள் மீறப்பட்டன! அதன் பிறகு நூலகவியல் படிக்காத – நூலகம் குறித்தே அறியாத – தற்குறித்தனமான அதிகாரிகள் இயக்குராக – துணை இயக்குநராக நியமிக்கப்பட்டனர். அப்போது முதல் நூலகத்துறை சீர்கெட ஆரம்பித்தது!

1950 களில் மிகச் சிறிய அளவில் உருவாக்கப்பட்ட நூலகத்துறை கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு போன்றவர்களால் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டது. அது படிப்படியாக வளர்ந்து, இன்று மிகப் பெரிய கட்டமைப்பான நிலையில், தற்போது அக்கறை இல்லாத ஆட்சியாளர்கள்,அனைத்துக்குமே கமிஷன்,கட்டிங் எதிர்பார்க்கும் அதிகாரிகள் கூட்டணியால் கந்தர்வ கோலத்தில் உள்ளது.

பொதுவாக நூலகத்துறைக்கு நூல்கள் பெறுவது, மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கப்பட்டு அதிலிருந்தே நூல்கள் பெறப்படுகிறது. அந்த வரிப்பணம் மூன்றாண்டுகள் முடங்கிப் போனது.

தலை நகரான சென்னையில் உள்ள நூலகங்களில் சுமார் சரிபாதியானவற்றுக்கு நூலகர்களே இல்லை என்ற நிலை நிலவுகிறது. இதுபோலவே மாவட்ட மைய நூலகங்களிலும்,கிளை நூலகங்களிலும் முறையான நியமனங்கள் இல்லை.

தமிழக நூலகத்துறையின் கட்டமைப்பு;

 

1.கன்னிமாரா பொது நூலகம்1
2.அண்ணா நூற்றாண்டு நூலகம்1
3.மாவட்ட மைய நூலகங்கள்32
4.கிளை நூலகங்கள்1926
5.நடமாடும் நூலகங்கள்14
6.ஊர்ப்புற நூலகங்கள்1915
7.பகுதி நேர நூலகங்கள்745
மொத்தம்4634

 

இந்த வகையில் பொது நூலகத்துறையில், தினக்கூலி அடிப்படையில், 1,000க்கும் மேற்பட்ட நூலகர்களும், 2,500க்கும் அதிகமான தூய்மை பணியாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் ஊதியமோ மிகக் குறைவு! வறுமைகோட்டிற்கு கீழ் நிலையில் உள்ளவர்களே இந்த வேலையாவது கிடைத்ததே என்று செயல்பட்டுவருகின்றனர். கொரனா காலத்தில் நூலகங்கள் மூடப்பட்ட காலகட்டத்தில் அவர்களுக்கு சம்பளம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களை சொல்லிமாளாது! முக்கியமான இந்த துறைக்கு நிரந்தர பணியாளர்களை நியமிப்பதும், அவர்களுக்கு நியாயமான ஊதியத்தை உறுதிபடுத்துவதும் அரசின் கடமையாகும்!

இதே போல கொரொனா காலகட்டத்தில் அனைத்து புத்தக பதிப்பு பணிகளும்,விற்பனையும் சரிந்து பதிப்பாளர்கள் பொருளாதார சிக்கல்களில் உழன்றுவருகின்றனர்.

இந்த நிலையில் 2018-19-க்கான மாவட்ட நூலகங்களுக்கு நூல்களைப் பெற பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களுக்கு நூல்களின் மாதிரி பெற, அதன் இயக்குநர் நாகராஜ் முருகனால் அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டு பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

கடந்த மூன்று ஆண்டுகளாக பதிப்பகத்தார் – விற்பனையாளர்களால் நூலகங்களுக்கு நூல்கள் பெறுவது கமிஷன் மூலமே என்பதே நிதர்சனம்.

கருணாநிதி ஆட்சி இறுதி காலத்தில் நூல்கள் பெறுவதில் கட்சி ஆதரவு பதிப்பாளர்- விற்பனையாளர் நூல்கள் சப்ளை ஆதிக்கம் ஆரம்பித்தது உண்மையே! ஆனாலும், முறையாக நூல்கள் பெறப்பட்டு அதற்கான தொகையும் குறித்த காலத்தில் பதிப்பகத்தார் பெற்றனர்.

ஆனால், இதனைக் காரணம் காட்டியே ஜெயலலிதா நூலகத்துக்கு ஆண்டுதோறும் நூல்கள் பெறுவதை மூன்றாண்டுகள் நிறுத்திவைத்தது ஒரு சிறிதும் ஏற்புடையதல்ல!

பின்னர் ஜெ.ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த வீரமணியிடம்  பதிப்பாளர்   – விற்பனையாளர் தொடர் கோரிக்கை வைத்தையடுத்து ஒரளவு நூல்கள் பெறப்பட்டன.ஆனால்,நூல் ஆர்டர் பெற 20 சதம் முதல் 30 சதம் வரை கமிஷன் தர வேண்டிய அவல நிலை தோன்றியுள்ளது!

மேலும், பிடி.எஸ் எனும் பள்ளிகளுக்கு நூல்கள் ஆண்டும் 500 நூல்கள் பெற ஆணயில் இடைத்தரகர்கள் உள்ளே புகுந்து தலைமை ஆசிரியர்கள் துணையோடு  நூல்கள் விநியோகம் செய்தனர். இதில் மேலும் கொள்ளையாக அயலக – அதாவது ,இறக்குமதி நூல்கள் – ஒரு ஆண்டுக்குப் பிறகு பழைய புத்தகம் என்று ஒதுக்கப்பட்டு எடைக்கு போய் விடக்கூடிய நூல்களை வாங்கி பள்ளிகளுக்கு அதிக விலைக்கு  தந்துள்ளனர்.

இதில் தலைமையாசிரியருக்கு ஒரு கமிஷன் சென்றுவிடும். இதில் சில பதிப்பகத்தார் -ஏஜெண்டுகள் – நூலக இயக்குநர் – என கமிஷன் பெற்று கொள்ளையடித்தனர். இதுவே நூலகத்துறையில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இது குறித்து பதிப்பக – விற்பனையாளர் சங்கம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

இப்போது 1918 – 19 ஆண்டுக்கான நூல்கள் பெறுவது குறித்து பொது நூலகத்துறை இயக்குரால் ’சாம்பிள்’நூல்கள்( மாதிரி) அனுப்ப கோரி செய்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பதிப்பகத்தார் சிலரிடம் அணுகியபோது,” சார் கொரானா வால் நொடிந்து போயிருக்கிறோம். சென்ற ஆண்டு கமிஷன் கொடுத்து, ஆர்டர் பெற்றும், பாதி மாவட்ட நூலகங்களிலிருந்து இன்னும் பணமே வரவில்லை. பணம் பெறுவதற்கும் கமிஷன் கொடுத்தால் தொழிலே செய்யமுடியாது. தற்போது, மீண்டும் நூல்களுக்கு கமிஷன் தந்து ஆர்டர் வாங்கி எப்படி நூல்களை அனுப்ப முடியும்? என்று எதிர் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டுகள் கமிஷன் கொடுத்து நூல்களை நூல்களை பார்த்தபோது கண்ணீர் வடிக்கும் நிலையே. அதாவது தரமற்ற தாள்., சரியான அச்சு இல்லாமை, தரமற்ற கட்டமைப்பு (பைண்டிங்) என நூலகத்தில காட்சி அளிக்கின்றது! அதிகாரிகள் கமிஷன் போக மீதி பணத்திற்கு இப்படித் தான் – இந்த தரத்தில் தான் – புத்தகம் தர இயலும் என்று ஒரு சிலர் குறிப்பிட்டனர்.

மேலும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு பதிப்பாளர்” நூலக ஆர்டரை நம்பியே நாங்கள் பதிப்பகம் நடத்துகிறோம். புத்தகக் கண்காட்சி அனைத்துக்கும் புத்தகம் கொண்டு விற்பனை செய்ய முடியவில்லை. முன்பு போல் புத்தக விற்பனை இல்லை. சென்றமுறை நூலக ஆணைக்கு 24 புத்தகங்கள் தந்தேன். கமிஷன் முன்பணமாக சில லட்சமும் தந்தேன். ஆனால் எனக்கு ஆர்டர் வந்தோ வெறும.6 நூல்கள் மட்டுமே.. அதிலும் இன்னும் 12 நூலகங்களிலிருந்து சப்ளை செய்ததற்கான பணம் வரவில்லை. இப்போது கொரானா நெருக்கடியால் பதிப்பகத்தை மூடியும், கடைவாடகையே கொடுக்க முடியாமலும் தவிக்கிறோம். மாவட்டங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளும் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கிறோம். இந்தச் சூழலில் எப்படி மாதிரி நூல்பிரதிகள் தருவது என விழிபிதுங்கி நிற்கிறோம்” என்றார்.

இது குறித்து பப்பாசி செயற்குழு உறுப்பினரான டிஸ்கவரி புக் பேலஸ்  வேடியப்பனிடம் கேட்டபோது,”அரசு பொது நூலகத துறை மாதிரி நூல்பிரதிகள் பெற இன்ன நாள் இறுதிநாள், இந்தந்த நெறிமுறைகள் என்றெல்லாம் நிபந்தனை போட்டு புத்தகம் வாங்குகிறது. அது போல் அதற்கான தொகையை குறித்த காலத்தில் மாவட்ட நூலகங்கள் பதிப்பகத்தார் – விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டாமா?  இதற்காக நூலக இயக்குநர் மாவட்ட நூலகங்களுக்கு ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? ஆண்டுதோறும் ஒரு சில மாவட்டங்களில் பதிப்பகத்தாருக்கு நூல்களுக்கான தொகை வருவது இல்லை. தற்போது அந்தப் பணத்தைப் பெறவும் ஒரு கமிஷன் கேட்கிறார்கள். அதனாலேயே நாங்கள் நூல்கள் தருவதில்லை. இதற்கொரு சரியான முடிவு எடுக்க எங்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.” என்றார்

கொரொனா காலத்தில் புத்தக விற்பனை இல்லை. மேலும் வாசிப்பு பழக்கம் நவீன தொழில்நுட்பத்தின் விளைவால் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அரசும் – நூலகத்துறை அதிகாரிகள் மற்றும் இயக்குநரும் – கமிஷன் வாங்குவதை கைவிட்டு, நேர்மையாக செயல்பட்டு, எங்கள் வாழ்வாதாரத்துக்கும்,தமிழக மக்களின் வாசிப்பிற்கும், அறிவு தேடலுக்கும் துணை நின்று ஒத்துழைப்புத் தர வேண்டும்” – என்பதே பதிப்பகங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time