இரு மொழிக் கொள்கையும், தமிழ் வழிக் கல்வியும் !

-சாவித்திரி கண்ணன்

ஈராயிரம் ஆண்டு மொழி வரலாற்றில் சமஸ்கிருதமோ, பிராகிருதமோ என்றுமே தமிழ் மக்களால் ஏற்கபட்டதில்லை. மன்னர் ஆட்சி காலங்கள் பலவற்றில் கல்வி மொழியாக சமஸ்கிருதமே கோலோச்சியது. தாய் மொழியாம் தமிழ் மொழிக் கல்வியே கூட இங்கு இரு நூற்றாண்டுக்கு முன்பு தான் எளிய தமிழ் மக்களுக்கு சாத்தியமானது! முழு விபரம்;

”தமிழகத்தின் இரு மொழிக் கொள்கைக்கு 2000 வருட வரலாறு உள்ளது” என எந்தச் சான்றும், ஆவணங்களுமின்றி சிலர் கதையளக்கிறார்கள்..!

தமிழ்நாட்டு மக்கள் வரலாறு நெடுகிலும் ஒரே மொழியைத் தான் ஏற்று வாழ்ந்துள்ளனர்.  இரு மொழி கொள்கை என்பது கடந்த இரு நூற்றாண்டுகள் சம்பந்தப்பட்டது தான்!

தமிழோடு பிராகிருதமும் இருந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்திலும், படித்த மிகச் சிலரின் மொழியாக மட்டுமே அது புழக்கத்தில் இருந்துள்ளது.

அதே போல சமஸ்கிருதம் இங்கு பல்லவ, சோழ  அரசர்களால் கல்வி மொழியாக வளர்த்தெடுக்கப்பட்ட காலத்தில் கூட , உயர் சமூகத்தைச் சேர்ந்த வெகு சிலரின் புழக்க மொழியாகத் தான் அது தமிழ் சமூகத்தில் இருந்துள்ளது! மிகச் சிறுபன்மையினராக உள்ள உயர்சாதியிலுமே கூட கல்விக்கான வசதி வாய்ப்புள்ளவர்களே  சமஸ்கிருதம் படித்தனர். அந்த சாதியில் உள்ள பெண்களே அதை படிக்க அனுமதிக்கப்படவில்லை. இதர சாதியினரும் சமஸ்கிருதம் படித்ததில்லை.

என்றுமே, தமிழ்நாடு தழுவிய அளவில் சமஸ்கிருதம் மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை. உண்மை இவ்வாறு இருக்க, சமஸ்கிருதமும், தமிழுமாக இங்கு இருமொழி இருந்ததாக சந்தடி சாக்கில் கதைப்பது யாருக்கு ஆதரவான குரல் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

நாயக்கர்கள் ஆட்சியிலும் தமிழ்நாட்டில் தெலுங்கு திணிக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் எதுவுமில்லை.

ஆனால், தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றில் தமிழைத் தவிர, இன்னொரு மொழி அதிக அளவு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றால், அது ஆங்கிலம் தான்!

காரணம், அந்த மொழி தான் தாழ்த்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கல்வி கற்கவும், அரசுப் பணிகள் பெறவும் வாய்ப்பளித்தது.  சகல தரப்பு பெண்களையும் கல்விக் கூடத்திற்கு வரவழைத்து கற்க  வாய்ப்பு தந்தது. கிழக்கிந்திய கம்பெனியார் இங்கு கல்விக் கூடங்களை நிறுவிய காலத்தில் தமிழர்களின் தாய் மொழிக் கல்விக்கு பெரிய முக்கியத்துவம் தந்தனர்.

அதுவும், தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் அரசாணை 1822-ல் கிழக்கிந்திய கம்பெனியாரால் தான் கொண்டு வரப்பட்டது. அந்த காலத்தில் தொடங்கப்பட்ட  பொறியியல் கல்வி சார்ந்த உயர்கல்வி கூடங்களில் கூட, தமிழையும் ஒரு பாட மொழியாக வைத்து திருக்குறள் உரையை பாடமாக வைத்திருந்தது கிழக்கிந்திய கம்பெனி.

தமிழ்நாட்டில் 1857 இல்   ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட “சென்னைப் பல்கலைக் கழகம்” தான் தமிழ் இலக்கியங்கள்,  கல்லூரி மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் சேர்த்து பாடப் பகுதியாக வைத்தது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தான் உ.வே.சாமி நாத அய்யர்  சி.வை.தாமோதரம் பிள்ளை, சேலம் இராமசாமி முதலியார் ஆகியோரின் சங்க இலக்கிய கண்டெடுப்புகள் பாடமாக வைக்கப்பட்டது. இவ்விதம் தமிழ் மன்னர்களால் புறக்கணிக்கப்பட்ட தமிழை ஆங்கிலேயர்கள் வந்து மீட்டுக் கொடுத்த அவலம் இங்கு அரங்கேறியது என்பதை நமது அறம் இணைய இதழில் ஆய்வறிஞர் பொ.வேல்சாமி

மன்னர்கள் மறுத்த கல்வியை ஆங்கிலேயர் வளர்த்தனர் என்ற தலைப்பில் எழுதி உள்ளார்!

ஆங்கில மொழி கற்றதன் வழியாகத் தான் எளிய தமிழ் நாட்டு மக்கள் வரலாற்றில் முதன் முறையாக பட்டம், பதவி, சமூக அந்தஸ்து, மரியாதை ஆகியவற்றை வாழ்க்கையில் பெற்றனர். வெளி நாடுகள் சென்றும் நல்ல வேலை வாய்ப்புகளும், மரியாதையும் பெற்றனர். இந்த வகையில் சுமார் 200 ஆண்டுகாலமாக தமிழ் சமூகத்தில் கற்க விரும்புவோரின் மொழியாக ஆங்கிலம் உள்ளது.

அதிலும், தமிழகத்தில் நீதிகட்சி 1920 –ல் ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை உருவாகிறது. இந்த வகையில் நமது இருமொழிக் கொள்கை வரலாறு என்பது சரியாக நூற்று சொச்சம் ஆண்டுகள் மட்டுமே சம்பந்தப்பட்டதாகும். மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் அவசியம் என்று பிரிட்டிஸ் ஆட்சியில் சட்டம் வரக் காரணமாக இருந்த பார்ப்பன சூதை நீதிக் கட்சி விலக்கியது.

அதே சமயம் நாம் கல்விப் புலத்தில் இரு மொழிக் கொள்கையை முறையாக அமல்படுத்தவில்லை என்பது நிச்சயம் கவனத்திற்கு உரியது.  சுதந்திரத்திற்கு பிறகான கல்விப் புலத்தில் மெல்ல, மெல்ல ஆங்கிலம் மட்டுமே பிரதானமாக்கப்பட்டு, தமிழ் மிகவும் புறக்கணிக்கப்பட்டு வருவது கண் கூடான உண்மையாகும். படித்த சில தமிழ் குடும்பங்களில் ஆங்கிலம் பேச்சு மொழியாகவே மாறி வருவதும், தமிழே கற்காத தலைமுறையினர் அதிகரித்து வருவதும் போர்க்கால அடிப்படையில் கவனிக்க வேண்டியதாகும்.

இன்றைக்கு பார்ப்பனர்களாலும், உயர் சாதிக்காரர்களாலும் நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் கூட தமிழ் பாடத்தில் சமஸ்கிருத சொற்கள் நுட்பமாக நுழைக்கப்பட்டு வருகின்றன. இதை தடுப்பார் யாருமில்லை..!

இது தமிழ் பாடம் என்ற பெயரில் புகுத்தப்படும் சமஸ்கிருத சொல்லாடல்கள்!

இன்றைக்கு, ”மும்மொழி கொள்கை ஏற்கமாட்டோம். இந்தி திணிப்பை  ஏற்கமட்டோம்” என தமிழக அரசு சொல்வது ஏற்புடையது தான் என்றாலும், இந்தியைத் தவிர்த்த தேசியக் கல்வியின் அனைத்து ஆபத்தான கூறுகளையும் தமிழக அரசு அமல்படுத்தி வருவது முற்றிலும் நேர்மையற்ற செயல்பாடாகும். இவை குறித்த முறையான விவாதங்கள் இன்றி, வெறும் இந்தி எதிர்ப்பு குறித்த பேச்சுக்கள் உண்மையான கள நிலவரத்தை அறியவொட்டாமல் திசை திருப்பும் முயற்சியாகும். குறிப்பாக, தற்போது தமிழ் நாட்டரசின் பள்ளிகளில்  தமிழ் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கில வழிக் கல்வி முதன்மை பெறுவதும், உயர் கல்வித் தளங்களில் தமிழ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு வருவதும் மிகவும் கவலைக்குரிய அம்சங்களாகும்.

இதையெல்லாம் பேசாத இரு மொழிக் கொள்கையை குறித்த சொல்லாடல்கள் பயனற்றவை. இன்றும், மக்கள் மொழி என்றால், அது தமிழ் மட்டுமே! ஜெர்மன், ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, சீனா போன்ற வெற்றி பெற்ற  நாடுகளில் கூட தாய் மொழி தான் முக்கியமானது. ஆங்கிலம் இரண்டாம் மொழி தான்! முக்கிய மொழியல்ல!

அடுத்ததாக தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான காரணங்கள், நியாயங்கள் வித்தியாசமானவை!

1938 ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம்

 

இங்கு பார்ப்பன சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு என்பது தான் இந்தி எதிர்ப்புக்கு வித்திட்டது. முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1938 –ல் தமிழகத்தில் நடந்த போது, இங்கு சமஸ்கிருதம் கலந்த மணிப்பிரவாளத் தமிழ் தான் நுணுக்கமாக கதைகள், கட்டுரைகள், சினிமா, மேடை பேச்சுகள் யாவற்றிலும் நீக்கமற நிறைந்திருந்தது.  பார்ப்பன எழுத்தாளர்களும், ஊடகங்களும் மணிபிரவளாத் தமிழையே கையாண்டனர்.

அன்றைய பத்திரிகைகளைப் பார்த்தால், அதில் தலைவரை அக்கிராசனார் என்றும், ஆசிரியரை உபாத்தியாயரென்றும், பெண்ணை ஸ்திரி என்றும், துணியை வஸ்திரம் என்றும் தண்ணீரை ஜலம் என்றும் எழுதி தமிழைக் காணாமலடிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்ததன. அதை எதிர்த்து திருவிக, மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விசுவ நாதம், சுப்பிரணிய சிவா, வ.உ.சிதம்பரனார்  ஆகியோர் போராடி வந்தனர். ஆகவே, இந்தி என்பது சமஸ்கிருதத்தை மறைமுகமாக நிலைபெற வைக்கும் முயற்சியாக  தான் பார்க்கப்பட்டது.

இரண்டாவது இந்தி எதிர்ப்பு  காலம் 1965 என்பது  இங்கு திராவிட இயக்கங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் மறுமலர்ச்சி யுகமாகும். திராவிட இயக்க சிற்றிதழ்கள், அதன் படிப்பகங்கள், மேடை பேச்சுக்கள், நாடகங்கள், திரைப்படங்களில் வெளிப்பட்ட அடுக்கு மொழி தமிழ் வசனங்கள் ஆகியவற்றால் உண்டான தமிழ் பற்று கல்லூரி மாணவர்களை களத்திற்கு கொண்டு வந்தது.

1965 ல் நடந்த இந்தி எதிப்பு போராட்டம்

ஆனால், தற்போது நாம் இந்தியை எதிர்த்துக் கொண்டிருப்பது இந்தி நம் அறிவுத் தேடலுக்கோ, அறிவியல் கல்விக்கோ  உகந்த மொழி அல்ல என்பதை அனைத்து தமிழர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி உணர்வதால் தானே அன்றி வேறல்ல. இந்தி நமது வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதால், இந்தி திணிப்பை  எதிர்க்கிறோம். மக்களின் இந்த உணர்வை தான் திராவிட அரசியல் கட்சிகள் அரசியல் ஆயுதமாக  எடுத்துக் கொண்டுள்ளனர். மாறாக, பாஜக நினைப்பது போல திராவிட இயக்கங்களின் அரசியல் ஆயுதமாக மக்கள் மாறவில்லை.

இந்தி கற்பிக்கும் தனியார் பள்ளிகளில் கூட மாணவர்களில் 95 சதமானவர்கள் இந்தியை விரும்பி கற்கவில்லை. பத்து வருஷம் பள்ளியில் இந்தியை விருப்ப பாடமாக படிக்க நிர்பந்திக்கப்பட்ட 90 சதவிகித தமிழக மாணவர்களுக்கு இந்தியை பேசவோ, எழுதவோ கூட தெரிவதில்லை.

இந்தியை கற்ற தமிழக மாணவர்களுக்கு இங்குள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடையாது. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான தபால் அலுவலகங்கள், தேசிய வங்கியின் கிளைகள், என்.எல்.சி, ரயில்வே  போன்ற நிறுவனங்களில் இந்தி வாலாக்களே வலிந்து திணிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கபடுவது..போன்றவை தான் இன்றைய இந்தி எதிர்ப்பில் தமிழ் மக்கள் நிற்பதற்கான காரணமாகும்.

நமது இரு மொழிக் கொள்கையில் ஒரு கறார் தன்மையும், தெளிவும் இன்றைய காலத்தின் அவசியமாகும். தாய் மொழி  என்பது – நமது பண்பாட்டு விழுமியங்களை பேணுவதற்கான- வேர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான வாழ்க்கைக்கான மொழியாகும். அது கல்வி மொழியாகவும் இருக்க வேண்டும். ஆங்கிலம் என்பது தகவல் தொடர்புகளுக்கும், பிழைப்பிற்கும், இதர மக்களோடு உறவாடுவதற்குமானது. ஆங்கிலம் மக்கள் மொழியாக இல்லை. இருக்கவும் கூடாது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time