சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!

15 ஆண்டுகளாக ஒரு பாலியல் புகார் இழுத்தடிக்கப்பட்டு வருவதே ஒரு அவலம். அதை கறாரான நடவடிக்கை இன்றி, மீண்டும், மீண்டும் சமூகத்தின் பேசு பொருளாக்குவது அதைவிட அவலம்.  ”நீதிமன்றம், சட்டம், சமூகத்தின் மனசாட்சி எதுவும் எனக்கு ஒரு பொருட்டல்ல..” என ஒரு அரசியல் தலைமை வலம் வருவது ஆட்சிக்கே பேரவலம்! 

சமூகத்திற்கு பயனற்ற இது போன்ற விவகாரங்களை எழுதுவதையும், பேசுவதையும் முடிந்த அளவு தவிர்த்தே வருகிறேன். அதை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து உண்மையான குற்றவாளியை தண்டிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

இந்த மாதிரி ஒரு விவகாரம் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு பேசப்படுவதற்கு இங்குள்ள  ஆட்சியாளர்களின் நேர்மையின்மையும் ஒரு காரணமாகும்.

ஒரு பெண் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு இருக்கிறாள். ஒருவனை தீவிரமாக காதலித்த காரணத்தால், அவன் விருப்பபடி மீண்டும், மீண்டும் கருக் கலைப்பு என்ற அவலத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

பிறகு காதலித்தவளை கைவிட்டு , செல்வாக்கும், செல்வ வளமும் உள்ள அரசியல் குடும்பத்து பெண்ணை மணந்துள்ளார்.

சீமான் மண்ணும், மரபும் சார்ந்த தமிழ் தேசியம் என்னும் உன்னத அரசியலை பேசுகிறார்! ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்கிறார். அந்த வகையில் கணிசமான இளைஞர்களின் நம்பிக்கையை வென்று எடுத்துள்ளார். எனில், அவர்கள் பின்பற்றத் தக்க முன்னுதாரண வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவது தான் ஒரு தலைவனுக்கு அழகாகும்.

மற்றொரு கல்யாணம் செய்து கொண்ட பிறகும் காதலித்த பெண்ணை கைவிட முடியாமல் மாதாமாதம் ரூ50,000 தந்து தொடர்பை நீடித்துக் கொண்டே வந்துள்ளார். பிறகு அதையும் தராமல் அந்த பெண்ணை நட்டாற்றில் விடுகிறார். அவள் தெருவிற்கு வருகிறாள்! இவரும் மல்லு கட்டுகிறார்.

கவியரசர் கண்ணதாசன் மூன்று மனைவியரோடு  வாழ்ந்திருக்கிறார். கருணாநிதி அவர்களும் இரு பெண்ணோடு வாழ்ந்திருக்கிறார். எம்.ஆர்.ராதாவும் மூன்று மனைவியரையும், ஏராளமான ஆசை நாயகிகளையும் கொண்டிருந்திருக்கிறார்!  நிச்சயமாக இவை எதுவும் பின்பற்றத் தகுந்த முன் உதாரணங்கள் இல்லை. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்களை சமமாக நடத்தி, சந்தோசமாக வைத்துக் கொள்ளும் பக்குவப்பட்டவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

சீமானால் அது முடியவில்லை. மாதம் வெறும் 50,000 அனுப்பி போனில் பேசக் கூட பயந்து வாழ்ந்த காலமும் முடிவுக்கு வந்து, முதல் மனைவியால் அவர் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து நிராதரவாக விட்டு விடுகிறார், விஜயலட்சுமியை! இந்தச் சூழலில் அந்தப் பெண் பல முறை ஆண்டுக்கணக்கில் போலீசில் புகார் தந்தும் எந்தப் பயனுமற்று தான் சில காலம் கிணற்றில் போட்ட கல்லானது, விவகாரம்! சீமான் குறைந்தபட்ச மனசாட்சி உள்ளவராக இருந்திருந்தால், இந்த பிரச்சினைக்கு என்றோ முற்றுபுள்ளி வைத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு கெளரமான ஒரு நஷ்ட ஈட்டை தந்து, புதியதொரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ள உதவி இருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் எளியவர்களோடு சமரசமாகமாட்டார். கட்சிக்காக உழைத்த எத்தனை பேரை அலட்சியப்படுத்தி வெளியே அனுப்பி உள்ளார்! அவரது அகங்கார மனோபாவமே இந்த பிரச்சினை நீடிப்பதற்கு முழு முதற் காரணம். இதற்கு தோதாக இவரது மனைவி கயல்விழியும் அமைந்துவிட்டார்.

முதன் முதலாக  இது வெளியே தெரிய வந்த போது, ஜெயலலிதா ஆட்சியில் இந்த காரணத்தால், தன்னை தண்டித்துவிடக் கூடாதே என  ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’’ என அரசியல் ஸ்டண்ட் அடித்தார் சீமான்.

அதன் பிறகும் அதிமுகவுடனும், பாஜகவுடனும் நல்லுறவு வைத்துக் கொண்ட நிலையில், தொடர்ந்து விஜயலட்சுமி புகார் தூங்கிக் கிடந்தது. பாஜகவினர் அன்று சீமானுக்கு ஆதரவாகத் தன்னை மிரட்டியதாக விஜயலட்சுமி கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனது புகார் கவனிக்கபடுமென்று நம்பிய விஜயலட்சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது…! கடந்த நான்காண்டுகளில்  பல முறை விஜயலட்சுமி புகார் தந்து, பல முறை போலீசால் விசாரிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு முறை காவல்துறையினர் சீமானை அழைத்து விசாரித்ததோடு விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். அந்த அளவுக்கு அரசியல் அழுத்தம் இருந்த காரணத்தால் சீமான் ஒருபோதும் தண்டிக்கப்பட முடிந்தவரல்ல… என்ற முடிவுக்கு தான் வந்ததை விஜயலட்சுமி வெளிப்படையாக  அழுகையோடு அறிவித்து விட்டுத் தான் பெங்களூர் சென்றார்.

இந்தச் சூழலில் தான் வழக்கை நீதிமன்றம் விசாரித்ததில் விஜயலட்சுமியின் குற்றச்சாட்டில் உள்ள உண்மைத் தன்மையையும், இந்த புகார் தொடர்ந்து அலட்சியப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டு சீமானை விசாரித்து அறிக்கை தர நீதிபதி உத்தரவிடுகிறார்.

நீதிபதி விசாரிக்கத் தான் கூறியுள்ளார். தன் மீது தவறு இல்லாத பட்சத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்றல்லவா சீமான் சொல்லி இருக்க வேண்டும். ஏற்கனவே 15 ஆண்டுகள் இழுத்தடித்தது போதாது என்று, தற்போது மீண்டும் வாய்தா கேட்பதும், விசாரணையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக நினைப்பதும் கோழைத்தனமின்றி வேறென்ன?

வீட்டு வாசலில் அழைப்பாணை ஒட்டுவது என்பது ஒரு நடைமுறை தானே. அதை நான் தான் படிப்பதற்காக கிழித்து வரச் சொன்னேன் என்கிறார் சீமான் மனைவி. ஆனால், வாயிற்காவலர் அதை அக்குவேறு ஆணிவேராக கிழித்து போட்டாரே தவிர, படிக்கத் தோதாக கிழிக்கவில்லை என்பதே நிஜம். அதை செல்போனில் போட்டோ எடுத்து வரச் சொல்லி கூட சீமான் மனைவி கயல்விழி அம்மையார் படித்திருக்க வாய்ப்புள்ளது.

கிழித்துப் போட்ட விவகாரத்தை அவமதிப்பாக கருதி காவல்துறை வருகின்றனர்.  கேட்டை திறந்து அவர்களை பார்த்தவுடன், சட்டென்று கேட்டை மீண்டும் சாத்த முயற்சிக்கிறார் அந்த செக்யூரிட்டி மனிதர். வந்த காவல்துறையினரிடம் இயல்பாக பேசி, விசாரணைக்கு தானே ஒத்துழைத்து அவர் சென்று இருக்க முடியும் தானே!

இத்தனைக்கு பிறகும் சீமானும், அவர் மனைவியும் எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஆவேசம் காட்டுகின்றனர் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக இவர்கள் தங்களை கருதுகிறார்கள் என்றே பொருளாகும்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்று விசாரிக்கவே தடை கேட்கிறார் சீமான் என்றால், இது தப்பிக்கும் முயற்சி தானே! எதிர்கொள்வதில் இருக்கும் கோழைத்தனம் தானே!

ஒரு பாலியல் குற்றச் செயல் செய்தவர் 15 ஆண்டுகளாக வருங்கால முதல்வரை போல வலம் வருவதும், அரசியல் நியாயங்கள் பேசி அரசியல் நட்சத்திரமாக வலம் வருவதும் அவரது செல்வாக்கை மட்டும் காட்டவில்லை. தற்போதுள்ள ஆட்சியாளர்களின் ஆளுமை பற்றாகுறையையும் சேர்த்தே காட்டுகிறது. முதலமைச்சர்  ஸ்டாலினால், சீமானை நியாயப்படி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி தண்டிக்க முடியாவிட்டால், அது அவரது திறமையின்மையை – உறுதிபாடற்ற நிர்வாக ஆளுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே அமைந்துவிடும். இத்தனைக்கு பிறகும் சீமானை தண்டிக்கவியலாமல் போனால் அது – சட்டம், நீதிமன்றம், காவல்துறை, ஆட்சி நிர்வாகம், சமூகம் போன்ற சகலத்தின் தோல்வியாக – வரலாற்றில் கரும்புள்ளியாகிவிடும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று…!

லட்சிய நோக்கும், அர்ப்பணிப்பும் கொண்ட நாம் தமிழர் இயக்கத்தின் தம்பி, தங்கைகள் சீமானை புறக்கணித்து, தங்களில் இருந்து ஒரு புதிய தலைமையை கண்டடைய வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time