வரலாற்றில் இப்படி ஒரு முன் உதாரணமே கிடையாது – ஒரு நாட்டு அதிபர் அவமானப்பட்டதற்கு! அராஜகம், அடாவடித்தனம், திமிர்த்தனம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக டிரம்ப் இந்த உரையாடலில் வெளிப்பட்டார். ‘நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது, தன்னலம் மட்டுமே பிரதானம்’ என்பதே டிரம்பின் தாரக மந்திரமோ..!
அழைக்கப்பட்ட நாடு, ‘வெறும் மூன்றரை கோடி மக்களை கொண்ட சுண்டைக்கா நாடு தானே’ என்ற எண்ணமா?
‘நம்ம உதவியைக் கொண்டு தானே இத்தனை நாள் தாக்கு பிடித்தார்கள்.. எனவே, ஏன் நமக்கு கூழைக் கும்பிடு போட வேண்டியது தானே’ என்ற மனோபாவமா?
ஆனால், யாரும் எதிர்பாரா வண்ணம் உலகறிய அனைத்து நாடுகளும் பார்க்கும் வண்ணம் நேரலை செய்யும் தொலைகாட்சி சேனல்களை நிறுத்தி வைத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வறுத்தெடுத்துவிட்டார் டிரம்ப்.
ஏற்கனவே ஒரு பேரரசை எதிர்த்து போரிடும் ஜெலன்ஸ்கி தைரியசாலி தான் என்றாலும், நம்பகமான நண்பன் என்று இது நாள் வரை அவர் நம்பி வந்த அமெரிக்காவின் அதிபர் பொது வெளியில் இவ்வளவு பெரிய அவமனத்தை செய்வார் என ஒரு போதும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
எனவே தான், அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு புறப்பட்டவுடன் அதிபர் ஜெலன்ஸ்கியும் வெளியேறினார். ஆனால், இந்த சந்திப்புக்குப் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, மதிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை ஏற்கும் மன நிலையில் உக்ரைன் குழ்வினர் இல்லை. அத்துடன் அமெரிக்க மாளிகை அதிகாரிகளே நாகரீகக் குறைவாக உக்ரைன் குழுவினர் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும்படி கூறிவிட்டனர்.
தன் அழைப்பை ஏற்று வந்த ஒரு நாட்டின் தலைவரை தனிப்பட்ட முறையில் யாருக்கும் தெரியாமல் மிரட்டுவது என்பது வேறு!
ஆனால், இதற்கு முன்பு இப்படி ஒரு அவமரியாதை இப்படி ஒரு நாட்டுத் தலைவருக்கு அடுத்த நாட்டில் நடந்திருக்குமா? தெரியாது.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பின் ரஷ்யா- உக்ரைன் போரில் காட்சிகளும் மாறத் தொடங்கின. பைடனுக்கு பதிலாக அதிபரான டிரம்ப், எதையுமே வியாபாரக் கண்ணோட்டத்துடன் மட்டுமே அணுகுபவர். இந்தப் போரை அமெரிக்கா ஊக்குவித்து, உதவி வந்ததினால் அடைந்த பயன் என்ன..? என்று தான் கணக்கு போட்டார்.
புதின் புத்திசாலி! டிரம்பின் பல்சை நன்கு அறிந்து வைத்திருந்தார்! ‘இன்னும் எவ்வளவு நாட்கள் உக்ரைனுக்கு கோடிக் கோடியாய் கொட்டிக் கொடுத்து அமெரிக்கா, இழந்து கொண்டிருக்க போகிறது! போரை முடிவுக்கு கொண்டு வந்தால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு என்னென்ன நன்மைகள்..’ என பட்டியலிட்டு டிரம்பிற்கு செய்தி அனுப்பினார்.
வியாபார புத்தியும், அமெரிக்க நலனுமே பிரதானமாக கருதும் டிரம்ப் எப்போதும் ‘டிலீங்’ பேசுவதில் கில்லாடி!
தடாலென்று ‘யூ டர்ன்’ அடித்து, ரஷ்யாவுடன் கைகுலுக்கி, ஜெலன்ஸ்கிக்கு அதிர்ச்சி வைத்தியம் தர அமெரிக்காவிற்கே அழைத்து அவமானப்படுத்திவிட்டார். அத்துடன் உக்ரைனுக்கு அமெரிக்கா இது வரை செலவழித்த பணத்திற்கு பிரதியுபகாரமாக ”உக்ரைனில் உள்ள கனிம வளங்களை தாரை வார்க்க வேண்டும்” என்று கண்டிஷனும் போட்டுள்ளார்.
ஏற்கனவே பல பேரிழப்புகளை சந்தித்து உருக்குலைந்து கிடக்கும் உக்ரைன் நாட்டிடம் மேலும் உருவி எடுத்து ஆதாயம் அடைவது குறித்து ஒரு சிறிதும் யோசிக்க தயங்காத மனநிலை என்பது பெரு முதலாளித்துவத்தின் பேராசை குணாம்சத்தின் இயல்பாகும்.
சோவியத் ரஷ்யாவின் ஒரு அங்கமாக ஒரு காலத்தில் இருந்த நாடு தான் உக்ரைன். தேசிய இனங்களுக்கான பிரிந்து செல்லும் உரிமையின்படி தற்போது தனி நாடாக உள்ளது. எப்படி பார்த்தாலும் ரஷ்யாவும், உக்ரைனும் அண்ணன் தம்பிகள் தான்! அண்ணன் – தம்பிகளுக்குள் பிணக்கு ஏற்படுவதும் புதிதல்ல.
பெரிய அண்ணன் தோரணையில் ரஷ்ய அதிபர் பூட்டின் நடந்து கொண்டார் என்பது உண்மையே. இதனால் உணர்ச்சிவசப்பட்ட மிகவும் சின்னஞ்சிறு நாடான உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பும் கிடைக்கும். ரஷ்யாவும் தன்னிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் என எண்ணியது.
நேட்டோ நாடுகள் என்பவை அமெரிக்காவை தலைமையாக கொண்ட ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இவர்கள் ரஷ்யாவை எப்போதும் எதிரியாக நினைப்பவர்கள். ரஷ்யாவை மிரட்டி பணிய வைக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருந்தவர்கள்.
ஆகவே, இந்தச் சூழலில் நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைனில் அமெரிக்க படைகள் வந்து தங்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக வந்து நிற்கும் என்பதால், ”உக்ரைன் நேட்டோவில் சேரக் கூடாது” என ரஷ்யா கட்டளையிட்டது.
ரஷ்யாவின் நோக்கம் இதுவாக இருக்கும்பட்சத்தில், உக்ரைன் ரஷ்யாவிற்கு தன்னை கண்ணியமாக நடத்த வேண்டி சில கோரிக்கைகளை நிர்பந்தமாக வைத்து ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு வந்திருக்கலாம். அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனை உசுப்பி விட்டனர். ஜெலன்ஸ்கி அதற்கு பலியானார். விளைவு, ரஷ்யாவின் மூர்க்கமான தாக்குதல்கள். இதில் உக்ரைன் பேரிழப்பை சந்தித்துள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்க அழைப்பை ஏற்று நேற்று முன் தினம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை சென்றார், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பு ஒருவரை ஒருவர் தொடும் தூரத்தில் நெருக்கமாக சேர் போடப்பட்டு அமைக்கப்பட்டு இருந்தது. இதில் வேண்டுமென்றே கம்பர்டபளாக உட்காராமல் பேச்சு வார்த்தை ஆரம்பமானதாகத் தெரிந்தது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு ரஷ்யாவுடன் இணக்கமாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்ற வலியறுத்தலுடன் ஜே.டி.வான்ஸ் பேச்சுவார்த்தை தொடங்கினார்!
ஜே.டி.வான்சும் சரி, டிரம்ப்பும் சரி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனை கடுமையாக இந்த பேச்சுவார்த்தைகளில் விமர்சித்தனர். இதை அமெரிக்க மக்களே விருமபமாட்டார்கள். அடுத்த நாட்டுத் தலைவரிடம் நம் நாட்டுத் தலைவரை பகிரங்கமாக அவமானபடுத்திய இவர்களின் பேச்சு அமெரிக்க மக்களுக்கே அதிர்ச்சி தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஜே.டி.வான்ஸ் எடுத்த எடுப்பில், ’’நான்கு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக இருந்த பைடன், உக்ரைனில் ஊடுருவியதற்காக ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தார். ஆனால், புதின் தொடர் தாக்குதல் நடத்தி உக்ரைனின் பெரும் பகுதியை அழித்துவிட்டார். இனி பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண்பது தான் வழியாகும்’’ என்றார்.
ஜெலன்ஸ்கி: உக்ரைனின் பெரும்பகுதியை புதின் ஆக்கிரமித்துவிட்டா். 2014-ம் ஆண்டே அவர் ஆக்கிரமிப்பை தொடங்கிவிட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ட்ரம்ப், பைடன் காலத்திலேயே அவர் ஆக்கிரமிப்பை தொடங்கினார். ஆனால் யாரும் அவரை தடுத்து நிறுத்தவில்லை. அவர் உக்ரைன் மக்களை கொன்று எங்கள் நாட்டை ஆக்கிரமித்தார். 2014 முதல் 2022 வரை இதே நிலைதான் இருந்தது. புதினுடன் நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார். ஜே.டி., நீங்கள் என்ன மாதிரியான ராஜதந்திரத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன அர்த்தப்படுத்துகிறீர்கள்?
வான்ஸ்: உங்கள் நாட்டின் அழிவை முடிவுக்குக் கொண்டுவரப் போகும் ராஜதந்திரத்தைப் பற்றி நான் பேசுகிறேன்.
ஜெலென்ஸ்கி: ஆம், ஆனால் நீங்கள்…
வான்ஸ்: திரு. ஜனாதிபதி அவர்களே, மதிப்புடன் கூறுகிறேன், நீங்கள் ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன் இதைப் பற்றி வாதாட முயற்சிப்பது அவமரியாதை என்று நான் நினைக்கிறேன்.இப்போது, உங்கள் நாட்டில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, நீங்கள் கட்டாய ராணுவ ஆள் சேர்ப்பை அமல்படுத்துகிறீர்கள். நீங்கள் ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும்.
ஜெலென்ஸ்கி: உக்ரைனுக்கு வந்து எங்களுடைய சிக்கல்களை நேரில் பார்த்துள்ளீர்களா?
வான்ஸ்: நான் உண்மை நிலைமை பற்றிய காட்சிகள் மற்றும் செய்திகளை பார்த்துள்ளேன், நன்கு அறிவேன். நீங்கள் பிரச்சார சுற்றுப்பயணம் நடத்துகிறீர்கள், ஜனாதிபதி.
உங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்ப்பதில் சிக்கல்கள் இருந்ததைக் நீங்கள் மறுக்கிறீர்களா? உங்கள் நாட்டின் அழிவை தடுக்க முயற்சிக்கும் அமெரிக்க நிர்வாகத்தை வெள்ளை மாளிகைக்கே வந்து தாக்கி பேசுவதை அவமதிப்பு என நீங்கள் நினைக்கவில்லையா?
ஜெலென்ஸ்கி: முதலாவதாக, போரின் போது, அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன ஏன் அமெரிக்கவிற்கும் உள்ளன.
டிரம்ப்; உங்களிடம் நல்ல தீர்வுகள் உள்ளன, இப்போது நீங்கள் அதை உணரவில்லை, ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் அதை உணருவீர்கள். பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் முயற்சிக்கிறோம். எங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என நீங்கள் சொல்லாதீர்கள்.
டிரம்ப்: அது உங்களுக்குத் தெரியாது. நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று எங்களிடம் சொல்லாதீர்கள். நாங்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கிறோம். நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்று எங்களிடம் சொல்லாதீர்கள்.
ஜெலென்ஸ்கி: நான் உங்களுக்குச் சொல்லவில்லை, நான் பதிலளிக்கிறேன்…
வான்ஸ்: நீங்கள் சரியாக அதைத் தான் செய்கிறீர்கள்…
டிரம்ப் தனது குரலை உயர்த்தி: நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்பதை நீங்கள் கூறும் தகுதியில் நீங்கள் இல்லை. நாங்கள் நன்றாகத் தான் இருக்கிறோம், வலுவாகத்தான் உணர்கிறோம். மோசமான நிலைக்கு உங்கள் நாடு செல்ல நீங்களே அனுமதித்துள்ளீர்கள். கோடிக்கணக்கான மக்களின் உயிருடன் நீங்கள் விளையாடுகிறீர்கள், மூன்றாம் உலகப் போருடன் நீங்கள் விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது இந்த நாட்டுக்கு மிக அவமதிப்பானது.
ஜெலென்ஸ்கி பேச முயற்சிக்கிறார்.
டிரம்ப்: நீங்கள் இப்போது நல்ல நிலையில் இல்லை. நீங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்க உங்களை அனுமதித்துவிட்டீர்கள். உங்களிடம் இப்போது அட்டைகள் இல்லை. எங்களிடம், நீங்கள் அட்டைகளைப் பெறத் தொடங்குகிறீர்கள். நீங்கள் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களுடன் சூதாடுகிறீர்கள், மூன்றாம் உலகப் போருடன் சூதாடுகிறீர்கள், நீங்கள் செய்வது இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதை.
வான்ஸ்: நீங்க ஒரு முறையாவது நன்றி சொன்னீர்களா?
ஜெலென்ஸ்கி: பல முறை.
வான்ஸ்: இல்லை,இந்த சந்திப்பில் கூறினீர்களா? உங்கள் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் அமெரிக்காவையும், அதன் அதிபரையும் பாராட்டீனீர்களா?
ஜெலென்ஸ்கி: ஆமாம், போரைப் பற்றி மிகவும் சத்தமாகப் பேச வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
டிரம்ப்: அவர் சத்தமாகப் பேசவில்லை. உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது. இல்லை, இல்லை, நீங்கள் நிறையப் பேசிவிட்டீர்கள். உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது.
ஜெலென்ஸ்கி: எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்.
டிரம்ப்: நீங்கள் இதில் வெற்றி பெறவில்லை. எங்களால் தான் நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர நல்ல வாய்ப்பு உள்ளது.
ஜெலென்ஸ்கி: போரின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் வலுவாக இருக்கிறோம், நாங்கள் தனியாக இருக்கிறோம், மேலும், நாங்கள் நன்றி என்று சொல்கிறோம்.
ஜெலென்ஸ்கியைப் இடைமறித்து பேசிய டிரம்ப்: நீங்கள் தனியாக இல்லை… நாங்கள் உங்களுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கினோம். உங்கள் ஆட்கள் துணிச்சலானவர்கள், ஆனால் அவர்களிடம் எங்கள் இராணுவம் இருந்தது. உங்களிடம் எங்கள் இராணுவ உபகரணங்கள் இல்லையென்றால், இந்தப் போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும்.
ஜெலென்ஸ்கி: இதே வார்த்தைகளை போர் தொடங்கிய மூன்று நாட்களில் புடினிடமிருந்து கேட்டேன்.
டிரம்ப்: இது போன்று வியாபாரம் செய்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கும்.
வான்ஸ்: நன்றி மட்டும் சொல்லுங்க.
ஜெலென்ஸ்கி: அதை நான் நிறைய முறை சொன்னேன்.
வான்ஸ்: நீங்கள் தவறாக இருக்கும் போது கருத்து வேறுபாடுகள் இருப்பதை ஏற்றுக் கொண்டு, அமெரிக்க ஊடகங்களில் அதை எதிர்த்துப் போராட முயற்சிப்பதை செய்யாதீர்கள்.நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
டிரம்ப்: நீங்கள் அங்கே புதைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் வீரர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். அமெரிக்க செய்த உதவிகளினால் தான், நீங்கள் இவ்வளவு காலம் தாக்கு பிடித்தீர்கள், அமெரிக்கா இல்லையென்றால், உங்களால் தாக்குபிடித்திருக்க முடியாது. ஆனால், போர் நிறுத்தத்தை விரும்ப வில்லை, போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என நீங்கள் கூறிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லை, கேளுங்கள் … பின்னர் நீங்கள் எங்களிடம்,. நீங்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தால் கஷ்டம்தான். நீங்கள் நன்றியுடன் நடந்து கொள்ளவில்லை. இது நல்லதல்ல. நான் நேர்மையாகச் சொல்வேன், இது நல்லதேயில்ல.
டிரம்ப்; ஆல் ரைட்! நாம போதுமான அளவுக்குப் பார்த்துட்டோம்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க…? நான் சொல்லுவேன். கிரேட் டெலிவிஷன்!
Also read
இவ்வளவு அட்டூழியமாக நடந்து கொண்ட பிறகு – பல முறையை நன்றி சொல் என மிரட்டி பெற்ற பிறகு – சமூக ஊடகத்தில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட செய்தியில், ‘‘ ஜெலன்ஸ்கி அமெரிக்காவை அவமதித்து விட்டார். அமைதி பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி தயாராக இருக்கும்போது அவர் மீண்டும் வரலாம். ’’ என குறிப்பிட்டார் என்பது தான் கவனத்திற்கு உரியது.
மறுபுறம், ‘’இந்த காரசார விவாதத்துக்காக அதிபர் ட்ரம்பிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியது கொடுமை!
ஆனால், ”அதிபர் ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது” என ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
உண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபரை மட்டும் அவமானப்படுத்தவில்லை. நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அனைத்தையுமே அவமானப்படுத்தியதோடு நட்டாற்றில் விட்டுவிட்டதாகவே கருதப்படுகிறது. ஒரு மிகப் பெரிய நாட்டின் தலைவர் பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொண்டது அந்த நாட்டு மக்களுக்கும் சங்கடத்தையே ஏற்படுத்தி உள்ளது.
சாவித்திரி கண்ணன்
உரையாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு; வெங்கடேசன்
Leave a Reply