தமிழ் சினிமாவின் மகத்தான அடையாளங்களில் ஒன்று கலைத் தாயின் தலைமகன் சிவாஜி வாழ்ந்த வீடான அன்னை இல்லம். தற்போது நீதிமன்றத்தால் ஜப்தி செய்ய சொல்லும் அளவுக்கு உள்ள அந்த இடம் சிவாஜியின் நினைவு இல்லமாக்கப்பட்டு, அவரது சாதனைகளை நினைவூட்டும் கண்காட்சி மற்றும் ஆவணங்களுடன் பராமரிக்கப்படுமா?
இதன் கம்பீரமும், அழகும் மட்டும் இதற்கு காரணமல்ல, கலைத் தாயின் தலை மகனாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்து, நடமாடிய இடம்.
அப்படிப்பட்ட அன்னை இல்லத்தை இன்று நீதி மன்றம் ஜப்தி செய்ய ஆணையிட்ட செய்தி தமிழக மக்கள் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
அவர் வாழ்ந்த காலத்தில் அன்றைய தினம் இந்த வீட்டில் கால் பதிக்காத சினிமா கலைஞர்களும் இருக்க முடியாது, பத்திரிகையாளர்களும் இருக்க முடியாது. அந்த வகையில் பற்பல கலைஞர்களுக்கும் அங்கு பசுமையான நினைவுகள் அதிகம் இருக்கும். இந்த அன்னை இல்லத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை;
ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்திற்கு இலக்கணமாக சிவாஜி குடும்பம் திகழ்ந்தது! அனைத்து உறவுகளையும் விட்டுக் கொடுக்காமல் அவர் வாழ்ந்தார்! அங்கு தினசரி விருந்துக்கு தயாரிப்பது போலத் தான் விதவிதமான அசைவ உணவுகள் தயாராகும். சூட்டிங் ஸ்பாட்டில் அவர் வீட்டுச் சாப்பாட்டை ருசிக்காத கலைஞர்களும், இயக்குனர்களும் மிக அபூர்வமாகத் தான் இருக்க முடியும்.
சிவாஜி சம்பாதித்த பெரும் சொத்துக்கள் பலவற்றை அவருடைய வாரிசுகள் ஒவ்வொன்றாக விற்ற வண்ணம் இருந்தனர். இது தவிர ஏகப்பட்ட கடன்கள் வேறு. தற்போது எஞ்சி இருப்பது இந்த அழகிய வீடு மட்டும் தான்! இது ஏற்கனவே ஏலத்திற்கு போவது போன்ற ஒரு நெருக்கடி ஏற்பட்ட போது நடிகர் ரஜினிகாந்த் உதவி செய்து காப்பாற்றினார்.
இதை சிவாஜி வாரிசுகள் காலத்துக்கும் காப்பாற்றுவார்களா? காலியாக்கிவிடுவார்களா..? என்ற சந்தேகம் உள்ளபடியே அனைவருக்கும் இருந்தது. அந்தப்படியே தற்போது நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அவ்வப்போது சிலர் உதவினாலும் கூட மீண்டு வர முடியாத நிலையிலேயே அவரது வாரிசுகள் உள்ளனர்!
வாரிசுகளால் காப்பாற்ற முடியாத சிவாஜி இல்லம் யாராவது ஒரு வட நாட்டு மார்வாடி கைகளுக்கோ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ போனால், அந்த வீடு இடிக்கப்பட்டு பெரும் ஷாப்பிங் காம்பிளக்ஸ் ஆகலாம். அல்லது பல அடுக்கு மாடிகள் கொண்ட குடிய்ருப்பாகலாம். தமிழ் சினிமாவின் தனிப் பெரும் அடையாளமாக வாழ்ந்த சிவாஜி கணேசன் வாழ்ந்த அழகிய , கம்பீரமான இல்லம் சிவாஜியின் நினைவு இல்லமாக வேண்டும். இதற்கு தமிழக அரசே அவரது குடும்பத்திடம் நல்ல விலை கொடுத்து வாங்கி, சிவாஜியின் நினைவு இல்லமாக இதை பராமரிக்க வேண்டும்.
சிவாஜிக்கு எதற்காக நினைவு இல்லம் அமைக்க வேண்டும்;
உலக அளவிலான சினிமா கலைஞர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தவர்.
ஒப்பாரும், மிக்காருமில்லா கலை உலக பிதாமகன்!
தமிழ் மொழி உச்சரிப்பில் தலை சிறந்து விளங்கியவர். தமிழ் உச்சரிப்பை பயில அவர் படங்களே வருங்காலத்தில் பாடமாகலாம்.
உன்னத தியாகிகளான வ.உ.சிதம்பரனார், பகத்சிங், வாஞ்சி நாதன், திருப்பூர் குமரன் ஆகியோர் வேடங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே நாட்டுப் பற்றை விதைத்தார். அவருமே சிறந்த தேச பக்தராக திகழ்ந்தார்! 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்கு அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நிதி திரட்டிய போது, தனது மனைவி கமலாவின் நகைகள், தன்னுடைய நகை என 500 பவுன் நகையை தந்தார். பல்வேறு இயற்கை சீற்றங்கள் மக்களை பாதித்த நேரங்களில் நிதி உதவியாக பெரும்,பெரும் தொகைகளை வழங்கியவர். தான் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை அரசாங்க கல்விக் கூடங்கள் உருவாகவும், அரசு மருத்துவமனைகள் உருவாகவும் அள்ளித் தந்துள்ளார்!
புராண, இதிகாச கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்தவர். அப்பராக, சுந்தர மூர்த்தி நாயனாராக, திருநாவுக்கரசராக, சேக்கிழாராக, பெரியாழ்வாராக, திருமங்கை ஆழ்வாராக, வீரபாகுவாக தன் அற்புத நாடிப்பாற்றல் வழியாக அறம் சார்ந்த வாழ்க்கை விழுமியங்களை உணர்த்தியவர்.
சிவாஜியின் பெரும்பாலான படங்கள் குடும்ப பாசத்தை, சகோதர நேசத்தை, பெரியோர்களை மதிக்கும் பண்பை மக்களிடையே தோற்றுவித்தன!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சாதனைகளை விஞ்ச இனி இன்னொருவர் திரை உலகில் உருவாகும் வாய்ப்பே இல்லை. அவர் திரை உலகின் பல்கலைக் கழகமாவார்!
வீர மன்னர்களை நினைவூட்டும் வீர பாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், வள்ளலுக்கு இலக்கணம் சொன்ன கர்ணன், சகோதர பாசத்திற்கு பரதன் என அவர் உயிர்பித்து உலவிய வேடங்கள் காலத்திற்கும் கலை உலக கரூவூலங்களாகத் திகழத்தக்கவையாகும்.
ஆகவே, தமிழக அரசு தாமதிக்காமல் சிவாஜி வாழ்ந்த அன்னை இல்லத்தை அவரது நினைவில்லமாக்க வேண்டும்.
இங்கே,
# சிவாஜி நடித்த அனைத்து திரைப்படங்களின் புகைப்படங்கள்.
# அந்த திரைப்படங்கள் குறித்த அரிய தகவல்கள்!
# அவருக்கும், அவரது சம காலத்து இந்திய அளவிலான கலைஞர்களுக்குமான நட்பை உணர்த்தும் புகைப்படங்கள்.
# அவருக்கும் பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, இந்திரா காந்தி, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ..போன்ற அரசியல் தலைவர்களுக்குமான நட்பை உணர்த்தும் வகையிலான நல்ல புகைப்படங்கள்
ஆகியவற்றை திரட்டி நிரந்தர புகைப்பட கண்காட்சியை வைக்க வேண்டும்.
இது சினிமாவில் இருப்பவர்களுக்கும், சினிமாவிற்குள் நுழைய விரும்புவர்களுக்கும் , சிவாஜியின் ரசிகர்களுக்கும் ஒரு ஆதர்ஷ இடமாகத் திகழ வேண்டும்.
இங்கு சினிமா துறையினர் அடிக்கடி வந்து செல்லும் வகையில் பிரிவுயூ ஷோக்களை திரையிடும் அரங்காகவும் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம். மற்றொரு பகுதியை கலை மற்றும் நடிப்பு பயிற்சி பட்டறை நடத்தும் இடமாக்கலாம். இவை தமிழக அரசுக்கு இந்த இடத்தை பராமரிக்கும் செலவுகளுக்கு உதவியாக இருக்கும்.
சிவாஜியின் நெருங்கிய நண்பர் கலைஞர் அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடினார். தற்போது ஸ்டாலின் அதைவிட ஒருபடி மேலே சென்று பறிபோகவுள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தை அவரது நிரந்தர நினைவு இல்லமாக்கினால், அது தமிழக சினிமா கலைஞர்களாலும், தமிழக மக்களாலும் பெரிதும் வரவேற்கப்படும் கலைக் கோவிலாகவே திகழும்.
கலைத் தாயின் தவப் புதல்வன் சிவாஜியை பெரிதும் நேசிக்கும் தமிழ் மக்களின் இந்த விருப்பத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமல்ல, சினிமா துறையில் இருந்து வந்த துணை முதல்வர் உதயநிதி அவர்களுக்கும் கவனப்படுத்துகிறோம்.!
Also read
தமிழக அரசே, இதற்கு முழுப் பணத்தையும் செலவழிக்காமல் கலை உலகத்தினரிடமும், பொது மக்களிடமும் கூட பங்களிப்பை பெறலாம். தாராளமாக அள்ளித் தருவார்கள்! சிவாஜியின் பெயரால் செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்ற பெயர் பெற்ற சாலையில் சிவாஜி இருந்த வீடே தடையமில்லாமல் போய்விடலகாது. அது தமிழக அரசாலும், தமிழ் திரை உலகின் கூட்டு முயற்சியாலும் அவரது நினைவு இல்லமாக்கப்பட வேண்டும்.
வாழ்க, கலைத் தாயின் தவப் புதல்வன் சிவாஜி கணேசனின் புகழ்!
சாவித்திரி கண்ணன்
சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை பார்வையிட வரும் ரசிகர்களிடம் இருந்து ரூபா பத்து வசூல் செய்தாலே அரசு போட்ட பணத்தை திருப்பிவிடலாம். ஆசிரியரின் ஆலோசனைப் போல் அரசு செய்தால் கலைஞருக்கே மறைமுக பாராட்டு நடத்தியது போலாகும். ஆசிரியருக்கு பாராட்டுதல்!
சிவாஜி என்ற பெயர் தமிழக மக்கள் மட்டுமன்றி , உலக அரங்கில் அனைவராலும் நடிகர் என்று பிரபலம்
அடைந்த பெயர். பல பட்டங்கள் அவர் வாங்கி இருந்தாலும் நடிகர் திலகம் என்றால் இவர்தான். இயற்பெயர் கணேசன் என்று சொன்னால் சற்று குழம்புவார்கள். அந்த அளவிற்கு அவரது பட்டப்பெயர் மக்களிடம் நிலைத்தது.
அறம் இணையதளத்தின் இந்த கோரிக்கையை அவருடைய ரசிகர்களால் என்றோ எழுப்பப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு படம் திருப்புனையாக அமைந்திருக்கும். அந்த வகையில் எம் ஜி ராமச்சந்திரனுக்கு (MGR) எங்க வீட்டுப் பிள்ளை, ரஜினிக்கு பாட்ஷா , ஜெய்சங்கருக்கு துணிவே துணை , நாகேஷ்க்கு சர்வர் சுந்தரம் , அந்த வரிசையில் சிவாஜி கணேசனை எடுத்துக் கொண்டால் எண்ணற்ற படங்கள்.
இவர் நடித்த படங்கள் மொத்தம் 305 , இதில் அவர் கவுரவத் தோற்றமாக நடித்த படங்களும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களும் அடங்கும். இந்தி படங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. ஆனால் அவரது பெயர னோ அவர் வாழ்ந்த வீட்டை விட்டு விட்டான். தன்னுடைய வயதில் இரண்டு ஆண்டுகளை தன் உயிர் நண்பன் கலைஞர் கருணாநிதிக்கு விட்டுக் கொடுத்தவர் சிவாஜி கணேசன். அவரது மகன் மு.க ஸ்டாலின் இன்று ஆட்சியில் உள்ளார். யார் விட்டாலும் நான் விடமாட்டேன் என்று அவர் வாழ்ந்த வீட்டை மீட்பதற்கு மட்டுமல்லாமல் அதை அவர் நினைவிடமாகவும் ஆக்குவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள்.
சிறப்பான யோசனை
நடிகர் திலகத்தின் நண்பர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நிச்சயம் நம் விருப்பத்தை நிறைவேறறுவார்..
எட்டுக்கோடி தமிழர்களும் ஆளுக்கு ஒருரூபாய் வழங்கினால் போதும் கடனை அடைத்துவிடலாம் இதை.அரசு.ஒருங்கிணைத்து செயல் படுத்தி அன்னைஇல்லத்தை மீட்டு நினைவிடமாக்க வேண்டும்
இந்த யோசனை மிகவும் சிறந்தது!
நானும் இதை வரவேற்கிறேன்!
தமிழக அரசே, இதற்கு முழுப் பணத்தையும் செலவழிக்காமல் கலை உலகத்தினரிடமும், பொது மக்களிடமும் கூட பங்களிப்பை பெறலாம். தாராளமாக அள்ளித் தருவார்கள்! சிவாஜியின் பெயரால் செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்ற பெயர் பெற்ற சாலையில் சிவாஜி இருந்த வீடே தடையமில்லாமல் போய்விடலகாது. அது தமிழக அரசாலும், தமிழ் திரை உலகின் கூட்டு முயற்சியாலும் அவரது நினைவு இல்லமாக்கப்பட வேண்டும்.
மிகவும் சிறந்த யோசனை…
நல்ல யோசனை தமிழக அரசு செய்யலாம் காலம்தால்த்தாமல் கலைத்தாயின். புதல்வனுக்கு செய்யும் கௌரவம்
Where is Prabhu who acted in more than hundred films? Tn Govt has already constructed a memorial. The family should save it. Otherwise a meaning solution will be to give it to a film studio like Ramoji Rso for a good price and pave way for a futuristic ‘ Sivaji Ganesan Hightech Studio’ V Gopalan