தமிழக மீனவர்களை இந்தியர்களாக கருத மறுப்பது ஏன்?

-சாவித்திரி கண்ணன்

ஒரு சுண்டைக்கா நாடான இலங்கை தன்னைவிட நூறு மடங்கு பெரிய இந்திய தேசத்தின் மீனவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறது! தமிழ்நாட்டின் நிலப்பரப்போடு ஒப்பிட்டால், இதன் மூன்றில் ஒரு பங்குள்ள இலங்கைக்கு தமிழக மீனவர்களை வேட்டையாடி, இஷ்டத்திற்கு தண்டிக்கும் துணிச்சல் எப்படி வருகிறது..?

இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை என்பது என்ன தீர்க்கப்படவே முடியாததா என்ன? உட்கார்ந்து  மனம் விட்டு பேசினால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இல்லை. ஆனால், இதை தீர்த்து வைக்கும் எண்ணம் மத்தியில் ஆட்சிக்கு வருபவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டு அரசையே, இலங்கை அரசோடு பேசி முடிவெடுங்கள் என அதிகாரத்தை வழங்கினாலே கூட போதும், பிரச்சினை சுமுகமாக முடிந்துவிடும். ஆனால், மத்திய அரசு தமிழர்களை இந்தியர்களாக கருதுகிறதா…? என்று சந்தேகம் வரும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டுள்ளது.

1983 வரை இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. இலங்கையில் தமிழர் பிரச்சினை மேலோங்கி, விடுதலை புலிகள் ஆதிக்கம் கடல் பகுதியில் அதிகமானது முதல் தமிழக மீனவர்களை சந்தேகத்தின் பெயரில் இலங்கை அரசு வேட்டையாட ஆரம்பித்தது. பிறகு போர் முடிவுக்கு வந்த பிறகாவது இது முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் என்னவோ தெரியவில்லை. 1990 தொடங்கி கடந்த 35 வருடங்களில் சுமார்  550க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர்…என்பதை இந்திய அரசு சீரியசாகவே எடுத்துக் கொள்ளாதது ஆச்சரியமளிக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்த  2014ம் ஆண்டு  முதல் தற்போது வரை வரையிலான இந்த ஒன்றிய அரசின் 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுடைய எண்ணிக்கை  3,656 பேர். மொத்தம் 611 விசைப் படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, நவம்பர் 22ம் தேதி வரை இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை 736 முறை தாக்கியிருப்பதாக, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் எந்தக் குற்றவுணர்வுமின்றி அறிக்கை  தந்துள்ளார்.

2024-ம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடல், உலக அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.  உலகின் மொத்த மீன் பிடிக்கும் பரப்பளவில் 15% சதவீதம் இந்தியப் பெருங்கடலில்  வருகிறது.   இந்தியாவிற்கும் இலங்கைக்குமான எல்லைகளின் தூரம் மிகக் குறைவு. அதாவது, 12 கடல் மைல்கல் தான். இதில் மிகப் பெரிய நாடான இந்திய மீனவர்களின் தேவை, இலங்கை மீனவர்களின் தேவையை விட அதிகம். இதனால், வாரத்தின் ஏழு நாட்களில் இந்திய மீனவர்கள் நான்கு நாட்கள், இந்திய மீனவர்கள் மூன்று நாட்கள் என்று பிரித்துக் கொண்டு மீன் பிடிக்கலாம்.

அத்துடன் கச்சத்தீவு பகுதியை தமிழக மீனவர்கள் பயன்படுத்த நீண்ட நாட்கள் குத்தகைக்கு நாம் இலங்கையிடம் கேட்டு வாங்கலாம்..என்ற முன்னாள் ஜெயலலிதாவின் யோசனையை இந்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு பலமுறை இந்நிகழ்வுகளை இந்திய அரசிடம் எடுத்துச் சென்றபோதும் எந்தத் தீர்வும் இது வரை கிடைக்கவில்லை. தமிழக முதலமைச்சர்கள் இது தொடர்பாக டெல்லிக்கு கடிதம் எழுதி, எழுதி சோர்வடைந்துவிட்டார்கள்.

இந்தியக் கடல்பகுதியிலிருந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்த மீனவர்கள் அத்துமீறுவதால் இலங்கை அரசு அவர்களைக் கைது செய்து, மீன்பிடிச் சாதனங்களையும் படகுகளையும் கைப்பற்றுவதாகக் கூறுகிறது. எனில் எல்லைகளை சற்று மறு பரிசீலனை செய்யத் தான் வேண்டும்.

மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு கொடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவது கொஞ்சம் கூட ஏற்புடையதல்ல. இன்னும் எவ்வளவு காலம் எங்களை கொடுமைபடுத்தி  கொல்வீர்கள் என தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சனவரி 2006ஆம் ஆண்டில் இந்திய மீனவர்கள் கடல் எல்லையை மீறுவதைக் கட்டுப்படுத்தவும், அவ்வாறு அவர்கள் மீறினாலும் அவர்கள் மீது வன்முறை பயன்படுத்தப்படாதிருக்கவும் கைப்பற்றப்பட்ட படகுகளை விரைவாக திருப்பவும் வேண்டிய வழிமுறைகளை வரையறுக்கவும் இரு நாட்டு மீனவர்களுக்கும் உரிமம் பெற்ற மீன்பிடிப்பிற்கான வாய்ப்புகளை கண்டறியவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் இணை செயற்குழு  தற்போது வரை செயலற்று உள்ளது. காரணம் என்ன? வெறும் கண் துடைப்புக்காக இதை ஏற்படுத்தினார்கள் என்று தானே அர்த்தம்.

மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜ் கூறி இருப்பது கவனத்திற்கு உரியது. ‘‘நாட்டிற்கு பல ஆயிரம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் மீனவர்களை ஒன்றிய அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது. இது இந்திய அரசுக்கு அவமானமாகும். தமிழக மீனவர்களை இந்தியப் பிரஜையாக இந்திய அரசு கருத வேண்டும். ஒன்றிய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், மீனவர்கள் மார்ச் 4ல் தீக்குளிக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார். ஆனால், இதை தள்ளி வைத்துள்ளனர்.

இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளை மீட்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிப். 28ம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.

தொடர்ந்து காத்திருப்பு போராட்டம், கஞ்சித்தொட்டி திறப்பு என இரவு பகலாக போராட்ட பந்தலில் தங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது.

போட்டோ; நன்றி; தினகரன்

அபராத தொகையை செலுத்த முடியாமல் இலங்கை சிறையில் கைதிகளாக உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு முன் வராததால், மீனவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். கையில் திருவோடு ஏந்தி கதறி அழுதபடி, ‘‘சிறையில் உள்ள மீனவர்களுக்கு அபராத தொகை செலுத்த பிச்சை எடுக்கிறோம்… பிச்சை போடுங்கள்…’’ என தேசிய நெடுஞ்சாலையில் கூறியபடி சென்றது பார்பவர்களை கலங்க வைத்துள்ளது.

காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் ரூ.30 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகமே முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது.

என்ன செய்யப் போகிறோம் நாம்!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time