ஏலக்காய் கலந்த தேனீர், தேங்காய் பால் பலருக்கும் பரிச்சயம்! தனது நறுமணத்தின் மூலம் உலகையே வசீகரித்த ஏலத்துக்கு மிகப் பெரிய வரலாற்று பின்னணி உண்டு! இனிப்பு பலகாரங்கள் தொடங்கி பிரியாணி வரை பலவற்றிலும் வாசனைக்கும், சுவைக்கும் சேர்க்கப்படும் ஏலத்திற்கு மகத்தான மருத்துவ குணங்கள் உள்ளன:
சமையலில் சேராத ஏலம் வாசனையால் நம்மை மதிமயக்கும்! ஏலம் சேர்க்கப்பட்ட உணவுகளோ சுவையால் மதிமயக்கும்! நறுமணப் பொருட்களின் ராஜ்யத்தில் மிளகுக்கு இருக்கும் அதே கம்பீரம் ஏலத்துக்கும் உண்டு! மிளகு ‘நறுமணப் பொருட்களின் ராஜா’என்றால், ஏலமோ ‘நறுமணப் பொருட்களின் ராணி…’
இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவிய ஏலம் தனது வாசனையின் மூலம் பலரையும் வசீகரித்து தன் வசமாக்கியது. பல்லாயிரம் ஆண்டுகளாக வெவ்வேறு நாடுகளில் ஏலத்தைப் பற்றிப் பதிவுகள் இருக்கின்றன. இப்போது மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஏலத்தின் விலை உச்சத்தில் தான் இருந்தது!
ஏலத்தைச் சிதைத்துப் போடும் போது கிடைக்கும் பிரத்யேகமான வாசனைக்கு காரணம், ஏலத்துக்குள் மறைந்திருக்கும் ஒன்றல்ல, இருபத்தைந்து வாசனைமிக்க எண்ணெய்கள்! இப்போது புரிகிறதா ‘மறைந்திருந்து மணக்கும் ஏலத்தின் மர்மம்.’ ஏலத்தில் உள்ள ‘சினியோல்’ எனும் வேதிப் பொருள் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணமாகிறது.
உலக நாடுகளில் ஏலம்:
ஏலத்தின் பயன்பாடு அரேபிய நாடுகளில் மிகவும் அதிகம். வித்தியாசமான சுவையைக் கொண்ட அரேபிய சமையலில் கொஞ்சம் இனிப்புச் சுவை கிடைப்பதற்காக ஏலத்தின் சேர்மானம் அதிகம் இருக்கிறது! மேலும், அரபு நாடுகளில் ஏலம் சேர்க்கப்பட்ட கஹிரா எனும் காஃபி ரகம் புகழ் பெற்றது.
பெரும்பாலான அரேபிய நாடுகளில் இருக்கும் வீடுகளுக்கு நீங்கள் சென்றால், ஏலத்தின் மனம் கமழும் காபியைக் (Qahira) கொடுத்து உங்களை வரவேற்பார்கள். கேரளாவின் தரம் மிகுந்த ஏலத்தை வணிகம் செய்வதற்காக அரேபிய நாட்டு வணிகர்கள் பலர், தங்கள் சொந்த நாட்டை மறந்துவிட்டு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கேரளத்திலேயே தஞ்சமடைந்தனர்.
உலக வரைபடத்தில் குறிப்பிட்ட இடங்களில் தான் ஏலத்தின் பயன்பாடு என்று சொல்வதை விட, வரைபடம் முழுவதும் அடிகோடிட்டு காட்டும் அளவுக்கு ஏலத்தின் பயன்பாடு உலக சமையலில் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஃபின்லாந்திலும், டென்மார்க்கிலும் பிரட், கேக் ரகங்களுக்கு நறுமணமத்தையும் சுவையையும் கூட்ட ஏலத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் பாரம்பரியமிக்க மசாலா டீ’யில் (Chai masala) சேர்க்கப்படும் முக்கிய நறுமணமூட்டி ஏலம்.
ஏலாதி நூலும் ஏலாதியும்:
உணவுப் பொருட்களுக்கு மணம் கொடுக்க மட்டுமல்ல, மருந்துகளுக்கு மணம் கொடுக்கவும் ஏலக்காய் பயன்படுகிறது. ஒரு நூலுக்குப் பெயர் சூட்டும் அளவுக்கு ஏலத்தின் மகிமை இருப்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏலாதி சூரணம் எனும் சித்த மருந்து, தனது மருத்துவ குணங்களால் எப்படி ஆரோக்கியத்தைக் கொடுக்குமோ, அதைப்போல ஏலாதி நூலும் தனது கருத்துகளால் ஆரோக்கியத்தை வழங்கும் என்ற அடிப்படையில் நூலுக்கு ஏலாதி எனும் பெயர் சூட்டப்பட்டது.
இனிப்பும் ஏலமும்:
பிரசாதமாகக் கிடைத்த திருப்பதி லட்டைச் சுவைக்கும் போது, தெரியாமல் பற்களுக்கிடையில் சிக்கிக் கொள்ளும் நார் போன்ற ஏலத்தின் சுவைக்கு அடிமையாகி, அப்போதே திருப்பதிக்கு ஒரு அட்வான்ஸ் புக்கிங் செய்யும் ஏலம் கலந்த லட்டுக்கு பல ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
நமது பாரம்பரிய இனிப்புகள் பலவற்றிலும் ஏலம் குடியிருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? அதிகளவிலான இனிப்புச் சுவையால் அதிகரிக்க வாய்ப்பிருக்கும் கபத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக! இப்போதைய இனிப்புகளில் மருந்துக்குக் கூட ஏலம் இருப்பதில்லை என்பது வருத்தமான செய்தி!
இரத்த அழுத்த நோயாளிகள் ஏலம் தட்டிப் போட்ட இஞ்சித் தேநீரை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். தவறான உணவியலால் ஏற்பட வாய்ப்பிருக்கும் பல்வேறு நோய்களுக்கான நிவாரணி ஏலம்! உணவுப் பாதையில் உண்டாகும் பிரச்சனைகளை சரி செய்வதோடு, மூச்சுப் பாதையில் உள்ள பிரச்சனைகளையும் ஏலம் சரி செய்யும். ஏலத்தில் உள்ள மணம் மிக்க எண்ணெய்களுக்கு, தசைகளைச் சாந்தமாக்கும் சக்தி உண்டு. தசைப் பிடிப்புகளை இளக்கும் செய்கை (Anti-spasmodic) இருப்பதால், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தசை இறுக்கத்தைக் குணமாக்கும்.
வாய் நாற்றம் போக்கும் இயற்கை மருந்து:
வாய் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் ஏல விதைகளைப் புதினா மற்றும் கறிவேப்பிலை இலைகளோடு சேர்த்து கடித்துச் சாப்பிடலாம். வாய் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதில் ஏலத்தின் பங்கு அதிகம். உணவு சாப்பிட்டு முடித்தவுடன் ஏலக்காயை மென்று சாப்பிட செரிமானம் சிறப்பாகும். ஏலத்தில் உள்ள வேதிப்பொருட்கள் வாய் நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டவை!
சித்த மருத்துவத்தில்:
ஏலத்தின் உதவியுடன் பல்வேறு சித்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. முதன்மை மருந்துகளுள் ஒன்றான ஏலாதி சூரணம் செரிமான பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும். பஞ்ச தீபாக்கினி சூரணம், ஏல வடகம், ஏல நெய், ஏலக் குடிநீர் போன்ற மருந்துகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. செரிமான சிக்கல் காரணமாக ஏற்படும் வயிற்று வலியை உடனடியாகக் குறைக்க ஏலம் சேர்ந்த மருந்துகள் உதவும். கார்ப்புச் சுவையைக் கொண்டதாய் உடலுக்குத் தேவையான வெப்பத்தை ஏலம் வழங்கும்! பசியைத் தூண்டுவது ஏலக்காயின் முக்கியமான செய்கை! துடி, கோரங்கம், ஆஞ்சி போன்றவை ஏலத்தின் வேறு பெயர்கள்!
‘லெப்குச்சே’ (Lebkuchen) எனப்படும் பாரம்பரிய மிக்க ஜெர்மானிய நாட்டின் கேக் வகையில் ஏலம் தவறாமல் இடம் பெறுகிறது. சுவீடன் நாட்டில் ‘கிளாக்’ எனப்படும் மதுவகையை அருந்துபவர்கள் அதிகம். அந்த மதுவில் ஏலத்தின் நறுமணம் தூக்கலாக இல்லையென்றால், சண்டைப் போடும் சுவாரஸ்யமான ஏலப் பிரியர்கள் அங்கு இருக்கிறார்கள்.
எப்படி ஏலத்தை வாங்குவது:
ஏலத்தின் முனைகள் பிளவுபடாதபடி தேர்ந்தெடுப்பது நல்லது. பிளவுபட்டிருப்பின் அதலிருக்க வேண்டிய வாசனை எண்ணெய் முழுமையாக இருக்காது. மெல்லிய பசுமை நிறத்தில் சிறிய அளவில் காட்சி கொடுக்கும் ஏலமே தரத்தில் உயர்ந்தது. வாசனை குறைந்த ஏலம், நலப் பொருட்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்ட ஏலம் போன்றவை கலப்படத்துக்கு உதவியாக இருக்கின்றன. ஏலக்காய்களை எடுத்துப் பார்க்கும் போது இலேசான எண்ணெய்ப் பசை இருக்க வேண்டும்.
நமது கேரள ஏலக்காய்கள் தாம் தரத்தில் உயர்ந்தவை என்று பெருமையாகச் சொல்லலாம். கேரள ஏலக்காய் போல, கெளதமாலாவின் விளையும் ஏலத்திற்கும் இப்போது சர்வதேச சந்தையில் மதிப்பு அதிகரித்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கெளதமாலாவில் ஏலம் அறிமுகம் ஆனது. ஆனால் இப்போது ஏலத்தை உற்பத்தி செய்வதில் கெளதமாலாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே கடும் போட்டி.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குப் பயணம் மேற் கொள்ளும் போது, ஆங்காங்கே காணப்படும் ஏலத் தோட்டங்களைப் பார்வையிடுங்கள்! முளைத்திருக்கும் ஏலக்காய்களும் ஏலச் செடிகளும் பல்வேறு சுவாரஸ்யமான கதைகளைப் பேசும்!
ஏலம்… மருத்துவ குணங்களில் உச்சம்!
– மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)
ஏல மகாத்மியம் நன்று.