சிறுமைக்குள் தன்னையே சிறைப்படுத்திக் கொள்ளும் நீதிபதி கர்ணன்!

சாவித்திரி கண்ணன்

நீதித்துறையில் ஜாதி உணர்வு இருக்கிறதா?

’’ஆம், இருக்கிறது, சந்தேகமில்லை!’’

நீதிபதிகளும் குற்றங்கள் செய்பவர்களா?

’’ஆம்,செய்பவர்களே!’’

நீதிபதிகள் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களா?

’’இல்லை! நூற்றில் ஒரு நீதிபதி இருக்க வாய்ப்புண்டு!’’

இந்த சமூகத்தில் என்னென்ன உன்னதங்கள்,சிறப்புகள் உள்ளனவோ, அவை நீதிகளிடமும் உள்ளன! இந்த சமூகத்தில் என்னென்ன பலவீனங்கள்,குற்றங்களுள்ளனவோ அவை நீதிபதிகளிடமும் உள்ளன! அவர்களும் இந்த சமூகத்தின் உருவாக்கம் தானே!

நீதிபதிகளைக் குறித்து நமது அறம் இணைய இதழில் ஏற்கனவே எழுதியுள்ளேன். நீதித்துறையின் மீதான பாலியல் புகார்களை நிராகரிப்பதா?

ஆனால், தன்னை சுற்றியுள்ள பாசிடிவ் அம்சங்களை பார்க்கத் தவறி, எப்போதும் நெகடிவ் அம்சங்களை மட்டும் உள்வாங்கி வெளிப்படுத்துபவராக முன்னாள் நீதீபதி கர்ணன் உள்ளார்!

இளம் வயதில் நிதானமிழந்து வாழ்பவர்கள் கூட, ஒரு குறிப்பிட்ட வயதில் நிதானமும், தன் சுயத்தை உணரும் மனப்பக்குவமும் கொள்வதை பார்த்துள்ளேன்! ஆனால் எத்தனை வயதானாலும், எவ்வளவு உயரங்களை பெற்றாலும், தங்களை மாற்றிக் கொள்ளாமல் தன்னைத் தானே தாழ்வு நிலைக்கு தள்ளிக் கொள்ளும் சிலரும் உள்ளனர்! அவர்களில் ஒருவராக 65 வயது முன்னாள் நீதிபதி கர்ணன் உள்ளார்! பல கசப்பான அனுபவங்களைக் கடந்து தான் ஒரு தலித்தான அவர் உயர் நிலைக்கு வந்திருப்பார். அந்த கசப்புணர்வுகளையே வாழ் நாள் முழுக்க,நெஞ்சில் தூக்கி சுமந்து கொண்டிருந்தால் அது நிகழ்காலத்தையே கசப்பாக்கிவிடும்!

கடலூர் மாவட்டத்தில் கார் நத்தம் என்ற கிராமத்தில் ஒரு எளிய தலித் குடும்பத்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்த அவர் உயர்நீதிமன்ற நீதிபதி என்ற அந்தஸ்து பெற்றார் என்றால், அது சக நீதிபதிகளின் கரிசனமின்றி சாத்தியமில்லை. நீதிதுறைக்குள் ஜனநாயக பண்பில்லாமல் சாத்தியமில்லை! ஏனென்றால்,அவர் கொலிஜியத்தின் மூலம் தேர்வானவர். உயர் நீதிமன்றத்திலும்,உச்ச நீதிமன்றத்திலும் தலா மூன்று நீதிபதிகளின் பரிந்துறையும், ஆதரவுமின்றி அவர் நீதிபதியாக தேர்வாக முடியாது. அது மட்டுமின்றி நீதிபதி தேர்வுக்கு மத்திய அமைச்சரவை,உள்துறை அமைச்சக அங்கீகாரமும் தேவை! இத்தனை நிலைகளில் எங்கேயாவது தடை ஏற்பட்டிருந்தாலும் அவர் நீதிபதியாகி இருக்க முடியாது.

எந்த சமூகத்தையும், நீதித்துறையையும் கர்ணன் சதா சர்வ காலமும் பழிக்கிறாரோ அவைதான் அவருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளன.

அவர் தன்னைப் போல மற்றவர்களும் இந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்கு இது வரை சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டிருப்பாரா?

தன்னுடைய தொழிலிலாவது நேர்மையானவர் என்று பெயர் எடுத்தாரா?

தன்னை ஒரு பின்பற்றதக்க முன்மாதிரியாக்கி கொண்டாரா என்றால் இல்லை!

இந்திய வரலாற்றில் ஆறுமாத சிறை தண்டனை பெற்ற ஒரே நீதிபதி என்ற அழியா இழுக்கை பெற்றும் அவர் திருந்தவில்லையே! அவர் பேசுவதை நிறுத்திக் கொள்வதாக உத்திரவாதம் தந்தால் கூட போதும் இது வரை அவர் பேசியவை, செய்தவைகளை மன்னிக்கத் தயார் என்ற அளவுக்கு உச்ச நீதிமன்றம் இறங்கி வந்தும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நிதானம் கொள்ளாமல் மீண்டும்,மீண்டும் அதிகாரதுஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்.

சமீபத்தில் முன்னாள் பெண் நீதிபதி பானுமதி அவர்களின் வீட்டுக்குள் ஐந்தாறு நபர்களுடன் அத்துமீறி நுழைந்து கலகம் செய்துள்ளார். நீதிதுறையில் இயங்கும் சக பெண்கள், நிதிபதிகளின் வீட்டுப் பெண்கள் ஆகியவர்களின் மீது அவதூறாகப் பேசி, ஒன்றல்ல, இரண்டல்ல, 12 வீடியோ வெளியிட்டார். இது எவ்வளவு கொதி நிலையை நீதிதுறையில் உருவாக்கும் என்பது அவருக்கு தெரியாதா?

ஒரு முன்னாள் நீதிபதி, அதுவும் பட்டியலினத்தவர் என்ற பாதுகாப்பு கவசம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வதா? ’’இந்த பாதுகாப்பு கவசங்கள் மட்டும் இல்லையென்றால், கர்ணன் ஆயுள் தண்டனை பெற்று வாழ்நாளெல்லாம் சிறையில் இருந்திருக்க கூடிய அளவுக்கு தண்டிக்கப்பட்டிருப்பார்’’ என முன்னாள் நீதிபதி சந்துரு கூறியது கவனத்திற்குரியதாகும்!

முக்கிய பெண் வழக்கறிஞர்கள் ஆர் வைகை, சுதா ராமலிங்கம், அண்ணா மேத்யூ, கீதா ராமசேசன், டி நாகசீலா, டி கீதா, எஸ் தேவிகா, அகிலா ஆர்எஸ், என்எஸ் தன்வி மற்றும் நிவேதிதா மேனன் உள்ளிட்ட பத்து பெண் வழக்கறிஞர்கள், ‘’தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் மற்றும் ஐபிசியின் 292,354 ஏ மற்றும் 506 பிரிவுகளில்  அவர் மீது நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும்’’ என்று கையெழுத்திட்டு கடிதம் தரக் கூடிய நிர்பந்தத்தை கர்ணன் தன் அத்துமீறிய பேச்சுகளால் ஏற்படுத்திக் கொண்டார். இவர்கள் தங்கள் புகார் கடிதத்தில் “முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த செயல் ஒரு கொடூரமான வன்முறைச் செயல் மற்றும் அனைத்து பெண்களின் கெளரவத்திற்கும் அவமரியாதை. ’’ என்று  கூறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தின!

ஆகவே, இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆளானது. இதை தொடர்ந்து நீதிபதி கர்ணனை விசாரித்து நடவடிக்கை எடுக்க, குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த வகையில் நீதிபதி கர்ணனை குற்றபிரிவு போலீசார் தங்கள் அலுவலகத்தில் வைத்து ஐந்து மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறைக்கு ஆணையிடும் அந்தஸ்த்தில் இருந்த ஒருவர் தற்போது காவல்துறை விசாரணைக்கு ஆட்படும் நிலைக்கு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளத்தான் வேண்டுமா?

மிக உயர்ந்த பதவி வகித்த கர்ணன், அவரது செயல்பாடுகளால் தான் சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்த்திருக்க வேண்டியதற்கு மாறாக, தர்ம சங்கடத்தை உருவாக்கிவிட்டார் என்பது உள்ளபடியே கவலையளிக்கிறது.

பெருமைக்குரிய வாய்ப்புகள் அமைந்தும் தன்னைத் தானே சிறுமை சிறைக்குள்  சிறைப்படுத்திக் கொள்கிறார் கர்ணன்!

’யாகவாராயினும் நா காக்க…’’

‘அறம்’சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time