கல்வியின் பெயரால் இத்தனை களவாணித் தனங்களா?

-இறை நேசன்

முஸ்லீம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழக அரசு  நிலம் தந்து, ஆசிரியர்கள் ஊதியமும், பல உதவித் தொகைகளையும் வழங்குகிறது. இவ்வளவையும் ஒரு தனி நபர் தன் சொந்த ஆதாயத்திற்கானதாக மாற்றி, அடித்தள ஏழை மாணவர்களிடம் ஈவு இரக்கமின்றி வசூல் வேட்டை நடத்தி அதிகார ஆட்டம் போடுவது எப்படி? 

1974ம் ஆண்டு திருப்பூர் முகைதீன், கே.எஸ். அப்துல்வகாப் ஜானி (Ex MLC)  எம்.ஏ. அப்துல் லத்தீஃப் MLA, ஏ. கே. ரிஃபாய் Ex M.P, எம். செய்யது முஹம்மது,திண்டுக்கல் நானா மூனா கனி, சிலார் மைதீன், Ex M.L.A,கோதர் மைதீன் ex MLA உள்ளிட்ட சமுதாயப் பெரியவர்களால்  காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி உருவாக்கப்பட்டு, சென்னை விமான நிலையம் அருகே வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது.

அன்றைய முதலமைச்சர் கருணாநிதி 1975 ஜனவரி 10 அரசாணை எண் G.O. No. 18 மூலம் மேடவாக்கத்தில்  39.93 ஏக்கர் நிலத்தை காயிதேமில்லத் கல்லூரிக்கு வழங்கினார். இவ்வளவு பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் 10 ஏக்கரில் மட்டுமே கல்லூரி செயல்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 30 ஏக்கர் நிலத்தை அரசு திருப்பி எடுத்துக் கொண்டது.

இக் கல்லூரியின் செயலராக இருந்த மறைந்த தலைவர் எம் .ஏ. அப்துல் லத்தீபின் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைத்து, காயிதே மில்லத் பேரன் என்ற கவசத்தை முன்னிறுத்தி, அரபு நாட்டில் பணியாற்றி விட்டு தமிழ்நாடு திரும்பியிருந்த  தாவூத்மியாகான் 2000 மாவது ஆண்டில் இக் கல்லூரியின் செயலர், தாளாளர் பொறுப்பிற்கு வந்தார்.

அப்போது தொடங்கி 24 ஆண்டுகளாக அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர்களை நீக்கிவிட்டு, தன் குடும்பத்தினர் மற்றும் தன் ஆதரவாளர்கள் என 53 பேரை நியமித்து, முறைகேடாக கல்லூரி நிர்வாகத்தை நடத்துகிறார், தாவூத் மியாகான்.

சிறுபான்மையினருக்கு சட்டம் தந்துள்ள உரிமைகளை மிகத் தவறாகப் பயன்படுத்துவது, ஏழை மாணவர்களிடம் கசக்கி பிழிந்து பணம் பெறும் ஊழலை எதிர்த்த கல்லூரி ஆசிரியர்களையும் அலுவலக ஊழியர்களையும் பழி வாங்குவது, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட மாணவர்களுக்கு மறுப்பது… என்பதை கடந்த கால் நூற்றாண்டாக கடைபிடிக்கிறார்.

இந்தக் கல்லூரி காலை நேரத்தில் அரசு உதவி பெறும் கல்லூரியாகவும், மாலை நேரத்தில் சுயநிதி தனியார் கல்லூரியாகவும் செயல்படுகிறது. அரசு உதவி பெறுகிற கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட சுமார் ஆறு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நிலத்தையும், அதே கட்டிடங்களையும் பயன்படுத்தி நடத்தப்படும் சுயநிதி கல்லூரியிலோ தாறுமாறான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரசு சுய நிதி கல்லூரிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், பிரின்சிபள் ஆகிய போஸ்ட்டுகளுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று தான் அப்பாயிண்மெண்ட் தரப்படுகிறது. மாலை நேரக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு அத்துக் கூலி போல வெறும் 12,000  சம்பளமாக தரப்படுகிறது.

அரசு உதவி பெறும் இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் 99 சதவீதம் மிகவும் வறியவர்கள். வறுமையின் கோரப்பிடியில் உழலும் இந்த மாணவர்களிடம் சட்டவிரோதமாக கூடுதல் பணம் வசூலிப்பதால் சில ஏழை மாணவ,மாணவிகள் படிப்பையே தொடர முடியாமல் போவது கவலையளிக்கிறது.

தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம்  1976ன் 28 வது பிரிவு  “அரசு உதவி பெறும் எந்தவொரு தனியார் கல்லூரியும்  அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ எக்காரணத்தை முன்னிட்டும் வசூலிக்கக் கூடாது.” என கறாராக வரையறுத்துள்ளது.

ஆனால், இந்தக் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவுகளில் சேரும் மாணவர்களிடம் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.  அந்தக் கட்டணம் சிறப்புப் பயிற்சி வகுப்பு, ஆங்கிலப் பயிற்சி என்ற போர்வையில் வசூலிக்கப்படும்.

அந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேராமல் கல்லூரிக் கட்டணம்  மட்டும் கட்டுகிறேன் என்று சொன்னால், அம்மாணவருக்கு இங்கு சேர்க்கைக் கிடைக்காது.

இந்த மறைமுக லஞ்சத்தைக் கொடுக்காமல் இந்த கல்லூரியில் மாணவர்கள் படிப்பது என்பது அரிதினும், அரிது.

பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், தந்தையை இழந்தவர்கள் எனப் பரிதாபமான சூழலில் உள்ள மாணவர்களிடம்  ஈவிரக்கமின்றி இந்தத் தொகை வசூலிக்கப்பட்டு வருவது நம் நெஞ்சை பிழியும் சோகமாகும்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் ரசீது கொடுக்காமல் வசூலித்து வந்தனர், ஓரிரு ஆண்டுகளாக துணிவு பிறந்து முறைகேடுகளை உயர் கல்வித் துறை சரிகட்டிவிட்டோம் என்ற தெம்பில் ரசீது கொடுத்தே லஞ்சம் வாங்கி, நெஞ்சம்  நிமிர்ந்துள்ளது இக்கல்லூரி .

 

நீல வண்ணத்தில் ரூ. 806-க்கு வழங்கப்படும் ரசீது தான் அரசின் தணிக்கையில் காட்டப்படும் ரசீதாகும்.

பச்சை நிறத்தில் ரூ.5000-க்கு வழங்கப்படும் ரசீதுக்’கு எந்த தணிக்கையும் கிடையாது.

இந்தத் தொகையை மாணவர்களிடம் வசூலித்துத் தர துறைத் தலைவர்களும் ஆசிரியர்களும் மும்முரமாய் களமிறங்க வேண்டும்.

இல்லையேல், அவர்களின் கதி அதோ கதிதான். ஆசிரியர்களைப் பழி வாங்குவது, அலுவலக ஊழியர்களுக்கு குடைச்சல் கொடுப்பது,போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை அலைக்கழிப்பது இறுதியில் வேலையை விட்டே காலி செய்வது இவையாவும் இங்கு தொடர்ந்து நடக்கும் கூத்துக்களாகும்.

இதற்கு சிறுபான்மை இனம், காயிதே மில்லத்தின் பேரன் என்ற கவசங்களை ‘மிஸ் யூஸ்’ செய்கிறார்!

இங்கு பல லட்சங்களை  லஞ்சமாகக் கொடுத்து பணிவாய்ப்பைப் பெற்றுள்ள பேராசிரியர்கள், அடிமைகள் போல ஆக்கப்பட்டு குமுறலோடு பணி செய்து வருகின்றனர்.

மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி முறைகேடாக மாணவ மாணவியரிடம் வசூலிக்கும் தொகைக்குத் தரும் ரசீதுகளில் NAAC Accredited, என்றும்  NAAC   Re-Accredited என்றும் முகப்பு வரிகளுக்கு  தேசியத் தரமதிப்பீடு பெற்றது என்று அர்த்தமாகும். உண்மையில் இந்த தரமதிப்பீடு  6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டது!

அதைவிட அவலம் இந்தக் கல்லூரி இன்னும் கூட சில பாடப் பிரிவுகளுக்கு சென்னை பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக அங்கீகாரம் பெற முடியாத நிலையிலும், ஏதேதோ கோல்மால் செய்து சமாளிக்கிறது.

அக்டோபர் 28, 1992 அன்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, ’அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிமாக நன்கொடை என்ற பெயரிலோ, கல்விக் கட்டணம் என்ற பெயரிலோ வசூலிப்பது சட்டவிரோதம், தண்டனைக்குரிய குற்றம் என்று தெளிவாகத் தீர்ப்பளித்துள்ள போதிலும், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி மிகத் துணிவோடு கட்டணக் கொள்ளை அடித்து வருவது ஆச்சரியமளிக்கிறது.

பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது என்ற விருதை தாவூத் மியாகான் இக் கல்லூரியில் நிறுவி அதற்காக ஆண்டுதோறும்  ஒரு விழாவெடுத்து மிக முக்கிய ஆளுமைகளை அழைத்து வழங்கி வருகிறார்.  இந்த விருதை முன்னிட்டு அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் வசூல் வேட்டை ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம்!

மாணவர்களின் உரிமைக்காகப் பேசிய பேராசிரியர்கள் பலர் இந்த நபரால் கொடுமையாக பழிவாங்கப்பட்டுள்ளனர்.  வணிகவியல் துறையைச் சேர்ந்த  பேராசிரியர் நாசர்தீன் கல்லூரி செயலரின் ரவுடி கும்பலால் ஓட ஓட அடிக்கப்பட்டு தெரு ஓரக்கடை ஒன்றில் புகுந்து உயிர் தப்பியது இன்று வரை பேசுபடு பொருளாக உள்ளது.

தாவூத் மியாகானின் ஊழல்களைத் தட்டிக் கேட்டதால் பழிவாங்கப்பட்டு பணியை விட்டே விரட்டப்பட்டவர்கள் அனைவருமே சிறந்த பேராசிரியர்களாகும். இது மட்டுமின்றி இங்கு ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் பேராசிரியர்களும் உள்ளனர்.

அரசு கொடுத்த கல்லூரியின் மைதானத்தைக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தனியார் பள்ளி விழாக்களுக்கும் வாடகைக்கு விட்டு பல கோடிகளை  ஈட்டும் தாவூத்மியாகான் இதிலிருந்து  கல்லூரி வளர்ச்சிக்கு  கடுகளவும்  செலவழிப்பதில்லை.

இவ்வளவு வசூலித்தும், தமிழ்நாட்டிலேயே ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரைகளில் வகுப்புகள் நடக்கும் கல்லூரி இது தான். மாணவ,  மாணவிகளுக்குக் போதிய, தரமான கழிப்பிட வசதி இல்லை.1,200 மாணவிகளுக்கு ஆறே கழிவறை எனும் போது இயற்கை உபாதைக்காக மிக நீண்ட கியூவிலே நிற்பது பேரவலம். அதுவும் 10 நிமிட இடைவெளியில் இயற்கை உபாதையை அனைத்து மாணவிகளும் ஒருபோதும் முடிக்கவியலாது.

பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் மாணவிகள், ஆசிரியைளுக்கான விசாகா கமிட்டி கிடையாது.  போதிய ஆய்வகங்கள் கிடையாது. கல்லூரியின் பெயர்ப் பலகை கூட துருப்பிடித்து காட்சியளிக்கக் கூடிய வகையில் தான் நிர்வாகம் நடக்கிறது. அதே சமயம் தாவூத் மியாகானின் ஆடம்பர, தடபுடல் சொகுசு வாழ்க்கை ஸ்டைலுக்கு ஒரு குறைவும் இல்லை.

மேலும் தாவூது மியாகான் சென்னை லயோலா கல்லூரி எதிரில் தொடங்கிய கயாம்ஸ் என்ற ஊடகப் பயிற்சி நிறுவனத்திற்கு காயிதேமில்லத் கல்லூரி ஏழை எளிய மாணவர்களின் கட்டணம் சுமார் ஆறுகோடி வரை  மடை மாற்றப்பட்டது தனி விவகாரம்! இப்போது அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது!

இங்கே இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை மிக, மிகக் குறைவே!  இந்த கட்டுரை தனி நபர் தாக்குதலாக இல்லாமல், ஒரு ஆகச் சிறந்த ஆளுமையின் பெயரிலான கல்லூரி, ஆக மோசமான வழிகளில் சீரழிவின் உச்சத்திற்கு சென்று கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டதேயாகும்.

நம் ஆதங்கமெல்லாம் காயிதே மில்லத் பெயரால் ஒரு மிகப் பெரும் களவாணித் தனம் தொடர்வதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். தரமான கல்விச் சூழல் தழைத்தோங்க வேண்டும்.

ஏழைகளுக்கு உதவுவதற்கான நல்வாய்ப்பை, ஏழைகளை சுரண்டுவதற்கானதாக மடைமாற்றிக் கொண்டு, கண்ணியத்திற்குரிய  தன் தாத்தாவின் பெயரை களங்கப்படுத்தி, சுய நலமே குறிக்கோளாய் வாழ்ந்து, சுற்றத்தையே பகையாக்கி, பல போலி பிம்பங்களை கட்டமைத்து வெற்றிகரமாக வலம் வருவதாக நம்பிக் கொண்டிருக்கும் தாவூத் மியாகான் அவர்கள் இறைவனை ஏமாற்ற முடியாது. தெய்வம் நின்று கொல்லும்!

இந்த விவகாரத்தில் நேர்மையான வகையில்  தமிழக அரசு விசாரணை நடத்தி, மதுரை வக்ஃப் வாரியக் கல்லூரி, அதிராம் பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளைப் போல இந்தக் கல்லூரியும் சீரமைக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய பெரியோர்களின் ஆதங்கமாக உள்ளது.

காலத்தே அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கொந்தளிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மனநிலை அரசுக்கெதிராக திரும்பி விடும்.

இறை நேசன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time