அங்கீகார மறுப்பால் அகிலத்தை வென்ற இளையராஜா!

-சாவித்திரி கண்ணன்

உள்நாட்டில் மறுக்கப்பட்ட  தனக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் உருவாக்கிக் கொண்டார் இளையராஜா! இசைமேதை இளையராஜா  இயல்பிலேயே ஒரு கலகக்காரர். சிம்பொனியும் கலகக்கார்களால் உருவாக்கப்பட்டதே! கர்நாடக இசை மேடைகளில் அங்கீகாரம் மறுக்கப்பட்ட இளையராஜா மேற்கத்திய இசை மேடைகளை வென்றதை பற்றிய ஒரு அலசல்;

இளையராஜா மண்ணின் இசையையும், மக்கள் இசையையும் மரபு வழியாக உள்வாங்கி வளர்ந்தவர். ஒரு கம்யூனிஸ்ட்டாக இசை வாழ்வை தொடங்கிய அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை எந்த அமைப்பிற்கும் கட்டுப்பட்டதன்று! எனவே, அது, தன் கட்டற்ற சுதந்திர வெளியை தொடகத்திலேயே கண்டடைந்தது.

தன்ராஜ் மாஸ்டருடன் இளையராஜா

தன்ராஜ் மாஸ்டரிடம்  மேற்கத்திய இசையை பயின்ற போதே மொசார்ட்டும், பீத்தோவனும் அவரது இதய சிம்மாசனத்தில் வந்தமர்ந்தனர். மயிலாப்பூர் லஸ் கார்னர் சாயி லாட்ஜ் தன்ராஜ் மாஸ்டர் அறையில் தான் அவர் பீத்தோவனையும், மொஸார்ட்டையும், பாஹ்கையும், மேண்டல்ஸனையும், ஷீபர்ட்டையும், சைக்காவ்ஸ்கியையும் அறிந்துணர்ந்தார்.

ஏனென்றால் ஒரு கலகக்காரனாலேயே இவர்களை கண்டடைய முடியும்.  மொழிகளின் ஆதிக்கத்தைக் கடந்த இசையின் மீதான அவரது ஆரம்பகால ஈர்ப்பாக வெளியானதே ஹவ் டூ நெம் இட், நத்திங் பட் விண்ட் போன்ற மொழிகளற்ற இசை ஆல்பங்கள்!

உலகின் தலை சிறந்த இசை கலைஞர்களைக் கொண்ட  ராயல் பிலார்மோனிக் இசைக் குழு லண்டன் மா நகரில் அவரது இசையை இசைக்கிறது. இன்னும் உலகின் 13 நாடுகளில் உலகப் பெரும் இசைக் கலைஞர்கள் அவரது இசை நோட்சை பார்த்து இசைக்க உள்ளனர்.

உலகத்தில் மதம் சார்ந்தும், மன்னர்களின் அதிகாரம் சார்ந்தும் உருவான இசைகள் காலப் போக்கில் காணாமல் போயின. ஆனால், தமிழகத்தில் மட்டும் மதம் சாதி ஆகியவற்றின் அதிகார பீடமாக அங்கீகாரம் பெற்ற கர்நாடக இசையை இன்னமும் விட்டுக் கொடுக்காமல் பிராமணர்கள் தங்கள் சாதிக்கான இசையாகவே வளர்த்து நிலை நிறுத்தி வருகின்றனர். இதில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் மாற்று சாதியினருக்கு  பெரிய அங்கீகாரத்தை தரமாட்டார்கள்!

அந்த வகையில் இங்கு தனக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரத்தைத் தான் இளையராஜா உலக அரங்கில் பெற்றுள்ளார்.

மக்கள் உணர்வுகளில் இருந்து அவருக்கு எல்லா இசையுமே அத்துப்படி.

சிம்பொனி ஒரு இனம் தன்னை தேசியமாக உணர ஆரம்பித்த பிறகான மாற்றங்களின் விளைவாய் கட்டற்று சுதந்திரமாக உணர்கிறது!  அவ்வித உணர்வுகளின் வளர்ச்சி போக்கே  சிம்பொனி இசையாய் உருக்கொண்டது.!

ஒரு வகையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட  பிரெஞ்சுப் புரட்சியோடு தொடர்புடையது சிம்பொனி இசை!

பிரெஞ்சுப் புரட்சியில், கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் கிறிஸ்துவ மதக் குறீயீடான ’லத்தீன்’ மொழி ஆதிக்கத்திற்கும் எதிரான கூறுகள் வெளிப்பட்டன என்பதை நாம் அறிவோம். ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்ததையும் எதிர்த்து மக்கள் புரட்சி வெடித்தது.

தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கு எதிராக உருவானதே பல இசைக் கருவிகளை பயன்படுத்தி உருவான சான்சன் (Chanson) இசை வடிவமாகும்! இதை உருவாக்கியவர், குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) என்ற பிரான்சின் இசை அறிஞராவார்! இதை இந்த மண்ணுக்கான மதச் சார்பற்ற இசை என அவர் பிரகடனப்படுத்தினார்!

இதே போல இத்தாலி இசைக் கலைஞன் பிரான்சிஸ்கோ லன்தினி (Francesco Landini) என்ற கண் பார்வையற்ற அறிஞர் தன் தாய் மொழியில், அதன் நாட்டுப் புற இசை அம்சமான மாத்ரிகல் (madrigal) என்ற இசை வடிவதை அறிமுகப்படுத்தி, அதை மதச் சார்பற்ற இசை எனப் பிரகடனப்படுத்தினார். இப்படியாக பிரான்சும், இத்தாலியும் சேர்ந்து சிம்பொனி என்ற புதிய இசை தோற்றத்திற்கான மூலக் கூறுகளை வழங்கின…என்கிறார்கள் இசை ஆய்வாளர்கள்!

எதற்காக இதை சொல்கிறேன் என்றால், புறக்கணிக்கப்படும் தேசிய இனத்தின் மக்கள் தங்களுக்கான இசையை தாங்களே உருவாக்கிக் கொள்வர்! அப்படி ஒரு ஆதிக்க மொழிக்கும், மத ஆதிக்கத்திற்கும் எதிராக உருவானதே சிம்பொனியின் தோற்றத்திற்கான அடித்தளமாகும்.

தன் தாயிடமிருந்தும், தன்னைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்களிடம் இருந்தும் இசைப் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் இயல்பாகவே நாட்டுப் புற இசையில் காலூன்றி மேலெழுந்து வந்தவர் தான் இளையராஜா! அவர் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு எல்லாம் அடித்தளமிட்டது அவர் கேட்டும், பாடியும் வளர்ந்த கிராமிய இசை தான்!

ஆனால், இதற்கு பின்னணியில் சில நூற்றாண்டுகள் நடந்த  நிகழ்வுகள் இதற்கு முன்னோட்டமாயின. அது கத்தோலிக்க மதத்தில் இருந்து உருவான புரோடஸ்டண்ட் மதத்தின் தோற்றம், ஜெர்மனியில் நடந்த மதப்போர்கள், இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டுப் போர்கள் (Civil war) ஐரோப்பிய நாடுகளில் உருவான பொருளாதார விடுதலைக்கான குரல்கள் அகியவை மேற்கத்திய இசையில் தாக்கத்தை உருவாக்கி மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டன. அது ஹைடன் (Haydn), மொசார்ட் (Mozart) போன்ற இசை மேதைகள் சிம்பொனியை படைக்க காரணமாயிற்று!

இசை மேதைகள் பித்தோவன், மொசார்ட்

சிம்பொனியை அதற்கடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் புரட்சிகரமான சிந்தனையை கொண்டிருந்த பீத்தோவன் என்ற மாபெரும் இசைமேதையாகும். இந்த காலகட்டத்தில் அச்சு ஊடகம் வளர்ந்த நிலையில், இசைக் குறியீடுகளை அச்சிடத் துவங்கியதால் இசையின் வளர்ச்சி அனைவருக்குமானதானது.  மொசார்ட், பீத்தோவன் ஆகிய இந்த இருவரும் தான் நம் இளையராஜாவின் இதய ராஜ்ஜியத்தில் பல்லாண்டுகளாக கோலோச்சுபவர்கள்! சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே நம் இளையராஜா இவர்களின் சமாதிகளை தேடிக் கண்டடைந்து கண்ணீர் உகுத்து அழுது வந்ததை எழுதி உள்ளார்.

மொழிகளின் ஆதிக்கத்தை கடந்த மனித சுதந்திரத்தின் முழு வெளிப்பாடாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த இசை வடிவம் இளையராஜாவை வசீகரித்தது. இதன் விளைவாக நம் இளையராஜா 1993 ஆம் ஆண்டே சிம்பொனியை படைத்தார்! ஆயினும் அந்த இசைக்கு பரிச்சியமல்லாத இந்திய இசைக் கருவிகளையும் அதில் இளையராஜா இணைத்து ஏற்படுத்தியதால் அது மேற்கத்திய இசை உலகின் முழு ஏற்பையும் பெற முடியாமல் போயிற்று!

ஆனால், தற்போது முற்றிலும் மேற்கத்திய இசைக் கருவிகளுக்கு மட்டுமே இளையராஜா நோட்ஸ் எழுதி சிம்பொனியை அரங்கேற்றிவிட்டார்! மேஸ்ட்ரோ, ராகதேவன், இசை ஞானி..என பலவாறாக மக்களால் அழைக்கப்பட்டாலும் கர்நாடக இசை விற்பன்னர்கள் இளையராஜாவை  கர்நாடக இசை கச்சேரி செய்ய சபா தருவார்களா? ஒரே ஒரு முறை வலிந்து அந்த வாய்ப்பை பெற்ற இளையராஜா வரவேற்பில்லாததால் நிறுத்திக் கொண்டார். ஆனால், அவருக்குள் அந்த ஆசை நிறைவேராத ஆசையாக தொடர்கிறது.

இளையராஜா சாதிகளைக் கடந்து சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டார். எனினும், இங்கே தமிழ் நாட்டில் கர்நாடக சங்கீத வித்வான்கள் நம் இளையராஜாவை ஏற்பார்களா? அவரது நிறைவேறாத நீண்ட நாள் கனவான பெருமளவு பிராமணர்கள் மட்டுமே கோலோச்சும் டிசம்பர் மாத கர்நாடக சங்கீத கச்சேரிக்கு அவரை அழைப்பார்களா?  திருவையாற்றில் ஆண்டுதோறும் நடக்கும்  தியாகய்யர் ஆராதனைக்கு அழைப்பார்களா..? இசை மும்மூர்த்திகளின் வரிசையில் தன்னையும் நான்காவதாக சேர்க்க வேண்டும் என்ற அவரின் கனவை நினைவாக்குவார்களா?

இவை எதுவும் நடக்காவிட்டாலும், இளையராஜா வேறு எவரையும் விட  கோடானு கோடி மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு கொலுவிருக்கிறார் என்பது மட்டுமல்ல, இந்த தொடர் மறுப்பே அவரை இன்னும், இன்னும் உயரப் பறந்து  மறுத்தவர்களை அண்ணாந்து பார்க்க வைக்கும்.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time