நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நமக்கு குறையக் கூடாது. ரொம்பச் சரி! ஆனால், நகரமயமாக்களுக்காக உள்ளாட்சிகள் குறையலாமா? சின்னஞ் சிறு உள்ளாட்சிகளின் பிரதிநிதித்துவம் அடியோடு உருக்குலைந்து போகலாமா? 91,975 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளிப் போடலாமா..?
மக்களவை தொகுதி மறுவரையறை தற்போது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசு பொருளாகியிருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைக்கான தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளதால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தங்களுக்கான மக்களவைத் தொகுதிகள் சிலவற்றை இழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 31 தொகுதிகளாக வாய்ப்பு இருக்கிறது. இதற்கு நேர்மாறாக மக்கள் வட மாநிலங்களின் மக்களவை தொகுதிகள் தற்போது இருப்பதை விடக் கூடுதலாக ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டின் குரல் இந்திய ஒன்றியத்தில் உறுதியாக ஒலிக்க வேண்டும் என்றால் உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். மாநிலங்களின் நலன்களைப் பாதுகாத்திட மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையாமல் தற்போதுள்ள அதே 7.2 சதவிகித பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான முன்னெடுப்புகள் அவசியமானதே!. முதல்வர் ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்ட தீர்மானங்கள் வரவேற்க்கத்தவையே!
டெல்லியில் இருந்து திட்டமிட்டு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என்பது ஆதிக்கத்தின் அணுகுமுறையாகப் பார்க்கிற அதே வேலையில், தற்போது ஊரக உள்ளாட்சிகளுக்கான பிரதிநிதிகளுக்கான எண்ணிக்கை குறைக்கப்படுவதை நாம் எப்படி பார்ப்பது?
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் இந்திய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் உறுதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டில் சாமானிய மக்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளாட்சிகள் மூலமாகவே உறுதி செய்யப்படுகின்றன. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி எனக் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதித்துவமும் ஜனநாயக செயல்பாடுகளில் மிக முக்கியமான ஒன்று தான்.
91,975 பிரதிநிதிகளை அலட்சியப்படுத்தலாமா?
உள்ளாட்சிகள் இல்லாமல் அனைவரும் சென்னையில் வந்து கோரிக்கை வைக்க வேண்டும் அல்லது சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மட்டும் தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்பதைச் சாமானிய மக்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களவைத் தொகுதி தற்போது 39 இருந்து 31 ஆக குறைக்கப்படும் என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் உரிய காலத்தில் ஊராட்சி தேர்தலை நடத்தாததனால் எவ்வளவு ஊராட்சி பிரதிநிதிகளுக்கான இடங்கள் காளியாக உள்ளது என்பதை நாம் அறிவோமா? தற்போது தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடத்தாமல் இருப்பதால் சுமார் 91,975 ஊராட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் அவ்விடங்கள் காலியாக உள்ளன. ஆம், நண்பர்களே! 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள், 515 மாவட்ட கவுன்சிலர்கள் என மொத்தம் சுமார் 91,975 பிரதிநிதிகள்!
கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதியோடு இவர்களுக்கான பதவிக் காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அதற்கு முன்பாகவே உரியக் காலத்தில் ஊராட்சி தேர்தல் நடத்தி சாமானிய மக்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளை அமர்த்தி இருக்க வேண்டும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு அரசும். எட்டு மக்களவை உறுப்பினர்கள் இடம் காக்கப்பட வேண்டும் என்பதில் இருக்கும் அதே உணர்வு இதிலும் இருக்க வேண்டாமா? மக்களவை உறுப்பினர்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும் என அச்சப்படும் அரசு, ஏன் எளியோர்களான ஊரக ஊராட்சி பிரதிநிதிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறது?
தற்போது இந்த 91,975 ஊராட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்கள் அதிகாரங்களை, மூன்றடுக்கு ஊராட்சி நிர்வாகத்தினை சில நூறு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் (பி.டி.ஓ) ஒப்படைத்து இருக்கிறது அரசு. எந்தளவுக்கு மக்கள் பிரதிநிதியின் நிலையைக் குறைக்க முடியுமோ, அவர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைத்து இருக்கிறார்கள். ஊராட்சியிலேயே, ஊரில் ஒருவராக இருக்கும் ஒரு தலைவர் அல்லது வார்டு உறுப்பினர் மூலம் நடக்கும் நிர்வாகம் என்பது தான் மக்களின் உண்மையான பிரதிநிதித்துவமாக இருக்குமே தவிர, பி.டி.ஓ மூலம் நடக்கும் நிர்வாகம் மக்களுக்கான நிர்வாகமாகவே இருக்காது என்பது அரசுக்குத் தெரியாதா?
மாநிலங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கு மக்களவையில் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் எந்த அளவிற்கு இன்றியமையதாக இருக்கிறதோ, அதேபோல உள்ளூர் மக்களுக்கான தேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் இன்றியமையாததாக இருக்கிறது. பி.டி.ஓ ஆட்சி என்றைக்கும் மக்களாட்சியாகாது. மாநில அரசு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் உடனடியாக ஊராட்சி தேர்தலை நடத்த வேண்டும். அது தான் டெல்லிக்கு நாம் வைக்கும் ஜனநாயக கோரிக்கைக்கு வலு சேர்க்கும்.
காலியாகும் ஊராட்சிப் பதவிகள்! எப்போது தேர்தல்?
கட்டாய நகரமயமாக்கலும் பிரதிநிதிகள் இழப்பும்
வலுக்கட்டாயமாக கிராமப்புறங்களை நகரப்புறங்களாக மாற்றுவதன் மூலமும் பல கிராமப்புற ஊராட்சிகள் தங்கள் பிரதிநிதித்துவத்தை நிரந்தரமாக இழக்கிறார்கள். ஒரு கிராம ஊராட்சியில் ஒரு தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் எனக் குறைந்தது 10 பிரதிநிதிகள் இருப்பார்கள். ஆனால், அதே ஊராட்சி, வலுக்கட்டாயமாக நகரங்களோடு இணைக்கும் போது, அந்த எண்ணிக்கை 10 லிருந்து ஒன்று அல்லது இரண்டாகக் குறைந்து விடுகிறது.
தற்போது சுமார் 376 கிராம ஊராட்சிகளை நகரங்களோடு இணைப்பதற்கான அரசாணைகளை வெளியிட்டிருக்கிறது அரசு. இவற்றில் பல ஊராட்சிகளில் தங்கள் ஊராட்சி ஊராட்சியாகவே தொடர வேண்டும், நகரங்களோடு இணைக்க வேண்டாம் எனப் போராடி வருகிறார்கள். கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். அக் கிராமசபை தீர்மானங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
ஜனவரி 5-ஆம் தேதியோடு ஊராக உள்ளாட்சிகளுக்குப் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில் கடந்த நவம்பர் – டிசம்பர் மாதத்தில் தேர்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்த நிலையிலேயே இது குறித்து சமூக அமைப்புகள் அரசின் கவனத்திற்கும் மாநில தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். குறிப்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் மக்கள் பல சவால்களைச் சந்திக்க நேரிடும் என்பதை விரிவாகச் சுட்டிக்காட்டினோம்.
நகரமயமாக்கலை எதிர்த்து போராடும் கிராம சபைகள்
கடந்த 2016 – 19 காலகட்டத்தில் இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே வழங்கப்படும் மத்திய நிதிக்குழு நிதியும் வராமல் இருந்தது. அதே சூழல் தற்போதும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் சுட்டிக் காட்டினோம். இருப்பினும், ஏனோ இன்னும் ஊராக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் இருக்கிறார்கள்.
இதுவும் சமூக நீதிதான்!
தற்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வராத நிலையில், ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் சுமார் 50% மகளிருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கிறது. தற்போது 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடத்தப்படாததால் 9,624 கிராம ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் சரி பாதி பெண்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பார்கள் . அதேபோல பல்லாயிரக்கணக்கான பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடி பிரதிநிதிகளுக்கான இடமும் தேர்தலுக்காகக் காத்துக் கொண்டிஇருக்கிறது. சமவெளி கடந்து மலைக் கிராமங்களில் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் படும் இன்னல்கள் வெளியில் தெரிவதில்லை. உரியக் காலத்தில் தேர்தல் நடத்தி மகளிர் மற்றும் பட்டியல் சாதி/ பட்டியல் பழங்குடியினர்கள் பிரதிநிதிகளாக ஆக்குவது தான் உண்மையான சமூக நீதியாக இருக்கும்.
மக்களின் குரல் கேட்கிறதா ?
சமீபத்தில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நாம் சந்தித்த ஒரு பெண்மணி கூறினார், ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளக் கணினி மையத்துக்குச் சென்ற போது ஊராட்சித் தலைவரின் கையெழுத்திட்ட சான்றிதழ் வேண்டும் எனக் கூறியதாகவும், ஊராட்சித் தலைவர் பதவி காளியாக உள்ளதால், ஊராட்சி செயலரை அணுகிய போது அவர் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந்திக்கச் சொன்னதாகவும், பிறகு வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொடர்பு கொள்ள முடியாததால் தற்போது ஆதார அட்டையில் திருத்தம் செய்ய முடியாமல் இருப்பதாகவும், ஆதார் இல்லாமல் தடுப்பூசி போட முடியாதெனச் செவிலியர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டதால் இன்னும் குழந்தைக்கு தடுப்பூசி போட முடியாத நிலையில் இருக்கிறோம் என ஆதங்கத்தோடு தெரிவித்தார்.
மக்களுக்குத் தேவையான சான்றிதழ் பலவற்றை ஊராட்சிகள் மூலம் வழங்க வேண்டிய நிலையில் தற்போது பிரதிநிதிகள் இல்லாத சூழலில் மக்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். பல சமயங்களில் ஊராட்சிகளுக்கான அடிப்படை பணிகள் கூட நிறைவடையாமல் தேக்க நிலை ஏற்பட்டு வருகிறது. இது ஓரிரு ஊராட்சிகள் பாதிக்கப்படுகிற விஷயம் அல்ல. 9,624 ஊராட்சிகளில் உள்ள பல கோடி மக்கள் பாதிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த பிரதிநிதித்துவத்தை முக்கியமாக அரசு பார்க்கவில்லையா?
Also read
உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையம் என்பது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்தல் ஆணையம். உரிய காலத்தில் தேர்தலை நடத்த விடாமல் உள்ளூர் மக்களின் தேர்தல் உரிமையைப் பறித்திருக்கிறது மாநில உரிமை பேசும் அரசு.
உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது மற்றும் கட்டாயமாக நகரங்களோடு கிராம ஊராட்சிகளை இணைப்பதை முற்றிலுமாக நிறுத்துவது என்பதனை வெறும் உள்ளாட்சிகளுக்கான தேவையாக மட்டும் பார்க்காமல் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவமாக பார்க்க வேண்டும்.
8 எம்.பிக்கள் உரிமைகள் பெரிதென்றால், 91,975 ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உரிமைகள் சிறியதா? மாநில உரிமைகளுக்கு போராட்டம் என்றால், உள்ளாட்சி உரிமைகளுக்கு பட்டை நாமம் ஏற்புடையதா..?
உடனே நடத்துக, ஊராட்சித் தேர்தலை!
காத்திடுக ஊராட்சி மக்களின் பிரதிநிதித்துவதை காத்திடுக!
கட்டுரையாளர்; நந்தகுமார் சிவா
சமூக செயற்பாட்டாளர்
தமிழின் தமிழரின் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கத் திமுக அதிமுக ஆகிய இரு தீராவிடக் கட்சிகளும் போராடவில்லை. திமுக அதன் தலைவரின் குடும்பத்துக்காகவும், அதிமுக அதன் மேல்மட்டத் தலைவர்களின் சொந்த நலனுக்காகவும் மட்டுமே போராட்டம் நடத்தும். தமிழின் பெயரில் இவ்விரு கட்சிகளும் செய்யும் போராட்டம் பொய்யானவை.
உணவு தண்ணீர் ஆதாரங்கள் கிராமங்கள் தான் கண்மூடித்தனமான நகர் மயமாக்கல் , நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுதலுக்கு சமம்
ஜனநாயகத்தின் ஆணி வேர் ஊராட்சிகள். உணவு தண்ணீர் ஆகிய மூலாதாரங்கள் கிராமங்களில் தான் உள்ளன உள்ளாட்சிகளை ஒடுக்குவது கொல்லைப்புறமாக அதிகார ஆக்கிரமிப்பு ஜனநாயக படுகொலை