தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது; பல விஷயங்களில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது என்பது மிக்க மகிழ்ச்சியாக தோன்றினாலும், தமிழகத்தின் சில யதார்த்தங்கள் அதிர்ச்சி தரத்தக்க உண்மைகளை பட்டவர்த்தனமாக உணர்த்துகின்றன…!
மத்திய அரசின் ஸ்டைலில் தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை( மார்ச்14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப் பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்களாக சொல்லப்பட்டவையும், உண்மை நிலையும்!
# 2021-22-ல் இருந்தே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8% அல்லது அதற்கு அதிகமான விகிதத்தில் உள்ளது, அதை தொடர்ந்து தக்க வைப்போம். தமிழ்நாடு 2023-24 ஆம் ஆண்டில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24ல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது…!
இது உண்மையானால், இந்த உற்பத்தி நிலையை எட்ட தமிழகத் தொழிலாளர்களை விட, தமிழகத்தில் குடியேறியுள்ள சுமார் 90,000 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் அதிகம் பங்களித்துள்ளனர். தமிழகத்தில் உழைக்கும் சக்தியை மூலதனமாகக் கொண்ட எளிய சமூகத்து ஆண்கள் கடந்த கால் நூற்றாண்டாக தீவிரமாக அமல்படுத்தப்படும் ’டாஸ்மாக்’ மது விற்பனையில் குடி நோயாளியாகி குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பாரமாகி உள்ளனர்.

# தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சி தேசிய சராசரியைவிட அதிகம். 2022-23ல் ரூ.2.78 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தை விட அதிகமானதாகும். எனவே, தனிநபர் வருமானத்தில் தமிழகம் நான்காம் இடம் வகிக்கிறது என பெருமைப்படும் தமிழக அரசில் சுமார் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்படாமலே உள்ளது என்பதும் ஆசிரியர், பேராசிரியர், மருத்துவர், செவிலியர், போக்குவரத்து துறை ஊழியர்கள் உள்ளிட்ட பல பணியிடங்களில் அத்துக் கூலிக்கு பணி அமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்பதை கவனப்படுத்த விரும்புகிறேன். பெருந்திரளான உழைப்பாளிகளும், படித்தவர்களும் இன்றைய காலகட்டத்தில் மாதம் சராசரியாக ரு 15,000 தான் சம்பாதிக்கிறார்கள். அந்த வகையில் 1.80 லட்சம் என்று தான் கொள்ள முடியும்.
# 2023-24-ல், சேவைத் துறையானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக் கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத்துறை (13%) பங்களித்துள்ளன. மகிழ்ச்சி தான்! ஆனால், சேவைத் துறையின் வளர்ச்சியை விட, உற்பத்தி துறை வளர்ச்சியே முக்கியமானதாகும்.
# மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவில் நெல், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62% ஆகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38% ஆகவும் உள்ளன. பயிர்ப்பரப்பில் நெல் தொடர்ந்து முதன்மை நிலை வகித்து வருகிறது. 2019-20-ல் மொத்த பயிர்ப் பரப்பில் 32.1% ஆக இருந்த நெல்லின் பங்கு 2023-24ல் 34.4% ஆக அதிகரித்துள்ளதாம்.
நல்லது, இந்த புள்ளிவிபரங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, தமிழகத்தில் விவசாயிகளை பாதிக்கும் நில எடுப்பு சட்டத்தை ஆட்சியாளர்கள் எவ்வளவு மோசமாக கையாளுகிறார்கள் என்பதற்கு 600 நாட்களை கடந்து போராடி வரும் மேல்மா விவசாயிகளும், பரந்தூர் விமான நிலையத்திற்கான 5,000 சொச்சம் ஏக்கர் விளை நிலங்களை காக்க போராடும் விவசாயிகளுமே சாட்சியாகும். குறிப்பாக, தமிழகத்தில் திமுக ஆட்சி பதவி ஏற்பதற்கு முன்பு இருந்த பயிர் செய்யும் நிலப்பரப்புகள் எவ்வளவு? தற்போது எவ்வளவு என்று சொல்லுங்கள் பார்ப்போம். நம் அனுமானப்படி சுமார் 60,000 ஏக்கர் விவசாய நிலங்கள் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வேறு பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ருக்க வாய்ப்புள்ளது.
# 2024-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பொய்யான புள்ளி விபரமாகும். யதார்த்ததில் தமிழகத்தில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் வேறெந்த கால கட்டத்தையும் விட கடுமையாக பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். மேற்படி முதலீடுகளால் ஏதேனும் வேலை வாய்ப்புகள் உருவானால், அதில் 70 சதவிகிதமானவை வட நாட்டு இளைஞர்களால் நிரப்படும் நிலையே உள்ளது.
Also read
# திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது தமிழகம் கடந்த 25 ஆண்டுகளில் வாங்கிய கடன் தொகை 5.70 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த நான்காண்டுகளுக்குள்ளாக அந்தக் கடன் 9,55,690 கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் ஒரு ரூபாய் வருமானத்தில் 23 பைசா கடனுக்கு தரும் சூழல் நிலவுகிறது. அதாவது வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு 63,772 கோடி பணம் கட்ட வேண்டியுள்ளது. மேலும் வாக்கு வங்கியை குறி வைத்து மானியங்களாக 1,46,908 கோடிகள் செலவு செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நிர்வாகத்தை நடத்திக் கொண்டு, தமிழகம் வளர்ந்துவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்குவது நம்மை நாமே ஏமாற்றும் செயலாகும்.
# சமூகத் துறை நலத் திட்டங்களுக்கான செலவினங்களை தமிழக அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக நல திட்டங்கள் என்ற பெயரில் ஓட்டுகளை மையப்படுத்தி அறிவிக்கப்படும் திட்டங்களின் தேவை இல்லாத நிலையை தமிழகம் எப்போது எட்டுகிறதோ, அதுவே உண்மையாக தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கான அடையாளமாகும்.
சாவித்திரி கண்ணன்
வழக்கம் போல் குற்றம் காணலே மிகுந்துள்ளது. குறை தேடலில் கால விரையம் செய்வதை விடுத்து குறைகளை நிறைகளாக மாற வழி காணல் நன்று தோழரே