முதியோர்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் காட்டாத அரசு..!

    பீட்டர் துரைராஜ்.

ஒரு வயதான மூதாட்டியை அவருடைய பேரன் கையை பிடித்து நான் இருக்கும் இடதிற்கு அருகே அழைத்து வருவான். ஸ்டேட் வங்கியின் அலுவலர் அவருக்கு ஆயிரம் ரூபாயை தருவார். அநேகமாக அது இரண்டு  ஐநூறு ரூபாய் தாள்களாக இருக்கும். அந்தத் தொகையை வாங்கும் போது அந்த மூதாட்டியின் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சியைக் காண எனக்கு இரண்டு கண்கள் போதாது. இதனை வாங்கியவுடன் அருகிலுள்ள கடைக்கு, தனது பேரனை அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவார். இது மாதந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சி. இப்படி முதியோர் ஓய்வூதியம் வாங்கும் பலர் நாடு முழுவதும் உள்ளனர்.

கேரளாவில் மாதத்திற்கு ரூ.1200 முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் மாதத்திற்கு ஐநூறு ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு தனது பங்காக, மாதம் நானூறு ரூபாய், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்குகிறது. குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் மூவாயிரம் ரூபாய் அனைவருக்கும்  வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

உடல் தளர்ந்து உழைக்கும் திரானியற்று வாழும் முதியோர்கள் உழைத்து தான் வயதான காலத்திலும் வாழ்ந்தாக வேண்டும் என்பது பல குடும்பங்களில் எழுதப்படாத விதியாகவுள்ளது. புறக்கணிக்கப்படும் முதியோர் குறித்த செய்திகளை படித்தலோ, கேள்விபட்டாலோ நெஞ்சு பதைக்கிறது! முதியவர்களை அலட்சியப்படுத்தும், சமூகமும், அரசும் நாகரீகம் கொண்டதென்றோ,முன்னேறியதென்றோ சொல்லும் அருகதையை இழந்துவிடுகின்றன!

முதியவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நமது  அரசியலமைப்புச் சட்டத்தின்  வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது. இளமைக் காலத்தில் தமது உழைப்பை இந்த சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் தந்துள்ள முதியவர்கள் கண்ணியமாக வாழ வழிவகை செய்வது அரசின் பொறுப்பாகும். அதனால்தான் இது ‘சமூகப் பாதுகாப்பு’ ( Social Security) என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய ஓய்வூதியம் வழங்குவதை மேற்கத்திய நாடுகள்  தமது கடமையாகச் செய்து வருகின்றன.

இந்தியாவிலும் இராணுவத்தினருக்கு, அரசு ஊழியர்களுக்கு, தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு என பலவிதமான ஓய்வூதியத் திட்டங்கள் அமலில் உள்ளன. இதிலுள்ள குறைகளைக் களைய வேண்டும்; மேம்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2004 ம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு  புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்கப்படும். ஆதரவற்ற முதியோர்களுக்கு மத்திய அரசு தரும் நானூறு ரூபாயோடு சேர்த்து மாநில அரசுகள் கூடுதலாக ஓய்வூதியம் வழங்குகின்றன.

“நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், சிங்கப்பூர், நார்வே,நியூசிலாந்து, கனடா, சிலி போன்ற நாடுகளில் சிறந்த ஓய்வூதியத் திட்டங்கள் அமலில் உள்ளன. இந்தியாவில் இராணுவம், தொலைபேசி, மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணிபுரிந்தவர்களுக்கு நல்ல ஓய்வூதியம் அமலில் உள்ளது; இதனால் ஒரு சதத்திற்கும் குறைவானவர்களே பலன் அடைகிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (2004 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு) உத்திரவாதமான ஓய்வூதியம் இருக்கிறது. இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்தான் அமலாகி வருகிறது.

ஏனெனில், மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. சம்பளம் வாங்கிய காலத்தைவிட, ஓய்வூதியம் அதிக காலம் வாங்கி வரும் தொழிலாளர்களும் உண்டு். எனவே இதனை அரசுகள் ஒரு சுமையாக நினைக்கின்றன. ஆனால் பெருநிறுவனங்கள் ஆண்டிற்கு 75000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்கின்றன; இதனைத் தடுத்தாலே தொழிலாளர்கள் விரும்பும் ஓய்வூதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும் ” என்கிறார் பன்னாட்டு பொதுத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (Public Services International) தெற்காசியச் செயலாளரான ஆர்.கண்ணன்.

இந்தியாவில் உள்ள மத்திய தொழிற் சங்கங்களான ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட பத்து மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய முறையில் நடத்திய பொது வேலைநிறுத்தத்தில், “அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். EPS 95 ஐ ( தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தை) மேம்படுத்த வேண்டும் ” என்ற கோரிக்கையையும் உள்ளடக்கி இருந்தனர்..

’’அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கையில் இந்த கோரிக்கை நியாயம்தானா?’’ என்று தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளரான டி.எம்.மூர்த்தியிடம் கேட்ட போது “ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தாலே போதும்; நல்லவிதமாக இதனை செயலாற்றிவிட முடியும். மருத்துவம்,  கல்வி, ஓய்வூதியம் உள்ள சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு பத்து சதத்திற்கும் குறைவாகவே அரசு ஒதுக்கீடு செய்கிறது; அப்படி ஒதுக்கப்படும் நிதியைக் காட்டிலும் குறைவாகவே அரசு செலவழிக்கிறது. பாதுகாப்புத் துறைக்கு 15 சதத்திற்கும் அதிகமாக செலவழிக்கிறது; அண்டைநாடுகளுடன்  நல்ல உறவை மேற்கொண்டால் பாதுகாப்பிற்கு இவ்வளவு செலவழிக்க தேவையில்லை. அரசு வாங்கிய கடனுக்கான வட்டிக்கு மிகப் பெருமளவில் நிதி ஒதுக்குகிறது. பெரிய முதலாளிகளுக்கு ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை சலுகைகளாக அரசு தள்ளுபடி செய்யும் போது,  ஓய்வூதியத்திற்கு சில ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழிப்பது சாத்தியமே. ஓய்வூதியம் தருவதை அரசு  தனது கடமையாக நினைக்கவில்லை. ‘சேம நல அரசு’ என்றால் மருத்துவத்திற்கோ, கல்விக்கோ  முதியோர் பாதுகாப்பிற்கோ செலவழிப்பதை சுமையாகப் பார்க்கக் கூடாது.

தமிழ்நாட்டில் கட்டுமான வாரியத்தில் பதிவு செய்துகொண்ட சித்தாள்,கொத்தனார்,பெயிண்டர் போன்ற  தொழிலாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம்  500 ரூபாய் வழங்கப்படுகிறது. இது 1982 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட உடலுழைப்புத் தொழிலாளர் சட்டப்படி வழங்கப்படுகிறது; கட்டடத் தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர்களுக்கு கிடைக்கிறது. கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதத்தை ஓய்வூதிமாக வழங்க வேண்டும் என்பது ஒரு நெறிமுறை; அதில் பாதியை குடும்ப ஓய்வூதியமாக அவர் இறப்பிற்குப் பிறகு அவரது மனைவிக்கோ(அல்லது கணவனுக்கோ) வழங்க வேண்டும் என்பதும் நெறிமுறை. வாரியத்தில் போதுமான நிதி இருக்கிறது. இது தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நிதி. இதன் மூலம் ஓய்வூதியத்தை அரசு அந்த பயனாளிகளுக்கு அதிகரிக்கலாமே ? இதைச் செய்யாமல், உரிய பயனாளிகளுக்கு செலவழிக்காமல், உபரி நிதி என்று சொல்லி, இந்த நிதியை  கொரோனா  பேரிடருக்கு  மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் செலவழித்தது நாணயமான செயலா ? இதனை உச்சநீதிமன்றமும் சரியென்று சொல்லிவிட்டது தான் கொடுமை!

இப்போது புதிதாக இயற்றப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பு சட்டப்படி அனைத்தையும் மாற்றப் போகிறார்கள். தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர் வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம் எனத் தனித் தனியாக வாரியங்கள் உள்ளன. அதில் பல லட்சம் தொழிலாளர்கள் சேர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அதில் சேர்ந்துள்ளன. இந்த நிலையை எட்ட தமிழ்நாட்டிற்கு 26 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஏனெனில்,  1994 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் தொடங்கப்பட்டு விட்டது. இப்போது புதிதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் இவற்றை என்ன செய்யப் போகிறது என்று தெரியாது.

கடந்த முறை நாங்கள் நடத்திய வேலைநிறுத்தத்தின் போதும் இதே கோரிக்கையை முன் வைத்தோம். அப்போது மத்திய அரசு எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த வேலை நிறுத்தத்தின் போது,  பாசாங்கான பேச்சுவார்த்தையைக்  கூட நடத்த அரசு மறுக்கிறது. தொழிலாளர்கள் கடந்த முறையைவிட வீரியத்துடன் போராடுவார்கள்.’’ என்றார் டி.எம். மூர்த்தி.

“இந்தியாவில் அரசுப் பணியாளர், ஆலைத் தொழிலாளர், அமைப்புச்சாரா தொழிலாளர் என வெவ்வேறு ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன. இங்கிலாந்து போன்ற ஒரு சில மேலைநாடுகளில் அனைவருக்கும் ஒரேவிதமான ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன.தொழிலாளர்களுடைய பங்களிப்பு, பணிபுரிந்த ஆண்டுகளைப் பொறுத்து ஓய்வூதியம் அங்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினருக்கு மாதம் இருபதாயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதோடு அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஒவ்வொரு ஆண்டிற்கும் (அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை) கூடுலாக 1500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர் இறந்த பிறகு அவரது இணையருக்கு அதில் 50 % குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.ஏன் இந்தப் பாகுபாடு என்கிறார் ” என்றார் நியூ டிரேட் யூனியன் இனிஷியேடிவ் என்ற அமைப்பின் செயலாளரான சுஜாதா மோடி.

இந்திய கிராமங்களில் உள்ள முதியோர்கள் தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாகத் தான் ஓரளவு உயிர்த்துள்ளனர். தற்போது குடும்பங்களில் முதியோர் புறக்கணிப்பு என்பது ஒரு துயர நிகழ்வாகிக் கொண்டுள்ளது.

“தொழிற்சாலைகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் வாங்குவோரில் 60 சதத்திற்கும் அதிகமானவர்கள் மாதம்  ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே புதிய தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் பெற்று வருகிறார்கள். இந்த தொகையை மூவாயிரத்திற்கும் குறைவில்லாமல் மாதந்தோறும் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை விலைவாசிப் புள்ளியோடு இணைத்து, அவ்வப்போது அதிகரிக்க வேண்டும். இந்த திட்டம்  அமலானபோது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை  ஓய்வூதியத்தை திருத்துவோம் என்று அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” என்றார் டி.எம்.மூர்த்தி்.

முதியோர், அரசுப் பணியாளர், தொழிற்சாலைத் தொழிலாளர், வாரியத்தில் பதிவுசெய்துள்ள அமைப்புச் சாரா தொழிலாளர் என அனைத்து தரப்பினருக்கும் இப்போது வழங்கப்பட்டு வருகிற ஓய்வூதியம் குறித்து அதிருப்தி நிலவி வருகிறது. அரசு என்ன செய்யப்போகிறது ?

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time