வந்தவாசிக்கு சுகநதி தான் முக்கிய குடிநீர் மற்றும் விவசாய வாழ்வாதராம்! அந்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டணியோடு ஆக்கிரமிக்கப்பட்டதன் விளைவாக, ஏரியில் நீர் நிரம்ப வாய்ப்பளிக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றியிருக்கும் காட்சியை தான் இங்கு காண்கிறீர்கள்!
வந்தவாசி ஏரியின் கரையையே சமூக விரோதிகள் உடைத்து விட்டனர்.
சென்ற ஆண்டு இது உடைக்கப்படவில்லை.
அதனால் கலுங்குவை உடைத்தனர்.
கலுங்குக்கு 50மீட்டர் தூரத்தில் வந்தவாசி ஏரிகரையையே உடைத்துவிட்டனர்.
முழு ஏரி தண்ணீரும் அதன் வழியே ஆற்றோடு கலந்து வெளியேறுகிறது.
ஏரி விரைவில் காலியாகும்.
அதிகார வர்க்கத்தின் உதவியில்லாமல் இது நடை பெற வாய்ப்பில்லை.
சென்ற ஆண்டை போலவே PWD தூங்கிக்கொண்டிருக்கிறது.
ரெவின்யு டிபார்ட்மெண்ட்டும் இதை கண்டுக்கவில்லை.
திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி நகரின் குடிநீருக்கு இரண்டு இடங்களிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது.
ஒன்று செய்யாறிலிருந்தும், மற்றொன்று வந்தவாசி நகரின் மைய பகுதியில் பாயும் சுகநதிக்கரையில் உள்ள இரண்டு கிணறுகள் மூலமும்.
பலகோடி செலவு செய்து,செய்யாறில் தோண்டிய கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதில்லை.
இந்த சூழலில் வந்தவாசி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது சுகநதிக்கரையில் தோண்டப்பட்ட இரு கிணறுகளின் நீர்தான்.
இந்த இரு குடிநீர் கிணறுகளின் நீராதாரம் கிணற்றுக்கு 100மீட்டர் தூரத்தில் உள்ள வந்தவாசி ஏரி நீர்தான்.
வந்தவாசி ஏரியின் பாசனபகுதியில் இருந்த அத்தனை விளைநிலங்களும் வீடுகளாக மாறிவிட்டன.
விவசாய நிலம் அல்ல என்று வருவாய்த்துறை அளித்த சான்றை வைத்து இரண்டு ஏக்ரா சிவன் கோவில் நிலம் தவிர மற்ற விவசாய விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விட்டன. தற்போது ஏரி இருந்த இடத்தில் திருமணமண்டபம்,கோழிப்பண்ணை, குடியிருப்புகள் என வந்துவிட்டன! இது போல வருவாய்த்துறை அதிகாரிகள் மக்கள் வாழ்வாதாரத்திற்கான நீர் நிலைகளை அழித்த வரலாறு தமிழகத்தின் ஒவ்வொரு இடங்களிலும் தற்போதைய புயல்வெள்ளச் சூழலில் பேராபத்தை சந்தித்து வருகின்றனர்.
ஏரி நீர் பாய்ந்து விவசாயம் செய்வதில்லை என்றாலும், இந்த வந்தவாசி ஏரி நீர்தான் வந்தவாசி குடிநீர்கிணறுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக அமைந்துள்ளது. அதாவது இந்த நீர் நிலை ஊடாக நிலத்திற்குள் இறங்கும் நீர் தான் அனைத்து மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது!
சென்ற ஆண்டு வந்தவாசி ஏரி நிரம்பியது. வாலாயமாக ஏரி உபரி நீர் கடலுக்கு ஏரி கடலுக்கு வழியாக வெளியேறிவிடும்.
ஏரி நீர் நிரம்பினால் தமக்கு பாதிப்பு என்பதை உணர்ந்த ஆக்ரமிப்பாளர்கள் ஏரியை வெட்டி நீரை வெளியேற்றினால் வழக்கில் மாட்டிவிடு வோம் என பயந்து உபரி நீர் போகும் சிமெண்ட்டால் கட்டப்பட்ட கலுங்குவையே வெட்டிவிட்டனர்.
சென்ற ஆண்டு வந்தவாசி ஏரி நீர் தொடர்ந்து வெளியேறியதை கண்டு அதைபடமெடுத்து திருவண்ணாமலை மாவட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
பலகோரிக்கை மனுக்களை தொடர்ந்து அனுப்பினேன்.
புதிய தலைமுறை, நீயுஸ்7 சேனல் களில் காட்சிகளோடு செய்தி வெளியிட்டனர்.
மாவட்டாட்சியர் கூறியபடி வந்தவாசி பொதுப்பணித்துறை பணியாளர்கள் உடைக்கப்பட்ட கலுங்கையில் பெயருக்கு மணல் மூட்டைகளை கொண்டு அடைத்தனர்.
மணல் மூட்டைகள் அப்போதே சீர்குலைய ஏரி நீர் ஓடி வீணாகி விட்டதுதான் மிச்சம்.
இதனால் கோடையில் பத்து,பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் வந்தவாசி நகர மக்களுக்கு நகராட்சியால் குடிதண்ணீர் தர முடிந்தது.
குடி நீருக்கு பல தரப்பில் மக்கள் போராட்டங்களும் நடந்தன.
இடையில் பலமுறை வந்தவாசி பொதுப் பணித்துறை அலுவலகத்திற்கு சென்று கலுங்குவை சிமெண்ட்டால் கட்டித்தர வேண்டினேன்.
’’பருவ காலத்திற்கு முன்னர் கட்டித்தருகிறோம்’’ என அவர்கள் கொடுத்த வாய் மொழி உத்திரவு காற்றோடு போயிற்று.
மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை வாட்ஸ் ஆப்பில் கோரிக்கை வைத்தும் ஒன்றும் நடக்கவில்லை.
நிவர் புயலுக்கு ஒருநாள் முன்பு ,அதே பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளரை பார்க்க போய் காத்திருந்ததுதான் மிச்சம்.
Also read
பலமணி காத்திருப்பிற்கு பிறகு இளநிலை பொறியாளரின் தொலை பேசி எண்ணை பெற்று பேசினேன்.
’’வரப்போகும் நிவர் புயலால் ஏரி நிரம்பும்.மறுபடியும் ஏரி நீர் வீணாகக் கூடிய நிலை வரலாம்’’ எனக்கூறி, ’’உடைக்கப்பட்ட கலுங்கை சிமெண்ட் டால் கட்டித்தாருங்கள்’’ என கேட்டேன்.
அதற்கு அவர்,தான் இந்த பதவியில் சேர்ந்து மூன்று தினங்கள் தான் ஆயிற்று எனவும்,இன்னமும் முழுமையாக பொறுப்பெடுக்கவில்லை எனவும் கூறினார்.
நிவர் புயலும் வந்தது.
விடாது பெய்த மழையால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இன்றோ,நாளையோ கலுங்கு விழும்.
சென்ற ஆண்டை போலவே முழு ஏரி நீர் வெளியே போய்விடும். இது குறித்த தவிப்பும்,வேதனையும் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என எனக்கு தெரியவில்லை. ஆனால், தம் கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் அநீதிகளை தடுக்க,தட்டிக் கேட்க மக்கள் அக்கறை காட்டவில்லை என்றால், சர்வ அழிவை எல்லோரும் சேர்ந்தே சந்திக்க நேரும்!
மக்கள் பாதுகாப்பிற்கான எனது பொதுநலன் சார்ந்த போராட்டம் திக்கு ,திசை தெரியாமல் முடங்கிவிட்டது.
மு.பத்மநாபன்
தொழிலாளர் ஆய்வர்(ஓய்வு)
வந்தவாசி, போன்;8903456668
Leave a Reply