சரிகிறது சாமானியனின் சம்பளம்! எம்.பிகளுக்கோ எகிற்கிறது!

-சாவித்திரி கண்ணன்

100 நாள் வேலை திட்ட ஏழைகளுக்கு சம்பள பாக்கி! 15 ஆண்டுகளாக மருத்துவர்களுக்கு, கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வு  இல்லை. அரசு பணிகள் எல்லாம்  ‘அவுட் சோர்சிங் ‘ என்றும், நிரந்தரமற்ற அத்துக் கூலி வேலையாகவும் மாற்றப்படுகிறது. ஆனால், எம்பிக்களுக்கோ சம்பளம் மற்றும் சலுகை என ஆண்டுக்கு 75 லட்சங்கள்  தரப்படுகிறது ..! முழு விபரங்கள்;

நாடெங்கும் அரசு பணிகளில் அவுட் சோர்சிங் அதிகமாகி வருகிறது. அரசு துறையிலும், தனியார் துறையிலும் ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும் ஒரு சேர அமலாகிறது. பாதிக்கப்படுவர்கள் நீதி கேட்டால், இஷ்டமென்றால் வேலை செய். கஷ்டமென்றால் கிளம்பு என்கிறார்கள்! தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு என்பதே தொலைந்து போய்விட்டதொரு சூழல் நிலவுகிறது.

இந்தச் சூழலில் எம்.பிக்களின் மாதச் சம்பளம் ரூ ஒரு லட்சத்தில் இருந்து 1,24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சம்பளத்தைத் தவிர, எம்.பி.க்கள் தொகுதி அலவன்சாக மாதத்திற்கு ரூ.70,000 மற்றும் அலுவலக அலவன்சாக மற்றொரு ரூ.60,000 பெறுகிறார்கள். ஆக, எம்.பிக்கள் பெறுகின்ற சம்பளம் ஏற்கனவே 2,30,000. இவை போதாது, என நாடாளுமன்றம் நடக்கும் நாட்களில் தினசரி ‘அலவன்ஸ்’ என நாளொன்றுக்கு ரு 2,000 வாங்கி வந்தனர். அதுவும் தற்போது 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சலுகைகளைப் பொறுத்தவரை, எம்.பி.க்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ சேவையைப் பெறுகிறார்கள். அவர்கள் ஆண்டுதோறும் 34 உள்நாட்டு விமானங்களை எந்த கட்டணமும் செலுத்தாமல் பயணிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு தோராயமாக ரூ10 லட்சங்கள் செலவாகிறது.

இதுவே ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு எந்த கணக்கும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் – வரம்பற்ற வகையில் – முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் ரயில் பயணம் செய்யலாம். தனது உதவியாளர் என்பதாக மேலும் ஒரு இலவச ரயில் பயணத்தை மற்றவருக்கும் பெற்றுக் கொள்ளலாம்.

புது தில்லியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பங்களாவில் தங்க அரசாங்கமே இடம் தருகிறது. வீட்டு வாடகை என எடுத்துக் கொண்டாலே ஆண்டுக்கு அதுவே ரூ 24 லட்சத்திற்கு குறையாது!  தொலைபேசி மற்றும் இணைய தள வசதியை பயன்படுத்த ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் தரப்படுகிறது. அந்த வீட்டிற்கு  ஆண்டுக்கு 50,000 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ஆண்டுக்கு 4 லட்சம் லிட்டர் இலவச தண்ணீரும் அரசாங்கம் தருகிறது.

இப்படியாக எம்பிக்கள் பெறுகின்ற சம்பளம் மற்றும் சலுகைகளை இணைத்து மதிப்பீடு செய்கின்ற போது, ஆண்டுக்கு அவர்கள் பெறுகின்ற வருமானம் சுமார் 70  லட்சம் என மதிப்பிடப்படுகிறது.

இவை தவிர, நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ 5 கோடி ஒதுக்கப்படுகிறது. இது குறித்து ஒரு கள ஆய்வு செய்த  மறைந்த முன்னாள்  மூத்த  நாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன். ”இந்த நிதி தேவையற்றது. இந்த தொகையின் கணிசமான பகுதி எம்.பிக்களுக்கு கமிஷனாக கைமாறுகிறது” என்றார்.

இத்துடன் வெறும் ஐந்தே ஆண்டு எம்.பியாக இருந்தவர்கள் ஓய்வு ஊதியமாக ரூ25,000 பெற்று வருகின்றனர். அது தற்போது 31,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.  சிலர் 10 வருடம் அல்லது 20 வருடம் எம்.பியாக இருந்திருப்பார்கள் எனில், ஐந்தாண்டுக்கு மேலாக உள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக ரூ 2,000 ஓய்வூதியம் பெற்று வந்தார். அது தற்போது 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனில் 20 ஆண்டு எம்.பியாக இருந்தவர் மாத ஓய்வூதியமாக ரூபாய் 68,500 பெற வாய்ப்புள்ளது. 30 ஆண்டு எம்.பியாக இருந்தவர் ரூ 93,500 பெற வாய்ப்புள்ளது.

அரசு உழியர்களுக்கோ ஏற்கனவே தரப்பட்டு வந்த ஓய்வூதியம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. அதை மீண்டும் தர அவர்கள் போராடி வருகிறார்கள்! அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளோ படிப்படியாக பறிக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் எம்.பிக்களுக்கான இந்த சம்பள உயர்வையும், ஓய்வூதிய உயர்வையும் ஏப்ரல் 2023 தொடங்கி அமல்படுத்தப் போகிறார்களாம்!  அந்த வகையில் இரண்டாண்டு பாக்கித் தொகை என்பதாக ‘பல்க்’காக ஒரு பெரும் தொகை எம்.பிக்களுக்கு கிடைக்கும்!

இந்த வகையில், தற்போது 543  மக்களவை உறுப்பினர்கள், 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோருக்கும், ஓய்வூதிய எம்.பிக்களுக்கும் உயர்த்தப்பட்ட சம்பளங்களால் ஆண்டுக்கு ரூ 3,400 கோடி கூடுதலாக செலவாகிறது.

எம்.பி.க்களின் சம்பளம் ஆகஸ்ட் 2010 ஆம் ஆண்டில் ரூ 16,000 த்தில் இருந்து 50,000 ஆக்கப்பட்டது. கடைசியாக 2018 இல் திருத்தப்பட்டது. அப்போது அடிப்படை மாத சம்பளம் ₹50,000 லிருந்து ₹1,00,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டது. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை எம்.பிக்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என அப்போது காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆக,  2010 தொடக்கத்தில் ரூ 16,000 சம்பளம் பெற்ற எம்பிக்கள் 13 ஆண்டுகளில் 1,24,000 பெறுகிறார்கள்!

இத்தகையை ஒரு அதிரடி சம்பள உயர்வு இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இந்தியாவில் வேறு எந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் சாத்தியமா? என்று தெரியவில்லை.

தமிழகத்தில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டமான நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் நிலையில் வாழும் இந்த லட்சக்கணக்கான ஏழைகளுக்கு தர வேண்டிய சம்பளம் ரூ 1,056 கோடியை ‘நிதி பற்றாகுறை’ என்று சொல்லி நிறுத்தி வைத்துள்ள ஒன்றிய அரசு, எம்.பிக்கள் சம்பளத்தை அதிரடியாக ‘ஹைக்’ பண்ணி இருப்பதோடு, அதை இரண்டாண்டுக்கு முன் தேதி கணக்கிட்டு அமல்படுத்துகிறது!

ஒரு சராசரி இந்தியனின் மாத வருமானம் நகர்புறமென்றால் ரூ 15,000 தான். கிராமப்புறமென்றால் அதிகபட்சம் ரூ 9,000 தான்!

நாட்டு மக்களின் நிலையும், பொருளாதாரமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பணக்காரர்கள் மேன்மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் நாளும் நலிந்து கொண்டு இருக்கிறார்கள்! மக்களுக்கு தொண்டு செய்ய வந்த எங்களுக்கு இவ்வளவு அதிக சம்பளமும், இத்தனை விதமான சலுகைகளும் சற்று அதிகமாகவே தெரிகிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் சரிந்து கொண்டிருக்கும் போது, எம்.பிக்களுக்கு சம்பள உயர்வை தற்போதைக்கு சற்று தள்ளி வைக்கலாம் என்று யாரேனும் சொல்ல முன் வருவார்களா?

ஆக, ஏழைக்கொரு நீதி! எம்பிக்களுக்கு ஒரு நீதியா?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time