ஆன்மிக அரசியலை பேசும் பாஜக – சிவசேனாவினருக்கு தங்களை விமர்சிப்பவர்களை ஏன் அகிம்சை முறையிலோ, சட்டப்படியோ அணுக முடியவில்லை. மகாராஷ்டிரா பாஜக அரசு மாற்றுக் கருத்துக்களை வன்முறை மற்றும் புல்டோசர் மூலமே எதிர்கொள்கிறது என்பதற்கு அடுத்தடுத்த சம்பவங்களே சாட்சியாகும்;
கூர்மையான அரசியல் விமர்சகர்! படைப்பாளி, பாடகர், நடிகர் என பல பரிமாணண்ங்கள் கொண்டவர். எள்ளல் கலந்த நகைச்சுவையுடன் இவர் வழங்கும் நகைச்சுவை நையாண்டி டாக்ஷோவுக்கு மகாராஷ்டிராவில் மகத்தான வரவேற்பு உள்ளது.
குணால் காம்ரா என்றாலே வலதுசாரிகள் எரிச்சல் அடைகிறார்கள்! காரணம், தேச பக்தி, தேசியம் என்ற பெயரால் வலதுசாரிகள் போடும் வேஷங்களையும், அட்டுழியங்களையும் தோலுரித்து காட்டுகிறார் குணால் காம்ரா!
ஒருமுறை அர்னாப் கோஸ்வாமியை இவர் தான் பயணிக்கும் விமானத்தில் சந்தித்த போது அவரது நேர்மையற்ற ஜர்னலிசத்தை கேள்விக்கு உள்ளாக்கிய போது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் குணால் கம்ராவிற்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தொடங்கி தனியார் விமான நிலையங்கள் பலவும் இவர் பயணத்திற்கு டிக்கெட் தர மறுத்தன.
இன்போசிஸ் நிறுவன உரிமையாளரான நாராயண மூர்த்தியின் மனைவி சுதா நாராயண மூர்த்தியின் எளிமை பற்றி, ”அவர் எவ்வளவு சிம்பிளாக வாழ்கிறார்” என ஊடகங்கள் தொடர்ந்து புகழ்கின்றன. இந்த ஹோதாவில் சுதாவும் எளிமையான வாழ்க்கை பற்றி 50 புத்தகங்கள் எழுதி குவித்துள்ளார். ஆனால், அந்த எளிமை அவர் கணவர் நாராயண மூர்த்திக்கு பொருந்தாதா? அவர் ஏன் தன்னிடம் வேலை பார்பவர்களை 16 மணி நேரம் கசக்கி பிழிந்து வேலை வாங்கி பணம் சம்பாதித்து குவிக்கிறார். ”சுதா அவர்களே எளிமை குறித்து ஒரு புத்தகமே போதுமே ஏன் ஐம்பது புத்தகங்கள்..”என்றெல்லாம் நையாண்டி செய்திருந்தார்.
1997 ஆம் ஆண்டு வெளியான “தில் தோ பகல் ஹை” திரைப்படத்தின் பிரபலமான இந்தி பாடலின் வரிகளை எடுத்துக் கொண்டு சிவசேனாவை பிளந்து பாஜகவிற்கு அர்ப்பணித்த ஏக் நாத் ஷிண்டேவை கிண்டல் செய்தார். குறிப்பாக ஷிண்டேவை “காடர்” (துரோகி) என்று குறிப்பிட்ட இவரது ’நயா பாரத் ஷோ’ நிகழ்ச்சி பலத்த வரவேற்பையும், எதிர்ப்பையும் ஒரு சேர பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவில் சமீபத்திய அரசியல் சம்பவங்களான சிவசேனாவை பாஜக பிளந்தது, (2022) மற்றும் தேசியவாத காங்கிரசை பாஜக பிளந்தது (2023) ஆகியவற்றை நையாண்டியாக குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து ஏக் நாத் ஷிண்டேவின் சிவசேனா எம்எல்ஏ முர்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், ஷிண்டேவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கம்ரா மீது கார் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்திருந்தனர். என்ன செய்வது அகில இந்திய அளவில் துரோகி என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வரும் பெயராக ஏக் நாத் ஷிண்டே தானே உள்ளார்!
மார்ச் – 25 அன்று மாநில சட்டமன்றத்தில் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சட்ட சபையிலேயே பகிரங்கமாக குணால் காம்ராவை விமர்சித்தார். ‘அர்பன் நக்சல்’ என்றும், ‘இடது லிபரல்ஸ்’ என்றும், குணாலை விமர்சித்துவிட்டு, ”கருத்துச் சுதந்திரம் கொடுங்கோன்மைக்கு வழிவகுத்தால் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளாது. அரசியல் நையாண்டியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அது கொடுங்கோன்மைக்கு வழிவகுத்தால் கருத்துச் சுதந்திரத்தை நாங்கள் இனியும் அனுமதிக்க மாட்டோம். அவருக்கு பாடம் புகட்டப்படும்.” என்று பேசினார்.
இதைத் தொடர்ந்தே ரவுடி கும்பல் ஒன்று குணால் காம்ரா நிகழ்ச்சி வழங்கும் அரங்கினுள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது. இத்தனையும் போதாது என்று மும்பையின் மிக முக்கிய பகுதியில் இருக்கும் ஹேபிடேட் ஸ்டுடியோவையே இது ஒரு சட்டவிரோத கட்டமைப்பு என்று சொல்லி, புல்டோசர் எடுத்து வந்து இடித்து தள்ளியது, மும்பை மாநகராட்சி ( பி.எம்.சி)
குணால் காம்ரேவின் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தியதற்காக ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் மீது, போலீசார் ஒரு சடங்கு போல வழக்குப் பதிவு செய்தனர்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சூறையாடியதற்காக சிவசேனா நிர்வாகி ராகுல் கனல் மற்றும் 11 பேரை போலீசார் கைது செய்த நிலையில் அதே நாளில் உள்ளூர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி அனுப்பி வைத்தது.
தற்போதும் தேவேந்திர பட்னாவிஸ் ஆத்திரம் அடங்காதவராக குணால் மன்னிப்பு கேட்க வேண் டும் என்றார். அதற்கு குணால் மறுத்துவிட்டார். இதனால், குணால் காம்ரேவின் உயிருக்கு அபத்து நேரிடக் கூடும் என்ற பேச்சு பரவலாக உள்ளது.
இதே போலத் தான் சமீபத்தில் வெளியான சாவா (chavva) என்ற திரைப்படத்தில் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் முகலாயர்களுக்கு எதிரான மராத்திய மண்ணில் நிகழ்ந்த வீரஞ்செறிந்த போராட்டத்தையும், இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டதையும் கொடூரமாக சித்தரித்ததன் வாயிலாக மகாராஷ்டிராவில் வன்முறைக்கு வித்திட்டது. மகாராஷ்டிராவே தீப்ப்டித்து எரிந்தது.
இந்தப் படத்தை குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே aஅதரித்து பேசியுள்ளது இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் ஆனது.
“சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வரலாற்றை ‘சாவா’ திரைப்படம் மக்களுக்கு எடுத்துச் சொன்னதன் மூலம் அவர்களின் உணர்ச்சிகளைத் துண்டிவிட்டுள்ளது. அத்துடன், முகலாய மன்னர் அவுரங்கசீப் மீதான பொதுமக்களின் கோபத்தையும் அப் படமே தூண்டிவிட்டுள்ளது’’ எனக் கூறிய பட்னாவிஸ் கலவரம் செய்தவர்களை அடக்காமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதற்கு எதிர்வினையாற்றியவர்களை கைது செய்து, சம்பந்தட்ட இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தது.
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது சரியாகத் தான் இருக்கிறது.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply