இந்தியாவில் அனைத்து கட்சிகளின் தலைவிதியையும் தீர்மானிக்கும் சக்தியாக பாஜக கோலோச்சுகிறது. பாஜக இன்று இந்தியாவை ஆட்சி செய்கிறது…என்பதல்ல பெரிய விஷயம். அது மற்ற எல்லா கட்சிகளையும் தலை எடுக்கவிடாமல் ஒரு நரித்தந்திர அதிகார ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக சாதிக்கிறது என்பதே இந்தக் கட்டுரையின் பேசு பொருளாகும்;
இந்திய அரசியல் களம் ஒரு வித்தியாசமான – முற்றிலும் புதிய களச் சுழலுக்குள் – தள்ளப்பட்டுள்ளது. பாஜக எதிர்ப்பு அரசியல் என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே – எந்தவித செயல்திட்டமும் இன்றி – கையாளப்படுவதற்கான காரணங்களை அலச வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது, சில சித்தாந்தங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அணிவகுத்தன.
# மிதமான வலதுசாரி முதலாளித்துவ சிந்தனைப் போக்கு!
# சோசலிச சிந்தனை போக்கு.
# தீவிர வலதுசாரி மதவாத முதலாளித்துவ சிந்தனை போக்கு
# கம்யூனிச சிந்தனை போக்கு
மிதமான வலதுசாரிச் சிந்தனைகள் என்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது காங்கிரஸ் கட்சி! இன்றைய பாஜகவை போல முற்றிலும் முரட்டுத்தனமான வலதுசாரி பிற்போக்குத் தன்மைக்குள் போகாமல் அன்றைய காங்கிரசுக்குள் சோசலிச சிந்தனையாளர்கள் ஒரு கடிவாளத்தை வைத்திருந்தனர். அப்படிப்பட்ட சோசலிச சிந்தனையாளர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த முக்கியத்துவம் காரணமாக காங்கிரசுக்குள் இருந்த பிற்போக்கு சக்திகள் சற்றே அடக்கி வாசித்தனர். காங்கிரஸ் தலைவர் நேரு இந்த இரு அணிகளையும் பேலன்ஸ் செய்து கட்சியை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சென்றார்.

ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, ஜெயப் பிரகாஷ் நாராயணன் போன்றோர் சோசலிசத்தில் உறுதியான பற்று கொண்ட சோசலிஸ்ட் கட்சித் தலைவர்களாக இருந்தனர். ஜவகர்லால் நேருவின் காங்கிரசால் சோசலிசத்தை ஒரளவுக்கு மேல் கொண்டு செலுத்த முடியாது. காலப் போக்கில் காங்கிரஸ் வலதுசாரி முதலாளித்துவ பாதைக்கு தான் சென்று சேரும் என்றனர்.
சியாம் பிரசாத் முகர்ஜி தலைமையிலான படு பிற்போக்கு மதவாத ஜனசங்கம் மக்களிடம் ஆதரவு பெற முடியாமல் பின்னடைவில் இருந்தது. இந்த ஜனசங்கமே இந்திரா காந்தியின் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதற்கு எதிராக உருவான ஜனதா கட்சிக்குள் ஐக்கியமாகி தன்னை வளர்த்துக் கொண்டு, பிற்காலத்தில் பாரதிய ஜனதா கட்சியாக பரிமளித்தது.
திமுக போன்ற மாநிலக் கட்சிகள் எளிய பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சோசலிச கருத்துக்களை பேசிய கட்சியாக அறிமுகமானது.
இப்படியாக கொள்கை சார்ந்த அரசியல்களம் என்பது காலப் போக்கில் காலாவதியானது. கொள்கை பேசிய கட்சிகள் அரசியல் அதிகாரத்தை நோக்கிய யுத்தத்தில் பேச்சளவில் கொள்கையை பேசிக் கொண்டு பிழைப்புவாதியாகிப் போனார்கள். மக்களும் விழிப்படைந்து அவர்கள் பேசிய கொள்கை மயக்கத்தில் இருந்து விடுபட்டு சுதாரித்துக் கொண்டார்கள்.
இப்படி கொள்கைக்காக பேர் போன கட்சிகள் எல்லாம் நீர்த்துப் போன பிறகு, கொள்ளையே அனைத்து அரசியல் கட்சிகளின் இலக்காகிப் போனது. ’அரசியலில் உச்ச நிலைக்கு போவதே பொருளாதாரத்தை வளமாக்கிக் கொள்வதற்குத் தான்’ என்பது எழுதப்படாத இலக்கணமாயிற்று.
கொள்ளை என்பதே இலக்கு என்றாலும், கொள்கையை அமல்படுத்திக் கொண்டே கொள்ளையையும் கச்சிதமாகச் செய்வோம்…என்பதை நடைமுறையில் ஒரளவு சாத்தியப்படுத்தி வெற்றி பெற்ற கட்சி என்றால், அது பாஜக மட்டும் தான்.
ஜனநாயகத்தின் பெயராலேயே ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து பழைய மன்னராட்சி பாணியிலான நவீன கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கான ஒரு ஆட்சியாக – பிராமண மேலாதிக்கத்தை இலக்காக கொண்ட – ஆனால், அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒற்றை அதிகார ஆட்சியாக பாஜக திகழ்கிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தை ருசி பார்த்து கணக்கற்ற ஊழல்களில் மிதந்து, மிதவாத வலதுசாரி மற்றும் சோசலிச பார்வையோடு இரண்டுங்கெட்டானாத் திகழ்ந்த காங்கிரஸ் – ஒரு குடும்பத்து வாரிசுகளின் நிழலில் மட்டுமே ஜீவித்திருக்கும் கட்சியாக சுருங்கிப் போனது. சித்தாந்த பலம் சிதைந்த நிலையில் – கொள்கை பற்றாளர்கள் எல்லாம் பின் தள்ளப்பட்டு – சந்தர்பவாதிகளே ஆதிக்கம் செலுத்த முடிந்த கட்சியாக ஆனபிறகு அதற்கும், மக்களுக்கும் உள்ள பிணைப்பு தளர்ந்து போனதால் சிறுத்துப் போய்விட்டது.
இன்று காங்கிரசில் இருந்து கட்சித் தாவி சென்றவர்களே பாஜகவின் வெற்றிக்கு கணிசமாக பங்களிப்பு செய்கின்றனர்!
காங்கிரசில் இருந்து பிரிந்தவர்களே மாநில கட்சி தொடங்கி, காங்கிரசை சீட்டுக்காக தங்களிடம் கையேந்த வைக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாஜகவுடன் மோதல் அரசியல் செய்வதில் வீராங்கனையாக பார்க்கப்பட்டார் ஒரு காலகட்டத்தில்! ஆனால், அந்தக் கட்சியில் மம்தாவின் நெருங்கிய சகாக்களையே பாஜக தன் பக்கம் தூக்கிவிட்டதும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊழல்களை எல்லாம் லிஸ்ட் போட்டு தூக்க தயாராகவும் இருப்பதால், தற்போது பாஜகவை அனுசரித்து, அனுகூலமாக செயல்பட்டு வருகிறார்.
எதிரிகள் எல்லாம் சிதறுண்டு கிடக்கிறார்கள். ஒற்றுமையின்றி ஒருவரை ஒருவர் காலை வாரி விட்டுக் கொண்டுள்ளனர். எனவே, சிதறுண்டு கிடக்கும் எதிரிகளை சின்னாபின்னப்படுத்துவது பாஜகவிற்கு எளிதாக உள்ளது.
பாஜகவை எதிர்ப்பதாக சொல்லும் கட்சிகள் அனைத்துமே இன்று பாஜகவிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டே எதிர்த்துக் கொண்டிருக்கும் விசித்திர சூழலை வியப்போடு பார்க்கிறோம்.
காரணம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ …என முக்கிய துறைகளை எதிர்கட்சிகளை ஒடுக்க பயன்படுத்துகிறது பாஜக. இது மட்டுமின்றி நீதித் துறையின் தன்னாட்சியையும், சுதந்திரத்தையும் கூட இன்று கேள்விக்குறியாக்கிவிட்டது. இத்தகைய அதிகாரத்தை மறைகேடாக பயன்படுத்தும் ஒரு பிளாக் மெயில் அரசியலை சற்றும் குற்றவுணர்வின்றி பாஜக செய்து கொண்டுள்ளது. எதிரிகளை முற்றிலும் அழித்தொழிக்காமல் தனக்கு கட்டுப்பட்டவர்களாக வைத்திருப்பதில் பாஜக பெருமளவு வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியே பகுதி அளவுக்கு பாஜகவாக இருப்பதால் அதனால் வீரியத்துடன் பாஜகவை எதிர்க்க முடியவில்லை. இன்றைய தேசிய கல்வி கொள்கை தொடங்கி , கார்ப்பரேட் ஆதரவு, பிராமண மேலாதிக்க போக்கு அனைத்துக்கும் விதை போட்டது காங்கிரஸ் . இது குறித்த சுய விமர்சனம் கூட அந்தக் கட்சிக்குள் நடந்ததாகத் தெரியவில்லை. பாஜகவை எதிர்ப்பதற்கு அதனின்று முற்றிலும் வேறுபட்ட நடைமுறை திட்டத்தை காங்கிரசால் கண்டடைய முடியவில்லை. இன்று டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசாங்கம் வீழ்த்தப்பட்டு அங்கு பாஜக கோட்டை எழுந்துள்ளதற்கு காங்கிரசும் கணிசமாக பங்களித்துள்ளது.
அடுத்து டெல்லியில் பலமான அடி வாங்கிய ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் பகவந்த் மான் பாஜகவின் பாதம் தாங்கியாக மாறி, விவசாயிகள் போராட்டங்களை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஒடுக்கி கொண்டிருக்கிறார்.
பாஜகவின் பலமான சித்தாந்த எதிரியாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள இந்திய கம்யூனிஸ்டுகள் அதிகார யுத்தத்தில் அடையாளம் கரைந்து கொண்டுள்ளனர். பாஜகவின் தேசிய கல்வி கொள்கை அமலாக்கம், கார்ப்பரேட் நிறுவன வளர்ச்சிக்கான முறைகேடுகள் ஆகியவற்றை கேரளாவில் நடைமுறைப்படுத்தி வருகின்றது மார்க்சிஸ்ட் கட்சி அரசு. பாஜகவை பாசிச கட்சி எனச் சொல்வது பிழை என்ற புதிய புரிதலை சமீபத்தில் வெளிப்படுத்தி உள்ளது அந்தக் கட்சி. தமிழகத்தில் மார்க்சிஸ்டுகள் அதிகாரத்தில் உள்ள திமுகவின் அனைத்து அட்டூழியங்களையும் சகித்துக் கொண்டு போவதால் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு வருகின்றனர்.
இந்திய அளவில் பாஜகவை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள கட்சியாக தோற்றம் காட்டி வரும் திமுக, தமிழகத்தில் பாஜகவின் அனைத்துவித மக்கள் விரோத சட்டங்களையும், திட்டங்களையும் அமலாக்கிக் கொண்டே பாஜகவை எதிர்ப்பது போல பாசாங்கு காட்டி வருகிறது. அதற்கு பரிசாக வரைமுறையற்ற ஊழல்களில் திளைக்கும் திமுக அரசையும், அதன் அமைச்சர்களையும் வெறுமனே ரெய்டு நடத்திவிட்டு, தற்போது வரை தண்டிக்காமல் விட்டு வைத்துள்ளது பாஜக.
திராவிட மாடல், சமூக நீதி, சமத்துவ சமுதாயம் போன்ற முற்போக்கு கொள்கைகளை வெறுமே பேச்சளவில் கொண்ட கட்சியாக மட்டுமே இன்றைய தினம் உள்ளது. உண்மையில் தமிழகத்தில் ராஜாஜி, ஜெயலலிதா ஆட்சி காலத்தை விட பிராமணர்கள் மிகுந்த மேலாதிக்கத்துடன் திகழும் காலகட்டமாக ஸ்டாலின் ஆட்சி உள்ளது. இதனை அக்கட்சியில் உள்ள பெரியாரிஸ்டுகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மன உளைச்சலுடன் எதிர்கொண்டு வருகின்றனர். கொள்கைபிடிப்புள்ளவர்கள், லட்சியவாதிகள் அக்கட்சிக்குள் மெளனிகளாக்கப்பட்டுவிட்டனர்.
ஒரு காலத்தில் தொண்டர் பலத்தில் சிறந்து விளங்கிய அந்தக் கட்சி, இன்று கட்சி வேலைகளைக் கூட செய்யத் தொண்டர்களின்றி டெண்டர் விட்டு செய்து கொண்டுள்ளது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இயற்கை வளச் சுரண்டல்கள், ஊழல் முறைகேடுகள் மிகுந்துள்ளன. சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதில் முதலமைச்சர் முழுமையான தோல்வியை கண்டுள்ளார். காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் கூட வைக்க முடியாத பொம்மை முதல்வராக – பாஜக விசுவாச அதிகாரிகளால் – ஆட்டுவிக்கப்படுபவராக ஸ்டாலின் இருக்கிறார்.
2026 தேர்தலை அடிமை கூட்டணி பலத்திலும் பணத்தை தண்ணீராய் இறைப்பதிலும் எதிர்கொள்ள முடியும் என திமுக தலைமை நம்புகிறது.
மற்றொரு பக்கம் அதிமுகவோ, பாஜகவின் சித்து விளையாட்டுகளால் கட்சிக்குள் புதிது புதிதாக முளைக்கும் துரோகத் தலைவர்களால் துவண்டு, எதிர்க்கத் திராணியின்றி தற்காப்பு அரசியல் செய்வதிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளது.
அதிமுக தலைவர்களின் கடந்த கால ஊழல்கள், சொத்து குவிப்புகள் அவர்களை சரணாகதி அரசியலுக்குள் தள்ளிவிட்டது. சிறுகச் சிறுக பாஜகவிற்கு தன்னை தின்னக் கொடுத்து, சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது அதிமுக.
புதிதாக உதயமாகி உள்ள தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் மாறி,மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் மீதான மக்களின் கடும் அதிருப்திக்கு வடிகாலாக கணிசமான மக்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், மாற்று அரசியலுக்கான செயல் திட்டமோ, சித்தாந்த தெளிவோ அந்தக் கட்சிக்கு இல்லை. அதன் தலைவரான நடிகர் விஜய் தன்னுடைய திரை உலக பிரபலத்தை மட்டுமே மூலதனமாக்கி, தன் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கிறார். தப்பித் தவறி இவர் அதிகாரத்திற்கு வந்தால், அது தற்போதைய ஸ்டாலின் ஆட்சியை விட மோசமானதாகவே – அதிகாரிகளாலும், பாஜகவாலும் – ஆட்டிப் படைக்கப்படும் ஆட்சியாகத் தான் இருக்கும்.
மொத்தத்தில் தற்போதைய இந்தியச் சூழலில் மையப்படுத்தப்பட்ட ஒற்றை அதிகாரமாக – அனைத்து கட்சிகளின் தலை எழுத்தை தீர்மானிக்கும் வல்லமை மிக்க சர்வாதிகார மையமாக – பாஜக திகழ்கிறது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் எதுவுமே இன்று அதை எதிர்ப்பதற்கான சர்வபரித் தியாகம் செய்யத் துணிவுள்ள, தெளிவான செயல்திட்டத்தை கொண்டு இல்லை. இதுவே பாஜகவின் பலமாகும்.
சாவித்திரி கண்ணன்
தோழர் இன்றைக்கு இந்தியாவின் பொது எதிரியாக , பிரதான முரண்பாடாக எழுந்துள்ள நிலையில் அவசிய, அவசர கடமை பாசிச பா ஜ க வை அப்புறப் படுத்த வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பரந்த அளவிலான அணி சேர்க்கை நடை பெற வேண்டும். இது தான் முதல் முன்னுரிமை. இதை விடுத்து அனைவரும் மோசம் என்பது எல்லாரையும் சமப்படுத்துவது போல உள்ளது.
பிஜேபி கட்சியை அப்புற படுத்த வேண்டும் என்றால், பிஜேபி கட்சியே வேறு உருவில் வரும். உதாரணமாக திமுக , கம்யூனிஸ்ட்.ect
பல கட்சி அரசியலமைப்பு இருக்கும் வரை.
பிரித்து ஆளும் சூழ்ச்சி பேரம் பேசும் சூழ்ச்சியை எல்லாம் இருந்து கொண்டு தான் இருக்கும் .
சுயநலமற்ற மனிதவள மேம்பாடு இயற்கை வள மேம்பாடு முதலியவற்றை கருத்தில் கொண்டு ஊழலற்ற அரசியல்வாதிகள் இல்லாதவரை இது மாதிரியான கட்டுரைகள் திரும்பத்திரும்ப எழுதி கொண்டிருக்க வேண்டியது தான். அரசியலமைப்பை துலாக் கோலாகக் கொண்டு இயங்கும் இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை காலத்தின் கட்டாயம்
உலகில் பல இசங்கள் பல நாடுகளில் வெற்றி பெற்றுள்ளன. கம்யூனிசம் சில நாடுகளிலும் கேப்பிட்டலிசம் சில நாடுகளிலும் சோஸலிசம் சில நாடுகளிலும் லிபர்லிசம் சில நாடுகளிலும் வெற்றி பெற்றுள்ளன ஆனால் இந்தியாவில் எந்த இசங்களும் வெற்றி பெறவில்லை . இவற்றின் பெயர்கள் பலமுறை பல கட்சிகளால் உச்சரிக்கப்பட்டாலும் வெற்றி பெற வாய்ப்பு கிடையாது . ஏனென்றால் இங்கே இந்தியாவில் பிராமணியம் ஆடண்டு கொண்டு இருக்கின்றது.
2) பிஜேபியின் காங்கிரஸ் கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவர்கள் செய்து கொண்டிருப்பது நிழல் யுத்தங்கள் . இதை நம்பி மற்ற சிறு சிறு கட்சி குஞ்சுகள் இரைக்காக சுற்றிக் கொண்டிருக்கின்றன
3) இந்த இரண்டு கட்சிகளுமே பிளாக் மெயில் செய்து வெற்றி பெறுவதில் வல்லவர்கள்.
4) எனவே வலுவான எதிர்க்கட்சி அல்லது மாற்று அரசாங்கம் அமைக்கக்கூடிய கட்சி என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் இந்தியாவில் இருக்க வாய்ப்பு இல்லை.
இந்திய அரசியல் கட்சிகளை இரு பெரும் துருவங்களுக்குள் அடக்கி விடலாம்.
ஒன்று முதலாளித்துவம் மற்றொன்று கம்யூனிசம் .
எனவே பாசிசமா கம்யூனிசமா என்பதே உலகின் முன் உள்ள கேள்வி.
. இதில் நாம் எந்த பக்கம் நிற்கிறோம் என்பது அவரவர் வர்க்க நிலை சார்ந்தது மட்டுமல்லாமல் நியாயத்தின் பக்கம் நிற்பது என்பதும்கூட..
இன்றைய பிஜேபிக்கு ஆதரவாக மக்கள் திரும்ப திரும்பியிருப்பதென்பது மற்ற அனைத்து கட்சிகளின் மேல் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதனால் உண்டான வெறுப்பு.
உதாரணமாக இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் திராவிட மாடல் கட்சிகளை ஊழல் கட்சியிகள் என்று ஒதுக்கி இளைஞர்கள் கொள்கை கோட்பாடற்ற ஒரு சினிமா நடிகரின் பின்னால். திரள்வதற்கு இதுதான் காரணம்.
திமுகவை காப்பாற்றிக் கொண்டு கொள்கை உள்ள இளைஞர்களை உருவாக்க முடியாது எனவே இவர்களையும் கைவிட்டு பாசிசமா கம்யூனிசமா என்ற முடிவுக்கு வர வேண்டி உள்ளது. இல்லையெனில்
இந்த நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
இடையில் சில காலம் பாசிசம் அதை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அழிக்கும்.
தியாகத்திற்கு தயாரானவர்கள் மட்டுமே இனிமேல் அரசியல் பேச முடியும் இல்லாவிட்டால் சிராக் பஸ்வான் கூறுவது போல் பிஜேபி ராமர் என்றும் தலித் மக்கள் அனுமன் என்றும் ராமருக்கு சேவை செய்வதற்காகவே தலித் மக்கள் உள்ளார் என்றும் சமீபத்தில் கூறியது போல அவரவர் அவர்கள் அளவில் கல்லா கட்டிக் கொண்டு கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக் கொண்டு போவது சாலச்சிறந்தது.
நடுநிலை என்பது என்றுமே கிடையாது..