உண்மை சுடுகிறது! இந்துத்துவ வெறியர்கள் கொந்தளிக்கின்றனர். தயாரிப்பாளர் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்படுவார். மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை நுழையும். இயக்குனர் பிரிதிவிராஜ் அமலாக்கத் துறையை எதிர்கொள்வார் ..என்று ஏகத்துக்கும் அச்சுறுத்தி, எம்புரான் படத்தில் அவசர, அவசரமாக கத்திரி வைத்து அதகளப்படுத்தி உள்ளனர்;
சமகால மதவாத அரசியலால் சமூக தளத்தில் ஏற்பட்ட மாபெரும் பாதிப்பை கலை படைப்பின் வழியாக சுதந்திரமாக சொல்ல முடியாத அவல நிலை தோன்றி உள்ளது என்பதை தான் எம்புரான் படத்திற்கு மதவாத சக்திகளால் தரப்பட்ட கடும் அச்சுறுத்தல்களும், அதைத் தொடர்ந்து படக் குழுவினர் பயந்து பின் வாங்கியதும் நடந்துள்ளது.
”இந்து மதத்தை தவறாக காட்டியுள்ளது. இந்துக்களை கேவலமாக காட்டுகிறது. தேச விரோதிகளின் குரலாக ஒலிக்கிறது…’’ என்றெல்லாம் சமூக வலைத் தளங்களில் கதறி, படக் குழுவினரை தாறுமாறாக விமர்சித்து, அச்சுறுத்தி எம்புரான் படத்தில் 17 இடங்களில் கத்திரி வைத்தும், பல இடங்களில் வசனங்களை மியூட் செய்தும் சாதித்துள்ளது இந்துத்துவா கூட்டம்!
‘காஷ்மீர் பைல்ஸ்’, ‘தி கேரள ஸ்டோரி’ போன்ற உண்மைக்கு புறம்பான இஸ்லாமிய மதவெறுப்பை இலக்காக கொண்ட திரைப்படங்களை குதூகலித்து வரவேற்ற இந்துத்துவ கூட்டம், குஜராத் கலவரம் தொடர்பான நிஜ சம்பவத்தின் ஒரு துளியை மட்டுமே வெளிக்காட்டிய ‘எம்புரான்’ படத்தை 17 இடங்களில் வெட்டி பலியிட்டு, அதிகார ஆட்டத்தை காட்டியுள்ளது.
இதற்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன்னுடைய அதிகாரபூர்வ ஆர்கனைசர் இதழில்,”பிருத்விராஜ் தேச விரோதிகளின் குரலாக உள்ளார். இது எப்போது தெரிய வந்ததென்றால், தீவுகளை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவெடுத்த போது, அதனை வகுப்புவாத வெளிச்சத்தில் சித்தரிக்கும் விதமாக ‘லட்சத் தீவுகளைக் காப்போம்’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். மேலும், சமூக வலைதளங்களிலும் சிஏஏ போராட்டத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டார்.எம்புரான் படம் ஆரம்பிக்கையில் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை என்று குறிப்பிட்டனர். ஆனால், பின்வந்த காட்சிகள் அனைத்தும் கருத்தியல் விஷத்தை பரப்பும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது” கொந்தளித்து இருந்தது.
ஆர்.எஸ்.எஸ் அதிகாரபூர்வமாக தன் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், அதன் தயவில் செயல்படும் மோடி அரசு அதிரடி காட்ட ஆரம்பித்தது. படக் குழுவினர் தானாக முன் வந்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டால் நல்லது. இல்லையெனில் விரும்பத்தகாத விளைவுகளை சந்திக்க நேரும் என மலையாள சினிமா தளத்தில் கோலோச்சும் பாஜக பிரமுகர்கள் வழியாக சொல்லப்பட்டது.
இதன் விளைவாக தயாரிப்பாளரும், கதாநாயக நடிகரும் பதற்றத்துக்கு உள்ளாயினர்.
ஆயிரம் தான் மக்கள் விருப்பத்திற்குரிய கலைஞன் என்றாலும், மோகன்லால் ஒரு நடிகர் தானேயன்றி, சமூக போராளி அல்ல. ஆகவே, அவர் பயந்து பின் வாங்கியது ஆச்சரியமல்ல. ஆனால், படைப்பாளி என்ற வகையில் இயக்குனர் பிரிதிவிராஜ் இது வரை இந்த மிரட்டல்களுக்கு அஞ்சி மன்னிப்பு கோரவில்லை. தன்னுடைய படைப்பின் நம்பகத் தன்மையில் அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது! அதே சமயம் 180 கோடி செலவு செய்த தயாரிப்பாளர் படம் தடை செய்யப்படுவதை தவிர்க்க, சில சமரசங்களுக்கு உடன்பட வேண்டியதாகிவிட்டது. ”மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து, படம் வசூலை குவிக்கும் நிலையில், அதிகாரத்தில் உள்ளவர்கள் அழித்தொழிப்பில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், பின் வாங்கிவிட்டார்” எனச் சொல்லப்படுகிறது.
இத்தனைக்கும் கேரள முதல்வர் இந்தப் படத்தை வரவேற்று எழுதியுள்ள பதிவில்,”திரைப்படத் தயாரிப்பாளர்கள் அழுத்தத்தின் கீழ் படத்தைத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. சங்க பரிவாரத்தால் உருவாக்கப்பட்ட இந்த பயத்தின் சூழல் கவலையளிக்கிறது. வகுப்புவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அதன் பயங்கரத்தை சித்தரித்ததற்காக, வகுப்புவாதிகள் ஒரு கலைப் படைப்பை அழித்து, கலைஞர்களை தீங்கிழைக்கும் வகையில் தாக்குவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஒரு ஜனநாயக சமூகத்தில், குடிமக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.” என சொல்லியது எந்த விதத்திலும் படக் குழுவினரை காப்பாற்ற உதவவில்லை.
இது தவிர, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் படத்தை வரவேற்றுள்ள நிலையிலும், மத்திய அதிகார மையத்தின் அதிகார ஆட்டத்திற்கு பயந்து விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையன்று அவசர, அவசரமாக படத்தை 17 இடங்களில் கட் செய்து, சில இடங்களில் மியூட் செய்து, இந்துத்துவ வெறியர்களின் கோபத்தை தணித்துள்ளனர் என்றாலும், ”படத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்” என்ற அவர்களின் குரலில் சிறிதும் தளர்ச்சி ஏற்படவில்லை.
குஜராத் கலவரத்தை சித்தரிப்பதில் இருந்து, குறிப்பாக இந்து தீவிரவாதியாக இருந்து அரசியல்வாதியான பாபா பஜ்ரங்கியை சித்தரிப்பதில் இருந்து இந்த சர்ச்சை உருவாக்கினர் இந்துத்துவ கூட்டத்தினர். ‘பஜ்ரங்கி என்ற பெயர் அனுமனைக் குறிக்கிறது’ என்பதால், வில்லனின் பெயரை மாற்ற வேண்டுமாம். அனுமன் பெயரில் உள்ள இயக்கம் நர வேட்டையாடி ரத்த ஆற்றை ஓட வைத்த போது, ”அந்த இயக்கத்தின் பெயரை மாற்றுங்கள்” எனச் சொல்லாதவர்கள் ஒரு சினிமா வில்லனின் பெயர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை எப்படி புரிந்து கொள்வது?
எம்புரான்’ படம் சர்ச்சையில் சிக்கிய சூழலில் மோகன்லால் தந்துள்ள விளக்கமே பெரும் சர்ச்சையாகி உள்ளது. ” எம்புரான் படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தேன். ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை. எனவே, எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும் எம்புரான் குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம். இப்படத்திலிருந்து இதுபோன்ற காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம். கடந்த நான்கு தசாப்தங்களாக எனது திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம். அதை விட மோகன்லால் யாரும் இல்லை என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Also read
மோகன்லால் வருத்தம் தெரிவித்த பதிவின் கீழே ஏராளமான அவரது ரசிகர்கள் மோகன்லாலின் கோழைத்தனத்திற்கு கண்டணம் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளனர்.
”நாட்டின் மிகச் சிறந்த நடிகரான மோகன்லாலுக்கே கருத்து சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் மோடியின் பாஜக அரசால் வழங்க முடியவில்லை. இவர்களுக்கு பயப்பட வேண்டிய நிலையைத் தான் உருவாக்கி வைத்துள்ளார்கள். வருத்தம் தெரிவித்ததற்காக மோகன்லால் வெட்கப்பட வேண்டும்…” என ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.
அமெரிக்காவில் அந்த அரசின் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை விமர்சிக்கும் படங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சிங்கள இனவெறிக்கு எதிராக எடுக்கப்பட்ட பல படங்கள் அந்த அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது…! ஆனால், இந்தியாவிலோ உண்மையிலேயே நஞ்சை விதைக்கும் இந்துத்துவ வெறியும், இஸ்லாமிய வெறுப்புணர்வும் கொண்ட படங்களை அரசே ஊக்குவிப்பதும், அதே சமயம், உண்மை சம்பவத்தின் ஒரு துளியை வெளிக் கொணரும் தரமான கலைப் படைப்பிற்கு அச்சுறுத்தல் தருவதும் அரங்கேறுகிறது.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply