மோடி – ஆர்.எஸ்.எஸ் பனிப்போர் முடிவுக்கு வருமா?

மகாராஷ்டிராவா? குஜராத்தா? தீர்வு என்ன?. தனி நபரா? அமைப்பா? தகராறு தொடருமா..?  பிராமணனா? ஷத்திரியனா? மோடி உடன்பாட்டுக்கு வருவாரா? அல்லது உதறித் தள்ளி விட்டு போவாரா…? மோடியோ மக்கள் தலைவர். ஆர்.எஸ்.எஸ்சோ மாபெரும் இயக்கம்! வெற்றி பெறப் போவது யார்?

நீண்ட நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் பனிப் போர் முடிவுக்கு வந்தாக வேண்டிய கால கட்டம் நெருங்கிவிட்டது. எந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் அடையாளம் பெற்று ஆளுமையாக ஆனாரோ, அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சங்காத்தமே வேண்டாம்..என்று தனி ஆவர்த்தனம் நடத்தி வந்த மோடி, இன்று ஆர்.எஸ்.எஸுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆம், வரும் செப்டம்பர் மாதம் மோடியின் வயது 75 ஆகவுள்ள நிலையில், ’75 வயதுக்கு மேல் எந்தப் பதவியிலும் யாரும் இருக்கக் கூடாது’ என்ற விதியின்படி, மோடி விலகுவாரா? அல்லது ‘தனக்கு மட்டும் விதி விலக்கு வேண்டும்’ எனக் கூறுவாரா? என்பது தான் இன்று ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே நடக்கும் விவாதப் பொருளாகி உள்ளது.

அதே சமயம் பாஜக என்ற கட்சியை பொறுத்த வரை அது மோடியைத் தவிர, வேறு யாரையும் பிரதமர் பதவிக்கு யோசித்துக் கூட பார்க்க முடியாத தன்மையில் தான் உள்ளது. அந்த அளவுக்கு மோடி கட்சியையும், ஆட்சியையும், ஆர்.எஸ்.எஸிடம் இருந்து விலக்கி தனித்துவ பாதைக்கு அழைத்து சென்று விட்டார். மேலும் கடின உழைப்பால், வசீகரத்தால் தன்னை தனிப் பெரும் தலைவனாக நிலை நிறுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்சை முற்றிலும் தவிர்த்துவிட்டார்.

ஆனால்,  நம்மால் அவருக்கு ஊட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்சின் சித்தாந்தத்தை தானே அவர் ஆட்சியில் அமல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆக, நம்ம பையன் தானே, விட்டுப் பிடிப்போம் என ஆர்.எஸ்.எஸ்சும் பக்குவமாக மோடி விவகாரத்தில் நடந்து கொண்டது.

ஆர்.எஸ்.எஸ் தான் அத்வானியை ஓரம் கட்டி மோடியை பிரதமர் ஆக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அத்வானி செல்லாக்காசாக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்சின் செல்வாக்கு அப்படிப்பட்டது. 50 ஆண்டு காலம் உச்சத்தில் இருந்த அரசியல் ஆளுமையையே மூலையில் உட்கார வைத்து விட்டது. இதை கண்ணார பார்த்த மோடி சுதாரித்துக் கொண்டார். தனக்கும் இது போன்ற ஒரு அவல நிலை ஆர்.எஸ்.எஸால் ஏற்படலாம் என்பதை யூகித்துக் கொண்ட  மோடி, அதிகார கீரிடம் தலைக்கேறிய நொடி முதல் ஆர்.எஸ்.எஸிடம் இருந்து விலகி எச்சரிக்கையாக உள்ளார்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அமைதிப் படை படத்தில் மணிவண்ணனால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு வளர்த்து விடப்படும் அமாவாசை  வெற்றி பெற்ற பிறகு தனக்குள் இருக்கும் வேறொரு பரிமாணத்தை எடுத்து மணிவண்ணனை துச்சமாக நடத்துவார். அதைப் போல் தான் மோடி ஆர்.எஸ்.எஸ்சை வைத்திருக்கிறார்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ்சால் உருவானவர்கள் ஒரு உச்ச நிலையை அடையும் போது, ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வந்து ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெட்கேவார் பிறந்த நாளான யுகாதி நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதை, முதற் கடமையாக கருதுகின்றனர். வாஜ்பாய் கூட இதை மீறியதில்லை. ஆனால், 2014 ல் பிரதமரான மோடி, அப்போதும், அதற்குப் பிறகு 2019 மற்றும் 2024 என்று மேலும் இரு முறை பிரதமரான தருணத்திலும் ஆர்.எஸ்.எஸ்  தலைமை அலுவகத்திற்கே வரவில்லை.

ஆனால், தற்போது தான் வந்துள்ளார்!

பிரதமரான நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் வந்து, ஹெட்கேவார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என தொடர்ந்து எதிர்பார்த்து ஏமாந்த ஆர்.எஸ்.எஸ் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ஆர்வம் காட்டாமல் 2024 தேர்தலில் விலகி நின்றது.

மோடியும் ஆர்.எஸ்.எஸ் தயவை நாடவில்லை. ஆர்.எஸ்.எஸ் சிபாரிசுகளையும் ஏற்கவில்லை. ”காங்கிரசில் இருந்து கட்சி தாவியர்களுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள். நாங்கள் பரிந்துரைப்பவர்களுக்கு மறுக்கிறீர்களே…” என ஆர்.எஸ்.எஸ் வருத்தப்பட்டதைக் கூட மோடி பொருட்படுத்தவில்லை. ‘அதன் விளைவை மோடிக்கு காட்ட வேண்டும்’ என்று தான் ஆர்.எஸ்.எஸ் உத்திரபிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் பாஜக வெற்றியை பாதிக்கும் குறைவாக சரியச் செய்தது. ஆர்.எஸ்.எஸ் தயவின்றி மோடி மெஜாரிட்டி பெற்று விட்டால், இனி ஒருகாலும் ஆர்.எஸ்.எஸ்சை பொருட்படுத்தமாட்டார். ஆகவே அவருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தரவே இந்த ஏற்பாட்டை செய்தது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்சின் அதிகாரபூர்வ நாளேட்டில் பாஜகவை மதிக்காமல் செயல்பட்டதனால் தான் இந்த வீழ்ச்சியை பெற்றது என்றும் எழுதி எச்சரிக்கை செய்யப்பட்டது. அதையும் மோடி அலட்சியப்படுத்திவிட்டார்.

இது ஏதோ ஆர்.எஸ்.எஸுக்கும், மோடிக்குமான மோதல் அல்ல!

இதற்கு பின்னணியில் நிறையவே செய்திகள் உள்ளன.

ஆர்.எஸ்.எஸ் என்பது பார்ப்பனர்களால், பார்ப்பனர்களின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு இயக்கம். அது  பார்ப்பனர் நலனுக்கு பணியாற்றவே மோடியை பிரதமராக்கியது. மோடியை அவர்கள் தங்களுக்கான சேவகனாகவே கருதுகின்றனர்…இதை ஒரு முறை வெளிப்படையாகவே சுப்பிரமணியசாமி கூறினார். காரணம், சுப்பிரமணிய சாமி நிதி அமைச்சர் அல்லது சட்ட அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆர்.எஸ்.எஸ்சும் வலியுறுத்தியது. மோடி அமைச்சர் பதவியை மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த சாமி, மோடி அறிவில்லாதவர், முட்டாள், எங்களுக்கு சேவை செய்யவே அவரை பிரதமராக்கி உள்ளோம்..என்றெல்லாம் பேசினார்.

பொதுவாக ஆட்சியாளர்களான சத்திரியர்களை தங்களுக்கான சேவகர்களாகவே காலம், காலமாக நடத்தி வந்துள்ளனர் பிராமணர்கள். மன்னர் ஆட்சி காலங்களே இதற்கு எடுத்துக்காட்டாகும். ஆனால், அதே சமயம் மன்னர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் பேராசைக்கார பார்ப்பன குருக்கள் மேலாதிக்கம் செய்யும் போது, ஷத்திரியர் – பார்ப்பனர்களுக்கு இடையில் பல முட்டல், மோதல்களும், பேரழிவை உண்டாக்கிய யுத்தங்களுமே கூட நடந்துள்ளன. பார்ப்பனர்கள்  தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த பரசுராமனால் வெட்டி வீழ்த்தப்பட்ட மன்னர்களின் தலைகள் ஏராளம்! சத்திரபதி சிவாஜியே பார்ப்பன குருக்களிடம் பணிந்து போக வேண்டிய கட்டாயத்தை வரலாறு கண்டது.

ஆர்.எஸ்.எஸ் பாசறையில் உருவான மோடிக்கு பார்ப்பனர்களின் நரித்தந்திரங்கள் அத்துப்படியாகி இருக்கும். ஆகவே தான் அவர் ஆரம்பம் முதலே பார்ப்பனர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் கவசத்தை போட்டுக் கொண்டார். அதே சமயம் பார்ப்பனர்கள் நலனுக்கான நிர்வாகத்தை சாத்தியப்படுத்திவிட்டதனால், அவர்களும் சில காலம் சமாதானமாகிவிட்டனர்.

ஆனால், இப்படியே மோடியை விட்டு வைக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்சை மதிக்காதவரை தொடர்ந்து அதிகாரத்தில் அனுமதிக்க முடியாது.

# ஏனென்றால், அவர் தனி நபர் அதிகார மையமாகிவிட்டார்! ஆர்.எஸ்.எஸ்சை பொறுத்த வரை அமைப்பு தான் மிகப் பெரியது. தனி நபர் அல்ல.

# ஆர்.எஸ்.எஸ் மாராத்திய மண்ணை தலைமையகமாக கொண்டது. அந்த வகையில் அது மராட்டிய மாநில வளர்ச்சிக்கும், மராட்டிய வியாபாரிகள் வளர்ச்சிக்குமே பிரதான முக்கியத்துவம் தரும். ஆனால், மோடியோ குஜராத்தையும், குஜராத்திகளையும் முதன்மைப்படுத்துகிறார்.

# அடுத்த பிரதமர் மாராட்டிய மண்ணை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் விருப்பம். நிதின் கட்காரி அல்லது தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய பார்ப்பன அரசியல்வாதிகளை ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது.

# இன்றைய சூழலில் மோடிக்கு மாற்றாக மக்கள் யாரையுமே ஏற்கமாட்டார்கள் என்ற மாயையை மோடி வெற்றிகரமாக உருவாக்கிவிட்டார். அதை உடைக்காமல் நமக்கு விமோசனமில்லை என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது.

இன்னும் நான்காண்டுகள் தான் அதிகபட்சம் மோடியை விட்டு வைக்க முடியும். அடுத்ததாக வர வேண்டியவரை இப்போதே அடையாளம் கண்டு வளர்த்தெடுக்க மோடி உடன்பட வேண்டும்.

இதுவே ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டை ஒட்டிய சிந்தனையோட்டமாகவும், நடக்கவுள்ள பாஜக செயற்குழுவின் விவாத பொருளாகவும் இருக்க உள்ளது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time