வினைப் பயன்களுக்கான விதி வலியது…!

-சாவித்திரி கண்ணன்

ஆடாத ஆட்டமா? போடாதா கூத்தா? அனுபவிக்காத சுக போக இன்பங்கள் ஏதேனும் உண்டா…?  தன்னையே கடவுள் என்றார்..! கைலாசா நாட்டின் அதிபர் என்றார்…!  எத்தகு ஆற்றல்களாயினும் தன்னைத் தானே சுயகட்டுப்பாட்டில்  வைத்துக் கொள்ள முடியாத ஆளுமைக்கு இன்றென்ன நிலைமை? ஏனிந்த பரிதாபம்..!

எத்தனையெத்தனையோ இன்பங்களை சாமியார் கெட் அப் தந்த சலுகையில் அனுபவித்து திளைத்த நித்தி, பல செய்யக் கூடாத தவறுகளையும் செய்து, பண்ணக் கூடாத பாவங்களையும் சேர்த்தே  செய்த வகையில், அதிகார உயர்மட்டத்தில் இருந்த ஆதரவைக் கொண்டு தப்பித்து வந்தார்.

வினைப் பயன்களுக்கான விதி வலியது, அது யாரையும் விட்டு வைக்காது..என்பதை நாம் ஜெயலலிதா, ஜெயேந்திரர் விவகாரத்தில் மட்டுமின்றி, தற்போது நித்தியானந்தா விவகாரத்திலும் கண் கூடாக பார்க்கிறோம்.

நித்தியானந்தா மீது இந்தியாவில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பாலியல் வன்கொடுமை, கடத்தல், படுகொலை, ஏமாற்றுதல், நில அபகரிப்பு.. உள்ளிட்ட வழக்குகளில் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில் தான் பாஜக அரசு அவர் பத்திரமாக நாடுவிட்டு தப்பியோட வழிவிட்டது. அவரும்  கைலாசா என்ற நாட்டையே வாங்கிவிட்டதாக கப்சா விட்டார்.

ஆனால், சில நாட்களிலேயே திடீரென அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரது பரிதாபகரமான போட்டோக்களெல்லாம் வெளியாகி பலரையும் அதிரச் செய்தன.

நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? எப்படி இருக்கிறார்? ஏன் அவரை யாரும் பார்க்க முடியவில்லை..! ..என எந்தக் கேள்விக்கும் ஆண்டுக் கணக்கில் பதில் இல்லை.

இந்தச் சூழலில் நித்தியானந்தா அவர்கள் ’’சனாதன தர்மத்தை காப்பதற்காக உயிர் தியாகம் செய்துவிட்டார்’’ என அவரது சகோதரி மகன் சுந்தரேசன் அதிரடியாக பேசியுள்ளார்.

இதற்கிடையே கைலாசா குருப்பில் இருந்து நித்தியானந்தா பேசுவதாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் வழக்கமான அவரது நக்கல், நையாண்டி ஸ்டைலில் “நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை அவர் பேசுவதாக வெளியிட்டு உள்ளனர்.

அதில், “நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில் பேசியுள்ள நித்தியானந்தா, நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க போல… ஹஹஹாஹா.. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க.. 4,000 கிளிப்ஸையும் எப்ப பார்த்து முடிக்கிறது? சிலபஸ் கவர் பண்ணி முடிக்காத எக்ஸாமுக்கு போற ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நான் வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.. எனக்கும் சந்தேகமாக இருக்கு.. நான் உயிரோடு இருக்கேனா இல்லையான்னு…எல்லா சோசியல் மீடியா, மெயின் ஸ்ட்ரீம் மீடியா, யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் ஒன்றாக சேர்ந்து,பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு, நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்க…

இன்னமும் ஆகக் குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன்; இந்து எதிரிகள், இந்து வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர். நான் வன்முறையை விரும்பாதவன்; என் மீது அவதூறு பரப்புபவர்களை தாக்கப் போவதும் இல்லை. “மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப் போனவனுங்களா..ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டானுங்க..இதுக்கு மேல தொடர்ந்து செய்தீர்கள் என்றால், என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா.. வேணாம். வம்பு பண்ணாதீங்க.. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என அதில் பேசியுள்ளார் நித்தியானந்தா.

மேற்படி வீடியோ நிச்சயம் ஏ.ஐ தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.

ஏனென்றால், கைலாசா என்ற ஒரு கடற்கரையை மட்டுமே இது வரை காட்டியுள்ளனர். அந்த இடத்தில் இவர்கள் தங்கவும், வாழவும் கட்டிடங்கள் உண்டா? அவை எப்படி உள்ளன. ஏதேனும் ஓரிரண்டு தெருக்களாவது அங்கு உண்டா? வழிபாட்டுத் தலங்களை நித்தி கட்டியுள்ளாரா? என்ற கேள்விகளுக்கு ஐந்தாண்டுகளாக பதில் இல்லை.

நித்தியானந்தா குறித்து கைலாசா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இந்து மதத்தின் உச்சப் போதகர் (SPH) நித்யானந்தா இறந்துவிட்டதாக இந்துத்துவ வெறுப்பு ஊடகங்கள் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் விதமாக குற்றவியல் ரீதியாக தகவல்களை பரப்பி வருகின்றன.

நித்யானந்தா மிகவும் ஆரோக்கியமுடனும் பாதுகாப்புடனும் சுறுசுறுப்புடனும் இருக்கிறார். மார்ச் 30-ஆம் தேதி உகாதி பண்டிகையை ஒட்டி, நித்யானந்தா நேரலையில் தோன்றி அனைத்து இந்து பக்தர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நித்யானந்தாவை இழிவுபடுத்தவும், தீங்கிழைக்கவும் மேற்கொள்ளப்படும் இந்த அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கிறது. மேலும், இந்த செய்தியால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது.

பல ஊடகங்களிலும் ஒரே நேரத்தில் இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம், நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு உத்தியை கையாளுகின்றனர்.

இந்து விரோத சக்திகளால் நித்யானந்தா மீது 70-க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. நேரடி தாக்குதலால் தோல்வியடைந்தவர்கள், தற்போது மறைமுகமாக வதந்திகளை பரப்ப ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.

நித்யானந்தா உயிரிழந்தாக வெளியாகும் செய்தியை இந்து விரோத சக்திகள், கொண்டாடுவது அவர்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தி காட்டுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையே நம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. நித்தியானந்தாவிற்கு விரோதிகள் என்றால், அவருக்கு போட்டியாக உள்ள பிற இந்து சாமியார்கள் என்பது உலகறிந்த விஷயமாகும். கோவை ஜக்கி வாசுதேவ் கூட நித்தியை போட்டுத்தள்ள ஆனவரை முயன்றதாக அவரிடம் இருந்து வெளியேறிய சீடர்களே கூறியுள்ளனர். ஆக, 70 முறை நித்தி மீது கொலை முயற்சி நடந்துள்ளது என்பதே.., இவர்கள் செய்து கொண்டிருப்பது ஆன்மீகம் அல்ல, ஆன்மீகத்தின் பெயரிலான சட்டத்திற்கு அப்பாற்பட்ட சாம்ராஜ்யம் என்பதை உணரலாம்.

இவையாவுமே பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான நித்தியானந்தாவை அவருடனேயே இருக்கும் சில மர்ம நபர்கள் போட்டுத் தள்ளி இருக்க வேண்டும் அல்லது  உடல் நலன் குன்றிய அவரை முற்றிலுமாக தங்கள் கண்ட்ரோலில் வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

வினை விதைத்தால், அதை அறுக்கத் தானே வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time