அடுத்தடுத்து வரும் புயல்களும், அதற்கான காரணங்களும்!

சாவித்திரி கண்ணன்

நிவர் வந்தது, நிவாரணம் கொடுக்கப்படுகிறது என்பதோடு கடக்கும் விவகாரமல்ல இது!

கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 300 க்கு மேற்பட்ட புயல்களை தென் இந்திய கடற்கரை பகுதிகள் சந்தித்துள்ளன!

அதுவும் 2010 – 2020 காலகட்டத்தில் அரபிக் கடலில் ஏழு புயல்களையும் வங்களா விரிகுடாவில் 7 புயல்களையும் பார்த்துவிட்டோம்!

அடுத்தடுத்து மிகக் குறுகிய இடைவெளிக்குள் மீண்டும்,மீண்டும் புயல்கள் வருவதன் காரணங்களை கண்டறிய வேண்டாவா?

ஒரு புயலுக்கும், அடுத்த புயலுக்குமான இடைவெளி சுருங்கிக் கொண்டே வருவது ஒரு அபாய அறிவிப்பாகும்!

எப்போதோ, ஆபூர்வமாக இயற்கை பேரிடர்கள் நிகழும் போது, அதற்கு கிடைக்கும் உதவிகள்..அடிக்கடி நடந்தால் மிகக் குறைந்துவிடுவது இயல்பானதே! சேவைக்கென்றே பிறந்தவர்கள் எல்லா காலங்களிலும், எல்லா துயரங்களுக்கும் ஓடி,ஓடி துயர்துடைக்கத் தான் செய்கின்றனர்.

துயர்துடைக்க பாடுபடுவது ஒருபுறமிருந்தாலும், துயரே ஏற்படாதவாறு தடுக்க முனைந்தால், அதைவிட உத்தமமான வேலை வேறில்லை!

இயற்கை சீற்றங்கள் அதிகப்படுவதற்கு இயற்கைக்கு எதிராக நாம் வளர்ச்சி என்ற பெயரில் தொடுத்து வரும் போர் முக்கிய காரணமாகும்!

இந்த பூமியை நாளுக்கு நாள் வெப்ப மண்டலமாக்கிக் கொண்டே இருப்பது அதில் முக்கியமானதாகும்!

# வீடுகளிலும், வாகனங்களிலும், அலுவலங்களிலும் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஏர்கண்டிஷன் மிஷினும், இயற்கையின் மீதான தாக்குதலே!

# அதிகரிக்கும் வாகன போக்குவரத்து பூமி வெளியில் உருவாக்கும் வெப்பம் அசாதாரணமானது.

# புகை கக்கும் தொழிற்சாலைகள், பூமியில் ஆண்டுதோறும் கொட்டப்படும் பல லட்சம் டன் ரசாயன உரங்கள்,

# நீர்வளத்தை நிர்மூலமாக்கும் ஏரி,குளம் ஆக்கிரமிப்புகள், ஆழமாக தோண்டி மணல் எடுக்கப்படும் ஆற்றுப் படுகைகள்!

# வேக,வேகமாக அழிக்கப்பட்டுவரும் காடுகள்,மலைகள் மாபெரும் ஆபத்தாகும்!

# நிலக்கரி சுரங்கங்கள், கனிம வளங்களை சுரண்டும் தொழில்கள்,பூமியையும், நீர் நிலைகளையும் அழிக்கும் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள்…!

# ஆபத்தான அணுமின் திட்டங்கள்,அழிவைத் தரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், அதி கொடூரமான பிளாஷ்டிக் பயன்பாடுகள்…

இவை அனைத்தும் இயற்கையின் சம நிலையை குலைக்கின்றன! கடல் மேற்பரப்பில் 27 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக வெப்பம் உருவாகும் போது புயல் சூழ் கொள்கிறது! ஒரே ஒரு செல்சியஸ் வெப்பம் கூடினாலும் அதில் ஏற்படும் விளைவுகள் மிகப் பெரியதாகவே இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! கடலுக்குள் நாம் கொட்டும் கழிவுகள் கொஞ்சமா? நஞ்சமா? அவை கடல் வளத்தையும்,அதில் வாழும் கோடானுகோடி உயிரினங்களையும் அழித்துவருகின்றனவே!

2005ல் மட்டுமே அடுத்தடுத்து மூன்று புயல்களை நாம் எதிர்கொண்டதை மறந்துவிடக் கூடாது!

2008ல் வந்த நிஷா புயல் 20 நாட்கள் நீடித்தது! 12 மாவட்டங்கள் படுதுயரங்களை சந்தித்தன!

2016ல் வார்தா புயல் வாரிசுருட்டியது சென்னையை!

2015 ல் டிசம்பர் வெள்ளம் 18 லட்சம் மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி, 6,605 முகாம்களுக்குள் அடைக்கலம் தேட வைத்தது!

2017ல் ஒக்கி புயல் கன்னியாகுமரியை கலங்கடித்தது!

2018 ல் கஜா புயல் கதற வைத்துவிட்டது அனைவரையும்! அது களவாடிச் சென்ற மனித உயிர்கள் 50. அழித்துச் சென்ற பயிர்களின் பரப்பளவு 88,102 ஹெக்டேர்! சாய்த்துச் சென்ற மரங்கள் சில லட்சம்! களப்பலியான கால் நடைகள் எண்ணிக்கைக்கு கணக்கில்லை!

அந்த இழப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்குள்ளாக அடுத்ததொரு நிவர் புயல்!

இது, 2,30,000 பேரை 2,999 முகாம்களுக்குள் வரவழைத்தது! ஐந்து உயிர்களை பறித்துள்ளது!

நீர்மேலாண்மையில் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை ஒவ்வொரு இயற்கை சீற்றமும் ஓங்கி கன்னத்தில் அறைந்து, உணர்த்திச் சென்றாலும், நாம் நம்மை மாற்றிக் கொள்ள – திருத்திக் கொள்ளத் – தயாரற்றவர்களாகத் தான் உள்ளோம்.

ஒவ்வொரு மழைக்கும்,சாலைகளிலும்,குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்கிறது என்றால், நாம் ஒன்று, நீர்சேகரிக்கும் இடத்தில் வீடுகள் கட்டியுள்ளோம் என்றே அர்த்தமாகும். மற்றொன்று,,பெய்யும் மழை நீரை முறையாக சேமிக்க தவறுகிறோம் என்பதாகும்!

ஒவ்வொரு இயற்கை பேரிடர்களிலும்,விவசாயிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய இழப்பீடும் கிடைப்பதில்லை.பயிர் இன்சூரன்ஸ் என்பதாக தனியார் நிறுவனங்கள் விவசாயிகளை ஏய்த்து பகல் கொள்ளை அடிக்கவே வழிவகை செய்யப்பட்டுள்ளது சோகத்திலும் சோகமாகும்!

பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளின் முதல்கட்ட தகவல்படி, மொத்தம் 9,468 ஹெக்டேரில் நெற்பயிர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.நெற்பயிரை பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 750 ஹெக்டேர், செங்கல்பட்டு 2,760, ராணிப்பேட்டை 205, திருவண்ணாமலை 526, விழுப்புரம் 1,032, கடலூர் 1,134, திருவள்ளூர் 2,063 என மொத்தம் 8,470 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சேதம் அடைந்துள்ளன!.

மேற்கண்ட மாவட்டங்களில் 428 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும், 908 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த இதர பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன. ஆக,மொத்தம் 9,468 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நிவர் புயல், மழையால் தோட்டக்கலை பயிர்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தோட்டக்கலை அதிகாரிகள் கூறியதுபடி, வேலூர், கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 382 கிராமங்களில் 1,334 விவசாயிகள், 914 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழை, மரவள்ளிக்கிழங்கு, தர்பூசணி, பப்பாளி, காய்கறிகள் ஆகிய பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்கள் தர வேண்டும். புயல்களில் இருந்து புரிந்து கொள்ள வேண்டிய பாடங்களை பயில வேண்டும்!

‘அறம்’ சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time